மரணம் மற்றும் இழப்பைப் புரிந்து கொள்ளுதல்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்

Soul leaving body at death.சாதாரண மனிதன்‌ மரணத்தை அச்சத்துடனும்‌ கவலையுடனும்‌ நோக்கினாலும்‌, முன்பே அங்கு சென்றிருப்பவர்கள்‌ அதனை அமைதி மற்றும்‌ விடுதலையின்‌ ஓர்‌ அற்புதமான அனுபவமாக அறிகின்றனர்‌.

மரணத்‌ தறுவாயில்‌, ஸ்தூல உடலின்‌ அனைத்து வரம்புகளையும்‌ மறந்து, எவ்வளவு சுதந்திரமானவர்‌ என்பதை நீங்கள்‌ உணர்கிறீர்கள்‌. முதல்‌ சில நொடிகளுக்கு ஓர்‌ அச்ச உணர்வு – தெரியாததைக்‌ குறித்த உணர்வு நிலைக்குப்‌ பழக்கப்படாத ஏதோ ஒன்றைக்‌ குறித்த அச்சம்‌ அங்கே இருக்கிறது. ஆனால்‌ அதன்‌ பிறகு ஒரு பெரிய அனுபவ ஞானம்‌ கிடைக்கிறது: ஆன்மா, நிம்மதி மற்றும்‌ சுதந்திரத்தின்‌ ஆனந்தமயமான உணர்வை அனுபவிக்கிறது. நீங்கள்‌ அழியக்‌ கூடிய உடலிலிருந்து வேறாக இருப்பதை நீங்கள்‌ அறிகிறீர்கள்‌.

ஒவ்வொருவரும்‌ ஒரு நாள்‌ இறக்கவே போகின்‌றோம்‌. அதனால்‌ மரணத்தைப்‌ பற்றி பயப்படுவதில்‌ ஒரு பயனுமில்லை. உறக்கத்தில்‌ உங்கள்‌ தேக உணர்வை இழக்கப்‌ போவதை எதிர்பார்த்து நீங்கள்‌ வருத்தமடைவதில்லை; உறக்கத்தை ஆவலுடன்‌ எதிர்நோக்கும்‌ ஒரு விடுதலை நிலையாக நீங்கள்‌ ஏற்றுக்‌ கொள்கிறீர்கள்‌. அதே போல்தான்‌ மரணமும்‌; அது ஓர்‌ ஓய்வுநிலை, இவ்வாழ்க்கையிலிருந்து கிடைக்கும்‌ ஓர்‌ ஓய்வூதியம்‌. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மரணம்‌ வரும்போது அதைப்‌ பார்த்துச்‌ சிரியுங்கள்‌. மரணம்‌ என்னும்‌ வெறும்‌ ஓர்‌ அனுபவத்தின்‌ மூலம்‌ நீங்கள்‌ கற்றுக்‌ கொள்ளவேண்டிய ஒரு பெரும்‌ படிப்பினை: நீங்கள்‌ இறக்க முடியாது.

நமது உண்மையான நான்‌; அதாவது ஆன்மா, அழிவற்றது. மரணம்‌ என்றழைக்கப்படுகிற அந்த மாற்றத்‌தில்‌ நாம்‌ ஒரு சிறிது நேரம்‌ உறங்கலாம்‌, ஆனால்‌ நாம்‌ என்றுமே அழிக்கப்பட முடியாதவர்கள்‌. நாம்‌ இருக்கின்‌றோம்‌, மேலும்‌ அந்த இருப்பு சாசுவதமானது. அலையானது கரைக்கு வருகிறது, மறுபடியும்‌ கடலுக்குத் திரும்பிச்‌ சென்று விடுகிறது; அது தொலைந்து விடுவதில்லை. அது கடலுடன்‌ ஒன்றாக ஆகி விடுகிறது அல்லது மற்றொரு அலையின் வடிவத்தில்‌ மறுபடியும்‌ திரும்புகிறது. இந்த உடல்‌ வந்திருக்கிறது, மேலும்‌ இது மறைந்துவிடும்‌; ஆனால்‌ இதனுள்‌ உள்ள ஆன்ம சாரம்‌ என்றும்‌ மடிவதில்லை. அந்த நிரந்தர உணர்வு நிலையை எதனாலும்‌ முடித்து விட இயலாது.

விஞ்ஞானம்‌ நிரூபித்திருப்பதைப்‌ போல, பொருளின்‌ ஒரு துகள்‌ அல்லது சக்தியின்‌ ஓர்‌ அலையோ கூட அழிக்க முடியாதது; மனிதனின்‌ ஆன்மா அல்லது ஆன்ம சாரம்‌ கூட அழிக்க முடியாதது. ஜடப்‌ பொருள்‌ மாறுதலுக்கு உட்படுகிறது; ஆன்மா மாறுபடும்‌ அனுபவங்களுக்கு உட்படுகிறது. அடிப்படையான மாறுதல்கள்‌ மரணம்‌ எனப்‌படுகிறது, ஆனால்‌ மரணமோ அல்லது வடிவத்தில்‌ ஒரு மாறுதலோ ஆன்ம சாரத்தை மாற்றவோ அல்லது அழிக்கவோ செய்யாது.

உடல்‌ ஓர்‌ ஆடை மட்டுமே. இந்த வாழ்க்கையில்‌ எத்தனை முறை உங்களது ஆடையை நீங்கள்‌ மாற்றியிருக்கிறீர்கள்‌, ஆயினும்‌ இதனால்‌ நீங்கள்‌ மாறிவிட்டதாகக்‌ கூற மாட்டீர்கள்‌. அதைப்‌ போல, மரணத்தில்‌ இந்த உடலாகிய ஆடையை நீங்கள்‌ விட்டுவிடுகிறபொழுது, நீங்கள்‌ மாற்றமடைவதில்லை. நீங்கள்‌ அவ்வாறாகவே, ஓர் அழியாத ஆன்மாவாக, இறைவனது ஒரு குழந்தையாக இருக்கிறீர்கள்‌.

“மரணம்‌” என்பது ஒரு மாபெரும்‌ தவறான சொல்‌, ஏனெனில்‌ மரணம்‌ என்பதே இல்லை; வாழ்வில்‌ நீங்கள்‌ களைப்புற்றதும்‌ நீங்கள்‌ சதையாகிய மேல்‌ அங்கியை வெறுமனே அகற்றிவிட்டு, சூட்சும உலகிற்குத் திரும்புகிறீர்கள்‌.

ஆன்மாவின்‌ அழிவற்ற தன்மை குறித்து பகவத்‌ கீதை அழகாகவும்‌ ஆறுதலாகவும்‌ கூறுகிறது;

ஒருபோதும்‌ ஆன்மா பிறந்ததில்லை; ஆன்மா இறப்பதும்‌ ஒருபோதுமில்லை;
ஒருபோதுமில்லை அது இல்லாதிருந்த காலம்‌; முடிவும்‌ ஆரம்பமும்‌ கனவுகளே!
பிறப்பற்று, இறப்பற்று, மாறுதலற்று உள்ளது ஆன்மா என்றென்றும்‌;
மரணம்‌ அதனைத்‌ தொட்டதே இல்லை, ஆயினும்‌ அதன்‌ உடற்கூடு மரணம்‌ எய்தியதாய்த்‌ தோன்றும்‌.

மரணம்‌ என்பது முடிவல்ல; அது கர்மவினை எனும்‌ நீதியின்‌ சட்டமானது, உங்களுடைய தற்போதைய உடலும்‌ சூழ்நிலையும்‌ அவற்றின்‌ நோக்கத்தை நிறை வேற்றிவிட்டதாகத்‌ தீர்மானிக்கும்‌ பொழுதோ, அல்லது உடல்‌ வாழ்வின்‌ சுமையை இனிமேலும்‌ தாங்க முடியாத அளவிற்குத் துன்பத்தினால்‌ நீங்கள்‌ மிகவும்‌ சோர்வாகவோ அல்லது முழுவதும்‌ சக்தி இழந்தவராகவோ ஆகும்‌ பொழுதோ, உங்களுக்கு அளிக்கப்படும்‌ தற்காலிக விடுதலை ஆகும்‌. துன்பப்பட்டுக்‌ கொண்டிருக்கிறவர்‌களுக்கு மரணம்‌ என்பது சரீரத்தின்‌ வலி மிகுந்த சித்திரவதைகளிலிருந்து மீட்சிப்பெற்று விழிப்புடன்‌ கூடிய சாந்தம்‌ மற்றும்‌ அமைதிக்குள்‌ செல்வதாகும்‌. வயதானவர்களுக்கு, இது வாழ்க்கை நெடுகிலுமான வருடக் ‌கணக்கானப்‌ போராட்டங்களின்‌ மூலம்‌ ஈட்டப்பட்ட ஓர்‌ ஓய்வூதியமாகும்‌. அனைவருக்கும்‌ இது வரவேற்கத்‌தக்க ஓர்‌ ஓய்வாகும்‌.

இந்த உலகமானது மரணத்தால்‌ நிரப்பப்பட்டிருக்‌கிறது என்றும், உங்கள்‌ உடலும்‌ கூட துறக்கப்பட வேண்டியதே என்றும்‌ நீங்கள்‌ ஆழ்ந்து சிந்திக்கும்‌ பொழுது, இறைவனது திட்டம்‌ மிகவும்‌ கொடூரமானதாகத்‌ தோன்றுகிறது. அவன்‌ கருணை நிறைந்தவன்‌ என்பதை நீங்கள்‌ கற்பனை செய்ய முடியாது.

ஆனால்‌ அறிவுக்‌ கண்ணுடன்‌ மரணத்தின்‌ செயல்முறையை நீங்கள்‌ பார்த்தால்‌, மொத்தத்தில்‌ அது, மாற்றம்‌ என்னும்‌ ஒரு தீயக்‌ கனவைக்‌ கடந்து, இறைவனின்‌ ஆனந்தமயமான சுதந்திரத்தினுள்‌ மீண்டும்‌ செல்லும்‌ இறைவனுடைய எண்ணம்‌ மட்டுமே என்பதை. நீங்கள்‌ காண்பீர்கள்‌. ஞானியும்‌ பாவியும்‌ தகுதிக்கு ஏற்றவாறு பெரிய அளவிலோ சிறிய அளவிலோ மரணத்தில்‌ ஒன்று போலவே சுதந்திரம்‌ அளிக்கப்படுகின்றனர். இறைவனது சூட்சுமக்‌ கனவு உலகத்தில்‌ மரணத்தின்‌ பொழுது ஆன்மாக்கள்‌ செல்லும்‌ இடத்தில்‌—தங்களது பூவுலக வாழ்க்கையில்‌ அவர்கள்‌ அறிந்தேயிராத ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்‌.

எனவே மரணமென்ற மாயையைக்‌ கடந்து கொண்டிருக்கும்‌ மனிதனைக்‌ கண்டு வருத்தப்படாதீர்கள்‌, ஏனெனில்‌ சிறிது நேரத்திற்குள்‌ அவன்‌ விடுதலையடைந்து விடுவான்‌. அந்த மாயையிலிருந்து அவன்‌ வெளிவந்த உடனேயே, மரணம்‌ மொத்தத்தில்‌ அவ்வளவு மோசமானதல்ல என்பதை அவன்‌ காண்கிறான்‌. தனது அழியும்‌ தன்மை ஒரு கனவு மட்டுமே என்பதை உணர்கிறான்‌, மேலும்‌ இப்பொழுது தன்னை எந்த நெருப்பும்‌ எரிக்க முடியாது, எந்த நீரும்‌ தன்னை மூழ்கடிக்க முடியாது; தான்‌ சுதந்திரமாகவும்‌, பாதுகாப்பாகவும்‌ இருப்பவன்‌ என்று ஆனந்தமடைகிறான்‌.

இறந்து கொண்டிருக்கும்‌ மனிதனின்‌ உணர்வுநிலை. உடல்‌ பாரத்தினின்றும்‌, மூச்சுவிட வேண்டிய தேவையினின்றும்‌ மற்றும்‌ எந்த உடல்‌ வலியிலிருந்தும்‌ திடீரென்று விடுவிக்கப்பட்டதாக தன்னைக்‌ காண்கிறது. மிகவும்‌ அமைதியான, தெளிவற்ற, மங்கலான ஒளியுடைய ஒரு சுரங்கப்பாதையின்‌ வழியே மேலெழும்பிச் செல்கின்ற ஓர்‌ உணர்வு ஆன்மாவால்‌ அனுபவிக்கப்படுகிறது. பின்பு ஸ்தூல உடலில்‌ அனுபவித்த மிகமிக ஆழ்ந்த உறக்‌கத்தை, விட இலட்சம்‌ மடங்கு அதிகமாக ஆழ்ந்தும்‌, மிகவும்‌ மகிழ்ந்து அனுபவிக்கத்‌ தக்கவாறும்‌ உள்ள உணர்வில்லாத ஓர்‌ ஆழ்‌ உறக்க நிலைக்கு ஆன்மா மிதந்து செல்கிறது….

மரணத்திற்குப்‌ பின்‌ உள்ள நிலையானது பூவுலகில்‌ பல்வேறான மனிதர்களுடைய வாழ்வின்‌ போக்குகளுக்கு ஏற்ப அவர்களால்‌ வெவ்வேறு விதமாக அனுபவிக்கப்படுகின்றது. பல்வகைப்பட்ட மனிதர்கள்‌ தங்களது உறக்கத்தின்‌ கால அளவிலும்‌ ஆழத்திலும்‌ வேறுபடுவது போல, அவர்களது மரணத்திற்குப்‌ பின்‌ உள்ள அனுபவங்களிலும்‌ அவர்கள்‌ வேறுபடுகின்றனர்‌. வாழ்க்கைத்‌ தொழிற்சாலையில்‌ கடினமாக உழைக்கின்ற நல்ல மனிதர்‌ ஒரு சிறிது காலத்திற்கு ஓர்‌ ஆழ்ந்த, தன்னை மறந்த, ஓய்வு நிறைந்த உறக்கத்திற்குச்‌ செல்கிறார்‌. பின்பு அவர்‌ சூட்சும உலகத்தில்‌ ஏதோவொரு உயிர்ப்‌ பகுதியில்‌ விழித்தெழுகிறார்‌: “எனது தந்தையின்‌ வீட்டில்‌ அனேக வாசஸ்தலங்கள்‌ உள்ளன.”

சூட்சும உலகில்‌ ஆன்மாக்கள்‌ மிகவும்‌ மெல்லியதான ஒளியாலான ஆடை அணிந்திருக்கும்‌. அவை சதைத்‌ தோலுடன்‌ கூடிய எலும்புகளின்‌ கட்டுகளுக்குள்‌ தம்மை அடைத்துக்‌ கொள்வதில்லை. மற்ற கரடுமுரடான திடப்‌ பொருட்களுடன்‌ மோதி உடையக்கூடிய உறுதியற்ற கனத்த உடற்கூடுகளை அவை சுமப்பதில்லை. எனவே சூட்சும உலகில்‌ மனித உடலுக்கும்‌ மற்றும்‌ திடப்பொருட்‌கள்‌, சமுத்திரங்கள்‌, மின்னல்‌ மற்றும்‌ நோய்க்கும்‌ இடையே யுத்தம்‌ இல்லை. பகைமை உணர்வுக்குப்‌ பதிலாக, அனைத்துப்‌ பொருட்களும்‌ பரஸ்பர உதவும்‌ தன்மையுடன்‌ உடனொத்து வாழ்வதால்‌, அங்கே விபத்துக்களும்‌ இல்லை. அதிர்வலையின்‌ எல்லா வகைகளும்‌ ஒன்றோடொன்று இணக்கமாகப்‌ பணிபுரிகின்றன. அனைத்து சக்திகளும்‌ அமைதியாகவும்‌ உணர்வுபூர்வமாக உதவுதலுடனும்‌ வாழ்கின்றன. ஆன்மாக்கள், அவை நடந்து செல்கின்ற கதிர்கள்‌ மற்றும்‌ பருகி உண்ணும்‌ ஆரஞ்சுக்‌ கதிர்கள்‌ ஆகிய அனைத்தும்‌ உயிருள்ள ஒளியால்‌ உருவாக்கப்பட்டுள்ளன. ஆன்மாக்கள்‌ பிராண வாயுவை அல்லாமல்‌, பரம்பொருளின்‌ ஆனந்தத்தைச்‌ சுவாசித்து, பரஸ்பர கவனிப்பு மற்றும்‌ கூட்டுறவில்‌ வாழ்கின்றன.

“சூட்சும உலகத்தில்‌, மற்ற பிறவிகளில்‌ நண்பர்களாக இருந்தவர்கள்‌ ஒருவரையொருவர்‌ சுலபமாகக்‌ கண்டு கொள்கின்றனர்‌,” ஸ்ரீ யுக்தேஸ்வர்‌ கூறினார்‌. சிரஞ்சீவித்‌தன்மை கொண்ட நட்பை நினைத்து இவர்கள்‌ மகிழ்‌வதுடன்‌, பூவுலக வாழ்க்கையில்‌ ஏமாற்றமான துன்பப்‌ பிரிவுகளின்‌ போது அடிக்கடி சந்தேகிக்கப்பட்ட அன்பின்‌ அழிவற்ற தன்மையை அறிந்து கொள்கின்றார்கள்.

மரணத்திற்குப்‌ பிறகு வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது! எலும்புகளின்‌ இந்தப்‌ பழைய மூட்டை முடிச்சுக்‌களை, அதன்‌ அனைத்துத்‌ தொல்லைகளோடும்‌ இனி நீங்கள்‌ கஷ்டப்பட்டு இழுத்துச்‌ செல்லவேண்டி இருக்காது. உடல்ரீதியான வரையறைகளால்‌ தடுக்கப்படாமல்‌, சூட்சும சுவர்க்கத்தில்‌ நீங்கள்‌ சுதந்திரமாக இருப்பீர்கள்‌.

அன்புக்குரியவர்‌ ஒருவர்‌ இறந்துவிடும்‌ பொழுது காரணமின்றி துக்கப்பட்டுக்‌ கொண்டிருக்காமல்‌, இறைவனின்‌ சித்தத்தினால்‌ அவர்‌ ஓர்‌ உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்‌ என்றும்‌, அவருக்கு எது நல்லது என்பது , இறைவனுக்குத்‌ தெரியும்‌ என்றும்‌ அறிந்து கொள்ளுங்கள்‌. அவர்‌ விடுதலையாகி விட்டார்‌ என்று மகிழ்ச்சி அடையுங்கள்‌. அவரது முன்னோக்‌கிய பாதையில்‌ உங்கள்‌ அன்பும்‌ நல்லெண்ணமும்‌ ஊக்கமளிக்கும்‌ தூதுவர்களாக இருக்க வேண்டும்‌ என வேண்டிக்‌ கொள்ளுங்கள்‌. இந்த மனப்பான்மை மிக அதிக உதவி புரியும்‌. நேசித்தவர்களின்‌ இழப்பை நாம்‌ உணரவில்லையெனில்‌, நாம்‌ மனிதர்கள்‌ ஆக மாட்டோம்‌ என்பது நிச்சயம்‌ சரிதான்‌; ஆனால்‌ தனிமையில்‌ அவர்களது இழப்பை உணர்வதில்‌ நமது சுயநலப்‌ பற்றானது, அவர்களைப்‌ புவியுடனேயே பந்தப்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணமாக அமைவதை நாம்‌ விரும்ப மாட்டோம்‌. மிக அதிகமான துக்கம்‌ ஓர்‌ இறந்துவிட்ட ஆன்மாவை இன்னும்‌ அதிக அமைதியையும்‌ விடுதலையையும்‌ நோக்கி முன்னேறிச்‌ செல்வதிலிருந்து தடுத்துவிடும்‌.

இறந்துவிட்ட அன்புக்குரியவர்களுக்கு உங்கள்‌ எண்ணங்களை அனுப்புவதற்கு, உங்கள்‌ அறையில்‌ அமைதியாக அமர்ந்து இறைவன்‌ மீது தியானியுங்கள்‌. அவனது அமைதியை உள்ளுக்குள்‌ நீங்கள்‌ உணரும்‌ பொழுது, கூடஸ்த மையத்தில் இரு புருவங்களுக்கு இடையே உள்ள இச்சா சக்தி மையத்தில்‌, ஆழ்ந்த ஒரு முனைப்புடன்‌. மறைந்துவிட்ட அன்புக்குரியவர்களுக்கு உங்கள்‌ அன்பை ஒலிபரப்புங்கள்‌.

நீங்கள்‌ தொடர்பு கொள்ள விரும்பும்‌ மனிதரை கூடஸ்த மையத்தில்‌ மனக்‌ காட்சியாகக்‌ காணுங்கள்‌. உங்களது அன்பு, வலிமை மற்றும்‌ துணிவின்‌ அதிர்வலைகளை அந்த ஆன்மாவிற்கு அனுப்புங்கள்‌.

இதைத்‌ தொடர்ச்சியாக நீங்கள்‌ செய்தால்‌, மேலும்‌ -அந்த பிரியமானவரிடத்தில்‌ உங்களது அக்கறையின்‌ தீவிரத்தை நீங்கள்‌ இழக்காமலிருந்தால்‌, அந்த ஆன்மா நிச்சயமாக உங்களுடைய அதிர்‌ வலைகளை ஏற்றுக்‌ கொள்ளும்‌. அத்தகைய எண்ணங்கள்‌, உங்களது அன்புக்குரியவர்களுக்கு நலத்தைப்‌ பற்றிய உணர்வையும்‌, அன்பு காட்டப்படும்‌ உணர்வையும்‌ அளிக்கின்றன. நீங்கள்‌ அவர்களை மறந்திருப்பதைக்‌ காட்டிலும்‌ அதிகமாக அவர்கள்‌ உங்களை மறந்திருக்க மாட்டார்கள்‌.

உங்களுடைய அன்பு மற்றும்‌ நல்லெண்ணச்‌ சிந்‌தனைகளை உங்களது அன்புக்குரியவர்களுக்கு அனுப்புவதற்கு, அவ்வாறு அனுப்ப வேண்டுமென நீங்கள்‌ நாட்டம்‌ கொள்ளும்‌ பொழுதெல்லாம்‌, ஆனால்‌ குறைந்த பட்சம்‌ வருடத்திற்கு ஒரு முறை – ஏதாவது விசேஷமான ஆண்டு நிறைவின்‌ போதாவது அனுப்புங்கள்‌. மானசீகமாக அவர்களுக்குக்‌ கூறுங்கள்‌, “ஏதாவது ஒரு சமயத்தில்‌ நாம்‌ மறுபடியும்‌ சந்தித்து ஒருவரோடொருவர்‌ நமது தெய்வீக அன்பையம்‌ நட்பையும்‌ வளர்த்துக்‌ கொள்ளத்‌ தொடருவோம்‌.” உங்களது அன்பான எண்ணங்களை அவர்களுக்கு இப்பொழுது நீங்கள்‌ இடைவிடாது அனுப்பினால்‌, ஏதாவது ஒரு நாள்‌ நீங்கள்‌ நிச்சயமாக மறுபடியும்‌ அவர்களைச் சந்திப்பீர்கள்‌. இந்த வாழ்க்கை இறுதியானதல்ல, மாறாக உங்களது அன்புக்குரியவர்களுடனான உங்கள்‌ உறவின்‌ நிரந்தரச்‌ சங்கிலியில்‌ ஓர்‌ இணைப்பு மட்டும்தான்‌ என்பதை நீங்கள்‌ அறிவீர்கள்‌.

உறுதிமொழி

உறுதிப்படுத்தல் கோட்பாடும் நிபந்தனைகளும்

ஓ, தெய்வ அன்னையே  நான்‌ தற்போதைய வாழ்க்கையின்‌ மேற்பரப்பில்‌ மிதந்து கொண்டிருந்தாலும்‌ சரி‌ அல்லது மரண அலைகளின்‌ கீழ்‌ மூழ்கிக்‌ கொண்டிருந்தாலும்‌ சரி நான்‌ உனது பாதுகாக்கும்‌ சர்வ வியாபக நிரந்த வாழ்க்கைக்‌ கடலாகிய நெஞ்சத்தில்‌ இளைப்பாறுகின்றேன்‌; நான்‌ உனது அமரத்துவ கரங்களில்‌ தாங்கப்பட்டுள்ளேன்‌.

கூடுதல் வாசிப்பிற்கு

இதைப் பகிர