உடல்நலமும் குணமாக்குதலும்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல் -லில் “இறைவனின் எல்லையில்லாச்

சக்தியினால் குணப்படுத்துதல்” அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

நோய் என்றால் என்ன?

Waterfall depicting God's Healing Vibrations flowing to us

மூன்று விதமான நோய்கள்‌உள்ளன: உடல்‌நோய்‌, மன நோய்‌ மற்றும்‌ ஆன்ம நோய்‌

உடல்‌நோய்‌, பலவிதமான நச்சுத்‌தன்மை நிலைகளினாலும்‌, தொற்று நோய்களினாலும்‌, விபத்துக்களினாலும்‌ உண்டாகிறது.

மனநோய்‌, பயம்‌, கவலை, சினம் ‌மேலும்‌, மற்ற உணர்ச்சிகளின்‌ விகாரங்களினாலும்‌ ஏற்படுகிறது.

ஆன்மநோய்‌, மனிதனுக்கு இறைவனுடன்‌ உள்ள உண்மையான உறவைப்‌பற்றிய அவனது அறியாமையினால் ‌உண்டாகிறது.

அறியாமை என்பது மிகப்பெரிய நோய்‌. ஒருவன்‌அறியாமையை அகற்றிவிடும்பொழுது அவன்‌எல்லா விதமான உடல்‌, மன மற்றும்‌ ஆன்ம நோயின்‌காரணங்களை அகற்றிவிடுகிறான்‌. என்‌குரு, ஸ்ரீ யுக்தேஸ்வர்‌, அடிக்கடி கூறுவது, “ஞானம்‌ எல்லாவற்றையும்‌ சுத்தப்படுத்த வல்லது.”

பலவிதமான துன்பங்களைப்‌ பெளதீக சிகிச்சை முறைகளின்‌ வரையறைக்குட்பட்ட சக்தியினால் ‌போக்க நினைப்பது பெரும்பாலும்‌ ஏமாற்றத்தையே தருவதாகும்‌. எல்லையற்ற சக்தியைத்‌தரும்‌, ஆன்மீக வழிமுறைகளினால் ‌மட்டுமே, உடல்‌, மன, ஆன்மீக “நலம்-‌இன்மை”க்கு ஒரு நிரந்தரமான தீர்வை மனிதன்‌காண முடியும்‌. அந்த எல்லையற்ற குணமாக்கும் ‌சக்தியை இறைவனிடம்‌ தேட வேண்டும்‌. நீங்கள்‌ பிரியமானவர்களின் ‌இழப்பைப் ‌பற்றி மனத்தளவில் ‌துன்புற்றிருந்தால் ‌நீங்கள் அவர் களை மறுபடியும்‌ இறைவனிடத்தில் ‌காண முடியும்‌. அவனுடைய உதவியினால்‌ எல்லாமே சாத்தியம்தான்‌. ஒருவருக்கு உண்மையாக கடவுளைத்‌ தெரிந்திருந்தாலொழிய, மனம் ‌மட்டுமே உள்ளது, மேலும் ‌ஆரோக்கிய விதிமுறைகளுக்குக்‌ கீழ்ப்படியவோ அல்லது குணமடைவதற்காக எந்த வெளிப்புற உதவிகளையும் ‌பயன்படுத்த வேண்டிய அவசியமோ இல்லை என்று அவர்‌கூறுவது நியாயமாகாது. உண்மையான அனுபூதியை அடையும்‌ வரை, ஒருவர் ‌தான் ‌செய்யும்‌ எல்லாவற்றிலும் ‌பொது அறிவை உபயோகப்படுத்த வேண்டும்‌. அதே சமயத்தில்‌ ஒருவர் ‌இறைவனைப்‌ பற்றி என்றும்‌ சந்தேகப்படாமல் ‌எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தியில் ‌தனது நம்பிக்கையை இடைவிடாமல் ‌வலியுறுத்திக்‌ கொண்டிருக்க வேண்டும்‌.

மருத்துவர்கள் ‌நோயின் ‌காரணங்களை அறிந்து கொண்டு, அக்காரணங்களை விலக்குவதன்‌ மூலம்‌ நோய்கள் திரும்ப வராமலிருக்க முயற்சிக்கிறார்கள்‌. அவர்களுடைய குறிப்பிட்ட பெளதீக நிவாரண வழிகளில்‌, அவர்கள்‌ அனேகமாக மிகத்‌திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்‌. ஆனாலும்‌, ஒவ்வொரு நோயும்‌ மருந்திற்கோ அல்லது அறுவை சிகிச்சைக்கோ கட்டுப்படுவதில்லை. இந்த விஷயத்தில்தான்‌ இந்த முறைகளின்‌ முக்கியமான குறைபாடு அடங்கியுள்ளது.

இரசாயனப் ‌பொருட்களும் ‌மருந்துகளும்‌ உடல் ‌செல்களின்‌ வெளிப்புற பெளதீகக்‌ கூட்டமைப்புக்களை மட்டும்தான் ‌பாதிக்கின்றன. அவை செல்களின்‌ அணு அமைப்பையோ அல்லது ஜீவதத்துவத்தையோ மாற்றுவதில்லை. பல நேரங்களில் ‌இறைவனின்‌ குணப்படுத்தும்‌சக்தி, உடலில் ‌உள்ள “ஜீவ அணுக்கள்‌” அல்லது அறிவார்ந்த ஜீவ சக்தியின்‌ ஏற்றத்தாழ்வுகளை உள்ளிருந்து, சமன்‌ செய்யும்‌வரை, நோயின் ‌நிவாரணம் சாத்தியமாவதில்லை.

இயற்கையான நோய்த்தடுப்புச் சக்தியை விருத்தி செய்யவும்

உபவாசம் ‌குணமடைதலுக்கான ஓர்‌ இயற்கையான வழியாகும்‌. மிருகங்களோ அல்லது காட்டு மிராண்டிகளோ நோயுற்று இருக்கும் பொழுது பட்டினி கிடக்கின்றனர்‌. இவ்வாறு உடல்-‌இயந்திரம்‌ தன்னையே சுத்திகரித்துக்‌கொள்ளவும்‌, மிகத்‌தேவையான. ஓய்வை அடையவும்‌, ஒரு வாய்ப்பைப் ‌பெறுகிறது. பல வியாதிகள்‌ கவனமான முறையில்‌ உபவாசம் ‌இருப்பதனால் சொஸ்தமாகின்றன. ஒருவருக்குப்‌ பலவீனமான இருதயம் இருந்தாலொழிய வழக்கமாக சிறு உபவாசங்கள் ‌மிக நல்ல ஆரோக்கிய சாதனமாக யோகிகளால்‌ சிபாரிசு செய்யப்‌பட்டிருக்கின்றன.உடலுக்குக் ‌குணம் ‌ஏற்படுத்தும்‌ இன்னொரு நல்ல வழி தகுந்த மூலிகைகளோ அல்லது மூலிகைச்‌ சாறுகளோ ஆகும்‌.

மருந்துகளை உபயோகப்படுத்தும் ‌பொழுது நாம் ‌பெரும்பாலும்‌ காண்பது என்னவெனில்‌, அவை குணப்படுத்தும்‌ அளவிற்குத்‌ திறனுள்ளவையாக இருப்பது இல்லை. அல்லது அவைகளின்‌ வீரியம் ‌மிக அதிகமாகி சொஸ்தப்படுத்துவற்குப் ‌பதிலாக உடல்‌ திசுக்களை எரிச்சலூட்டுகின்றன. அதுபோலவே சிலவிதமான “குணப்படுத்தும்‌ கதிர்கள்‌” உடல்‌திசுக்களை எரித்துவிடுகின்றன, சரீர சம்பந்தமான வைத்திய முறைகளில் ‌பல குறைபாடுகள்‌உள்ளன!

மருந்துகளை விட சூரியனின்‌ கதிர்கள் ‌நன்மை பயப்பவை, அவைகளில் ‌ஓர்‌ அதிசயமான குணப்படுத்தும்‌ சக்தி உள்ளது, ஒருவர் ‌தினமும் ‌ஒரு பத்து நிமிட சூரியக்குளியல்‌ செய்ய வேண்டும்‌. எப்பொழுதாவது மிக அதிக நேரம்‌ வெயிலில் ‌இருப்பதை விட தினமும்‌ பத்து நிமிடங்கள் ‌சூரியக்‌குளியல்‌ நல்லது.* தினசரி ஒரு குறுகிய கால சூரியக்‌குளியல்‌, நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களினால் வலியூட்டப்பட்டு, தீங்கிழைக்கும்‌ நுண்ணுயிர்களை அழிப்பதற்கு வேண்டிய ஜீவ சக்தியை உடலுக்குக்‌ கொடுத்தவாறு இருக்கும்‌.

ஆரோக்கியமானவர்கள் ‌நோய்க்கு, குறிப்பாக தொற்று நோய்களுக்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியைப் ‌பெற்றிருக்கின்றனர்‌. நோய்‌ என்பது தவறான உணவை உண்பதாலோ அல்லது அதிகமாக உண்பதனால் ‌இரத்தத்தின் ‌எதிர்ப்புச்‌சக்தி குறைவதாலோ அல்லது பாலுணர்வில் ‌அதிகமான ஈடுபாடு ஜீவசக்தியைக் ‌குறைப்பதாலோ வருகிறது. சரீரத்தின் ‌படைப்பு சக்தியைக் ‌காத்துக்‌கொள்ள, எல்லாச்‌ செல்களுக்கும்‌ அதிர்வுள்ள உயிர்ச்‌சக்தியைச்‌ செலுத்தவேண்டும்‌; பிறகு நோய்களை தீவிரமாக எதிர்க்கும்‌ சக்தி உடலுக்குக் ‌கிடைக்கிறது.பாலுணர்வில் ‌மிதமிஞ்சிய ஈடுபாடு உடலைப் ‌பலவீனமாக்கி, அது நோயால் ‌தாக்கப்படுவதற்கு ஏதுவாக்குகிறது.

[சூரியக்குளியலை காலையிலோ அல்லது மாலையிலோ செய்து கொள்வது விவேகமாகும்‌. அதிக உணர்ச்சி உடைய சருமத்தை அதிக வெளிச்சம் ‌படாமல் ‌காக்க முன்னேற்பாடுகள் ‌செய்து கொள்ள வேண்டும்‌. ஒருவருக்கு வெயிலில் ‌இருப்பதைப்‌ பற்றிய சந்தேகங்கள் ‌இருந்தால்‌, அவர்‌ தன்னுடைய வைத்தியரையோ அல்லது சரும ரோக நிபுணரையோ கலந்தாலோசித்துச்‌ செயல்பட வேண்டும்‌.]

புன்சிரிப்பின் சக்தி

ஜீவ சக்தியைக்‌காத்துக் ‌கொள்ளுங்கள்‌, சரிவிகித உணவை ஏற்றுக்‌கொள்ளுங்கள்‌, மற்றும்‌ எப்பொழுதும் ‌புன்சிரிப்புடன்‌ மகிழ்ச்சியாக இருங்கள்‌. தனக்குள்ளேயே ஆனந்தத்தைக் ‌காணும்‌ ஒருவன்‌ தன் ‌உடல்‌, உணவிலிருந்து அல்லாமல் ‌இறைவனிடமிருந்து பெறப்படும் ‌மின்சார ஓட்டமாகிய உயிர்ச்சக்தியினால்‌ சக்தியூட்டப்‌ படுவதைக்‌ காண்கிறான்‌. நீங்கள்‌ சிரிக்க முடியாது என உங்களுக்கு தோன்றினால்‌, ஒரு கண்ணாடி முன்பு நின்று, உங்கள்‌ விரல்களால்‌ உங்கள்‌ வாயை இழுத்து புன்சிரிப்பாக மாற்றுங்கள்‌. அது அவ்வளவு முக்கியமானது!

நான்‌ சுருக்கமாகக்‌கூறிய உணவு முறைகள்‌, மூலிகைகளினால்‌ உடலைச்‌ சுத்தப்படுத்துவது அல்லது உபவாசமிருப்பது ஆகியவை தொடர்பான குணப்படுத்தும் ‌முறைகள்‌, அவற்றின் ‌பயனைப்‌ பொறுத்த வரையில் ‌ஒரு வரையறைக்கு உட்பட்டவை தான்‌; ஆனால்‌ ஒருவர்‌ உள்ளூர ஆனந்தத்துடன் ‌இருந்தால்‌, அவர் ‌இறைவனின்‌ வற்றாத சக்தியின்‌ உதவியை வரவழைக்கிறார்‌. நான் ‌ஓர்‌ உண்மையான ஆனந்தத்தைக் ‌குறிப்பிடுகிறேன்‌. நீங்கள்‌ உள்ளுக்குள்ளே உணராமல்‌, வெளியே பாசாங்கு காட்டுவதை அல்ல. உங்களுடைய மகிழ்ச்சி உண்மையாக இருக்கும்‌பொழுது நீங்கள் ‌ஒரு புன்னகை-லட்சாதிபதி. ஒர் ‌உண்மையான புன்முறுவல்‌, பிரபஞ்ச ஓட்டமான பிராணனை ஒவ்வொரு உடல்‌செல்லுக்கும்‌ அனுப்புகிறது. மகிழ்ச்சியான மனிதன் ‌வெகு குறைவாகவே நோய்‌ வாய்ப்படுகிறான்‌. ஏனெனில்‌ மகிழ்ச்சி, பிரபஞ்ச உயிர்ச்‌சக்தி உடலுக்குள்‌ அதிக அளவு வருவதை உண்மையில் ‌ஈர்க்கிறது.

குணப்படுத்தும் இந்த விஷயத்தில் பேசுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. முக்கிய யோசனை என்னவென்றால், நாம் மன சக்தியை அதிகம் சார்ந்து இருக்க வேண்டும், இது தவறானது. நோயிலிருந்து பாதுகாப்பதற்கான விதிகள்: சுய கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான உணவு, பழச்சாறுகளை அதிகம் குடித்தல், அவ்வப்போது உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருந்து எப்போதும் சிரித்தல். அந்த புன்னகை தியானத்தில் இருந்து வருகிறது. கடவுளின் நித்திய சக்தியை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவருடன் பரவசத்தில் இருக்கும்போது, உணர்வுபூர்வமாக அவருடைய உடலை உங்கள் உடலில் கொண்டு வருகிறீர்கள்.

மனோசக்தி இறைவனின் ‌தவறாத சக்தியைக்‌ கொண்டுள்ளது;உங்கள்‌உடலில் உங்களுக்கு வேண்டியது அச்சக்தி தான்‌. அச்சக்தியைக் ‌கொண்டுவர ஒரு வழி உள்ளது. அது தான் ‌தியானத்தின் ‌மூலம் ‌ இறைவனுடன் ஒன்றுதல்‌. நீங்கள் ‌இறைவனுடன் ‌கொண்ட தொடர்பு முழுமையாக இருக்குமேயானால் நலம் ‌நிரந்தரம்‌.

தெய்வீகக் குணமாக்குதல்

Man under healing rays of Sun

இடைவிடாத பிரார்த்தனையினாலும்‌, தொடர்ந்த நம்பிக்கையினாலும் ‌அந்த மாபெரும்‌சக்தியை எழுப்ப முடியும். ‌நீங்கள்‌ சரியான முறையில் ‌உணவு உட்கொண்டு, உடலுக்குத்‌ தேவையானதைச் ‌செய்து கொண்டிருங்கள்‌; ஆனால்‌ இடைவிடாது அவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள்‌: “இறைவா, நீதான்‌ என்னைக்‌ குணப்படுத்த முடியும்‌. ஏனெனில் ‌வைத்தியர்கள்‌ மருந்துகளினால்‌ எட்ட முடியாத முக்த ஜீவ‌அணுக்களையும், உடலின் சூட்சுமமான நிலைகளையும் ‌நீதான் கட்டுப்படுத்துகிறாய். “வெளிப்புற காரணிகளான மருந்துகளும் ‌உபவாசமும்‌ உடலுக்கு ஒரு குறிப்பிட்ட நற்பலனை அளிக்கக்‌கூடியவை. ஆனால்‌ அவை செல்களுக்கு ஆதாரமான அகசக்தியின்‌ நிலையை மாற்றாது. நீங்கள் ‌இறைவனிடம்‌ சென்று அவனுடைய குணப்படுத்தும்‌ சக்தியைப்‌ பெறும்‌ பொழுதுதான்‌, உயிர்ச்‌சக்தி உடல் செல்களிள்‌ அணுக்களுக்குள்‌ செலுத்தப்பட்டு உடனடியான நிவாரணத்தை அளிக்கிறது. என்ன, நீங்கள் ‌இறைவனை அதிகமாக நம்பி, அவனைச்‌சார்ந்து இருக்க மாட்டீர்களா?

ஆனால்‌ பெளதீக முறைகளைச்‌ சார்ந்து இருப்பதிலிருந்து, ஆன்மீக வழிகளுக்கு மாறும் ‌முயற்சி படிப்படியாக இருக்க வேண்டும்‌. மிதமிஞ்சி உணவு உட்கொள்ளப் ‌பழகிய ஒருவன்‌, நோய்வாய்ப்பட்டு, மனோ சக்தியினால் ‌குணமடைய வேண்டும் ‌என முயலும் ‌நோக்கத்தில் ‌திடீரென்று பட்டினி கிடக்கத் ‌தொடங்கினால்‌, வெற்றி கிடைக்காமல் ‌போகும்‌பொழுது அவன் ‌ஊக்கமிழக்கலாம்‌. ஆகாரத்தின் ‌மீது சார்ந்திருக்கும் ‌தன் ‌எண்ணப்‌ பழக்கத்தை மனத்தின் ‌மீது சார்ந்திருக்க மாற்றிக்‌ கொள்வதற்கு காலம்‌எடுக்கும்‌. இறைவனின்‌ குணமாக்கும் ‌சக்தியை ஏற்றுக்‌ கொள்வதற்கேற்ப தெய்வீக உதவியை நம்புவதற்கு மனம்‌ பழக்கப்படுத்தப்பட வேண்டும்‌.

அந்த மகாசக்தியிலிருந்து தான் எல்லா அணுசக்தியும் ‌இந்த ஸ்தூல பிரபஞ்சத்தின்‌ ஒவ்வொரு செல்லையும் ‌துடிப்படையவும்‌, வெளிப்படுத்தவும்‌ ,காக்கவும் செய்கின்றது. ஒரு திரையரங்கத்தில்‌, புரொஜெக்டர் ‌திறப்பின் வழியாக வெளிப்படும் ‌ஒளிக்கற்றையே அசையும்‌ படங்களுக்கு ஆதாரமாவது போல்‌, அமரத்துவ அறையிலிருந்து வெளிப்படும்‌ தெய்வீக ஒளியாகிய பிரபஞ்சபேரொளியே நம் அனைவருக்கும் ஆதாரமாகிறது. நீங்கள் ‌தேடி, அப்பேரொளியைக் ‌கண்டுகொள்ளும்‌ பொழுது, “சீர்குலைந்திருக்கும்‌” எல்லா உடல்‌ செல்களிலும் ‌உள்ள அணுக்களையும்‌, மின்னணுக்‌களையும்‌,உயிர்‌ அணுக்களையும் திரும்ப மாற்றி அமைக்கக்‌கூடிய அதன் ‌எல்லையற்ற சக்தியை நீங்கள்‌ காண்பீர்கள்‌. அந்த மகா வைத்தியநாதனுடன் ‌தொடர்பு கொள்ளுங்கள்‌!

குணமாக்குதலுக்கான சங்கல்பங்கள்

சங்கல்பத் தத்துவமும் அறிவுறுத்தல்களும்

இறைவனின் முழுநிறைவான உடல்நலம் என் உடல்சார் நோயின் இருண்ட மூலைகளை ஊடுறுவுகிறது. என் எல்லா உயிரணுக்களிலும் அவனுடைய குணமாக்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அவை முழுமையாக நலமாக இருக்கின்றன, ஏனெனில் அவனுடைய முழுநிறைவு அவற்றில் உள்ளன.

பரம்பொருளின் குணமாக்கும் சக்தி என் உடலின் எல்லா உயிரணுக்களின் ஊடாகவும் பாய்ந்து கொண்டிருக்கிறது. நான் ஒரே பிரபஞ்ச இறை-பொருளால் ஆக்கப் பட்டிருக்கிறேன்.

உன் முழுநிறைவான ஒளி என் எல்லா உடற் பகுதிகளிலும் வியாபித்து இருக்கிறது. எங்கெல்லாம் அந்தக் குணமாக்கும் ஒளி வெளிப்படுகிறதோ, அங்கே முழுநிறைவு இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன், ஏனெனில் முழுநிறைவு என்னில் உள்ளது.

நான் மாற்றமில்லாதவன், நான் முடிவற்றவன். நான் உடையும் எலும்புகளை, அழியும் ஒரு உடலைக் கொண்ட ஒரு சிறிய நிலையற்ற இருப்பு அல்ல. நான் மரணமற்றவன், மாற்றமிலா முடிவிலி.

மேலும் ஆய்வு

இதைப் பகிர