கிரியா யோகம் பற்றி பரமஹம்ஸ யோகானந்தர் – கீ டு எவர் நியூ ஜாய்

ஆகஸ்ட் 16, 2023

ஒரு அறிமுகம்:

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றினாலும், ஞானக் கண்களால் பார்க்கும்போது நாம் அனைவரும் தேடுவது ஒன்றே – “மகிழ்ச்சியின் சாரம் மாறுபாடற்றதாக இருந்தாலும் பல விதங்களில் களிப்பூட்டும் அந்த மகிழ்ச்சி என்பது, ஒவ்வொருவரும் தேடுகின்ற உள்ளார்ந்த அனுபவமே ஆகும்.” என்று பரமஹம்ஸ யோகானந்தர் கூறுகிறார்.

பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலும் நாம் அத்தகைய நீடித்த மகிழ்ச்சியை தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு ஆசையை நிறைவேற்றும் போது, அதனுடன் இணைந்த ஆனந்தமானது ஒரு புதிய ஆசை வேரூன்றுவதில் மறைந்து விடுவதைத் தான் காண்கிறோம். “பெரும் செல்வம் அல்லது சாதனையை அடைதல் கூட, இன்னும் ஏதாவது” வேண்டும் என்ற நம் ஆழ்ந்த ஏக்கத்தை உணர்த்தத்தான் உதவுகிறது.

அந்த ஏக்கத்தை இப்பிறவியில் தணித்து விட முடியுமா? அனைத்து ஆன்மீகப் பாதைகளின் மகான்களும், நமது பிறப்புரிமை என்று கூறியிருக்கும், நாம் ஒருபோதும் சலிப்படையா அந்த ஆனந்தத்தைப் பெறுவது உண்மையில் சாத்தியமா?

இந்த நவீன யுகத்தில் தனது போற்றப்படும் குரு பரம்பரையினரால் புத்துயிர் பெற்ற தியான விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தை தினமும் பயன்படுத்துவதன் மூலம் அந்த சாசுவத கேள்விக்கு நீங்களே எவ்வாறு உறுதியாக பதிலளிக்க முடியும் என்பதை பரமஹம்ஸர் விளக்குகிறார்.

உள்ளார்ந்து செல்வதற்கான அந்த படிப்படி வழிமுறை மூலம், நிலையற்ற இன்பங்களின் பொய் வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வேறு ஒன்றிற்கு ஏங்குகின்ற எவரும், நீண்டகாலமாக எதிர்பார்க்கும் என்றும் புதிய ஆனந்தம் இந்த ஆன்மாவே தான் என்று படிப்படியாக நிரூபிக்க முடியும் – பின்னர் அந்த ஆனந்தத்தை வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் பொங்கி வழியச் செய்ய முடியும்.

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களில் இருந்து:

நாம் அனைவரும் வருவதும் போவதுமாயிருப்பதும் அற்ற ஒரு நீடித்த மகிழ்ச்சியை விரும்புகிறோம். என்றும் புதிய மற்றும் என்றும் இருக்கும் சாசுவத மகிழ்ச்சியை விரும்புகிறோம். சலித்துவிட்ட மகிழ்ச்சியை நாம் விரும்பவில்லை. என்றும் புதிய ஆனந்தத்தை விரும்புகிறோம்.

கிரியா யோகத்தின் ஆன்மீக பேரின்பத்தைப் போல உலகில் வேறு எந்த இன்பத்தையும் நான் உணர்ந்ததில்லை. மேற்கின் அனைத்து வசதிகளுக்காகவும், உலகில் உள்ள அனைத்து தங்கத்திற்காகவும் கூட நான் அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். கிரியா யோகத்தின் மூலம் மகிழ்ச்சியை எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதை நான் கண்டறிந்தேன்.

ஆழ்ந்து பயிற்சி செய்யப்படும் கிரியா யோகமானது, சுவாசத்தை மனதிலும், மனத்தை உள்ளுணர்விலும், உள்ளுணர்வை ஆன்மா குறித்த ஆனந்த உணர்தலிலும் ஆன்மாவை பரமாத்மாவின் பிரபஞ்ச பேரின்பத்திலும் கரைத்துவிடும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலும், உணர்வுநிலை மண்ணில் ஒரு மண்வெட்டியைப் போலத் தோண்டி, இறைவனின் ஆனந்த நீரூற்றிலிருந்து ஒரு சிறிய தெளிப்பை வெளிப்படுத்துகிறது. ஆனால் நற்செயலின் மிக உயர்ந்த வடிவமான தியான மண்வெட்டியானது, உணர்வுநிலையின் அகத்தை திறந்து, வாழ்க்கையின் அனைத்து ஆனந்தத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆன்மாவை பரமாத்மாவுடன் இணைப்பது யோகம் – அனைவரும் நாடும் அந்த பேரின்பத்துடன் மீண்டும் இணைவது. இது ஒரு அற்புதமான பொருள் விளக்கம் அல்லவா? பரமாத்மாவின் என்றும் புதிய பேரின்பத்தில், நீங்கள் உணரும் ஆனந்தம் மற்ற எந்த ஆனந்தத்தையும் விட சிறந்தது என்றும், எதுவும் உங்களை வீழ்த்த முடியாது என்று நீங்கள் உறுதி கொள்கிறீர்கள்.

ஒரு பெரும் செல்வந்தரை நான் நியூயார்க்கில் சந்தித்தேன். தனது வாழ்க்கையைப் பற்றி என்னிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்த சமயம் அவர், “நான் வெறுப்பூட்டும் அளவு செல்வந்தனாகவும் வெறுப்பூட்டும் அளவு ஆரோக்கியம் உடையவனாகவும் உள்ளேன்.” என்று இழுத்து நீட்டிப் பேசினார். அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பு, “ஆனால் நீர் வெறுப்பூட்டும் அளவு மகிழ்ச்சியாக இல்லையே! என்றும் புதிதாக மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு எப்பொழுதும் ஆர்வம் காட்டுவது எப்படி என்பதை உமக்கு நான் கற்பிக்க முடியும்” எனக் கூறினேன். .அவர் என்னுடைய மாணவர் ஆனார். கிரியா யோக பயிற்சி செய்தும், சமநிலையான வாழ்வை கடைபிடித்தும் அகமுகமாக சதா இறைவனுடனான பக்தியில் ஈடுபட்டும்,. எப்போதும் என்றும்-புதிய ஆனந்தத்தில் பொங்கிக் கொண்டும் அவர் மிகவும் வயது முதிர்ந்த காலம் வரை வாழ்ந்தார்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரையிலிருந்து ஒரு பகுதியை வாசிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம், இது சாதாரண உணர்வுநிலைக்கும் பரம்பொருளின் என்றும் புதிய ஆனந்தத்தை அகத்துள் உணர்வதற்கும் இடையிலான வேறுபாட்டை மேலும் விளக்குகிறது.

உண்மையான மகிழ்ச்சியையும், முழுமையான உணர்வுநிலை மாற்றத்தையும் கொணரும் கிரியா யோகத்தின் சக்தி பற்றி பரமஹம்ஸ யோகானந்தர் உரையாற்றுவதையும் கூட நீங்கள் கேட்கலாம்.

இதைப் பகிர