“யோகம் எவ்வாறு உலகம் முழுவதற்குமான ஒரு விஞ்ஞானம்” குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

9 அக்டோபர், 2023

ஓர் அறிமுகம்:

அக்டோபர் 6, 1920 அன்று, பரமஹம்ஸ யோகானந்தர், பாஸ்டனில் நடந்த மத மிதவாதிகள் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அமெரிக்காவில் தனது முதல் உரையைசமய விஞ்ஞானம்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.

பரமஹம்ஸர் சில வாரங்களுக்கு முன்புதான், தனது கீர்த்திமிகு குருமார்களின் உத்தரவின் பேரில், யோகம் எனும் உன்னத ஆன்ம விஞ்ஞானத்தை உலகுக்குக் கொண்டு வர வருகை புரிந்திருந்தார். அவர் கற்பித்த யோக தியானத்தின் மகத்தான மதிப்பு அதன் முறைகளை நடைமுறைக்கு கொண்டு வரும்போது உணர்திறன் கொண்ட மாணவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும், மேலும் நவீன உலகிற்கு இந்தியாவின் ஞானத்தை விளக்கும் விதம் உலகம் முழுவதும் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது.

YSS/SRF-ன் தலைவராக பரமஹம்ஸரைத் தொடர்ந்து பதவியேற்ற, ஒரு புனித யோகியாக மாற்றம் அடைந்த அமெரிக்க தொழிலதிபர் ராஜரிஷி ஜனகானந்தர் கூறியதைப் போல, “இந்தியா, தனது மாபெரும் குருமார்களில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தரின் மூலம் ஆன்ம-அனுபூதி பற்றிய இந்த விலைமதிப்பற்ற அறிவை நமக்குக் கொண்டு வந்துள்ளது. பரமஹம்ஸரின் போதனைகளில் இந்தியா இன்று நமக்குக் கொடுத்திருப்பது, அதற்கு ஈடாக நாம் இந்தியாவுக்குக் கொடுக்கக்கூடிய எதையும் விட மதிப்புமிக்கது.”

யோகத்தைப் பற்றியும், அது அனைவருக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றியும் ஆழ்ந்த புரிதலை பெற விரும்புகிறீர்களா?

கீழேயுள்ள பரமஹம்ஸரின் மேற்கோள்கள் இறை ஐக்கியம் குறித்த இந்தியாவின் பண்டைய விஞ்ஞானத்தின் உலகளாவிய தன்மையையும், கலாச்சாரம், சமயம் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டு அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதற்கும் வழங்கியதன் மூலம் பரமஹம்ஸர் புரிந்த சாதனை பற்றியும் ஒரு பார்வையை வழங்குகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

உலகிற்கு இந்தியாவின் விலைமதிப்பற்ற பங்களிப்பு சமய விஞ்ஞானம் – “இறைவனுடனான ஐக்கியம்” எனும் யோகம். இது ரிஷிகளால் பண்டைய காலத்தில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் இறைவனை ஒரு இறையியல் கருத்தாக அல்லாமல் ஒரு உண்மையான தனிப்பட்ட அனுபவமாக உணர முடியும்.

அழியக்கூடிய சரீரம் மற்றும் அமைதியற்ற மனம் என்ற நமது குறுகிய அடையாளத்திற்கு மேலே உயர்ந்து, அமைதியான அமரத்துவ ஆன்மாவுடன் நம்மை அடையாளப்படுத்துவதற்கான உண்மையான வழிமுறைகளை உள்ளடக்கியது யோகம்.

அதன் உத்திகள், துறவற வாழ்க்கையை நாடும் ஒரு சிலருக்கானது என்பது போன்ற சில குணங்கள் மற்றும் சில மனோபாவங்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே என்று அல்ல, யோக விஞ்ஞானம் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதால்,.. அது இயற்கையான உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டுள்ளது.

சமய விஞ்ஞானம், அனைவருக்கும் பொதுவான உலகளாவிய உண்மைகள் எனும் சமயத்தின் அடிப்படையை அடையாளம் காண்கிறது மற்றும் அவற்றை பயிற்சி செய்வதன் மூலம் தெய்வீகத் திட்டத்தின்படி மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு கட்டமைக்க முடியும் என்பதைக் கற்பிக்கிறது. இந்தியாவின் ராஜ யோக போதனை, ஆன்மாவின் “ராஜ” விஞ்ஞானமாகும், இது இனம் அல்லது சமயத்திற்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு தனிநபரின் பரிபூரணத்திற்கு உலகளாவிய ரீதியில் அவசியமான முறைகளின் பயிற்சியை திட்டமிட்ட முறைகளில் வழங்குவதன் மூலம் மதத்தின் மரபுவழியை முறியடிக்கிறது.

மின்சாரம் மேற்கில் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் நாம் அதனால் பயனடைவது போல இறைவனை அறியும் வழிகளை இந்தியா கண்டுபிடித்து இருக்கிறது; மேற்கு அதனால் பயன் பெற வேண்டும். பரிசோதனைகள் மூலம் இந்தியா சமயத்தில் உள்ள உண்மைகளை நிரூபித்திருக்கிறது. எதிர்காலத்தில் எல்லா இடத்திலும் சமயம் ஒரு பரிசோதனைக்குரிய விஷயமாக இருக்கும்: அது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இருக்காது.

மதத்தைப் பயிற்சிக்கு உள்ளாக்கி அதை ஒரு விஞ்ஞானமாக உங்கள் மீது பரிசோதனை செய்து நிரூபிக்க பயன்படுத்துதல் சாத்தியமே. சத்தியத்திற்கான தேடல் தான் உலகத்திலேயே மிக அற்புதமான தேடலாகும்…. சமய லட்சியங்களை ஒட்டி எவ்வாறு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பதை பயிலுங்கள்.

ஆன்மா முழுமையாக நிறைவுடையதாக இருக்கின்றது, ஆனால் அகந்தையாக உடலுடன் அது அடையாளப்படுத்தப்படுகிற பொழுது மனிதனின் குறைபாடுகளினால் அதன் வெளிப்பாடு உருக்குலைகிறது…. நம்மிடத்திலும் பிறரிடத்திலும் விளங்குகின்ற தெய்வீக இயல்பை அறிந்து கொள்ள யோகம் நமக்கு கற்பிக்கின்றது யோக தியானத்தின் வாயிலாக நாம் தெய்வங்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

YSS இணையதளத்தில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் ஒரு வலைப்பதிவை நீங்கள் படிக்கலாம், அதில் அவர், பரமஹம்ஸ யோகானந்தர் 1920 இல் மேலை நாடுகளுக்கு வந்தபோது உலகிற்கு கொண்டு வந்த உலகளாவிய ஆன்மீகத்திற்கான முக்கிய பங்களிப்புகளை பகிர்ந்து கொள்கிறார். வியத்தகு மாற்றத்தை உருவாக்கும் சிந்தனைகள் இன்னும் வேரூன்றி வருகின்றன மற்றும் காலப்போக்கில் மேலும் மேலும் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன.

இதைப் பகிர