வாழ்க்கையின் குறிக்கோள்

பரமஹம்ச யோகானந்தரின் எழுத்துக்களில் இருந்து சில பகுதிகள்

A women with swan near lakeமனிதகுலம் ஏதோ ஒன்றுக்காக நித்திய தேடலில் ஈடுபட்டுள்ளது. அது தனக்கு முழுமையான மற்றும் முடிவில்லாத ஆனந்தத்தை தரும் என நம்புகிறார்கள். கடவுளைத் தேடி கண்டுபிடித்த அந்த தனிப்பட்ட ஆன்மாக்களுக்கு தேடல் முடிந்துவிட்டது. அந்த ஏதோ ஒன்று கடவுளே ஆகும்.

கடவுளை கண்டுபிடிப்பதா வாழ்க்கையின் நோக்கம் என்று பலர் சந்தேகிக்ககூடும்; ஆனால் வாழ்க்கையின் நோக்கம் ஆனந்தத்தை கண்டறிவது என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளலாம். கடவுள் ஆனந்தம் என்று நான் சொல்கிறேன். அவர் பேரின்பம். அவர் அன்பு. அவர் உங்கள் ஆன்மாவில் இருந்து ஒருபோதும் விலகாத ஆனந்தம். எனவே நீங்கள் ஏன் அந்த ஆனந்தத்தை பெற முயற்சிக்க கூடாது? இதை வேறு யாரும் உங்களுக்கு கொடுக்க முடியாது. அதை நீங்கள் தான் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு காலக்கட்டத்தில் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய: செல்வம், அதிகாரம், நண்பர்கள் என்று அனைத்தையும் பெற்றாலும் – சிறிது நேரத்திற்கு பிறகு நீங்கள் மீண்டும் அதிருப்தி அடைவீர்கள், மேலும் ஏதாவது உங்களுக்கு தேவைப்படும். ஆனால் உங்களுக்கு ஒரு போதும் பழையதாக மாறாத ஒரு விஷயம் இருக்கிறது – அது ஆனந்தமேயாகும். மகிழ்ச்சி பல்வேறு விதமாக வெளிப்படுத்தப்படும், ஆனால் அதன் சாராம்சம் மாறாது. அச்சாராம்சமே, நாம் ஒவ்வொருவரும் தேடும் உள்ளுணர்வாகும். என்றும் நீடித்திருக்கும், என்றும் புதிதாக தோன்றும் ஆனந்தமே கடவுள். இந்த மகிழ்ச்சியை உங்களுள் கண்டு பிடிப்பதன் மூலம், இதை நீங்கள் அகத்தில் உள்ள எல்லாவற்றிலும் உணர்வீர்கள். கடவுளில் நீங்கள் வற்றாத முடிவில்லாத பேரானந்தத்தை அடைவீர்கள்.

மிகுந்த ஓய்வு தேவைப்படும் போது உங்களை தூங்க செல்ல அனுமதிக்காமல் தண்டிக்கப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், திடீரென்று ஒருவர் கூறுகிறார்: “சரி நீங்கள் இப்போது தூங்கச் செல்லலாம்”. தூங்குவதற்கு முன்பு நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை நினைத்துப் பாருங்கள். அந்த மகிழ்ச்சியை ஒரு மில்லியன் மடங்கு பெருக்கவும்! அப்போதும் கடவுளோடு தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அது விவரிக்காது.

கடவுளின் ஆனந்தம் எல்லையற்றது, இடைவிடாதது, எல்லா சமயத்திலும் புதியது. உடல், மனம், நீங்கள் அந்த உணர்வுநிலையில் இருக்கும்போது எதுவும் உங்களை தொந்தரவு செய்ய முடியாது- இறைவனின் அருளும் மகிமையும் அப்படி பட்டதாகும். நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தையும், புரிந்து கொள்ள முடியாததையும் அவர் உங்களுக்கு விளக்குவார்.

ஆழ்ந்த தியானத்தின் அமைதியில் நீங்கள் உட்கார்ந்து இருக்கும்பொழுது, வெளிப்புற தூண்டுதல் இன்றி ஆனந்தம் உங்களுள் இருந்து பொங்கி எழும். தியானத்தின் ஆனந்தம் திக்குமுக்காடச் செய்வதாய் இருக்கும். உண்மையான தியானத்தின் அமைதிக்குள் செல்லாதவர்களுக்கு உண்மையான ஆனந்தம் என்னவென்று தெரியாது.

மனமும் உணர்வும் உள்நோக்கி செலுத்தப்படும் போது நீங்கள் கடவுளின் ஆனந்தத்தை உணர ஆரம்பிக்கிறீர்கள். புலன்களின் இன்பங்கள் நீடிக்காது; ஆனால் கடவுளின் ஆனந்தம் நித்தியமானது. இது ஒப்பிடமுடியாதது!

நம்மில் மிகச் சிலரே நம் வாழ்க்கையை, முறையாகவும் புத்திசாலித்தனமாகவும் பொருளாதார ரீதியாகவும், பயன்படுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிவோம். நம் நேரத்தை கவனமாக செலவிடுவோம். நாம் விழித்திக்கொள்ளும் முன் வாழ்நாள் முடிந்து விடும், ஆனாலும் கடவுள் நமக்கு கொடுத்த அழியாத நேரத்தின் மதிப்பை நாம் உணர்வதில்லை.

ஏதும் செய்யாமல் உங்கள் நேரத்தை கடத்தாதீர்கள். ஏராளமான மக்கள் முக்கியத்துவம் இல்லாத செயல்களால் தங்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள், அவர்கள் வழக்கமாக “ஓ, நான் ஒவ்வொரு நிமிடமும் வேலையாக இருந்தேன்!” என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் அப்படி என்ன வேலையாக இருந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அரிது.

ஒரு நொடியில் நீங்கள் இவ்வுலகை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்; உங்கள் எல்லா திட்டங்களையும் நீங்கள் ரத்து செய்ய வேண்டியிருக்கும். கடவுளுக்காக உங்களால் நேரம் கொடுக்க முடியாததால் ஏற்படும் விளைவை அறிந்த பின் வேறு எந்த செயலுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அது அறிவுடைமை அல்ல. மாயையின் காரணமாக, நம் மீது வீசப்படும் அண்ட மாயையின் வலையால் நாம் அற்பமான ஆர்வங்களில் சிக்கி இறைவனை மறந்து விடுகிறோம்.

நாம் கடவுளிடம் இசைந்து இருந்தால் நம்முடைய புலனுணர்வு திறன் எல்லையற்றது ஆகிறது, கடல் ஓட்டத்தினை போன்ற தெய்வீக இருப்பை எங்கும் நிறைந்து உள்ளதை உணரலாம். பரம்பொருள் ஆனவர் அறியப்படும் போது, நம்மையே பரம்பொருளாக உணர்ந்தபோது, நிலமோ கடலோ இல்லை, பூமியோ வானமோ இல்லை — அனைத்தும் அவன்தான். பரம்பொருள் உள் அனைத்தும் உருகுவது என்பது யாரும் விவரிக்க முடியாத நிலை. ஒரு பெரிய பேரானந்தம் உணரப்படுகிறது — ஆனந்தம் மற்றும் அறிவு மற்றும் அன்பின் நித்திய முழுமை உணரப்படுகிறது.

கடவுளின் அன்பு, பரம்பொருளின் அன்பு, அனைத்தையும் உள்ளடக்கிய அன்பு. நீங்கள் அந்த அன்பை அனுபவித்தவுடன் அது உங்களை நித்திய சாம்ராஜ்யத்தில் வழி நடத்திக் கொண்டே இருக்கும். அந்த அன்பு ஒருபோதும் உங்கள் இதயத்தில் இருந்து பறிக்கப்படுவது இல்லை. அது உங்கள் இதயத்திலே கொழுந்துவிட்டு எரியும், அந்த நெருப்பில் மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கும் பரம்பொருளின் மகத்தான காந்த சக்தியை காண்பீர்கள். மேலும், உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுவதை மற்றும் ஆசைப்படுவதை அது ஈர்க்கும்.

என் கேள்விகளுக்கு மனிதன் மூலமாக அல்ல, கடவுள் மூலமாகவே பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நான் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். அது அவன் தான். அது அவன் தான். அந்தப் பரம்பொருள் தான் என் மூலம் உங்களிடம் பேசுகிறார். அவருடைய அன்பை பற்றி தான் நான் பேசுகிறேன். சிலிர்ப்புக்கு பிறகு சிலிர்ப்பு ஏற்படும்! மென்மையான தென்றல் போல அவரது அன்பு ஆன்மாவுக்கு மேல் வருகிறது. இரவும் பகலும், ஒவ்வொரு வாரமும், ஆண்டுதோறும், அது அதிகரித்துக் கொண்டே செல்கிறது – முடிவு எங்கே என்று உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒவ்வொருவரும் அதை தேடுகிறீர்கள். நீங்கள் மனித அன்பையும் செல்வச் செழிப்பையும் விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறீர்கள், ஆனால் இவற்றின் பின்னால் உங்கள் பிதாவே உங்களை அழைக்கிறார். அவருடைய எல்லாப் பரிசுகளையும் விட அவரே பெரியவர் என்பதை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் அவரைக் காண்பீர்கள்.

மனிதன் கடவுளை அறிவதற்காக மட்டுமே பூமியில் வந்துள்ளான்; வேறு எந்த காரணத்திற்காகவும் மனிதன் இங்கே இல்லை. இது இறைவனின் உண்மையான செய்தி. தன்னை தேடும் மற்றும் நேசிக்கும் அனைவருக்கும், வலி இல்லாத, முதுமை இல்லாத, போர் இல்லாத, மரணம் இல்லாத — நித்திய காப்புறுதி மட்டும் கூடிய மகத்தான வாழ்க்கை பற்றி கூறுகிறார். அந்த வாழ்க்கையில் எதுவும் அழிக்கப்படுவதில்லை. என்றும் சலிக்காத மற்றும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி மட்டுமே உள்ளது — அந்த மகிழ்ச்சி எப்போதும் புதிதாக இருக்கும்.

அதனால் தான் கடவுளை தேடுவது பயன்மிக்கது. அவரை உண்மையாக நாடுபவர்கள் அனைவரும் நிச்சயம் அவரைக் கண்டுபிடிப்பார்கள். இறைவனை நேசிக்க விரும்புபவர்களும், அவருடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க ஏங்குபவர்கள், அவரை உண்மையாக அறிந்து கொள்ள இதயப்பூர்வமாக விரும்புபவர்களும் அவரைக் கண்டுபிடிப்பார்கள். அவர் மீது உங்களுக்கு என்றும்-அதிகரிக்கும் ஆசை, இரவும் பகலும் இருக்க வேண்டும். நித்தியம் முழுவதும் அவர் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் அன்பை அவர் ஏற்றுக் கொள்கிறார். இதனால் முடிவில்லா மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தை நீங்கள் உணர்வீர்கள். எல்லாம் ஒளி, எல்லாம் ஆனந்தம், எல்லாம் அமைதி, எல்லாம் அன்பு. அவரே எல்லாம்.

மேலும் ஆய்வு

இதைப் பகிர