ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க வித்யாலயாவை புதிய வளாகத்திற்கு மாற்றுதல்

செப்டம்பர் 8, 2023

2023 ஜூலை 25 அன்று, மகாவதார் பாபாஜி ஸ்மிருதி திவஸ் புனித தருணத்தில், ராஞ்சியில் உள்ள ஜெகன்நாதபூர் YSS வித்யாலயா மாணவர்கள் அவர்களுக்காக கட்டப்பட்ட புதிய பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த புதிய கட்டிடங்கள் பழைய பள்ளி கட்டிடம் அமைந்துள்ள அதே இடத்திலேயே ஆனால் பள்ளி வளாகத்தின் வேறு பகுதியில் கட்டப்பட்டுள்ளன. மிகவும் விசாலமான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, மேலும் கல்வி மற்றும் கற்றலுக்கான நவீன வசதிகளை வழங்குகின்ற தங்களது புதிய வகுப்பறைகளுக்குச் செல்வதில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதிய பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள்

புதிய பள்ளி வளாகத்தின் வடிவமைப்பு, கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அதிநவீன வசதிகளுடன் கூட இயற்கையோடு நெருக்கமாக இருக்கக்கூடிய சூழலில் வகுப்புகளை நடத்துவது போன்ற பரமஹம்ஸ யோகானந்தர் பின்பற்றிய பண்டைய குருகுல கோட்பாடுகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நன்கு காற்றோட்டமான நவீன வகுப்பறைகள்; அனைத்து வசதிகளும் கொண்ட அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள்; தேசிய மாணவர் படை (NCC) மற்றும் தேசிய சமூக சேவை (NSS) செயல்பாடுகளுக்கான கட்டிடங்கள்; ஒரு விசாலமான மற்றும் நிறைய புத்தகங்கள் கொண்ட நூலகம்; ஒரு ஆடிட்டோரியம் (YSS கல்லூரியுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது); ஒரு நிர்வாக கட்டிடம்; மதிய உணவு திட்டத்திற்கான சமையலறை மற்றும் சாப்பாட்டு பகுதி; மற்றும் ஒரு சைக்கிள் கொட்டகை ஆகியவை இந்த புதிய வசதிகள்.

நகர்வைக் குறிக்கும் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி

புதிய பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில், பிரபாத் ஃபெரி, குரு பூஜை மற்றும் ஒரு சன்னியாசி வழி நடத்திய தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பழைய பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் குருதேவரின் புகைப்படத்தை பல்லக்கில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் பின்னால், மாணவர்கள் மெதுவாக ஒரு குழுவாக புதிய வளாகத்தை நோக்கி நகர்ந்தபோது, பிரபஞ்ச கீதங்களின் இனிமையான ஒலிகளை காற்று எதிரொலித்தது.

புதிய வளாகத்தை அடைந்த மாணவர்கள் குரு ஸ்துதி பாடினர். இதைத் தொடர்ந்து பாரம்பரிய விளக்கு ஏற்றுதல் மற்றும் புஷ்பாஞ்சலி (குருவின் தாமரை பாதங்களில் மலர்களை சமர்ப்பித்தல்) ஆகியவை நடைபெற்றன. மாணவர்கள் பின்னணியில் பிரபஞ்ச கீதங்கள் பாடினர். அந்தந்த வகுப்பறைகளில் மாணவர்களுக்கு பிரசாதம் விநியோகத்தலுடன் விழா நிறைவடைந்தது, பின்னர் முதல் வகுப்பு தொடங்கியது.

ஆன்மீக ரீதியாக புதிய வசதிகள் அர்ப்பணிப்பு

முன்னதாக, ஜனவரி 29, 2023 அன்று, YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, 1,100 பேர் கலந்து கொண்ட ஒரு நினைவு கூரத்தக்க விழாவில் நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு புதிய வசதிகளை அர்ப்பணித்தார். ராஞ்சி கல்வி சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், YSS சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புதிய வசதிகள் அர்பணிப்பு திறப்பு நிகழ்ச்சி

இந்தத் திட்டத்திற்கு நேஷனல் இம்ப்ளிமென்டேஷன் கமிட்டி (NIC) மூலம் கலாச்சார அமைச்சகம் (இந்திய அரசு) கணிசமான நிதி உதவி அளித்தது. எனவே, ஜெகன்நாத்பூரில் உள்ள YSS கல்வி வளாகத்தில் புதிய பள்ளி வளாகம் மற்றும் ஆடிட்டோரியம் ஜூலை 01, 2023 அன்று NIC உறுப்பினராக இருந்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. மாணவர்களிடையே உரையாற்றிய திரு யாதவ், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் கல்விக் கொள்கைகளை ஊக்குவிப்பதிலும், அதே நேரத்தில் சமூக பொருளாதார ரீதியாக தாழ்வான பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதிலும் யோகதா சத்சங்க கல்வி நிறுவனங்களின் முயற்சிகளை போற்றினார். மாணவர்களின் முழுமையான நல்வாழ்வை வலியுறுத்தும் ஒரு கல்விச் சூழலை வளர்ப்பதில் அவர்கள் ஆற்றிய பங்கை அவர் பாராட்டினார், இதன் மூலம் அற்புதமான இளம் மனங்களை உலகின் சிறந்த குடிமக்களாக மாற்ற ஊக்குவிக்கப்படுகிறது.

இதைப் பகிர