ஒன்றிணைந்து இறைவனைத் தேடுதல்

எழுதியருளியவர்: பரமஹம்ஸ யோகானந்தர்

கூட்டுத் தியானத்தின் மதிப்பு பற்றிய அவரது விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்

ஒய்எஸ்எஸ் தியான கேந்திரா, மும்பை

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தமது விரிவடையும் ஆன்ம-அனுபூதியின் வாயிலாக இறைவனிடம் ஆன்மாக்களை இழுக்க உலகத்திற்கு வந்துள்ளது. ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் எல்லோருக்கும் பொதுவான உண்மையான, அறிவியல்சார்ந்த மற்றும் நித்திய மகிழ்ச்சி எனும் இலக்கை நோக்கி விரைவான வழியில் மனிதகுலத்தை வழிநடத்தும் திறன் கொண்ட ஆன்ம-அனுபூதியின் ஒரு படிப்படியான ஏற்றத்தைக் கொண்டுவருகிறது. ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் போதனைகளின் பயிற்சி, ஒருவரின் சொந்த இருப்பின் அகத்தேயே, எல்லா மத நம்பிக்கைப் பாதைகளும் சந்திக்கும் ஆன்ம-அனுபூதியின் முதுகுத்தண்டு எனும் பெருவழியை, எல்லையற்ற பேரின்பத்தின் இருப்பிடத்திற்கு நேராக வழிநடத்திச் செல்லும் யோகா தியானம் எனும் ராஜபாட்டையை, வெளிப்படுத்துகிறது.

இறை-கூட்டுறவு உத்தியை அறிந்தவர்களால் தியான இரகசியத்தை அறிந்த மற்ற பக்தியுள்ள ஆன்மீக நபர்களின் கூட்டுறவிலும் அவனைக் காண முடியும். தங்களை மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று நம்பும் பல நபர்களால் இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அத்தகைய மதவாதிகளுடனான கூட்டுறவு இறைவனையும் ஆன்மீக வாழ்க்கையும் பற்றிய அனுபூதியடையாத நம்பிக்கைகளுக்கு மட்டுமே ஊக்கமளிக்கிறது; சில நேரங்களில் அது இறையியல் சண்டையில் முடிவடைகிறது. ஆனால் முக்திக்கான உலகளாவிய வழியைக் கண்டுபிடித்திருக்கும் ஒருவர் மற்ற ஆழ்ந்து தியானம் செய்யும் பக்தர்களின் கூட்டுறவில் அறிவியல்பூர்வ, தொடர்ச்சியான முற்போக்கான தியான வழிமுறைகளின் மூலம் இறைவனுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர் பரஸ்பர உதவியின் வாயிலாக ஆன்ம-அனுபூதியை வளர்த்துக் கொள்கிறார்.

ஆன்மீகக் கூட்டுறவின் மதிப்பு

ஒய் எஸ் எஸ் தியான கேந்திரம்,சண்டிகர்

தம் வாழ்க்கையில் உண்மையான மதத்தைப் பார்த்து, உணர்ந்து, அனுபூதி பெற்றவர்களுடன் நாம் பழகும் வரை, மதம் என்றால் என்ன மற்றும் அது எந்த வகையில் உலகளாவியது மற்றும் அவசியமானது என்பதை நாம் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம்.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே, இறைவனை உணர்ந்தறிய உண்மையிலேயே ஆர்வமுள்ள சாதகர்கள் மகான்களின் கூட்டுறவை நாடியிருக்கின்றனர், அல்லது மற்ற ஆன்மீக ஆர்வலர்களுடன் சேர்ந்து அவர்களுடைய படங்களை வைத்து தியானம் செய்திருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக குருமார்களால் ஆதரிக்கப்பட்ட இந்த நடைமுறைக்கு ஓர் ஆழ்ந்த ஆன்மீக காரணம் உள்ளது. தவறான பழக்கங்கள், ஒழுங்கற்ற முறையில் சிந்திப்பது, அமைதியின்மை ஆகியவற்றிற்குத் திரும்பிச் செல்வதற்கான பல சபலங்கள் ஆரம்ப-யோகியைத் தாக்குகின்றன. மாயையின் ஏமாற்றும் ஆற்றல், சக்திவாய்ந்தது மற்றும் வெல்லக் கடினமானது—குறிப்பாக முதலில். இதனால், தங்களை முழுநிறைவாக்க விரும்புபவர்கள் தமது சரியான அவாக்களை வலுப்படுத்தும் பொருட்டு ஒத்த குணமுள்ள மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்க குருமார்களால் வலியுறுத்தப்படுகிறார்கள்.

நாம் அவர்களுடன் உரையாடுவதன் வாயிலாக மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து வெளிப்படும் அமைதியான காந்த அதிர்வின் வாயிலாகவும் நாம் சேர்ந்து பழகும் நபர்களைப் போல் ஆகிறோம். அவர்களின் காந்த வரம்பிற்குள் வரும்போது நாம் பாதிக்கப்படுகிறோம்.

ஒரு மனிதர் கலைஞனாக மாற விரும்பினால், அவர் கலைஞர்களுடன் தோழமை கொள்ள வேண்டும். அவர் ஒரு நல்ல தொழிலதிபராக இருக்க விரும்பினால், அவர் வணிகத் துறையில் வெற்றிகரமான தலைவர்களுடன் தோழமை கொள்ள வேண்டும். அவர் ஓர் ஆன்மீகப் பேராற்றல் வாய்ந்தவராக ஆக விரும்பினால், அவர் இறைவனின் பக்தர்களுடன் தோழமை கொள்ள வேண்டும்.

இறைவனை அறிவதே குறிக்கோள்

ஒய்எஸ்எஸ் தியான கேந்திரம், அகமதாபாத்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் நோக்கம் இறைவனுடனான கூட்டுறவாகும். பக்தர்கள் தன் பெயரில் கூடினால் அது தெய்வத்தந்தைக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. இந்தியாவில் பக்தர்கள் எந்த மாளிகையையும் கட்டாமல் இருக்கலாம்; அவர்கள் அவன் மீது தியானம் செய்ய எந்த இடத்திலாவது கூடுகின்றனர்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இந்திய மகான்களால் விஞ்ஞான ரீதியாக உருவாக்கப்பட்ட ஆன்ம-அனுபூதி உத்திகளின் பயிற்சியை வலியுறுத்துகிறது. ஆன்ம-அனுபூதியின் அகப் பெருவழியில் ஒன்றுசேர்ந்து உண்மையாக பயணிப்பதற்காக மதவாதிகளின் கூட்டுறவை இது வலியுறுத்துகிறது.

தியானக் குழுக்கள் ஒரு காரணத்தின் அல்லது தலைவரின் புகழாரத்திற்காக அல்லாது, மாறாக ஐக்கிய ஒருமுகப்பாட்டின் மற்றும் தியானத்தின் சக்தியால் இறைவனை அறியும் திட்டவட்டமான மற்றும் ஒரே நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனின் ஒரு குழந்தை மற்றும் இறைவனுடைய இச்சாசக்தியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஆனால் அகங்காரத்தால் மனிதன் தனது இச்சாசக்தியைத் தெய்வீக இச்சாசக்தியிலிருந்து தனிமைப்படுத்துகிறான் மற்றும் இவ்வாறு அதை வரையறைப்படுத்துகிறான். மற்ற சாதகர்களுடனான ஐக்கியத்தில் ஏற்படும் ஆழ்ந்த ஒருமுகப்பாட்டின் மூலம், ஒரு பக்தர் தனது இச்சாசக்தியை இறைவனின் இச்சாசக்தியாக மாற்றுகிறார். இறைவனுடனான தனது அடையாளத்தை நினைவுகூர்ந்தவாறு, அவர் இறை-உணர்வின் தெய்வீகப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறார். ஒவ்வொரு பக்தரும் பிரார்த்தனையின் வாயிலாகவும், தியானத்தில் இறை-கூட்டுறவின் வாயிலாகவும், ஆன்மீகத் தோழமையின் வாயிலாகவும் தெய்வீக விருப்பம் பற்றிய தன் அனுபூதியை வலுப்படுத்த வேண்டும்.

இயேசு கூறினார்: “ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” மத்தேயு(18:20, பைபிள்). இறைவன் மீது ஒருமுகப்பட இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்று சேரும்போது, ஒரு நபரின் வலுவான தெய்வீக ஒருமுகப்பாடு மற்றொருவரின் பலவீனமான ஒருமுகப்பாட்டை பலப்படுத்துகிறது. ஆனால் மக்கள் இறைவனின் பெயரால் கூடி, பின்னர் அளவளாவும் போதோ, அல்லது வேறொன்றை நினைத்துக்கொண்டு வெளிப்புறமாக பிரார்த்தனை செய்யும் போதோ, அல்லது இறைவனுடன் அகமுகமாகத் தொடர்பு கொள்ளாமல் ஒரு புனிதமான சடங்கை இயந்திரத்தனமாக நிறைவேற்றும் போதோ, அவர்களால் படைப்பில் வியாபித்துள்ள கிறிஸ்து-உணர்வுநிலையை [கூடஸ்த சைதன்யம்] உணர முடியாது.

மற்றவர்களுடன் தியானம் செய்வதின் அருளாசிகள்

ஒய் எஸ் எஸ் தியான கேந்திரம், தார்வாட்

கூட்டுத் தியானம் என்பது புதிய ஆன்மீக ஆர்வலர்களையும் மூத்த சாதகர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை. சேர்ந்து தியானம் செய்வது கூட்டுக் காந்தவிசையின் கண்ணுக்குத் தெரியாத அதிர்வுப் பரிமாற்ற விதிமுறையின் மூலம் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் அதிகரிக்கிறது.

நான் பயிற்சிக்காக ஸ்ரீ யுக்தேஸ்வரரிடம் சென்றபோது பெற்ற அவரது ஆலோசனை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் கூறினார்: “நல்ல தோழர்களுடன் தியானம் செய். உன் மனம் எனும் பாலில் இருந்து ஆன்ம-அனுபூதி எனும் வெண்ணெயைக் கடைய அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பால் உலக மாயை எனும் நீரில் கலக்கிறது மற்றும் அதனால் அவற்றின் மேல் மிதக்க முடியாது. அந்த நம்பத்தகாத நீரில் வெண்ணெய் உடனடியாக மிதக்கிறது.”

குருவின் எச்சரிக்கைதான் எத்துணை உண்மைவாய்ந்தது! நான் தொடங்கிய குழுவிலிருந்து விலகி இருந்த அனைவரும், கிரியா யோகத்தில் ஆன்மீக ரீதியாக முன்னேறியிருந்தாலும், பின்னர் உலகப் பாதிப்புகளுக்கும் அவர்களுடைய கடந்தகாலப் பிறவிகளின் ஆழ்மனப் பொருள்சார் போக்குகளின் தூண்டுதல்களுக்கும் அடிபணிந்தனர்.

குழுவில் தங்கியிருந்தவர்கள் இறை-அனுபூதியில் சீராக முன்னேறினர், ஏனென்றால் பலவீன மற்றும் அலட்சிய தருணங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவினோம். தெளிவான வானத்தில் திடீரெனப் பரவும் மேகங்களைப் போல் ஆன்ம ஒளியை ஆன்மீகக் களைப்பு எனும் மந்தாரம் சில நேரங்களில் மூடுகிறது. நல்ல தோழமை எனும் சூரிய ஒளியால் நாம் மேகங்களை விரட்ட வேண்டும்.

ஆன்ம-அனுபூதியை நாடும் நபர்களுடனான கூட்டுறவு மற்றும் கூட்டுத் தியானம் மூலம் உங்கள் சொந்த அதிர்வுகளை நீங்கள் ஏன் பலப்படுத்தக்கூடாது? இந்தப் பயிற்சி உங்கள் சொந்த ஆன்மீகத் திட நம்பிக்கைகளை வலுப்படுத்தும்; உங்கள் வாழ்க்கையில் கடந்துசெல்ல முடியாததாகத் தோன்றும் பல தடைகள் தியானத்தின் நீரில் நொறுங்கிக் கரைந்து போவதை நீங்கள் காண்பீர்கள். இறைவனுக்கான உங்கள் பக்தியும் அன்பும் மற்றவர்களின் பக்தியுடனும் அன்புடனும் கலக்கும். தெய்வீகப் பேரின்பம் உங்களிடமிருந்து வெளிப்பட்டுப் பரவி நீங்கள் சந்திக்கும் அனைத்து நபர்களுக்கும் உதவும்.

உங்கள் ஆன்மீக முன்னேற்றம் ஸ்தம்பித்தால், அல்லது தேய்ந்து கொண்டிருந்தால், மற்ற பக்தர்களின் கூட்டுறவில் இறைவன் அல்லது பெரிய மகான்களின் மீது தியானம் செய்வது, உங்கள் இக்கட்டான நிலையிலிருந்து உங்களை உயர்த்தும். மற்றவர்களின் ஆன்மீக அதிர்வுகளின் அருகாமை உங்கள் சொந்த ஆன்மீக அதிர்வுகளை உயர்த்தும் சக்தியைக் கொண்டுள்ளது. மற்ற பக்தர்களுடன் தியானம் செய்வது இவ்வாறு உங்கள் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்த உதவுகிறது. ஆன்ம-அனுபூதி எனும் ஏணியில் நீங்கள் ஏறும்போது அவர்கள் உங்களுக்கு உத்வேகமூட்டுகின்றனர்; உங்கள் உதாரணத்தின் மூலம் உங்களாலும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்க முடியும்.

தேன்கூடுகளை உருவாக்கி இறைவனின் தேனை அவற்றில் நிரப்புதல்

ஒய்எஸ்எஸ் தியானா கேந்திரம், ஹைதராபாத்

தேனுக்கு தேன்கூடு தேவை. தேன் இல்லாத ஒரு தேன்ககூட்டால் பயனில்லை. கிழக்கு, ஆன்மீகத் தேனைச் சேகரிக்க விரும்புகிறது; மேற்கு ஆன்மீக நிறுவனம் எனும் பெரிய தேன்கூடுகளை உருவாக்க விரும்புகிறது. தனிப்பட்ட தியானத்தின் மூலம் ஆன்மீகத் தேனைப் பெறுவது நிறுவனம் எனும் பெரிய தேன்கூடுகளை உருவாக்குவதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இறைவனை நாடும் பக்தர்களை ஒன்றிணைக்க ஏதேனும் அமைப்பு அவசியமாகிறது. ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் அமைப்பு இல்லாதிருந்தால், ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் போதனைகளின் பயனை நீங்களோ மற்றவர்களோ பெற்றிருக்க முடியாது.

எப்போதும் முதலில் உங்களுக்காக தனிப்பட்ட ஆன்ம-அனுபூதியை முயன்று பெறுங்கள். ஆனால் உங்கள் ஆன்மீக அமைப்பின் பணியைப் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது தீவிர சுயநலமாக இருக்கும், மேலும் அத்தகைய புறக்கணிப்பு உங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிக்கும். எதிர்வரும் காலங்களின் மற்றும் தலைமுறையினரின் பசியுள்ள சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்ய கூட்டு உண்மையின் தேன் சேமிக்கப்படும் நிறுவனம் எனும் தேன்கூடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், தனிப்பட்ட அல்லது கூட்டுத் தியானம் இல்லாத மத அமைப்பு அர்த்தமற்றது. உங்களது முதல் ஆசை அகத்தே உங்களது சொந்த ஆன்ம-அனுபூதியின் பீடத்தின் மீது இறைவனை நிலைநிறுத்துவதாகும்; மற்றும் அதே நேரத்தில் உங்கள் ஆன்மீக அமைப்பில் அனைவரின் ஒன்றினைந்த இதயங்களில் அவனை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.

திடப்பற்றுடைய ஒருசிலரே கூட இறைவனின் எல்லையற்ற அன்பிற்காக அதிக ஆவலுடன் இருக்கும்போது அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவனுடைய அளப்பரிய அன்பை அடையவும், தன்னலமின்றி அவனுக்குச் சேவை செய்யவும் இந்த வாழ்க்கைத் தளத்தில் நீங்கள் அனுப்பப்பட்டீர்கள். இதுவே முக்திக்கான ஒரே வழி, உண்மையான மகிழ்ச்சிக்கான ஒரே வழி. இறைவனுக்காக வேலை செய்யுங்கள் மற்றும் ஒவ்வொரு இரவும் அவன்மீது தியானம் செய்யுங்கள். குழுக் கூட்டங்களின் போது, குழு உறுப்பினர்களுடன் தியானம் செய்யுங்கள்; மற்றும் வீட்டில் இருக்கும் போது, தனியாக அல்லது இறைவனை நாடும் வேறு எந்த பக்தனுடனும் தியானம் செய்யுங்கள்.

தியானக் குழுக்களை நோக்கிய போக்கு

ஒய்எஸ்எஸ் தியானா கேந்திரம்,லக்னோ

யோக அறிவியல் இந்த யுகத்தில் மற்ற எல்லாவற்றையும் விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். முழு மதப் போக்கும் நாம் அறிந்த தேவாலயங்களிலிருந்து விலகிச் சென்றவாறு, பள்ளிகளையும் அமைதியான இடங்களையும் நோக்கியதாக இருக்கும்; அங்கே மக்கள் வெறுமனே ஒரு மத போதனையைக் கேட்பதற்காக அல்லாமல், தியானத்தில் இறைவனை உண்மையில் காண்பதற்காகச் செல்வர்.

மேன்மேலும் “மத” வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் நோக்கத்துடன் உள்ள அறிவார்ந்த பயிற்சி பெற்ற மதபோதகர்களைக் கொண்ட பெரிய விலையுயர்ந்த தேவாலயங்களுக்குப் பதிலாக, சிறிய தியான மையங்கள் அமைதியான இடங்களில் தொடங்கப்பட வேண்டும்; அங்கு ஒரு சில உண்மை நாடுவோர் தியானம் செய்ய வருவர் மற்றும் வேறு சில ஆழ்ந்த ஆர்வமுள்ள மற்றும் ஆழ்ந்த தியானம் செய்யும் நபர்களின் தோழமையில் இறைவனுடன் தொடர்புகொள்வதற்கான வழியைக் கற்றுக்கொள்வர்.

இத்தகைய குழுக்கள் உண்மையைப் பற்றி ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களையும் கற்பனைகளையும் வெளிப்படுத்துவதைக் கேட்பதில் தங்கள் நேரத்தை செலவழிக்கக்கூடாது, ஆனால் முற்போக்கான ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் உத்திகளைப் பயன்படுத்தி, இவ்வாறு இறைவனுடனான கூட்டுறவில் இருந்தவாறும் அகத்தே அமைதி மற்றும் ஞானம் பற்றிய அவனுடைய உபதேசங்களைக் கேட்டவாறும், ஒன்றுசேர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

ஆழ்ந்த தியான மௌனத்தை அனைத்து மையங்களிலும் அதிகம் பயிற்சி செய்ய வேண்டும். அனைவரும் குறைவாகப் பேச வேண்டும். இந்தியாவில் எனது துறவறப் பயிற்சியின் போது எனது குரு ஸ்ரீ யுக்தேஸ்வர் எப்போதாவது மட்டுமே எங்களுக்கு சொற்பொழிவாற்றினார். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் பேசாமல் அவரைச் சுற்றி அமர்ந்தோம். நாங்கள் அசைந்தால்கூட, அவர் எங்களைக் கண்டிப்பார்.

வெறுமனே நல்ல புத்தகங்களைப் படித்து சொற்பொழிவுகளையும் இசைசார்ந்த பொழுது போக்குகளையும் கேட்டு நேரத்தைக் கழிக்கும் சமயக் குழுக்கள், எல்லா உயிர்களின் சடங்குகளையும் நடத்தும் மகாகுருவின்—அன்பிற்குரிய இறைவனின்—இருப்பு இல்லாத இறையியல் சமூக மன்றங்களாகும். இறைவனின் பெயரால் கூடி, தியானக் கோவிலில் அவரை அழைக்க முயற்சி செய்யும் குழுக்கள் மட்டுமே உண்மையிலேயே அவனது இருப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவை.

ஆன்ம-அனுபூதிச் செய்தி தானாகவே பரவுகிறது. அதனால்தான் தியானத்தின் உத்திகளைப் பயிற்சி செய்வதற்கான குழுக் கூட்டங்கள் மிக முக்கியமானவை. குழுக் கூட்டங்கள் வீட்டில் ஒருவர் தனிப்பட்ட முறையில் முயன்று பெற்ற தனிநபர் ஆன்ம-அனுபூதியை வலுப்படுத்துகின்றன. குழுக் கூட்டங்கள் உறுப்பினர்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை அளிக்கின்றன மற்றும் குழு அவர்களை நாடுவதற்குப் பதிலாக குழுவை நாட அவர்களைத் தூண்டுகின்றன.

கூட்டுத் தியானம் மக்களை ஒன்றிணைக்கிறது, அது வழிநடத்துபவரின் ஆளுமையின் அல்லது இசை நிகழ்ச்சிகளின் அல்லது விழாக்களின் காரணமாக அல்ல, ஆனால் அவர்களின் சொந்த ஆன்ம-அனுபூதியின் காரணமாக. பின்னர், அவர்கள் ஒன்றாகக் கலந்த பக்திபீடத்தின் மீது இறைவனை வணங்க தாமாகவே அடிக்கடி ஒன்று சேர விரும்புகிறார்கள். ஒன்றிணைந்த மனங்கள் பெரிய கால்வாய்கள், இவற்றின் மூலம் இறைவனின் சக்தி தனிநபர் ஆன்மாக்களுக்கு வலிமையான வழியில் பாய்கிறது.

ஒரு ஒய் எஸ் எஸ் குழுவுடன் இறைவனை நாடுங்கள்

ஒய்எஸ்எஸ் தியான கேந்திரம், பெங்களூரு

எல்லா இடங்களிலும் தியானத்திற்கான ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் மையங்கள் இருக்க வேண்டும்.

எனது பரமகுரு லாஹிரி மகாசயர் குடும்ப வாழ்க்கையின் அனைத்துச் சுமைகளையும் பொறுப்புகளையும் சுமந்தார், ஆனாலும் எங்கும் நிறைந்த பரம்பொருளோடு தொடர்பு கொள்வதை நிறுத்தவில்லை. இந்தியாவில் கிரியா யோகத்தைஅறிமுகப்படுத்தி, அதை ஏற்றுக்கொள்ளும் எல்லாச் சாதகர்களுக்கும் கற்பித்த இந்தச் சிறந்த யோகாவதாரம், ஒரு கிறிஸ்துவைப் போன்ற ஆத்மாவுடன் தொடர்பு அல்லது அவர் மீது தியானம், மற்ற ஆன்மீக ஆர்வலர்களுடன் கூட்டுறவு, தியானத்தின் விசுவாசமிக்க பயிற்சி ஆகியவை ஆன்மீக விடுதலையின் தேவைகள் என்று கூறினார்.

நீங்கள் ஒரு ஒய்எஸ்எஸ்/எஸ்ஆர்எஃப் கோவிலுக்கு அல்லது மையத்திற்குச் செல்லும்போது, அது இந்த ஒரே நோக்கத்திற்காக இருக்கட்டும்: இறைவனுடன் இருக்க வேண்டும். வார்த்தைகளுக்காகச் செல்லாதீர்கள், கீதங்களுக்காகச் செல்லாதீர்கள். தியானத்தின் மூலம் அவனது இருப்பை உணரச் செல்லுங்கள்!

பக்தர் முதலில் ஆன்மீகப் பாதையில் தொடங்கும் போது, இச்சாசக்தியை விட சூழல் வலுவானது என்பதை எப்போதும் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் இருப்பும் முயற்சிகளும் தேவை என்பதை நீங்கள் அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன். எனவே, நீங்கள் இப்போது, உங்கள் குழு அல்லது மையச் சேவைகளில் கலந்து கொள்ள மாட்டீர்களா, எல்லா நேரங்களிலும், மைய அதிகாரிகளுக்கு உங்கள் விசுவாசமான ஆதரவை எல்லா வகையிலும் அளிக்க மாட்டீர்களா? நான் உங்களுடன் சிந்தனையிலும் மெய்ப்பொருளிலும் இருக்கிறேன், ஏனென்றால் உங்களுக்கு இவ்வாறு எழுத உத்வேகப்படுத்தியது இறைவனே. உங்கள் மனத்தை என்னுடனும் மகான்களுடனும் மனரீதியாக இசைவித்துக் கொள்ளுங்கள், மற்றும் அதன்படி உங்கள் வாழ்க்கை மேம்படும்.

கூட்டுத் தியானம் என்பது புதிய ஆன்மீக ஆர்வலர்களையும் மூத்த சாதகர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை. சேர்ந்து தியானம் செய்வது கூட்டுக் காந்தவிசையின் கண்ணுக்குத் தெரியாத அதிர்வுப் பரிமாற்ற விதிமுறையின் மூலம் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் அதிகரிக்கிறது.

வேறு சில ஒய் எஸ் எஸ் தியான கேந்திரங்கள்/மண்டலிகள்:

சிம்லா, இமாச்சலப் பிரதேசம்
ஹைதராபாத், தெலுங்கானா
நாகர்கோவில், தமிழ்நாடு
பெங்களூரு, கர்நாடகா
பிலாஸ்பூர், சட்டீஸ்கர்
கொச்சி, கேரளா
ஹிசார், ஹரியானா
ஜம்மு, ஜம்மு காஷ்மீர்

இதைப் பகிர