மற்றவர்களுக்காக எப்படி பிரார்த்தனை செய்வது

Daya Mata speaks on How to pray for others “சிந்தனை ஒரு சக்தியாகும்; அது மகத்தான சக்தியைக் கொண்டுள்ளது. அதனால்தான் பரமஹம்ஸ யோகானந்தர் தொடங்கிய உலகளாவிய பிரார்த்தனைக் குழுவினை நான் மிகவும் ஆழமாக நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அதில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். உலகளாவிய பிரார்த்தனைக் குழுவால் பயன்படுத்தப்படும் குணமளிக்கும் உத்தியில் உள்ளது போல, மக்கள் அமைதி, அன்பு, நல்லெண்ணம், மன்னிப்பு போன்ற ஒருமுகப்படுத்தப்பட்ட நேர்மறை எண்ணங்களை அனுப்பும்போது, இது ஒரு மகத்தான சக்தியை உருவாக்குகிறது. மக்கள் இதைச் செய்தால், அது உலகை மாற்றும் அளவுக்கு சக்திவாய்ந்த நற்குணத்தின் அதிர்வலையை உருவாக்கும்.”

— ஸ்ரீ தயா மாதா

நம்முடைய பிரார்த்தனைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? அவை நம்முடையதை உயர்த்துவதைப் போலவேதான்: நம் உணர்வுநிலையில் ஆரோக்கியம், வெற்றி, தெய்வீக உதவியை ஏற்கும்திறன் ஆகிய நேர்மறையான வடிவங்களை பதியவைப்பதன் மூலம். பரமஹம்ஸ யோகானந்தர் எழுதினார்:

“தொல்லைகள் அல்லது அமைதியின்மை எனும் ‘இரைச்சலில்’ இருந்து விடுபட்ட மனித மனம், சிக்கலான வானொலி இயந்திரநுட்பங்களின் அனைத்து செயல்களையும் ஆற்ற அதிகாரம் பெற்றுள்ளது — எண்ணங்களை அனுப்புவது, பெறுவது மற்றும் விரும்பத்தகாதவற்றை விலக்கும்படி சரிசெய்வது. ஒரு வானொலி ஒலிபரப்பு நிலையத்தின் ஆற்றல், அது பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவால் கட்டுப்படுத்தப்படுவது போல், ஒரு மனித வானொலியின் செயல்திறன் ஒவ்வொரு மனிதரும் பெற்றிருக்கும் இச்சா சக்தியின் அளவைப் பொறுத்தது.”

இறைவனின் சித்தத்துடன் தமது சித்தத்தை முழுமையாக இசைவித்திருக்கும் ஞானஒளிபெற்ற மகான்களின் மனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை உடனடியாகக் குணப்படுத்துவதற்கான தெய்வீக சக்தியை அனுப்ப முடியும். பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்கள் மற்றும் சொற்பொழிவுகள் இத்தகைய குணப்படுத்தல்களைப் பற்றிய உதாரணங்களுடன் நிறைந்துள்ளன. அவை அதிசயங்களைப் போலத் தோன்றினாலும் தெய்வீகக் குணப்படுத்துதல்கள், படைப்பின் பிரபஞ்ச விதிகளை அறிவியல்பூர்வமாக நிறைவேற்றுவதன் இயற்கையான விளைவாகும் என்று அவர் விளக்கினார். இறைவனின் பரிபூரண எண்ண வடிவமைப்புகளை, போதுமான இச்சா சக்தி மற்றும் ஆற்றலுடன் மற்றவர்களின் மனத்திலும் உடலிலும் அவை வெளிப்படுமாறு அனுப்புவதன் மூலம், இறையொளி பெற்ற இம்மகான்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவாக்கப்பட்ட அதே செயல்முறையைப் பின்பற்றுகின்றனர்.

இந்தக் கொள்கைகளின்படி பிரார்த்தனை செய்யும் எந்த மனிதரும் அவருடைய பிரார்த்தனைகளும்கூட கண்கூடான தாக்கத்தைக் கொண்டிருப்பதைக் காண்பார். நமது தனிப்பட்ட சக்தியானது, ஒரு மகான் வெளிப்படுத்தக் கூடியதைவிட ஐயத்திற்கிடமின்றி குறைவாகவே இருந்தாலும், ஆயிரக்கணக்கானவர்களின் பிரார்த்தனைகள் ஒன்றுசேரும் போது உருவாகின்ற அமைதி மற்றும் தெய்வீக குணப்படுத்துதலின் சக்திவாய்ந்த அதிர்வலைகள், விரும்பிய முடிவுகளை வெளிப்படுத்த உதவுவதில் நிகரற்ற மதிப்புடையவை. இந்த நோக்கத்திற்காக, பரமஹம்ஸ யோகானந்தர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் பிரார்த்தனை சபை மற்றும் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவைத் தோற்றுவித்தார்.

மற்றவர்களுக்காக திறம்பட பிரார்த்தனை செய்ய பரமஹம்ஸரின் உத்திகளில் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

Paramahansa Yogananda with a man on a wheelchair. “முதலில், உங்கள் புருவங்களைச் சிறிது ஒன்றுசேர்த்து சுருக்கி, பிறகு கண்களை மூடவும். நீங்கள் குணப்படுத்தும் சக்தியை அனுப்ப விரும்பும் மனிதரைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள்.

“உங்கள் புருவங்களுக்கு நடுவில் ஒருமுகப்பட்டு, மானசீகமாகக் கூறுங்கள்:‘தெய்வத் தந்தையே, உனது சித்தத்துடன் நான் தீர்மானிப்பேன். உனது சித்தமே என் சித்தம். தந்தையே, உனது எங்கும் நிறைந்த சித்தத்தோடு, நான் முழு மனத்துடன், முழு ஆன்மாவுடன், இந்த மனிதர் குணமடைய தீர்மானிக்கிறேன்.’

இதைச் சொல்லும்போது, ஒரு மின்னோட்டம் உங்கள் புருவ மத்தியின் வாயிலாக நீங்கள் உதவ முயற்சி செய்யும் மனிதரின் புருவ மத்திக்குச் செல்கிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் குணமாக்க விரும்பும் மனிதரின் ஆன்மீகக் கண்ணுக்கு உங்கள் ஆன்மீகக் கண்ணிலிருந்து ஒரு மின்னோட்டத்தை அனுப்புகிறீர்கள் என்று உணருங்கள்.

ஆழ்ந்து ஒருமுகப்படுங்கள், அப்பொழுது நீங்கள் புருவ மத்தியில் வெப்பத்தை உணருவீர்கள். இந்த வெப்பத்தை உணருவது உங்கள் இச்சா சக்தி பெருகுகிறது என்பதற்கு சான்று.

“இன்னும் ஆழ்ந்து ஒருமுகப்படுங்கள். மானசீகமாகக் கூறுங்கள்: ‘உனது சித்தத்துடன் நான் பிரபஞ்ச சக்தியின் பாய்ச்சலை அனுப்புகிறேன். தந்தையே, அது உள்ளது.

“இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் இதைச் செய்யும்போது, உங்கள் இச்சா சக்தி பெருகுகிறது; இந்தப் பெருகிய இச்சா சக்தி, என்ன நடந்தாலும் சரி, தேவைப்படும் போது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதற்கு தொடர்ந்து உங்களுடனேயே இருக்கும்.”

எனது பிரார்த்தனைகள் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்?

ஸ்ரீ தயா மாதா

நேரம்: 4:26 நிமிடங்கள்

Daya Mata: Third president of YSS/SRF.சில நேரங்களில் மக்கள் வினவுகின்றனர், “மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மிகச் சிறந்த வழி எது?” ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா கூறினார்:
“மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வது சரியானதும் நல்லதுமாகும்… எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இறைவனிடம் ஏற்கும்திறனுடன் இருக்குமாறு கூற வேண்டும், அதனால் தெய்வீக வைத்தியநாதனிடமிருந்து நேரடியாக உடல், மன அல்லது ஆன்மீக உதவியைப் பெற முடியும். இதுதான் அனைத்துப் பிரார்த்தனைக்கும் அடிப்படை. இறைவனின் அருளாசி எப்போதும் உள்ளது; ஏற்கும்திறன் பெரும்பாலும் இல்லை. பிரார்த்தனை, ஏற்கும்திறனை அதிகரிக்கிறது….

“நீங்கள் மற்றவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ குணப்படுத்துவதை சங்கல்பிக்கும் போது, இறைவனின் குணப்படுத்தும் சக்தியின் பேராற்றலை உங்களை அல்லது நீங்கள் யாருக்காகப் பிரார்த்தனை செய்கிறீர்களோ அவரைச் சூழ்ந்துள்ள வெண்ணிற ஒளியாக மனக்காட்சியில் காணுங்கள். அது அனைத்து நோயையும், குறைபாட்டையும் கரைத்துவிடுவதாக உணருங்கள். நாம் எண்ணும் ஒவ்வோர் எழுச்சியூட்டும் எண்ணமும், நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும், நாம் ஆற்றும் ஒவ்வொரு நல்ல செயலும் இறைவனின் சக்தியால் நிறைந்துள்ளது. நமது விசுவாசம் வலுவாகவும், இறைவன் மீதான நமது அன்பு ஆழமாகவும் ஆகும் போது, நாம் இந்த சக்தியை மேன்மேலும் சிறந்த வழிகளில் வெளிப்படுத்த முடியும்.”

பிரார்த்தனையின் மூலம் உலக அமைதியையும் குணப்படுத்தலையும் கொணர நீங்கள் எவ்வாறு உதவ முடியும்

இதைப் பகிர