பக்தியூட்டும் கீதம் இசைத்தலின் சக்தி

பரமஹம்ஸ யோகானந்தரின் பிரபஞ்ச கீதங்கள் -ன் "முகவுரை"

[பல கலாச்சார கீதங்களின் மரபுகள் அவற்றின் உள்ளார்ந்த இனிமைக்காக மட்டுமல்லாமல், அவற்றின் ஆன்மீக சக்திக்காகவும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் பக்தியூட்டும் கீதம் இசைக்கும் கலையை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். 1930 களில் எழுதப்பட்ட பிரபஞ்ச கீதங்கள் என்ற தனது புத்தகத்தின் முன்னுரையில், “ஆன்மீகமயமாக்கப்பட்ட” கீதங்கள் எவ்வாறு மனதை அமைதிப்படுத்தவும் தியானத்திற்கான ஆயத்தத்தில் கவனம் குவிக்கவும் உதவுகின்றன என்பதை அவர் விளக்குகிறார்:]

பிரபலமான பாடல்கள் பொதுவாக உணர்ச்சிகளினால் அல்லது கடந்து செல்லும் ஆர்வங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றன. ஆனால், இறைவன் மீதான உண்மையான பக்தியின் ஆழத்திலிருந்து பிறந்து, அளவற்ற ஆனந்த வடிவமாக அவனிடமிருந்து உணர்வுபூர்வமாக மறுமொழி கிடைக்கும் வரை, தொடர்ந்து உரக்கவோ அல்லது மனதளவிலோ இசைக்கப்படும் ஒரு பாடல், ஆன்மீகமயமாக்கப்பட்ட பாடலாகும்.

அத்தகைய பாடல்கள், உயிர்ப்புடன் உள்ள தீக்குச்சிகளை போல, பக்தியின் அடிக்கல்லை உரசும் பொழுது, இறை விழிப்புணர்வு என்ற நெருப்பினை உண்டாக்குகிறது. சாதாரணப் பாடல்கள் தெய்வீக உணர்வின் பொறியை உருவாக்காத ஈரமான தீப்பெட்டிகளைப் போன்றவை.

இந்த புத்தகத்தில் உள்ள பிரபஞ்ச கீதங்கள் ஒவ்வொன்றும் ஆன்மீகமயமாக்கப்பட்டுள்ளன; அதாவது, பல்வேறு கூட்டங்களில் ஒவ்வொரு பாடலும் உரக்கவும் மனதளவிலும் பாடப்பட்டு, கீதமிசைப்பவர்கள் இறைவனிடமிருந்து உண்மையான மறுமொழி பெறப்படும் வரை பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வாசிப்பாளரும் இந்த கீதங்களை பாடுவார் என்று நம்பப்படுகிறது, செவி அல்லது உணர்ச்சிகளை மகிழ்விக்கும் சாதாரண இசையாக அல்ல, மாறாக இறைத் தொடர்புக்கான ஆன்மா-நிறைவுற்ற பாடல்களாக.

ஒலி பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த விசையாகும்

ஒலி அல்லது அதிர்வு பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த விசையாகும். இசை என்பது ஒரு தெய்வீக கலை, இது இன்பத்திற்காக மட்டுமல்லாமல், முக்திக்கான ஒரு பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பக்திப் பாடலால் விளையும் அதிர்வுகள் பிரபஞ்ச அதிர்வு அல்லது வார்த்தையுடன் ஒத்திசைவதற்கு இட்டுச் செல்கின்றன. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது” (யோவான் 1:1).

சிறந்த பலன்களை விரும்பும் இந்தப் பாடல்களை இசைப்பவர்கள் அவற்றை தனியாகவோ அல்லது இறைவனின் உண்மையான பக்தர்களுடனோ, எப்போதும் அதிகரித்து வரும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் பாட வேண்டும். ஸ்வரங்கள் கற்றுக் கொண்ட பிறகு, மேலும் மேலும் ஆழமான பக்தியுடன் அவற்றைத் திரும்பத் திரும்ப பாடுவதில் ஒருவரின் முழு கவனமும் இருக்க வேண்டும், பாடும் பேரின்பத்தில் ஒருவர் மூழ்கும் வரை, கீதத்தில் உள்ள சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முழுமையாக முயற்சிக்க வேண்டும். இந்த பேரின்ப உணர்வுதான் இறைவனைப் பற்றிய நம் முதல் உணர்தல்.

நேர்மை, உறுதிப்பாடு, விசுவாசம், உள்ளுணர்வு ஆகியவற்றால் நிறைந்திருக்கும் சொற்கள், சிரமங்களின் பாறைகளை அகற்றி விரும்பிய மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்ட வெடிக்கக் கூடிய அதிர்வு குண்டுகளைப் போன்றது.

ஐந்து நிலைகள்: உரக்க இசைத்தல் – மெல்லிய குரலில் இசைத்தல் – மனதில் இசைத்தல்- ஆழ்உணர்வில் இசைத்தல் – உயர் உணர்வில் இசைத்தல். ஒருவரின் எண்ணங்கள் மற்றும் செயல்களின் பின்னணியில் மனம் சிரமமின்றி ஒரு கீதத்தை மீண்டும் மீண்டும் இசைக்கும் போது, ஆழ்மன இசைத்தல் தானாகவே, உள் உணர்வுநிலையுடன் மட்டுமே தன்னியக்கமாக மாறுகிறது.

உயர் உணர்வுநிலையில் கீதமிசைத்தல் ஓம் உணர்தலுக்கு அழைத்துச் செல்கிறது

உயர் உணர்வுநிலையில் கீதமிசைத்தல் என்பது அகத்துள் இசையின் அதிர்வுகள் உணர்தலாக மாற்றப்பட்டு, உயர்உணர்வு, ஆழ்உணர்வு மற்றும் உணர்வுகளில் நிறுவப்படுவது ஆகும். ஒரு கற்பனை அல்லது வெளிப்புற ஒலியின் மீது அல்லாமல், உண்மையான பிரபஞ்ச அதிர்வான, ஓம் மீது இடைவிடாது கவனத்தை வைத்திருப்பது, உண்மையான உயர் உணர்வுநிலையில் பாடுவதன் தொடக்கமாகும்.

பைபிளில் உள்ள பத்துக் கட்டளைகளில் ஒன்று: “உன் இறைவனாகிய பரம்பொருளின் நாமத்தை வீணாய் உச்சரிக்காமல் இருப்பாயாக.” இறைவனின் மீது முழுக் கவனமும் செலுத்தாமல், ஒருவர் ஒரு கீதத்தையோ அல்லது பிரார்த்தனையையோ கவனக்குறைவாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் போதெல்லாம், அதாவது, விளைவு இல்லாமல், அந்த பெயரின் எங்கும் நிறைந்திருக்கும் வல்லமையைப் பயன்படுத்தாமல், இறைவனுடைய மறுமொழியைப் பெறாமல், ஒருவர் இறை நாமத்தை வீணாக உச்சரிக்கிறார். அத்தகைய கிளிப் பேச்சை போன்ற பிரார்த்தனைகளுக்கு இறைவன் மறுமொழி அளிப்பதில்லை. எப்போதும் அதிகரிக்கும் புரிதலுடனும் பக்தியுடனும் ஒரு கீதத்தைத் திரும்பத் திரும்ப பாடுவது, இறைவனுடைய நாமத்தை வீணாய் அல்ல, திறம்பட உசசரிப்பதாகும்.

இந்த ஆன்மீகமயமாக்கப்பட்டுள்ள பாடல்களான பிரபஞ்ச கீதங்களை, உண்மையான பக்தியுடன் பாடுகிறவர், இறை-ஐக்கியத்தையும் ஆனந்த பரவசத்தையும், அவற்றின் மூலம் உடல், மனம் மற்றும் ஆன்மா குணப்படுத்தப் படுவதையும் காண்பார்.

இறைவன் பக்தனுக்கு மறுமொழி அளித்துள்ளான் என்பதற்கு அவர் உணரும் ஆனந்தமே ஆதாரம்

இந்த கீதங்கள் ஒவ்வொன்றும் ஒரு முறை அல்ல, பல முறை, மீண்டும் மீண்டும் இசைப்பதில் கிடைக்கப் பெறும் ஒட்டுமொத்த சக்தியைப் பயன்படுத்தி, பாடகர் தனது இதய ரேடியோ மூலம் பெரும் பேரின்பத்தை உணரும் வரை பாடப்பட வேண்டும். இந்த ஆனந்தத்தை உணர்தல், இறைவன் பாடகருக்கு மறுமொழி அளித்துள்ளான் என்பதற்கும், அவரது பக்தி சரியான முறையில் ஒத்திசைந்துள்ளது என்பதற்கும் கீதமிசைப்பதில் அவரது ஆர்வத்தின் ஒளிபரப்பு உண்மையாகவும் ஆழமாகவும் உள்ளது என்பதற்கும் ஒரு சான்றாகும்.

இப்பாடல்களை மிகுந்த பக்தியோடு, தனிமையில் அல்லது குழுவில் பாடுபவர், தன் மனதின் ஆழ்மனப் பின்புலத்தில் அந்த கீதங்கள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருப்பதையும், அன்றாடச் செயல்பாடுகள் எனும் போராட்டத்தின் பிடியில் இருக்கும்போது விவரிக்க முடியாத ஆனந்தத்தை தருவதையும் பின்னர் அறிவார்.

ஆழ் உணர்வில் திரும்ப திரும்ப இசைத்தல் என்பது, படிப்படியாக உயர் உணர்நிலை உணர்தலாக மாறி, இறைவனைப் பற்றிய உண்மையான உணர்வைக் கொண்டுவரும். இசைத்தல் ஆழ்உணர்வில், பின்னர் உயர்உணர்வில் உணர்தலாக மாறி, தெய்வீக பிரசன்னத்திற்குள் ஒருவரைக் கொண்டுவரும் வரை ஒருவர் கீதத்தை மேலும் மேலும் ஆழமாக, பாட வேண்டும்.

ஒவ்வொரு பக்தரும் இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு ஒரு வழக்கமான நேரத்தை ஒதுக்க வேண்டும். முதலில் உரக்கவும், பின்னர் மெல்லிய குரலிலும், பின்னர் மனரீதியாகவும் இசைக்கவும். இறைவனின் பெயரால் ஒன்றுகூடும் ஒரு குழு, இந்த கீதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஹார்மோனியம் அல்லது ஆர்கன் துணையுடன் பாட வேண்டும், பின்னர் மெதுவாக, பின்னர் எந்த துணைவாத்தியமும் இல்லாமல் மெல்லியதாகவும், இறுதியாக மனதளவிலும் மட்டுமே பாட வேண்டும். இந்த வழியில் ஆழமான இறை உணர்வு பெற முடியும்.

para-ornament

அமெரிக்க பார்வையாளர்கள் இந்த ஆத்ம கீதங்களைப் புரிந்து கொள்கிறார்கள்

ஆன்மா சக்தியால் நிறைவுற்ற இசை அனைத்து இதயங்களாலும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மையான உலகளாவிய இசையாகும். அமெரிக்க பார்வையாளர்கள் முன் தோன்றிய ஆண்டுகளில் இந்த உண்மையைப் பற்றிய பல விளக்கங்களை நான் பெற்றிருக்கிறேன். ஏப்ரல் 1926ல் நியூயார்க்கில் உள்ள கார்னகி ஹாலில் நான் தொடர்ச்சியாக உரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நான் சில இசை நண்பர்களுக்கு இந்த கீதங்களில் ஒன்றைப் பாடும் யோசனையைப் பரிந்துரைத்தேன், முந்தைய ஒத்திகை இல்லாமல், ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அதில் சேருமாறு கேட்டுக் கொண்டேன். கீதங்கள் அமெரிக்க புரிதலுக்கு அந்நியமானதாக இருக்கும் என்று என் நண்பர்கள் நினைத்தனர்.

இசை என்பது இறைவனுக்கான ஆன்மாவின் பக்தியின் உலகளாவிய மொழி என்றும், கிழக்கு அல்லது மேற்கத்திய இசையை நன்கு அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்து ஆன்ம எழுச்சியுடனான மக்களும், இசைக்கும் போது என் இதயத்தின் தெய்வீக ஏக்கத்தைப் புரிந்துகொள்வார்கள் என்றும் கூறி என் எதிர்ப்பைத் தெரிவித்தேன்.

ஒரு நாள் மாலை நான் “ஏ அழகிறைவா” என்று பாடத் தொடங்கினேன், இதற்கு முன்பு ஒருபோதும் பாடலைக் கேட்டிராத பார்வையாளர்களை, என்னுடன் இணைந்து பாடுமாறு கேட்டேன். ஒரு மணி நேரமும் இருபத்தைந்து நிமிடங்களும், மொத்த பார்வையாளர்களின் ஆயிரக்கணக்கான குரல்களும் ஆனந்தமான போற்றுதலுடன் கூடிய தெய்வீக சூழலில் “ஏ அழகிறைவா” ஐப் பாடினர்.

நான் மேடையை விட்டு வெளியேறிய பிறகும், பார்வையாளர்கள் அமர்ந்து பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பல ஆண்களும் பெண்களும் புனித இசைத்தலின் போது நிகழ்ந்த இறை உணர்தல் மற்றும் உடல், மனம் மற்றும் ஆன்மா குணப்படுத்தப் பட்டதற்கு சாட்சியமளித்தனர், மேலும் மற்ற சத்சங்கங்களிலும் கீதத்தை மீண்டும் இசைக்க பல கோரிக்கைகள் வந்தன.

அமெரிக்காவின் இசைக் கோவிலான கார்னகி ஹாலில் ஏற்பட்ட இந்த அனுபவம், பல சிறந்த பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் வெற்றிக் களிப்பின் காட்சி, ஆன்ம எழுச்சியூட்டும் இசையின் உலகளாவிய இயல்புக்கும், கிழக்கத்திய கீதங்களைப் பற்றிய மேற்கத்தியர்களின் கற்ப்பிக்கப்படாமலேயே உண்டான புரிதலுக்குமான தன்னிச்சையான அஞ்சலியாக இருந்தது.

அன்று மாலை முதல் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பார்வையாளர்களுடன் ஆயிரக்கணக்கான முறை இந்த கீதங்களை நான் பாடியிருக்கிறேன், மேலும் இறைவனின் புனித திருநாமத்தை அன்போடு உச்சரிக்கும் பக்தர்களுக்கு தெய்வீக நன்மைகள் பொழிவதைக் கண்டிருக்கிறேன்.

லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா
4 டிசம்பர், 1938
பரமஹம்ஸ யோகானந்தரின் பிரபஞ்ச கீதங்கள் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

para-ornament

மேலும் ஆய்வுக்கு:

இதைப் பகிர