தியானம் செய்வது எப்படி

ஸ்வாமிஜி தியான அமர்வு நிலையில்

தியானத்திற்காக ஓர் இடத்தைத் தயார் செய்வது

நீங்கள் தனிமையிலும் இடையூறு இல்லாமலும் தியானம் செய்வதற்கேற்ற ஓர் அரவமற்ற, அமைதியான இடத்தைக் கண்டுபிடியுங்கள். உங்களுடைய தியானப் பயிற்சிக்காக மட்டுமேயான உங்களுடைய சொந்த வழிபாட்டு இடத்தை உருவாக்குங்கள்.

ஒரு நேர் நிமிர்வான நாற்காலியின் மீதோ அல்லது சப்பணமிட்ட கால்களுடன் ஒரு திடமான மேற்பரப்பின் மீதோ அமருங்கள்—அதை ஒரு கம்பளிப் போர்வையாலோ அல்லது ஒரு பட்டுத்துணியாலோ அல்லது இரண்டினாலுமோ விரித்து போர்த்துங்கள். இது உங்கள் இருக்கையை நுட்பமான பூமி ஓட்டங்களின் கீழ்நோக்கிய இழுவையிலிருந்து பாதுகாக்கும்.

சரியான அமர்வுநிலை

பயன்மிகு தியானத்திற்காக அமர்வுநிலை மீதான அறிவுறுத்தல்கள்

நிமிர்ந்த முதுகுத்தண்டு

தியானத்திற்கான முதல் இன்றியமையாத தேவைகளில் ஒன்று சரியான அமர்வுநிலை. முதுகுத்தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும். பக்தர் தன் மனத்தையும் உயிராற்றலையும் மூளை-முதுகுத்தண்டு அச்சின் ஊடாக மூளையில் உள்ள உயர்-உணர்வுநிலை மையங்களுக்குச் செலுத்த முற்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவர் முறையற்ற அமர்வுநிலையால் விளையும் முதுகுத்தண்டுவட நரம்புகளின் ஒடுக்கத்தை அல்லது நெரிப்பைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு நேர் நிமிர்வான கைப்பிடி இல்லாத நாற்காலியில் அமருங்கள்

எளிதில் வளையக்கூடிய கால்களை உடையோர் தரையின் மீதுள்ள ஒரு தலையணையின்  மீதோ, அல்லது ஒரு திடமான படுக்கையின் மீதோ சப்பணமிட்டு அமர்வதை விரும்பலாம்.

ஆயினும், பரமஹம்ஸ யோகானந்தர் பின்வரும் தியான அமர்வுநிலையைப் பரிந்துரை செய்கிறார்: ஒரு நேரான கைப்பிடி இல்லாத நாற்காலியில் பாதங்கள் தரையின் மீது தட்டையாகப் படும்படி அமருங்கள். முதுகுத்தண்டை நிமிர்த்தியும், வயிற்றை உள்ளிழுத்தும், மார்பை வெளித்தள்ளியும், தோள்களைப் பின்தள்ளிய, முகவாய்க்கட்டையை தரைக்கு இணையாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் முன்பக்கம் சாய்வதைத் தவிர்க்க, உள்ளங்கைகள் மேல்நோக்கியவாறும் கைகளைக் கால்கள் மீது தொடைகளும் வயிற்றுப் பகுதியும் சேரும் இடத்தில் வைக்க வேண்டும்.

சரியான அமர்வுநிலையை மேற்கொண்டுவிட்டால், உடல் நிலையாக ஆனால் தளர்வாக இருக்கும்; அதனால் ஒரு தசையைக் கூட அசைக்காமல் முழுமையாக அசைவற்ற நிலையில் இருப்பது எளிதில் சாத்தியமாகிறது.

இப்போது, கண்களை மூடி உங்கள் பார்வையை —ஒருமுகப்பாட்டின் இருப்பிடமும் மற்றும் தெய்வீக உணர்வு கொண்ட ஆன்மீகக்கண்ணின் இருப்பிடமுமான புருவமையத்திற்கு—மேல்நோக்கிச் சிரமமின்றி மெதுவாக உயர்த்துங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து

தியானத்தில் குழந்தை

“ஆரம்பகால யோகி தியானம் செய்ய திட்பமான தரைமீது அமர்ந்தால், அவரது சதை மற்றும், இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக அவரது கால்கள் மரத்துப் போகக் காண்பார். அவர் தரைமீது வைக்கப்பட்ட போர்வையால் மூடப்பட்ட சுருள்வில் திண்டின் (Spring pad) அல்லது மெத்தையின் மீதோ அல்லது ஒரு திடமான படுக்கையின் மீதோ அமர்ந்தால், தன் கால்களில் அசௌகரியத்தை உணர மாட்டார். நாற்காலிகளில் முண்டப்பகுதிக்குச் (Torso) செங்கோணத்தில் இருக்கும் தன் தொடைகளுடன் அமர்ந்து பழக்கப்பட்ட ஒரு மேலைநாட்டவர், தனக்குக் கீழ் ஒரு கம்பளிப் போர்வையும் பட்டுத் துணியும் வைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்வதை அதிகம் விரும்புவார்; போர்வையும் பட்டுத்துணியும் தரையில் வைக்கப்பட்ட கால்களுக்கு அடிப்பாகம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். கீழைநாட்டவரைப் போலத் தரையில் சப்பணமிட்டு அமர முடிகின்ற மேலைநாட்டு யோகிகள், குறிப்பாக இளைஞர்கள், தமது கால்களை ஒரு குறுங்கோணத்தில் மடக்க முடிகின்ற காரணத்தால், தமது முழங்கால்கள் வளையத்தக்கதாக இருக்கக் காண்பர். அத்தகைய யோகிகள் பத்மாசனத்தில், அல்லது அதிக எளிதான சப்பணமிட்ட அமர்வுநிலையில் தியானம் செய்யலாம்.

“பத்மாசனத்துக்குப் பழக்கப்பட்டிருந்தாலன்றி ஒருவரும் அந்த ஆசனத்தில் தியானம் செய்ய முயற்சி செய்யக் கூடாது. ஓர் இறுக்கமான அமர்வுநிலையில் தியானம் செய்வது உடலின் அசௌகரியத்தின் மீது மனத்தை பாய வைக்கிறது. தியானம் சாதாரணமாக ஓர் அமர்ந்த நிலையில் பயிற்சி செய்யப்பட வேண்டும். நிச்சயமாக, மனம் அகமுகப்படும்போது நின்ற நிலையில் (ஒருவர் மேம்பட்ட நிலையில் இருந்தாலன்றி) அவர் கீழே விழக்கூடும். யோகி கீழே படுத்தவாறும் தியானம் செய்யக் கூடாது, ஏனெனில் அவர் உறக்கத்தின் “பயிற்சி பெற்ற” நிலையை மேற்கொள்ளக் கூடும்.

“உடலிலும் மனத்திலும் சாந்தநிலையை உருவாக்கும் முறையான உடல்சார்ந்த அமர்வுநிலை தன் மனத்தைப் பருப்பொருளிலிருந்து பரம்பொருளுக்கு இடம்பெயரச் செய்யும் யோகிக்கு உதவி செய்ய இன்றியமையாததாகும்..”

—பரமஹம்ஸ யோகானந்தர், காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா

இதைப் பகிர