“ஆன்மாவின் அமைதியை வெளிக்கொணர்தல்” பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

22 செப்டம்பர், 2023

ஓர் அறிமுகம்:

உங்களைச் சுற்றியும், இணையத்தையும் பார்க்கும்போது, இவ்வுலக வாசிகளாக ஒரு அமைதியான இடத்தை நாம் எப்படி அடைவோம் என்று வியப்படைகிறீர்களா? நாம் கேள்விப்படும் வாழ்க்கை கதைகள் பெரும்பாலும் குழப்பம் மற்றும் கோபத்தின் அடைப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதை அறியும் சமயங்களில் எரிச்சலடைவது இயல்பு. சிறிது நேரமே ஆனாலும் கூட, உங்கள் கவனத்தைத் திசை திருப்புதலும், அகத்துள் செலுத்துதலும் மிகப் பெரிய நம்பிக்கையை கொண்டு வரும் எனபதை அறிந்து கொள்ளுங்கள்.

மாற்றாக, பரமஹம்ஸ யோகானந்தர் வெளிப்படுத்திய இந்தக் கதையை – இந்த மறைந்துள்ள உண்மையை – ஒரு கணம் கவனியுங்கள்: “எங்கும் அமைதி நிலவுகிறது. நீங்கள் அமைதிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு திசுவிலும் இரத்த ஓட்டம் பரவுவது போல, உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் அமைதி பாய்கிறது”.

நீங்கள் அமைதிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால், பரமஹம்ஸர் கற்பித்தது போன்ற ஆன்மீக விஞ்ஞான முறைகள் மூலம் “அமைதியை மட்டுமே உங்கள் இதயத்தில் ஊடுருவச் செய்து”, அதைப் பயிற்சி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே நீங்கள் அமைதியை உணர முடியும்.

ஒவ்வொரு செப்டம்பரிலும், மனிதகுலத்தின் அமைதியை முன்னிறுத்தி, ஐ.நா சர்வதேச அமைதி தினம் உலகம் முழுவதும் கௌரவிக்கப்படுகிறது. ஆனால் அந்த இலக்கை அடைய நாம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்று பரமஹம்ஸரும், அனைத்து மகான்களும், கற்பித்துள்ளனர்.

இறுதியாக நமக்குத் தேவைப்படுவது – ஆன்மாக்களாக நாம் ஏங்குவது – எப்போதாவது மட்டுமே சுவைக்கக் கிடைக்கும் ஊட்டமளிக்கும் உணவு எப்போதுமே தேவை என்பது போல், அவ்வப்போது உணரும் அமைதியை காட்டிலும் அதிக அமைதி தான். ஒரு நாள் அல்லது ஒரு மாதத்திற்கு மட்டுமே அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளுக்குமே, ஏராளமான, குணப்படுத்தும், ஆழ்ந்த நமபிக்கையூட்டும், வலுப்படுத்தும், திருப்திகரமான அமைதி நம்மால் எவ்வளவு தக்க வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு, இந்த உலகில் அமைதி நம் வாழ்க்கை முறையாக மாறும் வரை நமக்கு வேண்டும்.

உங்கள் கவலைகளை உணர்வு பூர்வமாக ஒதுக்கி வைத்துவிட்டு, இன்று அல்லது எந்த நாளிலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பரமஹம்ஸரின் மேற்கோள்களில் உள்ள ஞானத்தை உள்வாங்குவதன் மூலமும், உங்கள் ஆன்மாவில் உறைந்திருக்கும் அமைதி செல்வத்திலிருந்து புதிய வளங்களை ஈர்த்துக் கொள்வதன் மூலமும், தெய்வீக அமைதியை உணர உங்களை அழைக்கிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

உலகில் அமைதி என்பது தனிநபர்களின் இதயங்களில் அமைதி என்பதில் தொடங்குகிறது.

நீங்கள் உங்கள் இதயத்தில் அமைதியை மட்டுமே ஊடுருவச் செய்துதான் அதை உணர முடியும். தியானம் தான் செயல்முறை. அமைதியைக் காண எல்லாவற்றையும் முயற்சி செய்யலாம், இருப்பினும் அதை உணர மாட்டீர்கள்; ஆனால் தியானம் செய்தால், உடனே நீங்கள் தெய்வீக ஆனந்தத்தை உணர்கிறீர்கள். தியானம் என்ற ஊற்றிலிருந்து தான் இறைவனின் அமைதி உங்கள் ஆன்மாவிற்குள் பாய்கிறது.

ஒவ்வொரு இரவும் தூக்கத்தில் நீங்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் சிறிது உணர்கிறீர்கள். நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, இறைவன் உங்களை ஒரு சாந்தமிக்க உயர் உணர்வு நிலையில் இருத்துகிறார், அதில் இந்த வாழ்வின் அனைத்து அச்சங்களும் கவலைகளும் மறக்கப்படுகின்றன. தியானத்தின் மூலம் அந்த புனித மனநிலையை, நீங்கள் விழித்திருக்கும்போதே கூட உணர முடியும், மேலும் குணப்படுத்தும் அமைதியில் தொடர்ந்து ஆழ்ந்து விடவும் முடியும்.

அந்த அமைதியை நீங்கள் கண்டு உணர்ந்தவுடன், அது உங்கள் சுற்றுச்சூழலுக்கும் உலகிற்கும் அருளாசியாய் பாய்கிறது. அகத்தே நல்லிணக்கம், புறத்தே நல்லிணக்கம், எங்கும் நல்லிணக்கம்!

உங்கள் மனதை புருவங்களுக்கு இடையில் [தியானத்தில் இருப்பது போல] கரையில்லாத அமைதி ஏரியில் நிலைநிறுத்துங்கள். உங்களைச் சுற்றியுள்ள அமைதி சிற்றலைகளின் சாசுவத வட்டத்தை கவனியுங்கள். எவ்வளவு உன்னிப்பாக கவனிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக புருவங்களில் இருந்து நெற்றி வரை, நெற்றியிலிருந்து இதயம் வரை, மற்றும் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் அமைதி சிற்றலைகள் பரவுவதை நீங்கள் உணர்வீர்கள். இப்போது அமைதி நீர் உங்கள் உடலின் கரைகளை நிரப்பி பாய்ந்தோடி உங்கள் மனதின் பரந்த பிரதேசத்தை மூழ்கடிக்கிறது. அமைதியின் வெள்ளம் உங்கள் மனதின் எல்லைகளைக் கடந்து எல்லையற்ற திசைகளில் நகர்கிறது.

உங்கள் அமைதியை தக்கவைத்துக் கொண்டு, அனைத்திலும் நீங்கள் அமைதியாக செயல்புரிந்தும், விழிப்புடன் அமைதியாகவும் இருக்க முடிந்தால், அமைதியின் அகத்துள் எப்போதும் உறைந்திருக்கும் ஆன்மாவே தான் நீங்கள் என்பதை அறிந்தவராகிறீர்கள்.

நீங்கள் செய்யும் அனைத்தும் அமைதியுடன் செய்யப்பட வேண்டும். அதுவே உடலுக்கும், மனதுக்கும், ஆன்மாவுக்கும் சிறந்த மருந்து. இது வாழ்வதற்கான மிக அற்புத வழியாகும்.

YSS வலைப்பதிவுக்கான எங்கள் குறிக்கோள்களில் ஒன்று, பரமஹம்ஸ யோகானந்தரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஞானத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான கருவிகள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்வதாகும். இந்தியாவின் ஆன்மீக விஞ்ஞானத்தை உலகிற்கு கொண்டு வருவதில் பரமஹம்ஸரின் நோக்கம் என்னவென்றால், யோகத்தின் எளிய ஆனால் சக்திவாய்ந்த பயனுள்ள முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மனிதரும் தனது ஆன்மாவின் அமைதி, அன்பு மற்றும் ஆனந்தத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதாகும்.

“இன்றைய நாளில் அமைதியை உணர்வதற்கான டூல் கிட்” என்ற இணைப்பை கீழே காணலாம், இது தளர்த்துதல் குறித்த வழிமுறைகளையும், வழிநடத்தப்பட்ட உணர்தல்களின் பல வீடியோக்களையும் வழங்குகிறது, இதனால் உங்கள் அன்றாட பணிகள் அனுமதிக்கும் வரை, அகத்துள் எல்லையற்ற அமைதியை அறிந்து உணரப் பயிற்சி செய்யலாம்.

இதைப் பகிர