ஸ்வாமி சிதானந்த கிரி வழங்கிய “பரமஹம்ஸ யோகானந்தர் உலகிற்குக் கொண்டு வந்த 6 ஆன்மீகப் புரட்சிகரக் கருத்துக்கள்”

கிரியா யோக போதனைகளை உலகெங்கும் பரப்புவதற்காக பரமஹம்ஸ யோகானந்தர் மேற்கத்திய நாடுகளுக்கு வருகை புரிந்ததன் நூற்றாண்டு நிறைவின் போது, 2020 SRF உலகப் பேரவையில் YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் இன் தொடக்க உரையின் சில பகுதிகள் பின்வருமாறு. யோகதா சத்சங்க இதழின் சந்தாதாரர்கள், கடந்த கால கட்டுரைகள் மற்றும் ஆடியோக்கள் கொண்ட விரிவான ஆன்லைன் நூலகத்தில், “பரமஹம்ஸ யோகானந்தாஸ் எபோக் மேகிங் மிஷன் அண்ட் ஹிஸ் விஷன் ஃபார் த ஃபியூசர் ஆஃப் ஹியூமனிடி” என்ற தலைப்பில் முழுமையான உரையைப் படிக்கலாம். முழு உரையின் வீடியோவையும் SRF இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புனித இமய மலைகள் யோகிகள் மற்றும் தியானத்தில் ஆழ்பவர்கள், மகான்கள் மற்றும் ரிஷிகள் மற்றும் சில உயர்ந்த தெய்வீக மகாத்மாக்கள் — தெய்வீக அவதாரங்களின், சலனமற்ற மற்றும் தனிமையான உறைவிடமாக இருந்து வருகின்றன.

எனவே இப்போதே, அந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்: சமூகம் மற்றும் அதன் பிரச்சனைகள், கவலைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒதுங்கிய, அழகிய, மேன்மை பொருந்திய மலைக் கோட்டை அரண்கள். அந்த உன்னத ஆன்மாக்கள் — அந்த மகான்கள், தியானம் செய்பவர்கள் மற்றும் யோகிகள் — மிக உயர்ந்த சத்தியங்களை உணர்ந்து, தங்கள் இறைத்தன்மையை எழுப்ப தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். அதேபோல், ஒரு சில அருட்பேறு பெற்ற சீடர்களும், ஏதோ ஒரு வகையில், பூமியில் உள்ள அந்த சொர்க்கத்தை அடைவதற்கான வழியைக் கண்டறிவதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர்.

இப்போது நவீன சமூகத்தின் மாறுபட்ட காட்சியைப் பாருங்கள்: (நாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இது நம் முன்னால் உள்ளது) மன அழுத்தம், அச்சங்கள் மற்றும் அடுத்த டாலரைத் தேடி ஓடுவதற்கான போராட்டங்கள் நிறைந்தவை, முரண்பட்டவை, குழப்பமானவை; சுற்றுச்சூழல் மாசுபாடு, வீடற்ற நிலை மற்றும் வறுமை, போர்கள், இன முரண்பாடுகள் மற்றும் மத மோதல்கள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. பட்டியல், துரதிர்ஷ்டவசமாக, நீண்டு கொண்டே செல்கிறது. இது ஒரு பிளவு, இல்லையா? அந்த நல்லிணக்கத்துடனான அமைதியான மகான்களின் ஆசீர்வதிக்கப்பட்ட வசிப்பிடத்தின் தெய்வீக சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

ஆனால் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதை இப்போது புரிந்துகொள்வோம். அந்த ஞான ஒளி பெற்ற யோகிகளும், மகான்களும், ஆசான்களும் தங்களின் ஆன்மீக அருளாசிகளையும், மனித துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கான உலகளாவிய விதிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய ஆழமான புரிதலையும், ஒதுங்கிய மலை மற்றும் வன தவச்சாலைகளையும் “மனித சந்தைகளுக்கு” எடுத்துச் செல்லத் தொடங்கினர். என பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார்.

இறை-உணர்தல் என்ற மிக உயர்ந்த யோக விஞ்ஞானம், வயதுவரம்பிற்கு அப்பாற்பட்ட தொன்மையான இந்தியாவைத் தாண்டி நவீன லௌகீக உலகிற்கு, அதாவது மிகவும் தேவைப்படும் ஒரு உலகிற்கு விரிவடைந்து பரவத் தொடங்கியது.

ஒரு யோகியின் சுயசரிதம் இல், பரமஹம்ஸர் கூறுகிறார்: “பாபாஜி கிறிஸ்துவுடன் என்றும் தொடர்புள்ளவர்; அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இந்த யுகத்திற்கான முக்தியளிக்கும் ஆன்மீக யுக்தியையும் திட்டமிட்டுள்ளார்கள். பூரண அனுபூதி பெற்ற இவ்விரு குருமார்களின் உடலுடன் ஒருவரும், உடலின்றி ஒருவரும் பணியானது, யுத்தங்கள், இனத் துவேஷம், மத உட்பிரிவுகள், எறிந்தவனையே திரும்பத் தாக்கும் லோகாயதத் தீமைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக உலக நாடுகளை ஊக்குவித்தலாகும். பாபாஜி நவீன காலத்தின் போக்கை, முக்கியமாக மேலை நாகரிகத்தின் செல்வாக்கையும் சிக்கல்களையும் நன்கு அறிந்தவர். மேலும் ஆத்ம விடுதலைக்கான யோகத்தை மேலை மற்றும் கீழை நாடுகளில் சமமாகப் பரப்ப வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.”

“மேற்கிலும் கிழக்கிலும்” மற்றும் உலகெங்கிலும் யோகத்தைப் பரப்பத் தொடங்கும் பணி பரமஹம்ஸ யோகானந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கொண்டு வந்த முக்கிய அம்சங்களை பற்றி நான் கூற விரும்புகிறேன்.

பரமஹம்ஸ யோகானந்தர் நம் அனைவருக்கும் கொணர்ந்தது என்ன

பாரமஹம்ஸர் 1920 ஆம் ஆண்டு பாஸ்டனில் அந்த கப்பலில் வந்து இறங்கியபோது, அவர் என்ன கொண்டு வருகிறார் என்பதையும், அது நவீன நாகரிகத்தின் போக்கை உண்மையில் மாற்றக்கூடிய மாபெரும் பொக்கிஷம் என்பதையும், மகத்தான குருமார்கள் அறிந்திருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், அந்த ஆரம்ப நாட்களில் அவரைச் சந்தித்தவர்களுக்கு, அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர சிறிது நேரம் பிடித்திருக்கலாம். 100 வருடங்களுக்குப் பிறகு பின்னோக்கிப் பார்க்கும் போது, அவருடைய ஆரம்பகால நண்பர்களும் மாணவர்களும் அப்பொழுது அறிந்திராத, கவனக்குவிப்புடன் விரிவாக நுட்பமாக உணர்ந்தறியும் திறன் கொண்டு, விஷயங்களைப் பார்ப்பதன் நன்மை நமக்கு இருக்கிறது. நமது குரு பரமஹம்ஸர் கொண்டு வந்த சில முக்கியப் பங்களிப்புகளை ஆறு குறிப்புகளில் தெளிவுபடுத்துகிறேன்:

1. தார்மீக மற்றும் ஆன்மீக அர்த்தத்தை அதிகமாக இழந்த நவீன நாகரிகத்திற்கு வாழ்க்கையின் தெய்வீக நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு உலகக் கண்ணோட்டம். யோகானந்தர் இந்தியாவின் பண்டைய சனாதன தர்மத்தை (சத்தியத்தின் சாசுவத கோட்பாடுகள்) எடுத்து, நவீன யுகத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரிந்துகொள்ளக்கூடிய, நம்பக்கூடிய மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பொருத்தமான சொற்களில் மீண்டும் கூறினார். அவ்வாறு செய்வதன் மூலம், உளவியல், சமயம், மருத்துவம், கல்வி மற்றும் பலவற்றின் முன்னோடிகளில் வேரூன்றிய கருத்துக்களையும் நடைமுறைகளையும் அவர் கொண்டுவந்ததெல்லாம் அது தான் என்றால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும். ஆனால் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

2. நவீன ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறைவனை அணுகக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், விரும்பத்தக்கதாகவும் ஆக்கும் இறைவனைப் பற்றிய ஒரு கருத்து. மேற்கில் பலர் பழக்கமாகிவிட்ட இறைவன் ஒரு பழிவாங்கும் நீதியரசன் என்ற தவறான கருத்தை பரமஹம்ஸர் முற்றிலும் நிராகரித்தார். மாறாக, இறைவனின் இயல்பு என்றும் புதிய ஆனந்தமாக இருப்பதாகவும், இறைவனின் பிரதிபிம்பமாக உருவாக்கப்பட்ட மனிதர்கள் தெய்வீகத்தை தந்தையாக, தாயாக, நண்பர்களாக, தெய்வீக அன்பானவராகவோ அல்லது எல்லையற்ற பேரின்பம், ஞானம், ஒளி, அமைதி மற்றும் அன்பு போன்ற பரம்பொருள் வெளிப்படுத்தும் குணங்களில் ஒன்றாக இறைவனை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கற்பித்தார்.

இது உலகின் பல பகுதிகளில் வளர்ந்து வேரூன்றிய இறைவன் பற்றிய கருத்தை புரட்சிகரமாக மாற்றியது. ஆகையால், கடந்தகால சமய சார்பின் காரணமாக ‘இறைவன்’ என்ற வார்த்தையில் சிரமம் உள்ளவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களையே ஊக்குவித்துக் கொண்டு, பரமஹம்ஸரின், YSS பாடங்கள்: “ஆன்ம-அனுபூதி மூலம் அதி உன்னத சாதனைகள்.” க்கான அறிமுகத்தைப் படியுங்கள். “இறைவன் என்றால் என்ன?” என்ற தலைப்பில் ஒரு முழுப் பகுதியும் இருக்கிறது. இது உங்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

3. எந்தவொரு தனிமனிதரும் இறைவனை உணரும் நிலையை அடையக்கூடிய ஒரு படிப்படியான வழிமுறைகளின் தொகுப்பு.

4. மனிதகுலம் மற்றும் அனைத்து உண்மையான சமயங்களின் இன்றியமையாத ஒருமைப்பாட்டைப் பற்றிய பார்வை. ஒரு காலத்தில் பரமஹம்ஸ யோகானந்தர் மிக அழகாக இதைச் சொன்னார்: “ஒரு இயேசு கிறிஸ்து அல்லது ஒரு பகவான் கிருஷ்ணர் அல்லது பண்டைய ரிஷிகள் எந்த மனிதரையும் ஒரு கிறிஸ்தவர், ஒரு இந்து, ஒரு யூதர், இன்ன பிறர் என்று அழைப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர்கள் ஒவ்வொரு மனிதனையும் “என் சகோதரன்” என்று அழைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.”

அது எவ்வளவு அருமை? அனைத்து உண்மையான ஆன்மீக பாதைகளின் ஒருமைத் தன்மையை உணர்ந்துகொள்ளும் பார்வையையும், சாத்தியத்தையும் பரமஹம்ஸர் நமக்குக் அருளினார்,-பின்னர் அந்த உணர்வை மனிதகுலம் முழுவதற்கும் பரப்பினார். கிறிஸ்தவம் மற்றும் இந்து மதத்தின் முக்கிய சாத்திரங்கள் குறித்த அவரது அற்புதமான விளக்கவுரைகள் வாயிலாக இந்தப் பாதைகள், அனைத்து மதங்கள், மனிதர்கள், படைப்புகளுக்கும் அடித்தளமாக இருக்கும் ஒரே மெய்ப்பொருளை நேரடியாக உணர வழிவகுக்கும் திட்டவட்ட தியான உத்திகளின் பயிற்சிகள் என்ற ஒரு பொதுவான விஞ்ஞான அடித்தளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதைக் காட்டினார்.

பரமஹம்ஸர் கொண்டு வந்ததன் பரிமாணத்தின் கணநேரத் தோற்றத்தை நீங்கள் உணரத் தொடங்குகிறீர்களா? உண்மையிலேயே சகாப்த உருவாக்கம் — அவர் உலகிற்குக் கொண்டுவருமாறு கேட்கப்பட்ட போதனைகளை விவரிக்க அவர் பயன்படுத்திய வார்த்தை அது.

5. உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமநிலை வளர்ச்சிக்கான “எப்படி-வாழ-வேண்டும்” கோட்பாடுகளின் முழுமையான திட்டம். 70 ஆண்டுகளுக்கு முன்பு பரமஹம்ஸரின் எழுத்துக்கள், விரிவுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட யோகதா சத்சங்கப் பாடங்களைப் படிக்கும்போது, அவர் எவ்வளவு தொலைநோக்கு கொண்டவர் என்பதை நீங்கள் காணலாம்.

மனித நல்வாழ்வின் விஞ்ஞான அடிப்படையாக இப்போது பரிந்துரைக்கப்படும் சமநிலை அல்லது முழுமையான வாழ்க்கை முறையின் பெரும்பாலான அத்தியாவசிய அடிப்படை தத்துவங்களை உலகிற்கு அறிமுகப்படுத்த, அவர் கொண்டு வந்தவை உண்மையில் உதவின.

6. குரு-சிஷ்ய உறவு பற்றிய உண்மையான புரிதல். பண்டைய காலங்களிலிருந்தே, குரு-சிஷ்ய உறவானது, இறைவனை நேர்மையாக நாடுவோர் – சத்தியத்தை நேர்மையாகத் தேடுவோர் – ஆன்ம-அனுபூதிப் பாதையில் முன்னேறுவதற்கான வழிமுறையாக இருந்து வருகிறது. ஆயினும் அந்த உறவின் உண்மையான அர்த்தம் அண்மை நூற்றாண்டுகளில் மறைந்து சீரழிந்து விட்டது. ஆனால் நமது குருதேவர் தன் சொந்த வாழ்வில், முன்னுதாரணமாக எடுத்துக்காட்டியவற்றில், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவர் அளித்த பயிற்சியிலும், நம் அனைவருக்கும் கூட அதை விரிவுபடுத்துவதன் மூலமும் அந்தப் புனித குரு-சிஷ்ய உறவின் உண்மையான அர்த்தம் உலகிற்கு மீண்டும் வழங்கப்படுவதைக் காண்கிறோம்.

எனவே, நம் அனைவரின் நலனுக்காக அவர் கொண்டு வந்தவற்றின் சில முக்கிய அம்சங்கள் இவை. நான் ஏன் இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால் அவை வரலாற்றில் இந்த தருணத்தில் உலகம் கவனம் செலுத்த வேண்டியவைகளாகிய நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளின் அறிகுறிகளை மட்டுமின்றி அதன் மூல காரணங்களையும் சரியாகப் பிரதிபலிக்கின்றன.

உலகிற்கு மகத்தான உதவியை எவ்வாறு வழங்குவது

பரமஹம்ஸர் கூறியது போல், “உங்களை சீர்திருத்திக் கொள்ளுங்கள், உலகை சீர்திருத்துவதில் உங்கள் பங்கை நீங்கள் செய்துள்ளீர்கள்.” ஆம், நமக்கு முன்னால் தடைகள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றை வெற்றிகரமாக முறியடிக்க நாம் அவற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இன்றைய உலகில் ஆன்மிக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இருள் சூழ்ந்துள்ளது என்பது வேதனையான உண்மை. ஸ்தூல இருள் நம்மைச் சுற்றி இருப்பதைப் பார்ப்பதைத் தடுக்கிறது. ஆனால் ஆன்மீகம் அல்லது உளவியல் இருள் நமக்குக் கிடைக்கக்கூடிய உணரப்படாத ஆற்றல்களைப் பார்ப்பதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த ஆன்மீக இருள் நம்மை சோர்வடையச் செய்கிறது. அது தோல்வி உணர்வை அல்லது பாதிக்கப்பட்ட அல்லது பய உணர்வை அல்லது பலவீனமாக உணர்தலை நமக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறது. யோகச் சொல்லாடலில் இருளுக்கு ஒரு பெயர் உண்டு: மாயை, மருட்சி இருளின் பிரபஞ்ச சக்தி உண்மையை சூழ்ந்து மேகமூட்டமாக மறைத்துவிடும், இதனால் உண்மையானதைக் காணவோ அல்லது நம்மைச் சுற்றி சரியாக இருப்பதைக் கூட துல்லியமாகப் பார்க்கவோ முடியாது.

இன்று உலகில் நடக்கும் விஷயங்களால் நாம் சோர்வடைந்து விடக்கூடாது. அதற்கு பதிலாக, நாம் முன்பு மனக்காட்சியாக கண்ட அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அழகிய உறைவிடத்தில் நிலை கொண்டுள்ள அந்த யோகிகளை நினைவு கூறுங்கள். அவர்கள் நம் அனைவருக்கும் அனுப்பியதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது நாமும் உலகமும் அனுபவித்துக் கொண்டிருப்பது சரியாக இயேசுவும் பாபாஜியும் எதிர்பார்த்ததுதான் என்பதையும் அவர்கள் ஏன் பரமஹம்ஸ யோகானந்தரையும் கிரியா யோக போதனைகளையும் உலகுக்கு அனுப்பினார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மாயையின் கீழ்முகமாக இழுக்கும் ஈர்ப்பு, இப்போது மிகவும் மும்முரமாக உள்ளது – அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் யோக விஞ்ஞானம் முழுவதுமே மாயைக்கு எதிராகவும், இருள், மருட்சி, அறியாமை ஆகியவற்றின் மீது நமக்கு வெற்றியைத் தருவதற்காகவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் ஒவ்வொருவரும் உண்மையை நேருக்கு நேர் சந்திக்க முடிய்ம்.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும், ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தை, எந்த இனம், மதம் அல்லது தேசியம் எல்லாவற்றிற்குமான உண்மை இதுதான்: நாம் தெய்வீக மனிதர்கள். நமது குரு கூறியது போல், “நட்சத்திரங்களை ஒளிரச் செய்யும், மற்றும் காற்றுக்கும் புயல்களுக்கும் ஆற்றலைத் தரும் பேரானந்தம் மற்றும் பேரின்பத்திற்கு“ எல்லையற்ற அணுகலைக் கொண்ட தெய்வீக மனிதர்கள் நாம்.

உலகத்தின் இதயத்தில் ஒரு மறைஞானி என்பதன் பொருள் இதுதான் — பரம்பொருளை நேசிப்பவர், இறைவனை நேசிப்பவர், எல்லாவற்றிலும் இறைவனை நேசிப்பவர்.

பரமஹம்ஸ யோகானந்தர் உலகிற்கு கொண்டு வந்த ஆழ்ந்த புரிதல் மற்றும் வாழ்க்கையை மாற்றும் முறைகளை நடைமுறையில் கொண்டுவர நீங்கள் ஆர்வமாக இருந்தால், முதல் படியாக எங்கள் இணையதளத்தில் அவரது யோகதா சத்சங்க பாடங்களைப் பற்றி மேலும் அறியலாம். அதில் நீங்கள் பரமஹம்ஸரின் அறிமுக பாடத்தைப் படித்து இந்தியாவின் உலகளாவிய போதனைகள் மற்றும் விஞ்ஞான முறை யோக உத்திகளை விரிவாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும், வாழ்க்கையின் எல்லா நிலைக்கும் உடனடியாக பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ள இந்த வீட்டுக் கல்வி பாடத்திட்டத்தில் எவ்வாறு சேரலாம் என்பதைக் கண்டறியலாம்.

மேலும் நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான போதனைகளை மேலும் படிக்க ஆர்வமாக இருந்தால், ஆன்மீக உன்னதம் ஒரு யோகியின் சுயசரிதம் மற்றும் மேற்கில் பரமஹம்ஸரின் தொடக்க உரையான, அச்சில் உள்ள பதிப்பு, சமய விஞ்ஞானம் உள்ளிட்ட பலவற்றை YSS புக் ஸ்டோரில் காணலாம்.

இதைப் பகிர