குரு பூர்ணிமா வேண்டுகோள் — 2023

1 ஜூலை, 2023

குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ இடையே உள்ள உறவுதான்‌, நட்பில்‌ உள்ள அன்பின்‌ மிக உயர்ந்த வெளிப்பாடு; அது இருவரும்‌ பகிர்ந்து கொள்ளும்‌ ஒரே இலட்சியமாகிய–அனைத்திற்கும்‌ மேலாக இறைவனை நேசிப்பது–என்ற பெருவிருப்பத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்த நிபந்தனையற்ற தெய்வீக‌த் தோழமையாகும்.

— ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

அன்புக்குரிய தெய்வீக ஆத்மனே,

இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி வரும் குரு பூர்ணிமா நன்னாளுக்கான வாழ்த்துக்கள். நம் அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் புனித யோகதா குரு பரம்பரைக்கு நம் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்த எங்களுடன் இணையுமாறு மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களை அழைக்கிறோம். அவர்களுடைய தெய்வீக அருளாசிகள் நம் வாழ்வைத் தொடர்ந்து மேம்படுத்துகின்றன. இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தைப் பின்பற்றி, சீடர்கள் இந்த புனித நாளில் ஒன்றுகூடி தங்கள் குருமார்களுக்கு மரியாதையையும் நன்றியையும் செலுத்துகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளைத் தொடர்ந்து கண்டறிந்து ஏற்கும் இச்சமயம், இந்த அதி வேக நவீன உலகில் சமநிலை வாழ்க்கைக்கான குருதேவரின் ஆன்மீக கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) இந்த ஆத்மாக்களை அன்புடன் வரவேற்கிறது. YSS பல்வேறு முன்முயற்சிகள் மூலம் புதிய சாதகர்கள் மற்றும் நீண்டகால பக்தர்கள் இருவருக்கும் அவர்களின் ஆன்மீக பயணத்தில் உதவி புரிய உறுதிபூண்டுள்ளது. அவற்றுள் சில:

  • பல இந்திய மொழிகள் மற்றும் வடிவங்களில் YSS பாடங்கள் மற்றும் பிற வெளியீடுகளை வழங்குதல்
  • அனைத்து YSS ஆசிரமங்களிலும் தினசரி கூட்டு தியானங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சத்சங்கம் வழங்குதல்
  • சன்னியாசச் சுற்றுப்பயணங்கள், ஏகாந்த வாஸ நிகழச்சிகள் மற்றும் சாதனா சங்கங்களை நடத்துதல்.
  • பொது சொற்பொழிவுகள், அனைவருக்குமான நிகழ்ச்சிகள் (சர்வதேச யோகா தினம் போன்ற சந்தர்ப்பங்களில்) மற்றும் பயிலரங்குகள் போன்ற போதனைகளை பரப்புவதற்கான ஏற்பாடுகள்.
  • பல்வேறு இந்திய மொழிகளில் தியானங்கள் மற்றும் சொற்பொழிவுகளை ஆன்லைன் இல் வழங்குதல்
  • நம் YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் வசதிகளை மேம்படுத்துதல்

சில சான்றுகளைப் பகிர்தல்

“நான் சமீபத்தில் YSS பாதையில் நுழைந்தேன், எனக்கு வழங்கப்பட்ட மிக விலைமதிப்பற்ற பரிசான YSS பாடங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பினேன். நான் இந்த பாடங்களைப் பெற்று, தியான உத்திகளைப் பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து, ஒரு ஆழ்ந்த அமைதி உணர்வு என்னைச் சூழ்ந்துள்ளது. இந்தப் பாடங்கள் வெறும் சொற்களல்ல, அவை தெய்வீகத்தின் சாராம்சத்தையும், ஞான ஒளி பெற்ற குருமார்களின் ஞானத்தையும் தன்னுள் கொண்டுள்ளன, அவை என் இருப்பைத் தொடும் சக்திவாய்ந்த அதிர்வுகளுடன் எதிரொலிக்கின்றன.” என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

—பி.என்., ஜார்க்கண்ட்

“YSS ஆசிரமம் அல்லது தியான மையத்திலிருந்து வெகு தொலைவில் வசித்தாலும், YSS சன்னியாசிகள் மற்றும் பிற பக்தர்களுடன் கூட்டுத் தியானங்களில் சேரவும், ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்கவும் நான் எப்போதும் ஏங்கியுள்ளேன். ஆன்லைன் தியான கேந்திரா எனது இந்த விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது. நன்றி!”

—பி.கே., தமிழ்நாடு

குருதேவரின் பணி தொடர்ந்து விரிவடைந்து, மகிழ்ச்சியான சவால்களையும், சேவைக்கான நிறைய வாய்ப்புகளையும் வழங்குகிறது. பல பக்தர்கள் YSS பணிகளில் பங்காற்றும் வழிகளைப் பற்றி அடிக்கடி விசாரிக்கின்றனர். குரு பூர்ணிமா புனித தருணத்தில், குருதேவரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளைப் பரப்புவதற்கு நன்கொடை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் அளிக்க விரும்பினால், YSS நன்கொடை வலைப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பத் தேர்விலிருந்து “குரு பூர்ணிமா நன்கொடை” ஐத் தேர்ந்தெடுக்கவும். உண்மையான பாதையை ஆர்வத்துடன் தேடுபவர்களிடம் பரமஹம்ஸரின் கிரியா யோகச் செய்தியைப் பரப்புவதில் உங்கள் மதிப்புமிக்க உதவி முக்கிய பங்காற்றுகிறது.

உங்கள் நிதிரீதியான பங்களிப்பு மட்டுமல்ல, உங்கள் ஆன்மீக மற்றும் லௌகீக வாழ்க்கைகளுக்கு இடையில் சமநிலையைக் கண்டறிய குருதேவரின் போதனைகளைப் பயன்படுத்தும் பங்களிப்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. கூடுதலாக, உலகில் அதிக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான உங்கள் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தவை. நாம் அனைவரும் இணைந்து தொடர்ந்து நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி குருதேவரின் ஞான ஒளியை பகிர்ந்து கொள்வோம்.

இந்த அருமையான தருணத்தை கொண்டாட நாம் தயாராகும்போது, பரமஹம்ஸரின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம்: “ஒரு குருவானவர், மனிதர்களுக்கிடையில், கொடுப்பவர்களில் மிகச் சிறந்தவர். இறைவனைப் போலவே, அவருடைய பெருந்தன்மைக்கும் எல்லையே இல்லை.”

குருதேவரின் ஆசிரமங்கள் மற்றும் தியான மையங்களில் சேவை புரியும் நாங்கள் அனைவரும், உங்கள் உடல், மன நலத்திற்கான எங்கள் தினசரி பிரார்த்தனைகளில் உங்களை மிகவும் நெருக்கமாக வைத்திருக்கிறோம். உங்கள் தெய்வீக நட்பை மிகவும் மதிக்கிறோம், மேலும் உங்களுக்கு ஆன்மீக சேவை செய்ய கிடைத்த வாய்ப்புக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இறைவன் மற்றும் அருட்பேறு பெற்ற நம் குரு பரம்பரை குருமார்களின் தொடர்ச்சியான காக்கும் இருப்பை நாம் அனைவரும் உணர்வோமாக!

தெய்வீகத் தோழமையில்,

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

இதைப் பகிர