யோகதா சத்சங்க ஆசிரமம், தக்ஷிணேஸ்வரம்

Dakshineswar (kolkata) Ashram near Ganges

21, யு. என். முகர்ஜி ரோடு, தக்ஷிணேஸ்வரம், கொல்கத்தா – 700076

கைபேசி எண்: +918420873743, +919073581656

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வின் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்.

மின்னஞ்சல்: yssdak@yssi.org

வலைத்தள இணைப்பு:  dakshineswar.yssashram.org

பரமஹம்ஸ யோகானந்தர் 1935-36ல் அவரது இந்திய விஜயத்தின்போது கொல்கத்தாவிலிருந்து ராஜரிஷி ஜனகாநந்தருக்கு எழுதினார், “நான் வங்காளத்தின் தலைநகரமான கல்கத்தாவில் ஒரு நிரந்தர மையத்தை உருவாக்குவதற்காக இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், மேலும் நான் கிட்டத்தட்ட வெற்றி அடைந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.” (ராஜரிஷி ஜனகாநந்தர் – ஓர் உயர்ந்த மேலைநாட்டு யோகி). பிறகு அவர் எழுதினார்  ஒரு யோகியின் சுய சரிதத்தில் , “தக்ஷிணேஸ்வரத்தில் கங்கையை நோக்கியவாறு அமைந்த மிக கம்பீரமான ஒரு யோகதா மடம் 1939ல் அர்ப்பணிக்கப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து சில மைல்கள் மட்டுமே வடக்கேயுள்ள அந்த ஆசிரமம் நகரவாசிகளுக்கு அமைதியின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள யோகதா சத்சங்க சொஸைடி, அதன் பள்ளிக்கூடங்கள், மையங்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு தக்ஷிணேஸ்வரத்திலுள்ள மடம் தான் இந்தியத் தலைமை அலுவலகம்.”

இந்த மடம், முதலில் இரண்டு ஏக்கர் நிலத்தில் பரந்து கிடந்த, குதிரை லாயங்கள் உடன் கூடிய ஒரு ‘தோட்ட இல்லமாக’ இருந்தது. அந்த லாயங்கள் பின்பு புழங்கும் இடங்களாக மாற்றப்பட்டன. அங்கு ஓரளவுக்கு பெரிய குளம் இருந்தது, அது இன்னும் பராமரிக்கப்படுகிறது. சமீப வருடங்களில், ஒரு விருந்தினர் இல்லம், சமையலறை மற்றும் உணவருந்தும் அறைகள் என யாவும் நமது தெய்வீக குருதேவர் எதிர்பார்த்தபடி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை புரியும் பக்தர்களின் வசதிக்காக, சேர்க்கப்பட்டன.

தக்ஷிணேஸ்வரம் கொல்கத்தாவிற்கு (கல்கத்தா) வடக்கே ஹூக்ளி நதியின் கிழக்குக் கரையோரம் அமையப்பெற்றுள்ளது; அன்னை கங்கை இச்சுற்று வட்டாரங்களில் ஹூக்ளி நதி என அழைக்கப்படுகிறது. தக்ஷிணேஸ்வரம் என்ற பெயரானது அருகிலுள்ள தென்திசையை அல்லது தக்ஷிணத்தை நோக்கியுள்ள புகழ்பெற்ற காளி கோவிலில் இருந்து பெறப் பெற்றது. தட்பவெப்ப நிலை பெரும்பாலும் வெப்பமாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் உள்ளது, ஆனால் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிராக இருக்கும்.

இந்த மடம் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாஜி மற்றும் ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாஜி ஆகியோரின் சன்னிதானத்தால் அருளப்பட்டுள்ளது. அவர்களுடைய பல இந்திய விஜயங்களின் போது அவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.

பக்தர்கள் தனிப்பட்ட மற்றும் ஒய்.எஸ்.எஸ். சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஏகாந்தவாச சாதனைகளுக்கு அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் முன்பதிவு அவசியம். சொந்த அலுவலுக்காக கொல்கத்தா வரும் பக்தர்கள் ஆசிரமத்திற்கு வெளியே தங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் சொந்தப் பணிகளை முடித்த பிறகு, அவர்கள் ஆசிரமத்திற்கு வருகை புரியவோ அல்லது தனிப்பட்ட ஏகாந்த வாசம் செய்யவோ வரவேற்கப்படுகின்றனர்.

கொல்கத்தாவில் சென்று பார்க்கவேண்டிய முக்கிய இடங்களில் எண் 4, கர்பார் ரோடில் உள்ள குருதேவரின் இல்லமும் அடங்கும்.  இரண்டாவது மாடியில் உள்ள சிறு அறை  அவரது இளமைப்பருவ சாதனையின் தியானங்கள், கண்ணீர்கள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு ஒரு சாட்சியாக விளங்கியது. அவரது தடைப்பட்ட இமயப் பயணத்தின் போது அவ்வறையின் ஜன்னலிலிருந்து தான் அவரது பயணத்திற்கான முக்கிய சாமான்கள் அடங்கிய மூட்டையை வீசியிருந்தார். பின்னர், மாஸ்டர் மஹாசயரால், ஊக்குவிக்கப்பட்டு அங்கேதான் தெய்வத்திரு அன்னை அவர் முன் தோன்றி, “என்றுமே நான் உன்னை நேசிக்கிறேன்! என்றென்றும் நான் உன்னை நேசிப்பேன்!” என்று அவருக்கு உறுதிமொழி அளிக்கும் வரை அவர் தியானம் புரிந்தார்.

1920ல் குருதேவருக்கு அவரது அறையில் பாபாஜி தரிசனம் அளித்தார். .அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன், இறை-அனுமதியைப் பெற குருதேவர் தீர்மானித்திருந்தார். அவர் அதிகாலையிலிருந்து மதியம் வரை பிரார்த்தனை செய்திருந்தார். பாபாஜி, “மேலைநாடுகளில் கிரியா யோக வழிமுறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” என்று அவருக்கு உத்திரவாதம் அளித்தார். அந்த நாள் – ஜூலை 25- ஒய்.எஸ்.எஸ்/எஸ்.ஆர்.எஃப் பக்தர்களால், பாபாஜி ஸ்மிருதி திவஸ் (நினைவு நாள்) என்று கொண்டாடப்படுகிறது. இந்த முதல் மாடி அறை சில குடும்பப் பழைய புகைப்படங்களையும் கொண்டுள்ளது. குருதேவரது இல்லம், அவரது சகோதரர் சனந்தலால் கோஷின் சந்ததியினரால் நன்கு பராமரிக்கப்படுகிறது, மேலும் அவர்கள் பக்தர்களை நன்கு வரவேற்று உபசரிக்கவும் செய்கின்றனர்.

ஒய்.எஸ்.எஸ் கர்பார் ரோடு மையம் குருதேவர் இளைஞராக இருந்த பொழுது தியானம் புரிந்த பட்டாச்சாரியா சந்திலுள்ள மையம்,அவரது குழந்தைப் பருவ நண்பரான துளசி போஸின் வீட்டிற்கு நேர் பின்னே உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 4.30 முதல் 7.00 மணி வரை இங்கு இன்னமும் தியானம் நடத்தப்படுகிறது.  எண் 50, ஆம்ஹெர்ட்ஸ் தெருவில் தான் குருதேவரின் அன்னை மறைந்து விட்டிருந்தார். பின்னர், மாஸ்டர் மஹாசயர் பல வருடங்கள் இங்கு குடியிருந்தார். குருதேவரும் அவரது சகோதரரும் மாஸ்டர் மஹாசயர் உடன் தியானம் செய்து கொண்டிருந்த பொழுது அவர்களது அன்னையை ஒரு காட்சியில் கண்டனர். பாதுரி மஹாசயரது இல்லமும் (அந்தரத்தில் மிதக்கும் மகான்)  நாகேந்திர மடம் என்று தற்போது மாற்றப்பட்டுள்ள, அப்பர் சர்குலர் ரோடிலுள்ள (பி.சி.ரோட்) இல்லமும் பக்தர்களுக்கு திறந்திருக்கிறது.

தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செராம்பூர். குருதேவரது கல்லூரி நாட்களுடன் தொடர்பு உள்ள பெரும்பாலான இடங்கள்ஸ்ரீ யுக்தேஸ்வரருடைய ஆசிரமத்திற்கு  ராய் காட் லேனிலிருந்த (பூரோ பீபீ லேன்)அருகாமையில் அமையப்பெற்றுள்ளன. பழைய ஆசிரம மனையின் மேல் ஒரு  ஸ்மிருதி மந்திர் .(நினைவு ஆலயம்) நிற்கிறது. இதற்கருகில், குருதேவர் சிலகாலம் தங்கியிருந்த குருதேவரின் சித்தப்பா சாரதா பிரசாத் கோஷின் இல்லம் உள்ளது. குருதேவரது ஒன்றுவிட்ட சகோதரர் பிரபாஸ் சந்திர கோஷ் குருதேவரின் அறையை ஒரு புனித இடமாக மாற்றி ஆனந்த லோகம் என்று பெயரிட்டிருக்கிறார்..

கங்கையை நோக்கிய சில நிமிட நடை தூரத்தில் உள்ளது, ராய் காட் என்ற படித்துறை. இந்த இடத்தில்தான் (ஆல மரத்தையும் சேர்த்து)  ஸ்ரீ யுக்தேஷ்வரருக்கு,அவர் ‘ஹோலி சையன்ஸ்’ (புனித விஞ்ஞானம்) புத்தகத்தை எழுதி முடித்த பிறகு பாபாஜி, தரிசனம் அளித்தார்.

குருதேவர் சில வருடங்கள் தங்கியிருந்த மாணவர்களுக்கான பந்தி இல்லம் கங்கையின் பக்கத்தில், ராய்காட் படித்துறையிலிருந்து சில நிமிட நடை தூரத்தில் உள்ளது. பழைய கட்டிடத்தின் சில பகுதிகள் இன்னும் உள்ளன.

செரம்பூர் கல்லூரி ,கூட கங்கைக்கரையில், சற்று தொலைவில் உள்ளது. இங்கு தான் குருதேவர் தனது இளங்கலைப் பட்டப் படிப்பை படித்தார். இக்கல்லூரி வளாகத்திற்குள் செல்லவும் குருதேவர் படித்த வகுப்புக்குள் நுழையவும்கூட ஒருவருக்கு அனுமதி உண்டு.

1855 இல் கட்டப்பட்டபுகழ்பெற்ற தக்ஷிணேஸ்வரம் காளி கோயில்,நமது ஆசிரமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒன்பது கோபுரங்கள் கொண்ட இவ்வாலயத்தின் கருவறையில் படுத்த நிலையிலுள்ள சிவபெருமானின் மார்பின் மேல் நின்ற கோலத்தில் பவதாரணி (தனது பக்தர்களை வாழ்க்கைப் பெருங்கடலிற்கு அப்பால் எடுத்துச் செல்பவள்) என்ற பெயரில் காளி மாதாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது; இரு சிலைகளும் மெருகேற்றப்பட்ட வெள்ளியிலான ஆயிரம் இதழ் தாமரை மேல் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலுடனான குருதேவரின் நெருங்கிய தொடர்பு அவரது சுய சரிதத்தில் நன்கு கோர்வையாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, அவரது சகோதரிகளில் மிக மூத்தவரான ரோமாவையும் அவரது கணவர் சதிஷையும் இக்கோவிலுக்கு கூட்டிச் சென்றபோது, அவர் ஒரு தெய்வீகக் காட்சியைக் காணும் பேறு பெற்றார். உள்ளபடி சொல்லப்போனால், குருதேவர் அடிக்கடி கோவிலுக்குச் சென்று முதலில் கோவிலின் முன்புறமுள்ள தலைவாசலிலும் அடுத்து ஸ்ரீராமகிருஷ்ணரது அறையிலும் தியானம் செய்தபின்  பஞ்சவடியிலுமுள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் ஞானம் பெற்ற மரத்தின் கீழ் பல மணி நேரங்கள் தியானம் செய்வது வழக்கம். பஞ்சவடியில் தியானம் செய்த போது குருதேவர் சமாதி அனுபவத்தையும்கூட பெற்றார். .

20 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் வளாகம், சிவபெருமானின் வெவ்வேறு அம்சங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 சன்னிதானங்களை கங்கை நதியின் முன்புறமும், ஒரு ராதா – கிருஷ்ணர் ஆலயத்தையும் மற்றும் கங்கையின் மேல் ஒரு நீராடும் துறையையும் பெற்றுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரால் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள, அவரது அறை ஒன்று உள்ளது. இவ்வறையில்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது வாழ்வின் இறுதிப் பதினான்கு வருடங்களைக் கழித்தார். மேலும் புனித அன்னை ஸ்ரீ சாரதாதேவி தங்கியிருந்த ஓர் அறையும் இங்குள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணரை “தந்திர சாதனா”வில், பைரவி பிராம்மணி யோகேஷ்வரி தன் சீடரராக்கிக் கொண்ட இடம் பாகுல் தலா காட் ஆகும். பாகுல் தலா காட்டின் வடக்கேயுள்ள பரந்தகன்ற திறந்த வெளிதான் பஞ்சவடி என்றழைக்கப்படுகிறது. இங்குதான் ஸ்ரீராமகிருஷ்ணரது வழிகாட்டுதலின் கீழ் ஆலமரம், அரசமரம், வேப்ப மரம், நெல்லி மரம் மற்றும் வில்வ மரம் ஆகியவை நடப்பட்டன. இங்குதான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது 12 வருட கால சாதனாவை, ஸ்ரீ தோத்தாபுரியால் அளிக்கப்பட்ட பயிற்சியையும் சேர்த்து, செய்திருந்தார்.

நம் ஆசிரமத்தில் உள்ள சேவகர்கள், இந்த இடங்களுக்கும், மற்ற இடங்களான பேலூர் மடம், சுவாமி விவேகானந்தரது இல்லம் போன்றவற்றிற்கும் பக்தர்கள் சென்றுவர மகிழ்ச்சியுடன் உதவியும் ஆதரவும் அளிப்பார்கள்.

இதைப் பகிர