ஒருவருடைய ஆன்மீகத் தேடலில் குருவின் பங்கு

பரமஹம்ஸ யோகானந்தரின் படைப்புகளிலிருந்து சில பகுதிகள்

குருவின் பங்கு

குரு கீதை (சுலோகம் 17) குருவை “இருளை விரட்டுபவர்” (கு -விலிருந்து “இருள்” மற்றும் ரு -விலிருந்து “அதை விரட்டுவது”) என்று பொருத்தமாக விளக்குகிறது. ஓர் உண்மையான, இறை-ஞானம் பெற்ற குரு, தன் சுய-மேம்பாட்டை அடையும் போது எங்கும்-நிறைந்த பரம்பொருளுடனான தனது அடையாளத்தை உணர்ந்தறிந்திருக்கும் ஒருவர் ஆவார். அத்தகைய ஒருவர் முழுநிறைவை நோக்கிய சாதகரின் அகப் பயணத்தை வழிநடத்த தனிச்சிறப்புமிக்க தகுதிவாய்ந்தவர் ஆவார்.

“குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது,” என்றார் பரமஹம்ஸர். “இறைவனை அறிந்த ஒரு குரு மட்டுமே அவனைப் பற்றி மற்றவர்களுக்குச் சரியாகக் கற்பிக்கலாம். ஒருவருடைய தெய்வீகத்தை மீட்க ஒருவருக்கு அத்தகைய ஓர் ஆசானோ அல்லது குருவோ இருக்க வேண்டும். ஓர் உண்மையான குருவை விசுவாசத்துடன் பின்பற்றுபவர் அவரைப் போலவே ஆகிறார், ஏனெனில் குரு சீடரைத் தன் சொந்த அனுபூதித் தளத்திற்கு உயர்த்த உதவுகிறார்.”

குரு-சிஷ்ய உறவே நட்பின் உன்னத வெளிப்பாடு, ஏனெனில் அது நிபந்தனையற்ற தெய்வீக அன்பையும் ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அது எல்லா உறவுகளிலும் மிகவும் மேன்மையானது மற்றும் புனிதமானது. கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் மெய்ப்பொருளில் ஒன்றாக இருந்தனர், அதே போலவே இறைவனின் தெய்வீக அன்பெனும் பொதுவான பந்தத்தின் காரணமாக என் குருதேவரும் [சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்] நானும் மற்றும் என்னுடன் இசைந்திருப்போரும் இருக்கிறோம்….இந்த உறவில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒருவர் விவேகத்தையும் சுதந்திரத்தையும் அடையும் வழியில் செல்கிறார்.

பரமஹம்ஸ யோகானந்தர் கடற்கரையில் நிற்கிறார்

தெய்வீகத் தேடலில் வெற்றிக்கு, வாழ்வின் மற்ற ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளது போல, இறைவனின் விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஒரு பள்ளியில் உள்ள சமதர்ம அறிவைப் புரிந்துகொள்ள, நீங்கள் அதை அறிந்த ஒரு ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதைப் போல ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ள ஓர் ஆன்மீக ஆசானோ, அல்லது குருவோ, அல்லது இறைவனை அறிந்த ஒருவரோ தேவை.

நீங்கள் பார்க்கும் திறனற்றவராக வாழ்வெனும் பள்ளத்தாக்கில், இருளில் தட்டுத்தடுமாறி, சென்று கொண்டிருக்கும் போது, உங்களுக்கு கண்களுள்ள ஒருவரின் உதவி தேவை. உங்களுக்கு ஒரு குரு தேவை. ஞான ஒளி பெற்ற ஒருவரைப் பின்பற்றுவதே உலகில் உருவாக்கப்பட்டிருக்கும் மாபெரும் குழப்பத்திலிருந்து விடுபட்டு வெளியேறும் ஒரே வழி. என்னில் ஆன்மீகம்சார்ந்த அக்கறை கொண்ட மற்றும் என்னை வழிநடத்த ஞானம் கொண்ட என் குருதேவரை நான் சந்தித்த வரை நான் உண்மையான மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் காணவில்லை.

உங்கள் இதயத்தினுள் இறைவனுக்காக இடைவிடாது கூக்குரலிடுங்கள். அவனுக்கான உங்கள் ஆசையைப் பற்றி இறைவனை நம்பவைத்துவிடும் போது, அவன் ஒருவரை—உங்கள் குருவை—அவனை எப்படி அறிவது என்று கற்பிக்க அனுப்பிவைப்பான். இறைவனை அறிந்த அவரால் மட்டுமே அவனை எப்படி அறிவது என்று மற்றவர்களுக்குக் காட்ட முடியும். அத்தகைய ஒருவரை, என் குருதேவர் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரை, நான் கண்ட போது, இறைவன் மறைபொருளின் வாயிலாக அல்ல, ஆனால் ஞான ஒளி பெற்ற ஆன்மாக்களின் வாயிலாக போதிக்கிறான் என்று உணர்ந்தறிந்தேன். இறைவன் கட்புலனாகதவன், ஆனால் அவனுடன் இடைவிடாத தொடர்பில் இருக்கும் ஒருவரின் அறிவுத்திறனின் மற்றும் ஆன்மீக உணர்வின் வாயிலாக புலப்படுகிறான். ஒருவரது வாழ்வில் பல ஆசான்கள் இருக்கக்கூடும், ஆனால் ஒரே ஒரு குரு மட்டுமே இருக்கிறார். இயேசு ஞானஸ்நானகன் யோவானைத் தன் குருவாக ஏற்றுக்கொண்ட போது அவருடைய வாழ்விலும் கூட மெய்ப்பித்துக் காட்டப்பட்டது போல, குரு-சிஷ்ய உறவில் ஒரு தெய்வீகத் தேவை நிறைவேற்றப்படுகிறது.

இறை-அனுபூதி பெற்ற மற்றும் ஆன்மாக்களை மீட்க இறைவனால் ஆணையிடப்பட்டிருக்கும் ஒருவரே குரு. தான் வெறுமனே நினைப்பதால் மட்டுமே ஒருவரால் ஒரு குருவாக இருக்க முடியாது. இயேசு, “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது,” என்று கூறிய போது உண்மையான குரு இறைவனின் விருப்பத்தால் மட்டுமே செயற்படுகிறார் என்று இயேசு காண்பித்தார். அவர் எல்லாப் புகழையும் இறைவனின் சக்திக்கே அளித்தார். ஓர் ஆசான் அகந்தையின்றி இருந்தால், அவருடைய உடல்-கோவிலில் இறைவன் மட்டுமே உறைகிறார்; மற்றும் நீங்கள் அவருடன் இசைந்திருக்கும் போது நீங்கள் இறைவனுடன் இசைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியலாம். இயேசு தன் சீடர்களுக்கு நினைவுபடுத்தினார்: “என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்.”

மற்றவர்களின் போற்றுதலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளும் ஆசான் வெறுமனே தன் சொந்த அகந்தையை வழிபடும் ஒருவராவார். ஒரு பாதை உண்மையா என்று கண்டறிய, எத்தகைய ஆசான் அதற்குப் பின்னால் உள்ளார், அவர் வழிநடத்தப்படுவது இறைவனாலா அல்லது தன் சொந்த அகந்தையாலா என்று அவருடைய செயல்கள் காண்பிக்கிறதா என்பதற்கேற்ப வேறுபடுத்திப் பாருங்கள். அனுபூதி அடையாத ஓர் ஆசானால், அவரைப் பின்பற்றும் கூட்டம் எத்துணை பெரியதாக இருந்தாலும் சரி, இறைவனின் இராஜ்ஜியத்தை உங்களுக்குக் காண்பிக்க முடியாது. எல்லாத் தேவாலயங்களும் நல்லதைச் செய்திருக்கின்றன, ஆனால் விடாப்பிடியான சமயக் கோட்பாடுகளில் கொண்ட குருட்டு நம்பிக்கை மக்களை ஆன்மீகரீதியாக அறியாமையிலும் தேங்கிய நிலையிலும் வைத்திருக்கிறது. பலமுறை நான் இறைவனின் நாமத்தைப் பாடும் மிகப்பெரிய கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இறைவன் வெகுதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல அவர்களுடைய உணர்வுநிலையிலிருந்து வெகுதூரத்தில் இருந்தான். வெறுமனே தேவாலயத்திற்குச் செல்வதன் மூலம் ஒருவரும் காப்பாற்றப்பட முடியாது. சுதந்திரத்திற்கான மெய்யான வழி யோகத்தில், அறிவியல்பூர்வ சுய-ஆய்வில், மற்றும் இறையியல் எனும் காட்டைக் கடந்திருக்கும் மற்றும் உங்களைப் பாதுகாப்பாக இறைவனிடம் வழிநடத்திச் செல்ல முடிகின்ற ஒருவரைப் பின்பற்றுவதில் இருக்கிறது.

உண்மையின் ஒரு வாழும் வடிவம்

தனிநபர்களின் ஆழ்ந்த பிரார்த்தனைகளுக்கு மறுமொழியளிப்பதில் அவர்களுக்கு உதவ இறைவனால் ஆணையிடப்பட்ட அத்தகைய ஒரு குரு ஒரு சாதாரண ஆசான் அல்ல; ஆனால் ஒரு மனித வாகனம்; அவருடைய உடல், பேச்சு, மனம், ஆன்மீகம் ஆகியவற்றை இறைவன் வழிதவறிய ஆன்மாக்களை ஈர்த்து தன் அமரத்துவ வீட்டிற்கு மீண்டுவர வழிகாட்டும் ஒரு மார்க்கமாக இறைவன் பயன்படுத்துகிறான். உண்மையை அறிவதற்கான நமது தெளிவிலா ஆசையின் வாயிலாக ஆரம்பத்தில் நாம் பல்வேறு ஆசான்களைச் சந்திக்கிறோம். ஆனால் ஒரு குரு என்பவர் சாத்திர உண்மையின் ஒரு வாழும் வடிவம் மற்றும் பருப்பொருளின் தளையிலிருந்து விடுபடுவதற்காகச் செய்த ஒரு சாதகரின் ஓயாத விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட முக்தியின் முகவர் ஆவார்.

மாயை நல்ல கூட்டுறவால், மகான்களின் கூட்டுறவால், மற்றும் இறைத் தூதர்களுக்கான பக்தியால் அழிக்கப்படுகிறது. மகான்களைப் பற்றிய எண்ணமே கூட மாயையை அகற்ற உங்களுக்கு உதவும். இறைத் தூதருடனான தனிப்பட்ட தோழமையைக் காட்டிலும் அவருடனான எண்ணத்தின் ஒத்திசைவே மாயையை அழிக்கிறது. ஓர் உண்மையான குருவிற்குத் தன்னை மற்றவர்களின் இதயங்களில் வைக்கும் ஆசை கிடையாது, ஆனால் மாறாக அவர்களுடைய உணர்வுநிலையில் இறைவனின் உணர்வுநிலையை விழித்தெழச் செய்யவே அவர் விரும்புகிறார். குருதேவர் [சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்] அதைப் போன்றவர்: அவர் ஒருபோதும் தன் மகத்துவத்தை வெளிக்காட்டாமல் எங்களுள் ஒருவராக இருந்தார். ஆசிரமத்தில் எவரேனும் அங்கீகாரத்தையோ அல்லது அதிகாரமிக்க ஓர் உயர்ந்த பதவியையோ விரும்பினால், குருதேவர் அந்தப் பதவியை அவருக்கு வழங்கிவிடுவார். ஆனால் நான் குருதேவரின் இதயத்தை, அவரிடமிருந்த தெய்வீக உணர்வுநிலையை, விரும்பினேன்; மற்றும் அதன் விளைவாக, அவர் என்றென்றைக்கும் இங்கே என் இதயத்தில் வீற்றிருக்கிறார். நீங்கள் விரும்புவது மகான்களுடனான அந்த ஒத்திசைவைத்தான்

என் குருதேவர் என்னிடம் கூறினார்: “நீ கீழான மனத்தளத்தில் இருந்தாலும் சரி அல்லது உன்னத ஞானத்தளத்தில் இருந்தாலும் சரி, இப்போதிருந்து சாசுவதம் வரை நான் உனக்கு நண்பனாக இருப்பேன்.நீ தவறிழைத்தாலும் கூட நான் உன் நண்பனாக இருப்பேன், ஏனெனில் அப்போது மற்ற எந்த நேரத்தை விடவும் அதிகமாக உனக்கு என் நட்பு தேவைப்படும்.”

என் குருதேவரின் நிபந்தனையற்ற நட்பை நான் ஏற்றுக்கொண்ட போது, அவர் கூறினார்: “நீ அதே நிபந்தனையற்ற அன்பை எனக்கு அளிப்பாயா?” அவர் குழந்தையைப் போன்ற நம்பிக்கையுடன் என்னைப் பார்த்தார்.

“குருதேவா, நான் உங்களை நித்தியமாக நேசிப்பேன்!”

“சாதாரண அன்பு சுயநலமிக்கது, ஆசைகளிலும் மனநிறைவுகளிலும் இருளாக வேரூன்றியது. தெய்வீக அன்பு நிபந்தனையற்றது, எல்லையற்றது, மாற்றமற்றது. தூய அன்பின் ஊடுருவி நிற்கும் ஸ்பரிசத்தில் மனித இதயக் கழிவு என்றென்றைக்குமாக வெளியேறிவிட்டது.” அவர் பணிவாக மேலும் கூறினார், “எப்போதாவது நான் இறை-அனுபூதி நிலையிலிருந்து வீழ்வதை நீ கண்டால், என் தலையை உன் மடிமீது வைத்து நாம் இருவரும் வழிபடும் பேரண்டப் பேரன்பனுக்கு திரும்பக் கொண்டுவர உதவுவேன் என்று வாக்குறுதியளிக்க வேண்டுகிறேன்.”

இந்த ஆன்மீக ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகுதான் ஒரு சீடருக்கான குருவின் முக்கியத்துவத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் என்னை நிபந்தனையற்ற விசுவாசத்துடனும் என் குருவின் தெய்வீக உணர்வுநிலைக்கான பக்தியுடனும் இசைவித்துக் கொள்ளும் வரை நான் முழுமையான மனநிறைவு, ஆறுதல், இறைத்தொடர்பு ஆகியவற்றை ஒருபோதும் காணவில்லை.

கொடையாளிகளில் மிகச் சிறந்தவர்கள்

இறைவன் உலகத்துடன் தன் ஞான ஒளி பெற்ற பக்தர்கள் வாயிலாக மட்டுமே பேசுகிறான். ஆகவே, உங்கள் ஆன்மாவின் ஆசைக்கு ஒரு மறுமொழியாக இறைவனால் அனுப்பப்பட்ட குருவின் இச்சாசக்தியுடன் இசைவித்துக் கொள்வதே எல்லாச் செயல்களிலும் மிகவும் விவேகமானதாகும். சுயமாக-அறிவித்துக் கொள்வதாலேயே ஒருவர் குருவாக இருக்க முடியாது; மற்றவர்களைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவருமாறு இறைவனால் கேட்டுக்கொள்ளப் பட்ட ஒருவரே குரு. ஒரு சிறிது ஆன்மீக ஆசை இருக்கும் போது, இறைவன் உங்களுக்கு மேலும் உத்வேகமூட்ட புத்தகங்களையும் ஆசான்களையும் அனுப்புகிறான்; மற்றும் உங்களுடைய ஆசை வலுவடையும் போது, ஓர் உண்மையான குருவை அவன் அனுப்புகிறான்….

தம்மைப் பின்பற்றுவோர் உடனடியாகக் கீழ்ப்படியத் தயாராக, தாம் அழைத்தவுடன் வரத் தயாராக எப்போதும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆசான்கள் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், ஆசான் கோபப்படுகிறார். ஆனால் இறைவனை அறிந்த மற்றும் ஒரு குருவாக இருக்கும் ஓர் ஆன்மீக ஆசான் தன்னை ஒரு ஆசானாகவே ஒருபோதும் நினைப்பதில்லை. அவர் இறைவனின் இருப்பை எல்லோரிடமும் தரிசிக்கிறார், மற்றும் சில மாணவர்கள் தன் விருப்பங்களைப் புறக்கணித்தால் சினம் கொள்வதில்லை. ஓர் உண்மையான குருவின் ஞானத்துடன் இசைந்திருப்போர் குரு அவர்களுக்கு உதவுவதைச் சாத்தியமாக்குகின்றனர் என்று இந்து மறைநூல்கள் உரைக்கின்றன. “(ஒரு குருவிடமிருந்து) அந்த ஞானம் பெறுவதினால், அர்ஜுனா! நீ மீண்டும் மாயையில் விழ மாட்டாய்.”

குருவிற்கும் சீடருக்கும் இடையேயுள்ள நட்பு நிலைபேறானது. ஒரு சீடர் குருவின் பயிற்சியை ஏற்றுக்கொள்ளும் போது, முழுமையான அடைக்கலம் உள்ளது, யாதொரு வலுக்கட்டாயமும் இல்லை.

ஸ்ரீ யுக்தேஸ்வர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர்

என் குருதேவருடன் நான் கொண்டிருந்த உறவைவிடவும் பெரிய ஒன்று இவ்வுலகில் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. குரு-சிஷ்ய உறவு அன்பின் உச்சபட்ச வடிவமாகும். என்னால் இறைவனை இமயமலைகளில் அதிக வெற்றிகரமாக நாட முடியும் என்று நினைத்தவாறு, நான் ஒருமுறை அவருடைய ஆசிரமத்தை விட்டுச் சென்றேன். நான் தவறாகக் கருதினேன்; மற்றும் நான் தவறு செய்து விட்டிருந்ததாக விரைவில் அறிந்தேன். இருப்பினும் நான் திரும்பி வந்தபோது, நான் ஒருபோதும் விட்டுச் செல்லவில்லை என்பது போல என்னை நடத்தினார். அவருடைய வரவேற்பு அத்துணை இயல்பாக இருந்தது; என்னைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அவர் அமைதியாக குறிப்பிட்டார், “இந்தக் காலை வேளையில் நம்மிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.”

“ஆனால் குருதேவா,” நான் கூறினேன், “விட்டுச் சென்றதற்கு என்மீது உங்களுக்குக் கோபமில்லையா?”

“நான் ஏன் கோபப்பட வேண்டும்?” அவர் பதிலளித்தார். “நான் மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆகவே அவர்களுடைய செயல்கள் எனது விருப்பங்களுக்கு எதிராக இருக்க முடியாது. நான் உன்னை என் சொந்தப் பலன்களுக்காகப் பயன்படுத்த மாட்டேன்; நான் உன் சொந்த உண்மையான மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடைகிறேன்.”

அவர் அதைச் சொன்ன போது, நான் அவருடைய பாதங்களில் வீழ்ந்து கதறினேன், “முதன்முறையாக என்னை உண்மையாக நேசிப்பவர் இருக்கிறார்!”…

நான் இறைவனை நாடி ஆசிரமத்தை விட்டு ஓடிச் சென்றாலும் கூட, எனக்கான அவருடைய அன்பு மாறாமல் இருந்தது. அவர் என்னைக் கண்டிக்கக் கூட இல்லை….என்னிடத்தில் அத்துணை அக்கறை கொண்ட ஒருவர் இருக்கமுடியும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை. அவர் எனக்காகவே என்னை நேசித்தார். அவர் எனக்காக முழுநிறைவை விரும்பினார். நான் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். அதுவே அவருடைய மகிழ்ச்சி. நான் இறைவனை அறிய வேண்டுமென; என் இதயம் யாருக்காக ஏங்கியதோ, அந்தத் தெய்வ அன்னையுடன் நான் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

அவர் வெளிப்படுத்தியது தெய்வீக அன்பில்லையா? நன்மையும் அன்பும் கொண்ட பாதையில் எனக்கு இடைவிடாது வழிகாட்ட விரும்பியது? அந்த அன்பு குருவிற்கும் சீடருக்கும் இடையே வளர்ச்சியடையும் போது, சீடருக்கு குருதேவரிடம் சூழ்ச்சி செய்யும் எந்த ஆசையும் இருப்பதும் இல்லை, குருதேவர் சீடரின் கட்டுப்பாட்டை நாடுவதும் இல்லை. உன்னதமான பகுத்தறிவும் நியாய உணர்வும் அவர்களுடைய உறவை ஆட்சி செய்கின்றன; இதைப் போன்ற அன்பேதும் கிடையாது. மேலும் அந்த அன்பை என் குருதேவரிடமிருந்து நான் சுவைத்தேன்.

குரு என்பவர், சீடரில் உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை விழித்தெழச் செய்யும், விழிப்புணர்வடைந்த இறைவன் ஆவார். கருணையின் மற்றும் தொலைநோக்குப் பார்வையின் வாயிலாக, ஓர் உண்மையான குரு உடல்ரீதியாக, மனரீதியாக மற்றும் ஆன்மீகரீதியாக ஏழையாக இருப்போரில் இறைவன் வேதனையடைவதைக் காண்கிறார், மற்றும் அதனால்தான் அவர்களுக்கு உதவுவது தன் ஆனந்தமயக் கடமையாக அவர் உணருகிறார். அவர் கைவிடப்பட்டோரில் பசித்த இறைவனுக்கு உணவளிக்க, அறியாமையில் இருப்போரில் உறங்கும் இறைவனை அசைக்க, எதிரியில் மயக்க நிலையில் உள்ள இறைவனை நேசிக்க, மற்றும் ஏங்கும் பக்தரில் அரைத் தூக்கத்தில் உள்ள இறைவனை எழுப்ப முயற்சி செய்கிறார். மேலும், அன்பின் ஒரு மென்மையான ஸ்பரிசத்தால், அவர் மேம்பட்ட சாதகரில் ஏறத்தாழ முழுமையாக விழித்தெழுந்த இறைவனை உடனடியாக எழுப்புகிறார். குருவே எல்லா மனிதர்களிலும் உள்ள கொடையாளிகளில் ஆகச் சிறந்தவர். இறைவனைப் போலவே, அவருடைய பெருந்தகைமைக்கும் எல்லையே இல்லை.

குருதேவரின் வாக்குறுதி

அக ஆன்மீக உதவியை உண்மையிலேயே நாடி யோகதா சத்சங்க சொஸைடிக்கு வந்திருப்போர் இறைவனிடமிருந்து அவர்கள் எதை நடுகிறார்களோ, அதைப் பெறுவர். அவர்கள், நான் உடலில் இருக்கும் போதோ, அல்லது அதற்குப் பின்னாலோ வந்தாலும், இறைச்சக்தி ஒய் எஸ் எஸ் குருமார்களுடைய தொடர்பின் வாயிலாக அதைப் போலவே பக்தர்களுக்குப் பாயும் மற்றும் அவர்களுடைய முக்திக்கு வித்தாகும்….

ஒய் எஸ் எஸ் போதனைகளின் பயிற்சியில் வழக்கப்படியும் விசுவாசமாகவும் இருக்கும் சாதகர்கள் தமது வாழ்க்கைகள் தூய்மையடைவதையும் நிலைமாற்றமடைவதையும் காண்பர். தமது விடாமுயற்சி, நிலைமாறா உறுதி ஆகியவற்றால் இப்பாதையின் உண்மையான சாதகர்கள் முக்தியைக் காண்பர். ஒய் எஸ் எஸ் உத்திகளிலும் போதனைகளிலும் ஒய் எஸ் எஸ் குரு பரம்பரையின் உதவியும் அருளாசிகளும் அடக்கம். தமது வாழ்க்கைகளை ஒய் எஸ் எஸ் கோட்பாடுகளின்படி நடத்துவோர் ஒய் எஸ் எஸ் குரு பரம்பரையின் மறைவான மற்றும் வெளிப்படையான இயக்கத்தால் ஆசீர்வதிக்கப்படுவர். என்றும்-வாழும் பாபாஜி எல்லா நேர்மையான சாதகர்களின் முன்னேற்றத்தையும் பாதுகாத்து வழிகாட்டும் வாக்குறுதியை அளித்திருக்கிறார். தமது பூத உடலை நீத்திருக்கும் லாஹிரி மகாசயர் மற்றும் ஸ்ரீ யுக்தேஸ்வர், மற்றும் நானும், உடலை விட்டுச் சென்ற பிறகும் கூட—எல்லோரும் நேர்மையான ஒய் எஸ் எஸ் சாதகர்களை என்றும் பாதுகாத்து வழிகாட்டுவர்.

பரமஹம்ஸ யோகானந்தர் பில்ட்மோர் ஹோட்டல்

இறைவன் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளான், மற்றும் நான் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டேன்….நான் சென்றுவிட்ட பிறகும் கூட, உலகமெங்கும் உள்ள சாதகர்களுக்கு, அவர்கள் இசைந்திருந்தால், என் உதவி வழங்கப்படும். நான் உங்களுடன் பூதவுடலில் இல்லாதிருக்கும் போது, நான் வேறு வகையில் உங்களுடன் இல்லை என்று ஒரு கணம் கூட ஒருபோதும் நினைக்காதீர்கள். நான் இப்போது போலவே இந்த உடலில் இனி இல்லாத போதும் உங்களுடைய ஆன்மீக நலத்தில் அதே அளவு ஆழமான அக்கறையுடன் இருப்பேன். நான் எப்போதும் உங்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருப்பேன், மற்றும் ஓர் உண்மையான சாதகர் தன் ஆன்மாவின் மௌன ஆழங்களில் என்னைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் அருகில் இருப்பதை அவர் அறிவார்.

மேலும் ஆய்வு செய்வீர்:

இதைப் பகிர