மற்றவர்களுடனான நமது உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்குதல்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துகளில் இருந்து சில பகுதிகள்

இரண்டு அன்னங்கள்

தெய்வீக மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக, மகிழ்ச்சியில் எல்லாம் மிகப்பெரியது வருடத்தில் ஒவ்வொரு நாளும் எவர்களுடன் ஒருவர் வாழ வேண்டுமோ, ஒருவருடைய அந்த நெருங்கிய உறவினர்களுடன் சமாதானமாக இருப்பதாகும். மனித உணர்வுகள் எனும் மிகவும் சிக்கலான இயந்திரத்தை எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் மக்கள் கையாள முயற்சி செய்யும் போது, அதனால் விளையும் முடிவுகள் பெரும்பாலும் அவலமானதாக இருக்கின்றன. நமது மகிழ்ச்சியின் பெரும்பகுதி மனித நடத்தையின் விதிமுறையைப் புரிந்துகொள்ளும் கலையில் இருக்கிறது என்பதை வெகு சிலரே உணர்ந்தறிகின்றனர். அதனால்தான் பெருமளவு மக்கள் தம் நண்பர்களுடன் அடிக்கடி “விமர்சனத்தை எதிர்நோக்கிய நிலையில்” இருக்கின்றனர், மற்றும், அதைவிட மோசமாக, வீட்டில் உள்ள தம் சொந்த மிகச்சிறந்த அன்பிற்குரியவர்களுடன் நிரந்தரப் போராட்டத்தில் இருக்கின்றனர்.

சரியான மனித நடத்தையின் அடிப்படையான விதிமுறை சுய-சீரமைப்பு ஆகும்….நமது நண்பர்களுடனோ அல்லது அன்பிற்குரியவர்களுடனோ எந்த ஒரு பிரச்சனையும் நிகழும் போதெல்லாம், ஒரு விரும்பத்தகாத நிலைமைக்குள் சிக்கியதற்காக நம்மையே நாம் அகத்தே குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டும், அதன்பின் நம்மால் முடிந்த அளவு விரைவாகவும் மரியாதையுடனும் அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்கள் அதற்குக் காரணமாக இருந்தாலும் கூட, சத்தமாக, இரக்கமின்றி, மரியாதையின்றி அவர்கள் மீது குற்றம் சுமத்துவதன் மூலம் பிரச்சனையை அதிகப்படுத்துவது பலனற்ற ஒன்றாகும். எளிதில்-சினமடையும் அன்பிற்குரியவர்களுடைய தவறுகளைக் கடுமையான அல்லது வீராப்பான வார்த்தைகளால் நம்மால் சரிசெய்ய முடிவதை விட ஒரு நல்ல உதாரணத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நூறு மடங்கு சிறந்த முறையில் தவறுகளைச் சரிசெய்ய நம்மால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.

பெரும்பாலான நேரங்களில், மக்கள் தம் சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து பேசுகின்றனர் மற்றும் செயலாற்றுகின்றனர். அவர்கள் மற்ற நபருடைய பக்கத்தை அரிதாகவே பார்க்கின்றனர் அல்லது பார்க்க முயல்வது கூட இல்லை. குறைபாடுள்ள புரிதலுடன் நீங்கள் எவருடனேனும் சண்டையிடத் துவங்கினால், எவர் வாக்குவாதத்தை ஆரம்பித்திருப்பினும், மற்றவர் எந்த அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டுமோ அதே அளவு நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “முட்டாள்கள் விதண்டா வாதம் செய்கின்றனர். விவேகிகள் விவாதம் செய்கின்றனர்.”

அமைதியான உணர்வைப் பெற்றிருப்பது என்றால், மற்றவர்கள் என்ன கூறினாலும் சரி, எப்போதும் புன்னகைத்து அனைவருடனும் ஒத்துப்போவது என்று—நீங்கள் உண்மைக்கு மதிப்பளிக்கிறீர்கள். ஆனால் அதன் காரணமாக ஒருவரையும் சினமூட்ட விரும்பவில்லை என்று— பொருள்படாது. இது ஒரு முனைக்கோடிக்குச் செல்வதாகும். தமது நல்ல இயல்பிற்காகப் பாராட்டைப் பெறும் ஆசையுடன் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் இவ்வழியில் முயற்சி செய்வோர் உணர்வுக் கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறார்கள் என்பது கட்டாயமில்லை….உணர்வுக் கட்டுப்பாட்டைப் பெற்றிருப்போர் அந்த உண்மையை எங்கெல்லாம் அவரால் முடியுமோ, அங்கெல்லாம் பகிருகிறார் மற்றும் எந்த வழியிலும் ஏற்றுக்கொள்ளும் தன்மையற்ற எவரையும் தேவையில்லாமல் எரிச்சலூட்டுவதைத் தவிர்க்கிறார்கள். அவருக்கு எப்போது பேச வேண்டும் மற்றும் எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும், ஆனால் அவர் தன் சொந்த இலட்சியங்களையும் அக அமைதியையும் ஒருபோதும் சமரசம் செய்வதில்லை. அத்தகைய ஒரு மனிதர் இவ்வுலகில் பெரிய நன்மைக்கான ஓர் ஆற்றல் ஆவார்.

நாம் தன்னியல்பாகவே மரியாதைக்குரிய பேச்சு எனும் நேர்த்தியான உடையை அணிவதன் மூலம் நம்மைக் கவர்ச்சிகரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் முதலில் நமது நெருங்கிய உறவினர்களிடம் மரியாதையாகப் பழக வேண்டும். ஒருவரால் அதைச் செய்ய முடியும் போது, அவர் எல்லோருடனும் வழக்கமாகவே அன்பாக இருப்பார். மெய்யான குடும்ப மகிழ்ச்சி, புரிதல் மற்றும் அன்பான வார்த்தைகள் எனும் பீடத்தின் மீது தன் அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. அன்பைக் காட்டும் பொருட்டு எல்லாவற்றுக்கும் ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் மற்றவர்களுடன் ஒன்றுபடுகிறாரோ அல்லது வேறுபடுகிறாரோ, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்த நபரை அமைதியான மௌனம், அக்கறை, மற்றும் மரியாதைக்குரிய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நீங்கள் நேசிக்கப்பட விரும்பினால், உங்கள் அன்பை வேண்டும் மற்றவர்களை நேசிக்க ஆரம்பியுங்கள்….மற்றவர்கள் உங்கள் மீது அனுதாபம் கொள்ள வேண்டுமென நீங்கள் விரும்பினால், உங்களைச் சுற்றி இருப்போரிடம் அனுதாபத்தைக் காட்ட ஆரம்பியுங்கள். நீங்கள் மதிக்கப்பட வேண்டுமென விரும்பினால், நீங்கள் அனைவரிடமும், இளையோர், முதியோர் இருதரப்பினரிடமும், மரியாதையாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்….மற்றவர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறோர்களோ, முதலில் நீங்களே அவ்வாறு இருங்கள்; பின் மற்றவர்கள் உங்களுக்கு அதே முறையில் மறுமொழியளிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

திருமணத்தின் ஆன்மீகக் கோட்பாடுகள்

தண்ணீரில் பிரதிபலிப்புடன் அன்னங்கள்.

தெய்வீக அனுபூதியை நோக்கி ஒருவருக்கொருவர் தம் வாழ்க்கைகளை இணைத்துக் கொள்ளும் இரு நபர்கள் தம் திருமணத்தை சரியான அடிப்படையில் அடித்தளமிடுகின்றனர்: நிபந்தனையற்ற நட்பு.

கணவனுக்கும் மனைவிக்கும், பெற்றோருக்கும் குழந்தைக்கும், நண்பருக்கும், சுயத்திற்கும் எல்லோருக்கும், இடையே தூய, நிபந்தனையற்ற அன்பை வளர்ப்பது என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளவே நாம் பூமியில் வந்திருக்கிறோம்.

உண்மையான திருமணம் ஒரு ஆய்வுக்கூடம், அதில் சுயநலம், மோசமான கோபம் மற்றும் மோசமான நடத்தை எனும் நஞ்சுகள் பொறுமை எனும் சோதனைக் குழாயில் ஊற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட வேண்டும், மற்றும் மேன்மையாக நடப்பதற்கான அன்பு மற்றும் இடைவிடாத முயற்சி எனும் கிரியா ஊக்கச் சக்தியால் மாற்றப்பட்ட வேண்டும்.

உங்களுடைய இயல்பான மனநிலையில் அன்பற்ற பண்புகளை எழுப்பும் ஒரு பழக்கமோ அல்லது குணமோ உங்களுடைய துணைவரிடம் உள்ளது என்றால், நீங்கள் இந்தச் சூழலின் நோக்கத்தை உணர்ந்தறிய வேண்டும்: உங்களுக்குள் மறைந்திருக்கும் அந்த நஞ்சுகளை அகற்றி உங்களுடைய இயல்பை இவ்வாறு தூய்மைப் படுத்துவதற்காக அவற்றை மேற்பரப்புக்குக் கொண்டுவருவது.

ஒரு கணவனோ அல்லது மனைவியோ தன் துணைவருக்காக வேண்டும் மிகப்பெரிய விஷயம் ஆன்மீகம் ஆகும்; ஏனெனில் ஆன்ம மலர்ச்சியானது புரிதல், பொறுமை, சிந்திக்கும் பண்பு, அன்பு ஆகிய தெய்வீகக் குணங்களை வெளிக் கொணர்கிறது. ஆனால் ஆன்மீக வளர்ச்சிக்கான ஆசை மற்றவர் மீது திணிக்கப்படக்கூடாது. உங்கள் அளவில் அன்பாக வாழ்ந்து கொள்ளுங்கள், மற்றும் உங்கள் நற்பண்பு உங்களுடைய அன்பிற்குரியோர் அனைவருக்கும் உத்வேகமூட்டும்.

கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், ஒவ்வொருவரும் அடுத்தவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும் ஆசையுடன், சேவை செய்யும் போது, கிறிஸ்துப் பேருணர்வுநிலை—படைப்பின் ஒவ்வோர் அணுவிலும் ஊடுறுவும் இறைவனின் அன்பான பேரண்டப் பேரறிவுத்திறன்—தன்னை அவர்களுடைய உணர்வுநிலையின் ஊடாக வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது.

இருவர், ஒருவருக்கொருவர் ஒரு நிபந்தனையற்ற ஈர்ப்பை உணரும் போது, மற்றும் ஒருவருக்கொருவர் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் போது, அவர்கள் உண்மையாகவே காதல் வயப்பட்டிருக்கின்றனர்.

அன்பிற்குரியவருக்காக முழுநிறைவை விரும்புவதும் அந்த ஆன்மாவைப் பற்றி எண்ணும் போது தூய ஆனந்தத்தை உணருவதும் தெய்வீக அன்பாகும்; மற்றும் அதுவே உண்மையான நட்பின் அன்பாகும்.

தினசரி காலையில் மற்றும் குறிப்பாக இரவில் சேர்ந்து தியானம் செய்யுங்கள்….கணவன், மனைவி இருவரும், மற்றும் குழந்தைகளும் ஒருசேர இறைவனுக்கு ஆழ்ந்த பக்தியை அர்ப்பணிக்கவும் தம் ஆன்மாக்களை என்றும்-ஆனந்தமய பேரண்டப் பேருணர்வுநிலையில் என்றென்றும் இணைக்கவும் ஒரு சிறிய வழிபாட்டுப் பீடத்தை வைத்துக் கொள்ளுங்கள்….நீங்கள் எவ்வளவு அதிகம் சேர்ந்து தியானம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகம் உங்களுடைய பரஸ்பர அன்பு வளரும்.

சங்கல்பம்

சங்கல்பத் தத்துவமும் அறிவுறுத்தல்களும்

“நான் அன்பையும் நல்லெண்ணத்தையும் மற்றவர்களுக்குப் பரப்பும் போது, நான் இறைவனின் அன்பு என்னிடம் வருவதற்கான செல்வழியைத் திறக்கிறேன். தெய்வீக அன்பே எல்லா நன்மையையும் என்னிடம் இழுக்கும் காந்தம்.”

மேலும் ஆய்வு

இதைப் பகிர