நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் சிறப்புச் செய்தி

27 ஏப்ரல், 2015

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா நேபாளத்தின் நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார், மேலும் சமீபத்திய பேரழிவுகரமான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவனின் அன்பான அருளாசிகள் வேண்டி ஆழ்ந்த பிரார்த்தனை செய்து வருகிறார். அவருடைய இதயம் இந்த ஆன்மாக்களுக்காக அனுதாபம் கொள்கிறது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, பேரிடர் பகுதியில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஆன்மீக மற்றும் மனிதாபிமான சங்கங்களுடன் இணைந்து முயற்சிகளுக்கு உதவுகின்றன, மேலும் குருதேவரின் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகள் மற்றும் நம் YSS/SRF உலகளாவிய பிரார்த்தனை குழுவுடன் தங்கள் பிரார்த்தனைகளை ஒன்றிணைக்க மிருணாளினி மாதாஜி அனைவரையும் ஊக்குவிக்கிறார். பின்வரும் கடிதத்தில், ஆறுதலையும் வலிமையையும் தரும் பிரார்த்தனையின் ஆற்றலைப் பற்றியும், குறிப்பாக நேபாள நில நடுக்கங்கள் போன்ற பேரழிவு மற்றும் துயர காலங்களில் துன்பப்படுபவர்களுக்கு இந்த வழியில் சென்றடைவதன் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

பேரழிவு காலங்களில் பிரார்த்தனையின் ஆன்மீக சக்தி குறித்து ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா எழுதிய கடிதம்

அன்புக்குரியவரே,

நமது அன்புக்குரிய குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், நமது யுகம் இருளை நீக்கக்கூடிய பெருக்கெடுக்கும் ஆன்மீக ஒளியின் யுகம் என்று உறுதியளித்துள்ளார். இந்த லௌகீக வாழ்வின் தவிர்க்க முடியாத ஏற்றத் தாழ்வுகளை நாம் அனுபவிக்கும்போதும், கூட்டு கர்ம வினையின் மத்தியில் சிக்கி தவிக்கும் அப்பாவி ஆன்மாக்களின் துன்பத்தைப் பார்க்கும்போதும், நாம் எவ்வளவு எளிதில் பாதிக்கப் படக் கூடியவர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். அப்படிப்பட்ட சமயங்களில், “ஏன்?” என்று இதயம் அலறும்போது, மற்றும் நமது மனித புரிதலுக்கு சரியான விடை காணாத போது, நாம் அதன் வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி மாயையின் அனைத்து மூர்க்க தாக்குதல்களுக்கு மத்தியில் நமது பாதுகாப்பின் புகலிடமாக இருக்கும் இறைவனையே நாட வேண்டும்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனின் எண்ணத்திலிருந்து தோன்றின. நாம் அவருடைய குழந்தைகள், நமது எண்ணங்களையும் செயல்களையும் அவருடைய சர்வ வல்லமை பொருந்திய சித்தத்துடன் இணைப்பதன் மூலம், மானுட பலவீனம் என்ற மாயையிலிருந்து நாம் விடுபட்டு, இந்த உலகில் நன்மைக்கான சக்தியாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய திறனை உணர்ந்து செயல்படுத்துகிறோம். ஆன்மாவின் உள்ளார்ந்த நம்பிக்கை, பற்றுறுதி, நிபந்தனையின்றி நேசிக்கப்படுதலின் விழிப்புணர்வு ஆகியவற்றோடு வரும் பிரார்த்தனை இறைவனின் குணப்படுத்தும் சக்தி களஞ்சியத்தை ஈர்க்கிறது. உண்மையான பக்தி மற்றும் இதயத்தின் நேர்மையுடன் நாம் அவனுடன் அகத்துள் பேசும்போது, ​​​​ஒருமுகப்பட்ட சிந்தனையின் வலிமையால் நமது பிரார்த்தனையை நிரப்பும்போது, படைப்புத் திறன் கொண்ட இறை உணர்வு நிலையில் பிரார்த்தனை உண்மையானதாகிறது. நாம் செய்ய எதிர்நோக்கும் உற்றுழி உதவியானது இறைவனின் சர்வ வல்லமையால் வலுவூட்டப்பட்டு, நம் வாழ்விலும் மற்றவர்களின் வாழ்விலும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதற்கான சக்தியைப் பெறுகிறது. “பெரும்பாலான மனிதர்கள் நிகழ்வுகளின் போக்கை இயற்கையானதாகவும் தடுக்கப்பட முடியாததாகவும் கருதுகின்றனர்.” குருதேவர் கூறினார். “பிரார்த்தனையின் மூலமாக எத்தகைய அடிப்படை மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை அவர்கள் அரிதாகவே அறிந்திருக்கிறார்கள்.” நமது உலக குடும்பத்திற்கு தேவைப்படும் நேரங்களில் நம் உதவி அவர்களை சென்றடையக்கூடிய மிகச் சிறந்த மற்றும் உடனடி வழிகளில் பிரார்த்தனை ஒன்றாகும். அந்த உணர்வுடன், துன்பத்தை உண்டாக்கும் ஒரு சூழ்நிலையை நாம் காணும்போது, ​​நமது முதல் எதிர்வினை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களை இறைவனின் பாதுகாக்கும் அன்பு சூழ்வதற்கு பிரார்த்திப்பதாக இருக்கட்டும். அவ்வாறு செய்வதனால், அறப் பண்புடன் கூடிய மனித முயற்சிகளால் கொணரப்படும் உதவியில் ஒரு உயர் சக்தியை பாய்ச்சப்படும் வழிகள் வாயிலாக அவனுடைய அருளாசிகள் அவர்களை சென்றடைவதற்கான தடங்களை நாம் விரிவுபடுத்துகிறோம்; மற்றும் அவனது அமைதி மற்றும் உத்திரவாதத்திற்கு நம் இதயங்களை ஏற்புடையதாக்குகிறோம்.

இறைவனுடனான ஆழ்ந்த உள் தொடர்பு, சந்தேகம் மற்றும் அமைதியற்ற தன்மையை முடக்கி, அவனுடைய அன்பு மற்றும் சத்திய நெறிகளின்படி வாழ முயற்சிக்கும் நம் நேர்மையின் நல்விளைவு போல மற்றவர்களுக்கான நமது பிரார்த்தனைகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது, குருதேவர் நமக்கு நினைவூட்டியது போல்: “ஒரு ஆன்மாவின் மேன்மை லட்சக் கணக்கான மக்களின் கூட்டு வினையை திறம்பட ஈடுகட்டிவிடும்.” நாம் மற்ற ஒத்த எண்ணம் கொண்ட ஆன்மாக்களுடன் சேரும்போது நமது தனிப்பட்ட பிரார்த்தனைகளின் தாக்கம் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை அவர் அறிந்திருந்ததால், குருதேவர் தனது உலகளாவிய அமைப்பின் சேவையின் ஒரு பகுதியாக உலகளாவிய பிரார்த்தனை குழுவை நிறுவினார். அவருடைய ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் செய்வது போல், சிறப்புத் தேவைகள் உள்ள இறைவனின் குழந்தைகள் அனைவருக்கும் அவனது அருளாசிகளைப் பெறுவதற்கான இந்த ஒன்றுபட்ட முயற்சியில் உங்கள் சொந்த தினசரி பிரார்த்தனைகளின் மூலம் பங்கேற்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய பிரார்த்தனையின் மூலமும், ஒவ்வொரு நேர்மறை எண்ணத்தாலும் செயலாலும் இவ்வுலகில், அந்த மாபெரும் குணப்படுத்துபவனும், அனைவருக்கும் உதவுபவனுமான இறைவனின் ஒளி மற்றும் அன்பை வலுப்படுத்த நீங்கள் உதவுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள.

இறைவனும் குருதேவரும் எப்போதும் உங்களை ஆசீர்வதிப்பார்களாக,

ஸ்ரீ ஸ்ரீ மிருனாளிணி மாதா

பதிப்புரிமை © 2015 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.
  

இதைப் பகிர