பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய “பரம்பொருளின் அனைத்தையும் திருப்தியுறச் செய்யும் என்றும் புதிய ஆனந்தம்”

பரமஹம்ஸ யோகானந்தர் வழங்கிய “விரும்பும்போது மகிழ்ச்சியாக இருப்பது எப்படி” என்ற சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள். முழு உரையையும் YSS வெளியிட்ட பரமஹம்ஸரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் முதல் தொகுப்பான மனிதனின் நிரந்தரத் தேடல் இல் காணலாம்.

நீங்கள்‌ மனிதர்களின்‌ முகங்களை கவனிக்கும்‌ போதே, அவர்களது முகபாவங்களை பொதுவாக, அவர்களுடைய மனநிலைகளுடன்‌ ஒத்துப்போகும்‌ நான்கு அடிப்படை வகைகளாகப்‌ பிரிக்கலாம்‌: ௮௧ மற்றும்‌ புற மகிழ்ச்சியை எடுத்துக்காட்டும்‌ புன்னகை பூக்கும்‌ முகங்கள்‌; துக்கத்தைக்‌ குறிக்கும்‌ இறுக்கமான முகங்கள்‌; அக சலிப்பை வெளிப்படுத்தும்‌ சோர்வுற்ற, புன்னகையற்ற முகங்கள்‌; மற்றும்‌ அக அமைதியை பிரதிபலிக்கும்‌ அமைதியான முகங்கள்‌.

நிறைவேற்றப்பட்ட ஓர்‌ ஆசை, மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. நிறைவேற்றப்படாத ஓர்‌ ஏக்கம்‌, துயரத்தை உண்டாக்குகின்றது. மகிழ்ச்சி மற்றும்‌ துயர மன அலை உச்சிகளின்‌ இடையே சலிப்பாகிய பள்ளங்கள்‌ உள்ளன. இன்ப மற்றும்‌ துன்ப உயர்‌ அலைகளும்‌, சலிப்பின்‌ பள்ளங்களும்‌ சமன்படுத்தப்படும்போது அமைதி நிலை வெளிப்படுகின்றது.

அமைதி நிலைக்கு அப்பால்‌ என்றும்‌-புதிய பேரானந்த நிலை ஒன்று உள்ளது. இதை ஒருவர்‌ தன்னுள்‌ கண்டு, அது தனது ஆன்மாவின்‌ உண்மையான இயற்கை நிலை என்பதை அடையாளம்‌ கண்டுகொள்ள முடியும்‌. மிதமிஞ்சிய மகிழ்ச்சி மற்றும்‌ ஆழ்‌மன அழுத்தம்‌ ஆகிய கிளர்ச்சியூட்டும்‌ மன அலைகளுக்கும்‌, அலட்சியம்‌ எனும்‌ பள்ளங்களுக்கும்‌ அடியில்‌ இந்தப்‌ பேரானந்‌தம்‌ புதையுண்டுள்ளது. மனத்‌ தடாகத்திலிருந்து இவ்வலைகள்‌ மறையும்‌ பொழுது, அமைதியின்‌ தெளிந்த நிலை உணரப்படுகின்றது. அமைதியின்‌ சாந்தமான நீரில்‌ பிரதிபலிக்கப்படுவது என்றும்‌-புதிய பேரின்பமாகும்‌.

மக்களின் எதிர்ச்செயல்பாடுகளின்‌ அடிப்படை

உலகத்தில்‌ அனேக மக்கள்‌ கிளர்ச்சியூட்டும்‌ இன்பம்‌ அல்லது துன்பம்‌ ஆகிய அலைகளின்‌ மேல்‌ தத்தளித்தவண்ணம்‌ உள்ளனர்‌. இவை இல்லையென்றால்‌ அவர்கள்‌ சலிப்படைகின்றனர்‌. நீங்கள்‌ மற்றவர்களுடைய முகங்களைப்‌ பகல்‌ பொழுதில்‌ கவனிக்கும்‌ போது — வீட்டில்‌, காரியாலயத்தில்‌, வீதியில்‌ அல்லது கூட்டங்‌களில்‌ — அமைதியை வெளிப்படுத்துவோர்‌ குறைவாக உள்ளதைக்‌ காண்பீர்கள்‌.

நீங்கள்‌ ஓர்‌ சந்தோஷமிக்க முகத்தைப்‌ பார்த்து, அந்த நபரிடம்‌, “உங்களை சந்தோஷப்படுத்துவது எது” என வினவினால்‌ அவர்‌ இவ்வாறு பதிலளிக்கக்கூடும்‌: “எனக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.” அல்லது, “நான்‌ ஒரு சுவாரஸ்யமான மனிதரைச்‌ சந்தித்தேன்‌.” மகிழ்ச்சியின்‌ பின்‌ ஓர்‌ ஆசையின்‌ நிறைவேற்றம்‌ உள்ளது.

வாட்டமான ஒரு முகத்தைக்‌ கண்டு, அனுதாபத்துடன்‌ வினவும்போது அதன்‌ சொந்தக்காரர்‌, “நான்‌ ஒரு நோயாளி,” அல்லது, “எனது பணப்பையை தொலைத்து விட்டேன்‌,” எனப்‌ பதிலளிக்கலாம்‌. ஆரோக்கியத்தை (அல்லது அவர்‌ இழந்துவிட்ட பணத்தை) திரும்பப்பெற வேண்டுமென்ற அவருடைய ஆசை மறுக்கப்பட்டுள்ளது.

ஒருவித வெறுமையான சமநிலைத்‌ தன்மையைக்‌ காட்டும்‌ முகத்துடன்‌ உள்ள ஒருவரைக்‌ கண்டு, “என்ன சங்கதி? ஏதாவதொன்றைப்‌ பற்றி நீர்‌ கவலைப்படுகிறீர்களா?” என்று வினவினால்‌, இல்லையென உடனேயே பதிலளிக்கிறார்‌. ஆனால்‌ அவரை வற்புறுத்தி, “நீங்கள்‌ மகிழ்ச்சியாய்‌ இருக்கின்றீரா?” என வினவினால்‌, “இல்லவே இல்லை. நான்‌ கொஞ்சம்‌ சலிப்புற்றுள்‌ளேன்‌,” எனப்‌ பதிலளிப்பார்‌.

எதிர்மறையான மற்றும்‌ ஆக்கப்பூர்வமான அமைதி

ஆரோக்கியமான மற்றும்‌ பருமனான தோற்றத்துடன்‌, அளவிற்குமிஞ்சிய மகிழ்ச்சி அல்லது வருத்தம்‌ அல்லது சலிப்போ இல்லாமல்‌ காணப்படும்‌, ஒரு பண்ணையில்‌ வாழ்கின்ற நாகரீகமான ஒரு பணக்கார மனிதரை, நீங்கள்‌ சந்திக்கக்கூடும்‌. இப்படிப்பட்டவர்‌ விஷயத்தில்‌, அவர்‌ அமைதியாக இருக்கின்றார்‌ என நீங்கள்‌ கூறக்கூடும்‌. ஆனால்‌ அந்த செளகரியமான நிலையைப்‌ பெற்று விட்டமனிதரும்‌, இவ்விதமான அமைதியை அதிக அளவு பெற்றிருக்கும்போது—அனுபவிப்பதற்கான நல்ல அதிர்ஷ்டத்தை சிலரே. பெற்றிருப்பர்‌—அவர்‌ தனக்குள்ளேயே சிந்திக்கிறார்‌, “நான்‌ போதிய அளவு அமைதியைப்‌ பெற்றுவிட்டேன்‌— எனக்குக்‌ கொஞ்சம்‌ மனக்கிளர்ச்சியும்‌, மாற்றமும்‌ தேவைப்படுகிறது,” அல்லது தனது நண்பர்‌ ஒருவரிடம்‌, “நான்‌ உயிரோடு உள்ளேன்‌ என்பதை நான்‌ உணரும்‌ பொருட்டு, தயவு செய்து என்‌ தலையில்‌ ஒரு முறை: குட்டவும்‌!” என அவர்‌ குறிப்பிடக்கூடும்‌.

அமைதியின்‌ எதிர்மறை நிலையானது மகிழ்ச்சி, துன்பம்‌, சலிப்பு ஆகிய மூன்று மனநிலைகள்‌ இல்லாதபோது ஏற்படுகின்றது. மாற்றமோ அல்லது மனக்கிளர்ச்சியோ இல்லாமல்‌ நீட்டிக்கப்பட்ட எதிர்மறை அமைதி, சுவாரஸ்யமற்றதாகவும்‌, அனுபவிக்க முடியாததாகவும்‌ மாறுகிறது. ஆனால்‌ மகிழ்ச்சி, துன்பம்‌, சலிப்பு நிலைகளில்‌ நீண்ட-தொடர்ச்சியான ஈடுபாட்டிற்குப்‌ பிறகு, எதிர்மறை அமைதி அனுபவிக்கக்கூடியதாகும்‌. இதன்‌ காரணமாகவே, மன அமைதி அடைவதற்கு, யோகிகள்‌ மன ஒருமுகப்பாடு மூலம்‌ எண்ண அலைகளின்‌ சமநிலையாக்கத்தைப்‌ பரிந்துரைக்கின்றனர்‌.

யோகியானவன்‌ எண்ண அலைகளை ஓயச்‌ செய்ததும்‌, அமைதியெனும்‌ தடாகத்தின்‌ அடியில்‌ பார்க்க ஆரம்பித்து, அங்கு ஆக்கப்‌பூர்வமான அமைதி நிலையை ஆன்மாவின்‌ என்றும்‌-புதிய ஆனந்‌தத்தைக்‌ காணத்‌ தொடங்குகிறான்‌.

ஒரு பெரும்‌ செல்வந்தரை நான்‌ நியூ யார்க்கில்‌ சந்தித்தேன்‌. தனது வாழ்க்கையைப்‌ பற்றி என்னிடம்‌ ஏதோ கூறிக்கொண்டிருந்த சமயம்‌ அவர்‌, “நான்‌ வெறுப்பூட்டுமளவு செல்வந்தனாகவும்‌, வெறுப்பூட்டுமளவு ஆரோக்கியம்‌ உடையவனாகவும்‌ உள்ளேன்‌ என்று இழுத்து நீட்டிப்‌ பேசினார்‌. அவர்‌ சொல்லி முடிப்பதற்கு முன்பு, “ஆனால்‌ நீர்‌ வெறுப்பூட்டுமளவு மகிழ்ச்சியாக இல்லையே! என்றும்‌ புதிதாக மகிழ்ச்சியுடன்‌ இருப்பதற்கு எப்பொழுதும்‌ ஆர்வம்‌ காட்டுவது எப்படி என்பதை உமக்கு நான்‌ கற்பிக்க முடியும்‌.” எனக்கூவினேன்‌.

அவர்‌ என்னுடைய மாணவர்‌ ஆனார்‌. கிரியா யோகப்‌ பயிற்சி செய்தும்‌, சமநிலையான வாழ்வைக்‌ கடைப்‌பிடித்தும்‌, அகமுகமாக சதா இறைவனுடனான பக்தியில்‌ ஈடுபட்டும்‌, எப்போதும்‌ என்றும்‌-புதிய ஆனந்தத்தில்‌ பொங்கிக்‌ கொண்டும்‌ அவர்‌ மிகவும்‌ வயது முதிர்ந்த காலம்‌ வரை வாழ்ந்தார்‌.

மரணப்படுக்கையில்‌ இருந்தபோது அவர்‌ தனது மனைவியிடம்‌, “நான்‌ செல்வதை நீ காண வேண்டியுள்ளதால்‌, நான்‌ உனக்காக வருந்துகிறேன்‌. ஆனால்‌ நான்‌ பிரபஞ்ச அன்பனிடம்‌ சேர்வதில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறேன்‌. எனது ஆனந்தத்தில்‌ நீ மகிழ்ச்சியடை, துன்பமுற்றுக்‌ கொண்டு சுயநலமாக இருக்காதே. எனது அன்பிற்‌குரிய இறைவனைச்‌ சந்திப்பதில்‌ நான்‌ எவ்வளவு மகிழ்ச்சியாய்‌ இருக்கிறேன்‌ என்பதை நீ அறிந்தால்‌ நீ துன்பப்படமாட்டாய். என்றாவது ஒரு நாள்‌ நித்திய பேரானந்த விழாவில்‌ நீ என்னுடன் சேர்வாய்‌ என்பதில்‌ மகிழ்ச்சியடை,” என்று கூறினார்‌.

பேரின்பத்தை ஆழ்ந்து பருகுங்கள்‌

இப்போது மகிழ்ச்சி, துன்பம்‌, சலிப்பு அல்லது தாற்காலிகமான அமைதி ஆகிய பதிவுகளை உடைய முகங்களைக்‌ கவனித்த பின்பு, அவற்றிற்குப்‌ பதிலாக பரம்பொருளினுடைய தொற்றிக்‌ கொள்ளக்‌ கூடிய என்றும்‌-புதிய ஆனந்தம்‌ உங்களுடைய முகத்தில்‌ பிரதிபலிப்பதை நீங்கள்‌ விரும்பமாட்டீர்களா?

இதைச்‌ செய்ய இயலுவதற்கு நீங்கள்‌ தூக்கம்‌, கனவுகள்‌, விழிப்புநிலை மற்றும்‌ வாழ்க்கையின்‌ எல்லா சூழ்நிலைகளிலும்‌ பேரானந்தத்தை வெளிப்‌படுத்தும்‌ ஆனந்தப்‌ போதை உள்ளவராக மாறும்வரை, ஆழ்ந்த தியானம்‌ எனும்‌ பீப்பாயிலிருந்து அவனுடைய பேரின்பத்தை நீங்கள்‌ மேலும்‌ மேலும்‌ பருக வேண்டும்‌. இல்லையெனில்‌ அந்தச்‌ சூழ்நிலைகள்‌ உங்களை வெறித்தனமான சந்தோஷமாக இருக்‌கவோ அல்லது ஆழ்ந்த பெரும்‌ துக்கத்தை உடையவராகவோ அல்லது சலிப்பு அல்லது தாற்காலிக எதிர்மறை அமைதியினால்‌ முழுவதும்‌ நிறைக்கப்பட்டவராகவோ ஆக்குவதற்கு ஏதுவாக்கக்‌ கூடும்‌.

உங்களுடைய சிரிப்பு, உண்மை என்னும்‌ குகைகளிலிருந்து எதிரொலிக்க வேண்டும்‌. அனுபூதி அடைந்த உங்கள்‌ ஆன்ம நீரூற்றிலிருந்து உங்களுளடைய ஆனந்தம்‌ வெளியே பாய வேண்டும்‌. நீங்கள்‌ சந்திக்கும்‌ எல்லா ஆன்மாக்களின்‌ மேலாகவும்‌, முழுச்‌ சராசரத்தின்‌ மேலாகவும்‌ உங்களுடைய புன்னகை பரவ வேண்டும்‌. உங்களுடைய ஒவ்வொரு பார்வையும்‌ உங்களது ஆனந்தமயமான ஆன்மாவை பிரதிபலிப்பதுடன்‌, துக்கத்தில்‌ மூழ்கியுள்ள மனங்களுக்கும்‌ அதன்‌ தொற்றுதலைப்‌ பரவச்‌ செய்ய வேண்டும்‌.

நீங்கள்‌ இடைவிடாத மன ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்கும்‌ ஒரு சாதாரண மனிதன்‌ எனக்‌ கனவு காண்பதை நிறுத்துங்கள்‌. எது நடந்தாலும்‌ சரி, பரம்பொருளின்‌ உண்மையான வடிவில்‌ நீங்கள்‌ ஆக்கப்பட்டுள்ளீர்கள்‌ என்பதை எப்பொழுதும்‌ ஞாபகத்தில்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌.

எல்லாவற்றிலும்‌ ஜீவித்திருக்கும்‌ ஆனந்‌தம்‌. பிரபஞ்ச பேரானந்த நீரூற்று-தனது தூறல்களை உங்கள்‌ மீது பொழிந்து உங்களுடைய எண்ணங்களின்‌ ஊடாகவும்‌, உங்களுடைய முழு இருப்பின்‌ ஒவ்வொரு செல்‌ மற்றும்‌ திசுவின்‌ ஊடாகவும்‌ ஆனந்‌தத்தை கசிந்து அனுப்ப வேண்டும்‌.

சுயநினைவின்றி ஆன்மாவை-அறிந்துணரும்‌ நிலையாகிய கனவுகளற்ற ஆழ்ந்த நித்திரை நிலையில்‌, பல மணி நேரங்கள்‌ நீங்கள்‌ முழுவதுமாக மகிழ்ச்சியாக உள்ளீர்கள்‌ என்பதை நினைவில்‌ கொள்ளுங்கள்‌. ஆகவே பகல்‌ வேளையில்‌ பயத்தை ஏற்படுத்தும்‌ மனச்‌ சோதனைகள்‌, மற்றும்‌ மன எழுச்சிகளினால்‌ எவ்வளவுதான்‌ தொல்லைக்கு உட்படுத்தப்பட்டாலும்‌, அதைப்‌ பொருட்படுத்தாமல்‌, பொங்கிப்‌ பாயும்‌ ஓடையின்‌ புத்தம்‌-புதிய சிரிக்கும்‌ நீரைப்‌ போன்று, எல்லா நேரங்களிலும்‌ உள்முகமாக என்றும்‌-புதிய ஆனந்தத்தில்‌ இருக்க நீங்கள்‌ முயன்றவண்ணம்‌ இருக்க வேண்டும்‌.

ஒரு மனிதன்‌ எல்லா நேரமும்‌ இடைவிடாது மதுபானத்தைப்‌ பருகுவதன்‌ மூலம்‌, போதைக்கு உட்பட்டிருக்க முடிவது போல்‌, தியானத்தின்‌ பின்பு உங்களுடைய ஆன்மாவின்‌ ஆனந்தத்‌ தன்மையை இடைவிடாமல்‌ கண்டுணர்ந்து உண்மையான ஆனந்தப்‌ போதையில்‌ நீங்களும்‌ இருக்க முடியும்‌.

தியானத்திற்குப்‌ பின்‌ உள்ள. ஆனந்தமயமான நிலையை நீங்கள்‌ இடைவிடாது உணரும்போது, நீங்கள்‌ ஆனந்தப்‌ பரவசத்தில்‌ வாழ்வீர்கள்‌: உங்களுடைய ஆன்மாவின்‌ என்றும்‌-புதிய பேரானந்தத்துடன்‌ ஒன்றி இருப்பீர்கள்‌. மேலும்‌ சந்தனத்தை இடைவிடாது தொடுவது, கரங்களை நறுமணம்‌ உடையதாக ஆக்குவது போன்று, உங்களைச்‌ சூழ்ந்துள்ளவர்‌ எவராயினும்‌ உங்களைப்‌ போன்றே இருப்பர்‌.

“சித்தத்தை என்பால்‌ வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவருக்கொருவர்‌ என்னை விளங்கிக்கொண்டும்‌, எப்போதும்‌ என்னைப்‌ புகழ்ந்து பேசியும்‌, மன நிறைவடைந்தும்‌, மகிழ்வடைந்தும்‌ இருக்கின்றனர்‌.” (பகவத் கீதை, அத்தியாயம் 10, ஸ்லோகம் 9).

இதைப் பகிர