ஆற்றல்வாய்ந்த பிரார்த்தனைக்கான திறவுகோல்கள்

யோகதா சத்சங்கப் பாடங்களில், பரமஹம்ஸ யோகானந்தர் ஒருமுகப்படுதல் மற்றும் தியானத்திற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகள் மூலம் இறைவனின் உள்ளுறையும் இருப்பை உணர்வதற்கான படிப்படியான வழிமுறைகளை வழங்கியுள்ளார். மேலும், அத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள், அனைவரிலும் உள்ள தெய்வீக இருப்பைப் பற்றிய தங்களது சொந்த விரிவடையும் விழிப்புணர்விலிருந்து — உலகத்தை ஒரே குடும்பமாக மெய்யாக உணர்ந்து கொண்டதிலிருந்து — மற்றவர்களுக்கு சேவை செய்வதைக் காண வேண்டும் என்பது அவரது பெரும் விருப்பமாக இருந்தது.

உலகளாவிய பிரார்த்தனைக் குழுவின் செயல்திறன் பரிவிரக்கமுள்ள எத்தனை ஆன்மாக்களால் முடியுமோ அத்தனைபேரும் முழு மனத்துடன் பங்கேற்பதை மட்டுமல்லாமல், பிரார்த்தனைக் குழுவின் தனிப்பட்ட உறுப்பினர்களால் அடையப்பெற்ற இறைத் தொடர்பின் ஆழத்தையும் கூட சார்ந்துள்ளது. பிரார்த்தனையானது, இறைவனின் பதிலை வரவழைக்க, எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

ஆற்றல்வாய்ந்த பிரார்த்தனைக்காக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

ஒருமுகப்படுதல்

Lighted candle in Smriti Mandir.வெற்றிகரமான பிரார்த்தனை, ஒருமுகப்படுவதற்கான திறனை அதிக அளவில் பொறுத்துள்ளது — மனத்தை திசைதிருப்பங்களிலிருந்து விடுவித்து, நாம் விரும்பும் எதன் மீதும் அதை ஒருமுனைப்படுத்தி இருத்தும் திறன். தீவிரமான எரியும் சக்தியை உருவாக்க, சூரியனின் சிதறியக் கதிர்களை ஓர் உருப்பெருக்க கண்ணாடியைப் பயன்படுத்தி குவிக்க முடிவது போல் எண்ணங்கள், உணர்வுகள், பேசப்பட்ட சொற்கள் ஆகியவற்றில் உள்ளார்ந்திருக்கும் நுட்பமான ஆனால் சக்திவாய்ந்த ஆற்றலானது, ஒருமுகப்படுவதற்கான ஒரு திட்டவட்டமான வழிமுறையின் மூலம் சர்வ சக்திவாய்ந்த பிரார்த்தனையாக ஒன்றுசேர்க்கப்படலாம்.

ஒருமுகப்படுவதன் வாயிலாக மன சக்தியின் பரந்த களஞ்சியங்கள் தொடர்பு கொள்ளப்படலாம் — எந்தவொரு வெளிப்புற முயற்சியிலோ அல்லது உள்முகமாக இறைவனோடு நமது மாறாத உறவின் அனுபவத்தைப் பெறவோ பயன்படுத்தக்கூடிய சக்தி.

பயன்விளைவுள்ள பிரார்த்தனைக்கு தியானத்தின் முக்கியத்துவம்

தியானம் என்பது இறைவனை அறிய பயன்படுத்தப்படும் ஒருமுகப்பாடு. பரமஹம்ஸ யோகானந்தர், நாம் “இறைவனின் சாயலில் உருவாக்கப் பட்டிருக்கிறோம்” என்ற விழிப்புணர்வைப் பெறுவதற்காக பிரார்த்தனை செய்யும் முன் தியானம் செய்வது நல்லது என்று போதித்தார். யோகதா சத்சங்க சொஸைடி பாடங்களில் கற்பிக்கப்படுவது போன்ற ஒருமுகப்பாடு மற்றும் தியான உத்திகள் மனத்தை உள்முகப்படுத்தி, அகத்தே உள்ள இறைப் பரம்பொருளை வெளிப்படுத்துகிறது. அந்த அகப் புனித இறை-இருப்பின் மீதான ஒருமுகப்பாடு, இறைவனுடன் என்றும் ஒன்றியுள்ள நமது உண்மையான ‘தான்’ அல்லது ஆன்மாவைப் பற்றிய நேரடி உணர்விற்கு இட்டுச்செல்கிறது.

பரமஹம்ஸர் கூறினார், “நாம் விரும்புவதை இறைவன் நமக்கு அளிப்பதற்காக அவனிடம் நயந்து பேசித் தூண்டி, பிச்சைக்காரர்களைப் போல பிரார்த்தனை செய்வதை இறைவன் விரும்பவில்லை. மற்ற எந்த அன்பான தந்தையையும் போலவே, நமது தகுதிவாய்ந்த விருப்பங்களை நிறைவேற்றுவதில் அவன் மகிழ்ச்சியடைகிறான். எனவே, முதலில் தியானத்தின் மூலம் அவனுடனான உங்கள் அடையாளத்தை நிலைநிறுத்துங்கள். பின்னர் உங்கள் கோரிக்கை ஒத்துக்கொள்ளப்படும் என்று அறிந்த வண்ணம், ஒரு குழந்தையின் அன்பான எதிர்பார்ப்புடன் உங்கள் தந்தையிடம் உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் கேட்கலாம்.

இச்சாசக்தியின் ஆற்றல்

Man praying. பிரார்த்தனையில் இச்சா சக்தி ஒரு முக்கிய அம்சமாகும். “இச்சாசக்தியின் தொடர்ச்சியான, அமைதியான, சக்திவாய்ந்த பயன்பாடு படைப்பின் சக்திகளை உலுக்கி, பரம்பொருளிடமிருந்து ஒரு பதிலை வரவழைக்கிறது,” என்று பரமஹம்ஸர் கூறினார். “நீங்கள் விடாமுயற்சியுடன், தோல்வியை ஏற்க மறுக்கும் போது, உங்களது விருப்பத்தின் இலக்கு நிறைவேறியே ஆக வேண்டும். அந்த விருப்பத்தை உங்களது எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நீங்கள் தொடர்ந்து செயல்முனைப்புடன் வைத்திருந்தால் நீங்கள் விரும்புவது நிகழ்ந்தாக வேண்டும். உங்கள் விருப்பத்துடன் ஒத்துப்போக உலகில் எதுவுமே இல்லையென்றாலும்கூட, உங்கள் இச்சாசக்தி விடாப்பிடியாக இருக்கும் போது, விரும்பிய முடிவு எப்படியாவது வெளிப்படும். அந்த வகையான இச்சாசக்தியில் இறைவனின் பதில் உள்ளது; ஏனென்றால் இச்சாசக்தி இறைவனிடமிருந்து வருகிறது, மேலும் இடையறாத இச்சாசக்தியே இறை சித்தமாகும்.

பிரார்த்தனையில், இறைவன் எல்லாவற்றையும் செய்வான் என்ற செயலற்ற மனப்பான்மையையும், நமது சொந்த முயற்சிகளை மட்டுமே நம்பியிருக்கும் அடுத்த உச்சநிலையையும் வேறுபடுத்திக் காண்பது அவசியம். “இறைவனை முழுவதுமாக சார்ந்து இருக்க வேண்டும் என்ற இடைநிலைக் கால கருத்திற்கும், அகந்தையை மட்டுமே சார்ந்திருக்கும் நவீன வழிக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்,” என்று பரமஹம்ஸ யோகானந்தர் விளக்கினார்.

சிலுவையில் அறையப்படுவதற்கு முன், “உம்முடைய சித்தமே நிறைவேறும்” என்று இயேசு பிரார்த்தனை செய்த போது, அவர் தனது சொந்த இச்சாசக்தியை மறுக்கவில்லை. அவருடைய வாழ்க்கைக்கான இறைவனின் தெய்வீக திட்டத்திற்கு சரணடைய இச்சாசக்தியின் முழுமையான வல்லமை தேவைப்பட்டது. வெகு சிலரே தங்கள் இச்சா சக்தியை அந்த அளவுக்கு வளர்த்துள்ளனர். ஆனால் இறைவன் தனது குழந்தைகள் என்ற முறையில் நாம் ஒவ்வொரு முயற்சியிலும் பகுத்தறிவு, மனஉறுதி, நம்மால் முடிந்தவரையில் உணர்ச்சி ஆகிய அவனுடைய கொடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். வெற்றியை அடைய நம் வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் அதே சமயத்தில், அகத்தே உள்ள இறை இருப்பிடமிருந்தும் வழிகாட்டுதலை நாட வேண்டும். இந்த சமநிலையான மனப்பாங்கானது அமைதி, புரிந்துகொள்ளுதல், நமது மனித மற்றும் தெய்வீகத் திறன்களை இணக்கமாக்குதல், இறைவனின் சித்தத்துடன் நமது மனித சித்தத்தை இசைவித்தல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

பக்தி, இறைவன் மீதான அன்பு

Devotee Meditatingபக்தியுடன் தோய்விக்கப்பட்ட பிரார்த்தனை மிகவும் ஆற்றல்வாய்ந்த பிரார்த்தனை ஆகும். பக்தி, அதாவது, இறைவன் மீதான அன்பு, இறைவன் தடுத்துநிறுத்த முடியாத இதயத்தின் காந்த ஈர்ப்பு. பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார்: “இதயங்களைத் தேடுபவன் உங்களது மனமார்ந்த அன்பை மட்டுமே விரும்புகிறான். அவன் ஒரு சிறு குழந்தையைப் போன்றவன்: ஒருவர் தனது முழு செல்வத்தையும் அவனுக்கு வழங்கலாம், ஆனால் அவன் அதை விரும்புவதில்லை; மற்றொருவன் அவனிடம், ‘இறைவா, நான் உன்னை நேசிக்கிறேன்!’ என்று கதறுகையில், அந்தப் பக்தனின் இதயத்திற்கு அவன் ஓடோடி வருகிறான்.”

நாம் கேட்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு, இறைவன் நீண்டு-சுற்றிவளைந்த பிரார்த்தனைகளை விட நம் அன்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளான். ஜான் பன்யன் கூறினார், “பிரார்த்தனையில் இதயம் இல்லாத வார்த்தைகளை விட வார்த்தைகள் இல்லாத இதயம் இருப்பது சிறந்தது.” கவனமும் உணர்வும் அற்ற இயந்திரத்தனமான பிரார்த்தனை, இறைவனுக்கு வாடிய மலர்களை கவனக்குறைவாக காணிக்கை அளிப்பது போலாகும் — இக்காணிக்கை, இறை-மறுமொழியைப் பெறுகின்ற சாத்தியமில்லை! ஆனால் நாம் பக்தி, ஒருமுகப்பாடு மற்றும் இச்சா சக்தியுடன் இறைவனை மீண்டும் மீண்டும் அழைத்தால், நம்முடைய பிரார்த்தனைகள் இறைவனால் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்படுகின்றன. அவனுடைய சக்தி மற்றும் நமக்கான அவனது அன்பான அக்கறை முழுமையானது மற்றும் எல்லையற்றது.

இதைப் பகிர