பிந்தைய பதிப்புகளுக்கான யோகானந்தரின் விருப்பங்கள்

யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷனின் பதிப்புகள் தான் ஒரு யோகியின் சுய சரிதத்தின் இறுதி எழுத்து வடிவத்திற்கான ஆசிரியரின் அனைத்து விருப்பங்களையும் கொண்டுள்ளன; வேறு எந்த நிறுவனங்களின் பதிப்புகளும் அல்ல; இவற்றை 1924லிருந்து 1952-ல் அவர் மறையும் வரை அவரிடம் இணைந்து பணியாற்றிய பதிப்பாசிரியரிடம் அவர் நேரில் தெரிவித்தார். அவர் தனது நூல்களின் வெளியீடு குறித்த அனைத்து விஷயங்களையும் இந்த பதிப்பாசிரியரிடம் ஒப்படைத்திருந்தார்.

ஒரு யோகியின் சுயசரிதத்தின் வாசகர்கள் சில சமயங்களில் 1946ல் வெளியிடப்பட்ட முதற்பதிப்பிற்கும் தற்போதைய பதிப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைப் பற்றி விசாரிப்பதுண்டு.

பரமஹம்ஸருடைய வாழ்நாளின் போது ஒரு யோகியின் சுய சரிதத்தின் மூன்று பதிப்புகள் வெளியாயின. 1951-ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட மூன்றாம் பதிப்பில் அவர், புத்தகத்தின் உரையை முழுமையாக திருத்தியமைத்தல், சில விஷயங்களை நீக்குதல், பல்வேறு விஷயங்களை நன்கு விசாரித்தல், அத்துடன் “1940 – 1951 ஆண்டுகள்” எனும் ஒரு புதிய இறுதி அத்தியாயத்தையும் (புத்தகத்திலுள்ள மிக நீளமான அத்தியாயங்களில் ஒன்று) சேர்த்தல் போன்ற பல மாற்றங்களைச் செய்தார். மூன்றாம் பதிப்பிற்குப் பிறகு அவரால் செய்யப்பட்ட திருத்தங்கள் 1956-ல் வெளியிடப்பட்ட ஏழாவது பதிப்பு வரை சேர்க்கப்பட முடியவில்லை.

ஒரு யோகியின் சுயசரிதத்தின் ஏழாவது பதிப்பில் புத்தகத்திற்கான நூலாசிரியரின் விருப்பங்கள் பற்றிய வரலாற்றை அறிவித்து, கீழ்க்கண்ட பதிப்பாசிரியரின் குறிப்பு வெளியானது:

“இந்த 1956-ம் ஆண்டு அமெரிக்கப் பதிப்பு, யோகானந்தர் லண்டன், இங்கிலாந்து, பதிப்பிற்காக செய்த திருத்தங்கள், அத்துடன் 1952ல் நூலாசிரியர் செய்த கூடுதல் திருத்தங்களையும் உள்ளடக்கியுள்ளது. 1949, அக்டோபர் 25-ம் தேதியிட்ட லண்டன் பதிப்பிற்கான ஒரு குறிப்பில் பரமஹம்ஸ யோகானந்தர் எழுதினார்: “இந்த லண்டன் பதிப்பிற்கான ஏற்பாடு உரையைத் திருத்தவும், லேசாக விரிவாக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்திருக்கின்றது. இறுதி அத்தியாயத்தில் புதிய விஷயம் தவிர, நான் பல அடி குறிப்புகளைச் சேர்த்துள்ளேன். அவற்றில், அமெரிக்கப் பதிப்பின் வாசகர்கள் எனக்கு அனுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறேன்.”

“1951-ல் நூலாசிரியரால் செய்யப்பட்ட பிந்தைய திருத்தங்கள் நான்காவது (1952) அமெரிக்கப் பதிப்பில் இடம் பெற திட்டமிடப்பட்டவை. அச்சமயத்தில், ஒரு யோகியின் சுயசரிதத்தின் அனைத்து உரிமைகளும் ஒரு நியூயார்க் வெளியீட்டு நிறுவனத்தின் கைவசம் இருந்தது. 1946-ல் நியூயார்க்கில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் மின்தட்டச்சுத் தகட்டில் செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாக ஒரு காற்புள்ளியை சேர்க்கக் கூட அந்த முழு பக்க உலோகத்தகட்டையும் வெட்டிப் பிரித்து காற்புள்ளி அடங்கிய புதிய வரியை பற்ற வைத்து இணைக்க வேண்டும். பல தகடுகளை மீண்டும் பற்றவைத்து இணைப்பதில் ஏற்படும் செலவீனத்தை முன்னிட்டு, நியூயார்க் வெளியீட்டாளர் ஆசிரியரின் 1951-ன் திருத்தங்களை நான்காம் பதிப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை.”

“1953-ம் ஆண்டு பிற்பகுதியில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் (SRF) ஒரு யோகியின் சுயசரிதத்தின் அனைத்து உரிமைகளையும் நியூயார்க் வெளியீட்டாளரிடமிருந்து வாங்கியது. எஸ். ஆர். எஃப், 1954 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் (ஐந்தாவது மற்றும் ஆறாவவது பதிப்புகள்) புத்தகத்தை மறுபதிப்புகளாக அச்சிட்டது. ஆனால் அந்த இரு வருடங்களில் மற்ற கடமைகள் எஸ்.ஆர்.எஃப். -ன் பதிப்பகத் துறையை, ஆசிரியரின் திருத்தங்களை மின் தட்டச்சுத் தகடுகளில் மிகக் கடினமானப் பணியை மேற்கொள்வதிலிருந்து தடுத்தன. ஆயினும் அந்த வேலை ஏழாம் பதிப்பிற்கு உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட்டது.”

1946 லிருந்து 1956 வரை அனைத்து மாற்றங்கள், நீக்கங்கள் மற்றும் சேர்ப்புகள் யாவும் பரமஹம்ஸ யோகானந்தரது வேண்டுகோளின் படிதான் சேர்க்கப்பட்டன. மற்ற பதிப்பாசிரியருக்குரிய திருத்தங்கள் — இவையாவும் மிகச்சிறிய திருத்தங்களே— பின்னாளில் செய்யப்பட்டன. இத் திருத்தங்கள் அனைத்தும் பரமஹம்ஸர் தன் மறைவிற்கு முன், தன் நீண்ட நாளைய பதிப்பாசிரியர் தாரா மாதாவிடம் அளித்த வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டன. தாரா மாதா பரமஹம்ஸருடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பணியாற்றியவர் மற்றும் இவரையே பரமஹம்ஸர் தன் மறைவிற்கு பின் தன் அறிவுரைகளின் படி தனது நூல்களின் வெளியீட்டிற்கு முழுமையாக நம்பியிருந்தார்.

இந்தப்புத்தகம், வருடங்கள் செல்லச் செல்ல மேன்மேலும் தொடர்ந்து அதிக வாசகர்களைச் சென்றடையும் என்பதை பரமஹம்ஸர் தீர்க்க தரிசனமாகத் தெளிவாக அறிந்திருந்ததால் அவர் தன் பதிப்பாசிரியர்களை, இப்புத்தகத்தை அண்மைக்காலத் தகவலையும் தரும் வண்ணமாக, தற்செயலான அடிக்குறிப்புகள், புகைப்படங்கள், தலைப்புகள் போன்ற எவையெல்லாம் தேவையோ, அவற்றைச் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.

எந்த வெளியீட்டாளரும் பல தசாப்தங்களாகப் பதிப்பில் தொடர்ந்திருந்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில் வழக்கமாகச் செய்யும் பதிப்பாசிரியருக்குரிய சீரமைவுகளை 1956லிருந்து செய்யப்பட்ட மாற்றங்கள் கொண்டுள்ளன. (அதாவது, நூலாசிரியரின் இதர புத்தகங்களின் பட்டியலை அண்மைப் படுத்துவது (updating), இன்றைய வாசகர்களுக்கு பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு அடிக்குறிப்புகளின் சேர்ப்பது — பதிப்பாசிரியரால் சேர்க்கப்பட்டவை, ஆசிரியரால் அல்ல என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு ஆசிரியர் மற்றும் அவரது பணிகள் தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், முன் மற்றும் பின் பக்க விஷயங்களில் தேவையான மாற்றங்கள் போன்றவை)

ஒரு யோகியின் சுய சரிதத்தின் ஆரம்பகாலப் பதிப்புகள் ஆசிரியரின் பட்டத்தை “பரமஹம்ஸ” என்று எழுதாமல் “அ”-வின் ஓசையின்றியோ அல்லது கிட்டத்தட்ட ஓசையின்றியோ “பரம்ஹம்ஸ” என்று எழுத்தாக்கத்தில் (spelling) வங்காளப் பழக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இந்த வேத அடிப்படையிலான பட்டத்தின் புனித முக்கியத்துவம் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய வழக்கமான சமஸ்கிருத மொழி ஒலிபெயர்ப்பு முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது: பரம என்பதிலிருந்து “மிக உயர்ந்த அல்லது தலையாய,” “ஹன்ஸ” என்பதிலிருந்து, “அன்னம்” ஆகிய இரண்டும் சேர்த்து “பரமஹம்ஸ” — அதாவது தன் உண்மையான தெய்வீக ஆன்மாவின் மற்றும் அந்த ஆன்மா பரம்பொருளுடன் ஒன்றாகும் ஐக்கியத்தின் மிக உயர்ந்த அனுபூதியை ஒருவர் அடைந்திருப்பதைக் குறிக்கிறது.

1946-ல் வெளியான முதல் பதிப்புடன் ஒப்பிடும்போது, ஒய்.எஸ்.எஸ்./ எஸ்.ஆர்.எஃப்.-பின் இன்றைய பதிப்புகள், நிறுவனத்தின் ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்ட பரமஹம்ஸரின் புகைப்படங்கள் மற்றும் இப்புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ள மற்ற விஷயங்கள் அடங்கிய இருபது கூடுதல் பக்கங்களை உள்ளடக்கியுள்ளன; இவை நூலாசிரியரின் மற்றும் அவரது பணிகளின் முழுமையான கண்ணோட்டத்தை ஆர்வமுள்ள வாசகர்களுக்கு அளிப்பதற்காக இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் பகிர