சங்கல்பங்கள்

“ நான் இறுக்கமின்றி இருந்து எல்லா மனச் சுமைகளையும் விட்டொழிக்கிறேன்; எனவே இறைவன் தனது பரிபூரண அன்பு, அமைதி, மற்றும் ஞானத்தை என் மூலம் வெளிப்படுத்த இயலும்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

Sunrise from mountain top.

பிரதான ஆன்மீகப் பாதையில் இருந்தவர்கள், மனத்தையும் உடலையும் குணமாக்கும் சங்கல்ப சக்தியைக் கண்டுபிடிப்பதற்குப் பல்லாண்டுகள் முன்பே, பரமஹம்ஸ யோகானந்தர் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மறைந்திருக்கும் வியக்கத்தக்க குணமாக்கும் சக்திகளை நேரடியாக அணுகிப் பயன்படுத்துவது எப்படி என்று நாடு முழுவதிலும் மெய்ம்மறந்த அவையோருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் 1924-ல் தனது முதலாம் நாடு தழுவிய சொற்பொழிவுப் பயணத்தின் போது இந்தச் சக்திவாய்ந்த குணமாக்கும் பயிற்சியை அமெரிக்க அவையோருக்கு அறிமுகப்படுத்தினார். 1930-கள் மற்றும் 40-கள் முழுதூடும் இந்தத் தலைசிறந்த ஆசான், தான் உருவாக்கிய எஸ் ஆர் எஃப் ஆலயங்களில் கிட்டத்தட்ட எப்போதும் தன் உத்வேகமூட்டும் வழிபாடுகளை ஒரு சங்கல்பத்துடன் ஆரம்பிக்கவோ அல்லது முடிக்கவோ செய்வார்; அங்கே இருந்தவர்களை குணமாக்குவதற்கான, அல்லது இச்சா சக்தியையோ அல்லது பக்தியையோ அல்லது இறைவனது இருப்பின் உணர்வையோ விழித்தெழச் செய்வதற்கான சங்கல்பத்தில் வழிநடத்துவார். இன்று உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கான மக்கள் அவருடைய அறிவியல்பூர்வ குணமாக்கும் சங்கல்ப உத்திகளைப் பயிற்சி செய்து பயனடைந்திருக்கிறார்கள்.

தன் Scientific Healing Affirmations என்ற முன்னோடியான புத்தகத்தில் பரமஹம்ஸ யோகானந்தர் கூறியவை:

நேர்மை, திடநம்பிக்கை, விசுவாசம், உள்ளுணர்வு ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட வார்த்தைகள் அதிக அளவு வெடிக்கும் தன்மையுடைய அதிர்வுக் குண்டுகள் ஆகும்; அவை, இயங்கவிடப் பட்டால், இடர்ப்பாடுகள் எனும் பாறைகளை நொறுக்கி விரும்பிய மாற்றத்தை உருவாக்குகின்றன….புரிதலுடன், உணர்வுடன் மற்றும் விருப்பத்துடன் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் நேர்மையான வார்த்தைகள் அல்லது சங்கல்பங்கள், உங்களுடைய இடர்ப்பாட்டில் துணை புரிய சர்வவியாபகப் பேரண்ட அதிர்வாற்றலை நிச்சயம் அசைத்துவிடும். அந்த மாபெரும் சக்தியிடம் எல்லையற்ற நம்பிக்கையுடன் ஐயம் முழுவதையும் வீசி எறிந்தவாறு முறையீடு செய்யுங்கள்; இல்லையெனில் உங்கள் கவனம் எனும் அம்பு அதன் இலக்கிலிருந்து வேறுபக்கம் திருப்பப்பட்டு விடும்.

“உங்களுடைய அதிர்வுறும் பிரார்த்தனை-விதையைப் பேரண்டப் பேருணர்வுநிலை எனும் நிலத்தில் விதைத்துவிட்ட பிறகு அது முளைத்திருக்கிறதா அல்லது இல்லையா என்று பார்க்க அதை அடிக்கடி பிடுங்காதீர்கள். தெய்வீக ஆற்றல்களுக்கு இடைவிடாது வேலைசெய்ய ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ்

“ஒருவர் வெவ்வேறு சங்கல்பங்களைப் பயன்படுத்தும் போது, அவருடைய மனப்பான்மை மாற வேண்டும்; எடுத்துக்காட்டாக, இச்சா சக்திச் சங்கல்பங்கள் வலிமையான தீர்மானத்துடனும்; உணர்வுச் சங்கல்பங்கள் பக்தியுடனும்; பகுத்தறிவுச் சங்கல்பங்கள் தெளிவான புரிதலுடன் இணைந்திருக்க வேண்டும். மற்றவர்களைக் குணப்படுத்தும் போது, உங்களுடைய நோயாளியின் எழுச்சிமிக்க, கற்பனாசக்திமிக்க, உணர்ச்சிமிக்க அல்லது சிந்தனைமிக்க மனநிலைக்குப் பொருத்தமான ஒரு சங்கல்பத்தைத் தேர்ந்தெடுங்கள். எல்லாச் சங்கல்பங்களிலும் கவனத்தின் தீவிரம் முதலில் வருகிறது, ஆனால் தொடர்ச்சியும் திரும்பத் திரும்பச் சொல்வதும் கூட மிகப்பெரிய விஷயம் ஆகும். உங்களுடைய சங்கல்பங்களை பக்தி, இச்சாசக்தி, நம்பிக்கை ஆகியவற்றால், தீவிரமாகவும் திரும்பத் திரும்பவும், முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், நிரப்புங்கள்; முடிவுகள் உங்களுடைய உழைப்பின் பலனாக இயல்பாகவே வரும்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸயோகானந்தர், ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ்

Yogananda speaking.

பரமஹம்ஸ யோகானந்தர் ஒருமுகப்பட்ட சிந்தனையின் சக்தியைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவதற்கான மறைந்திருக்கும் விதிமுறைகளை வெளிப்படுத்துகிறார்—உடல்சார்ந்த குணமாக்குதலுக்கு மட்டுமன்றி, நம் வாழ்வில் எல்லாத் தடைகளையும் தகர்த்து பன்முக வெற்றியை உருவாக்கவும்கூட . உடலைக் குணப்படுத்துதல், நம்பிக்கையை வளர்த்தல், விவேகத்தை விழித்தெழச் செய்தல், கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றுக்காகவும் அதைவிட அதிகமான விஷயங்களுக்காகவும் ஆன முழுமையான அறிவுறுத்தல்களும் பல்வேறு வகையான சங்கல்பங்களும் அதில் அடக்கம்.

சங்கல்பம் பற்றிய அறிவுறுத்தல்கள்

ஒரு சங்கல்பத்தைத் தேர்ந்தெடுங்கள்

காலையில் எழுந்த உடனோ அல்லது இரவில் உறங்கச் செல்வதற்குச் சற்றே முன்போ சங்கல்பங்களைப் பயிற்சி செய்வது மிகவும் பயன்விளைவிப்பதாகும். ஒரு சங்கல்பத்தை ஆரம்பிக்குமுன், சரியான தியான அமர்வுநிலையில், ஒரு நாற்காலியின் மீதோ அல்லது திடமான மேற்பரப்பின் மீதோ அமர்வது மிகவும் முக்கியமானது. முதுகுத்தண்டு நிமிர்த்தி வைக்கப்பட்டும் கண்கள் மூடிய நிலையிலும் இருக்க வேண்டும்; கழுத்துக்குப் பின்புறம் முகுளத்தின் மீது கவனம் ஒருமுகப்பட வேண்டும். மனத்தை அமைதியற்ற எண்ணங்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் விடுவியுங்கள்.

பின்வரும் சங்கல்பங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் மற்றும் முதலில் உரத்து, பின் மென்மையாக மற்றும் இன்னும் மெதுவாக, உங்கள் குரல் முணுமுணுப்பாக ஆகும் வரை சங்கல்பம் முழுவதையும் திரும்பத் திரும்பக் கூறுங்கள். அதன்பின் படிப்படியாக அதை மனத்தில் மட்டுமே, நீங்கள் ஓர் ஆழ்ந்த, தடையிலா ஒருமுகப்பாட்டை அடைந்திருப்பதாக உணரும் வரை வலியுறுத்திக் கூறுங்கள். நீங்கள் அதிகரிக்கும் அமைதியை அனுபவிக்கும் போது, உங்களுடைய ஒருமுகப்பாட்டை ஆழப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதனால் நீங்கள் உயர்-உணர்வுத் தளத்தில் நுழைந்து உங்களுடைய சங்கல்பங்களை வெளிப்படுத்தலாம்.

“நான் சாசுவதப் பேரொளியில் மூழ்கியுள்ளேன். அது என் இருப்பின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவுகிறது. நான் அந்த ஒளியில் வாழ்கிறேன். தெய்வீகப் பரம்பொருள் என்னை உள்ளும் புறமும் நிரப்புகிறது.”

“இறைவன் என்னுள்ளும் என்னைச் சுற்றிலும், என்னைப் பாதுகாத்தவாறு இருக்கிறான்; ஆகவே நான் அவனுடைய வழிகாட்டும் ஒளியை அடைத்துவிடும் அச்சத்தை நீக்குவேன்.”

“பரிபூரணத் தந்தையே, உன் ஒளி, கிறிஸ்துவின் ஊடாக, எல்லா மதங்களையும் சார்ந்த மகான்களின் ஊடாக, இந்தியக் குருமார்களின் ஊடாக, மற்றும் என் ஊடாகப் பாய்கிறது. இந்தத் தெய்வீக ஒளி என் எல்லா உடலுறுப்புகளிலும் உள்ளது, நான் நலமாக உள்ளேன்.”

“இறைவனின் சக்தி வரம்பற்றது என்று நான் அறிவேன்; நான் அவனுடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளதால், நானும் எல்லாத் தடைகளையும் வெல்வதற்கான வலிமை பெற்றவன்.”

“இறைவனின் பரிபூரண அன்பு, அமைதி, ஞானம் ஆகியவை என் வாயிலாக வெளிப்பட ஏதுவாக, என்னைத் தளர்த்தி, எல்லா மனச்சுமைகளையும் தூக்கி எறிகிறேன்.”

“நான் பிறப்பில், துன்பத்தில், ஆனந்தத்தில், செயலில், தியானத்தில், அறியாமையில், சோதனைகளில், மரணத்தில், மற்றும் இறுதி முக்தியில் உன் எல்லாவற்றையும்-பாதுகாக்கும் சர்வவியாபகத்தின் ஒளிவட்டத்தால் எப்போதும் சூழப்பட்டிருக்கிறேன் என்பதை உணர எனக்குக் கற்றுக் கொடுப்பாய்.”

“உன் நன்மையெனும் ஒளியும் உன் பாதுகாக்கும் சக்தியும் என்றும் என்னூடாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. நான் அவற்றைப் பார்க்கவில்லை, ஏனெனில் என் விவேகம் எனும் கண்கள் மூடியிருந்தன. இப்போது உன் அமைதி எனும் ஸ்பரிசம் என் கண்களைத் திறந்துவிட்டன; உன் நன்மையும் தவறாத பாதுகாப்பும் என்னூடாகப் பாய்கின்றன.”

“என் தெய்வத் தந்தையே, நீதான் பேரன்பு, நான் உன் பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளேன். நானே பேரன்பின் பேரண்ட உலகம், அதில் நான் எல்லாக் கோள்களையும், எல்லா நட்சத்திரங்களையும், எல்லா உயிரினங்களையும், எல்லாப் படைப்புகளையும் மினுமினுக்கும் ஒளிகளாகப் பார்க்கிறேன். பிரபஞ்சம் முழுவதற்கும் ஒளியூட்டும் பேரன்பு நானே.”

“அழுபவர்களைச் சிரிக்க வைப்பது கடினம் என்றபோதிலும் கூட, நானே சிரிப்பதன் மூலம், அவர்களைச் சிரிக்க வைக்க நான் உதவி செய்வேன்.”

“நான் அன்பையும் நல்லெண்ணத்தையும் மற்றவர்களுக்குப் பரவச் செய்வேன், அதனால் இறைவனின் அன்பு எல்லோரிடம் வருவதற்கான ஒரு வழியைத் திறப்பேன்.”

இங்கே இடம்பெற்றுள்ள பகுதிகள் பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களான ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ், மெடஃபிஸிகல் மெடிடேஷன்ஸ் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

இதைப் பகிர