“யோகம் முதலில் இறைவனை நாடவும் – எல்லாவற்றிலும் சமநிலையைக் காணவும் கற்பிக்கிறது” என்கிறார் பரமஹம்ஸ யோகானந்தர்

ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகத்தில் ஜூலை 11, 1940 அன்று வழங்கப்பட்ட “கவனசக்தியை ஒருமுகப்படுத்துதல் மூலம் வெற்றி,” என்ற உரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். YSS வெளியிட்ட பரமஹம்ஸரின் சேகரிக்கப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் மூன்றாவது பாகமானஆன்ம-அனுபூதிக்கான பயணம், என்ற புத்தகத்தில் முழுமையான உரையை காணலாம்.

யோகத்தைப் பற்றிய போதனை உங்களை உலக கடமைகளிலிருந்து தப்பி ஓடிவிடும் படி அறிவுறுத்தவில்லை. அது இறைவன் உங்களை இவ்வுலகத்தில் எங்கு வைத்திருக்கிறானோ அங்கு உங்கள் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுதே அவனது நினைவால் உங்களை முழுவதும் தோய்வித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது.

நீங்கள் இறைவனைக் காணலாம் என்ற எண்ணத்துடன் உலக கடமைகளிலிருந்து விடுதலை பெற்று காடு அல்லது மலைகளில் தனிமை வாழ்வை விரும்பினால், உங்களுக்கு நாள் முழுவதும், நாள்தோறும் தியானத்தில் அமருவதற்கு வேண்டிய மனவலிமை கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.

நிச்சயமாக அந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் அதைவிட உலகத்திலிருந்து கொண்டு, அதைச் சாராமல் இருக்கும் திறன்-உங்கள் மனத்தை இறைவன் மீது இருத்தி, அதே சமயம் உங்கள் உண்மையான கடமைகளை பிறர் நலத்திற்காக ஆற்றுதல்- மிகச்சிறந்ததாகும். “கருமத்தை கைவிடுவதால் மட்டும் ஒருவன் பூரணத்தை அடைவதில்லை…..ஓ அர்ஜுனா, யோகத்தில் ஆழ்ந்து, எல்லாச் செயல்களையும் (அவற்றின் பலன்களிடம்) பற்றைக் கைவிட்டு செய்.” (பகவத் கீதை III:4 மற்றும் II:48).

நீங்கள் பெரிய மற்றும் சிறிய கடமைகளை பற்றி சரியான நோக்கில் சிந்திக்க வேண்டும். மேலும் ஒரு கடமையை மற்றொன்றுடன் முரண்படச் செய்ய வேண்டாம். சமஸ்கிருத சாத்திரங்களில் ஒரு தெய்வீக விதிமுறை, உலகத்திற்கு எக்காலத்திற்குமாக கொடுக்கப்பட்ட மிக அழகிய விதிமுறைகளில் ஒன்று உள்ளது “ஒரு கடமை மற்றொன்றுடன் முரண்படுமானால் அது உண்மையான கடமை அல்ல.”

நீங்கள்‌ தேக ஆரோக்கியத்தைப்‌ பாராமல்‌, பொருளாதார வெற்றியை நாடினால்‌ உங்கள்‌ தேகத்திற்கான கடமையைப்‌ பூர்த்தி செய்யாதவராவீர்‌; சமயத்தின்‌ மேல்‌ அதிகம்‌ பித்துப்பிடித்து அதனால்‌ உங்கள்‌ உலகப்‌ பொறுப்புகளைப்‌ புறக்கணித்தால்‌ நீங்கள்‌ சமநிலை இழந்தவராவீர்‌: நீங்கள்‌ ஒரு கடமையை, உங்கள்‌ உடலுக்கும்‌ குடும்பத்திற்கும்‌ நீங்கள்‌ ஆற்ற வேண்டிய கடமைப்‌ பொறுப்புகளுடன்‌ முரண்பட அனுமதித்துள்ளீர்கள்‌. உங்கள்‌ குடும்பத்தைப்‌ பற்றிய தேவையற்ற அக்கறையிலேயே உங்கள்‌ முழுக்‌ கவனத்தை செலுத்துவதால்‌, இறைவனுக்கு நீங்கள்‌ செய்ய வேண்டிய கடமையை மறந்தீரானால்‌, அது கடமை அல்ல.

பலர்‌ கேட்கிறார்கள்‌, “நமது உலகக்‌ கடமைகளை நிறைவேற்ற உலக வெற்றியை முதலில்‌ அடைந்து, பிறகு இறைவனை நாடலாமா? அல்லது முதலில்‌ இறைவனை அடைந்து, அதன்‌ பின்‌ வெற்றியைத்‌ தேடலாமா?” எவ்வழி ஆயினும்‌ இறைவனே முதலில்‌. ஆழ்ந்த தியானத்தில்‌ இறைவனுடன்‌ தொடர்பு கொள்ளாமல்‌ ஒருபொழுதும்‌ உங்கள்‌ நாளை ஆரம்பிக்கவோ, முடிக்கவோ செய்யாதீர்கள்‌.

இறைவனிடமிருந்து பெற்ற சக்தியில்லாமல்‌ நம்மால்‌ எந்தக்‌ கடமைகளையும்‌ ஆற்ற முடியாது என்பதை நாம்‌ நினைவில்‌ கொள்ள வேண்டும்‌. ஆகையால்‌ நமது முதல்‌ பற்றுறுதி அவனுக்கானது….

இறைவனையும்‌ லெளகீகப்‌ பூர்த்தியையும்‌ சேர்ந்து நாடுதல்‌ என்று விரும்புவது நன்றாகத்‌ தோன்றுகிறது; ஆனால்‌ நீங்கள்‌ தவறாமல்‌ ஆழ்ந்து தியானம்‌ செய்து உங்கள்‌ உணர்வினை முதலில்‌, இறைவனிடம்‌ நிலைநிறுத்தினாலொழிய, உலகம்‌ உங்கள்‌ முழு கவனத்தையும்‌ உரிமை கொண்டாடும்‌. அதனால்‌ இறைவனுக்காக உங்களுக்கு நேரம்‌ இருக்காது.

இறைவன்‌ உங்களோடு இருக்கிறான்‌ என்ற உணர்வு இல்லையென்றால்‌, உங்கள்‌ உலகக்‌ கடமைகள்‌, பொதுவாக சித்திரவதை முறைகளாக மாறுகின்றன. ஆனால்‌ நீங்கள்‌ எப்பொழுதும்‌ இறைவனைப்‌ பெற்றிருந்து இறை உணர்வுடன்‌ உங்கள்‌ கடமைகளைச்‌ செய்தீர்களானால்‌, நீங்கள்‌ பேருவகை அடைந்த மனிதனாக இருக்கக்கூடும்‌, “சித்தத்தை என்பால்‌ வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவருக்கொருவர்‌ விளக்கிக்கொண்டும்‌, யாண்டும்‌ என்னுடைய குணங்களையும்‌ பிரபாவங்களையும்‌ பேசிக்கொண்டும்‌, மனநிறைவடைந்தும்‌ மகிழ்வடைந்தும்‌ இருக்கின்றனர்‌.” (பகவத் கீதை x:9).

நான்‌, என்‌ குருநாதர்‌, ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்‌, எனக்களித்த பயிற்சியினால்‌ அந்தத்‌ தெய்வீக உணர்வுநிலையைப்‌ பெற்றேன்‌. இதை நான்‌ பெற்றிருக்கவில்லையென்றால்‌–மக்களுக்கு உதவுவதற்காகவும்‌ இந்த ஸ்தாபனத்தை நிறுவுவதற்காகவும்‌ முயன்றபொழுது, அந்த சமயத்தில்‌ ஒத்துழைப்புக்குப்‌ பதிலாக அடிக்கப்பட்டதால்‌ நான்‌ என்றோ மனம்‌ உடைந்திருப்பேன்‌….

எல்லா சாத்திரங்களும்‌ போதிக்கின்றன: “முதலில்‌ தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்‌.” (மத்தேயு 6:33, பைபிள்). ஆனால்‌ பாருங்கள்‌, மனிதர்கள்‌ எப்படி அவர்கள்‌ தேவாலயங்களில்‌ படிக்கின்ற, அல்லது கேட்கின்ற ஆன்மீகக்‌ கோட்பாடுகளை தங்களது தினசரி வாழ்விலிருந்து பிரித்துவிடுகிறார்கள்‌. உண்மையின்‌ கோட்பாடுகளை நீங்கள்‌ பயிற்சி செய்து, பயன்படுத்தினால்‌ உடல்‌, மனம்‌ மற்றும்‌ ஆன்மீக விதிமுறைகளின்‌ நடைமுறைத்‌ தன்மையை உணருவீர்கள்‌.

நீங்கள்‌ சாத்திரங்களை மேலோட்டமாகப்‌ படித்தால்‌ அவற்றிலிருந்து எதையும்‌ பெறமாட்டீர்கள்‌. ஆனால்‌ நீங்கள்‌ உண்மையை ஒருமுகப்படுதலுடன்‌ படித்தால்‌, மேலும்‌ நீங்கள்‌ படித்தவற்றை உண்மையிலேயே நம்பினால்‌, அந்த உண்மைகள்‌ உங்களுக்குச்‌ செயல்படும்‌. நீங்கள்‌ நம்ப விரும்பலாம்‌; நீங்கள் நம்புகிறீர்கள் என்று கூட நினைக்கலாம்; ஆனால்‌ நீங்கள்‌ மெய்யாகவே நம்பினீர்களென்றால்‌, அக்கணமே பலன்‌ கிடைக்கும்‌.

நம்பிக்கையில்‌ பல்வேறு நிலைகள்‌ உள்ளன. சில மனிதர்கள்‌ நம்புவதே இல்லை. சிலர்‌ நம்ப விரும்புகிறார்கள்‌. மற்றவர்கள்‌ ஒரு சிறிது நம்புகிறார்கள்‌, சிலர்‌ தங்கள்‌ நம்பிக்கை சோதிக்கப்படும்‌ வரை நம்புகிறார்கள்‌. நமது திட நம்பிக்கைகளில்‌ உறுதியாய்‌ இருக்கிறோம்‌; ஆனால்‌ அவை எதிர்க்கப்படும்‌ பொழுது நாம்‌ குழப்பம்‌ மற்றும்‌ கவலை அடைகிறோம்‌. விசுவாசம்‌ என்பது உள்ளுணர்வினால்‌ எழும்‌ திட நம்பிக்கை, ஆன்மாவிலிருந்து எழும்‌ ஞானம்‌; முரண்பாடுகளாலும்‌ கூட அசைக்க முடியாதது.

இறைவனை முதலில்‌ நாடச்சொல்லும்‌ சாத்திரங்களின்‌ கட்டளையின்‌ பின்னால்‌ உள்ள நடைமுறைக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, உங்கள்‌ பொது அறிவு உங்களுக்கு உகந்தது என்று சொல்லும்‌ பொருட்களை, நீங்கள்‌ இறைவனைக்‌ கண்டபிறகு அவனது சக்தியைப்‌ பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்‌ என்பதே. இந்த விதிமுறையில்‌ திடநம்பிக்கை கொள்ளுங்கள்‌.

இறைவனுடனான ஒருங்கிணைவில்‌, உண்மையான வெற்றிக்கு நீங்கள்‌ வழி காண்பீர்கள்‌. அவ்வெற்றி ஆன்மீக, மன, ஒழுக்க மற்றும்‌ லெளக்க ரீதியான பேறுகளின்‌ சமநிலை.

இதைப் பகிர