பரமஹம்ஸ யோகானந்தரின் நினைவு நாணயத்தை நிதியமைச்சர் வெளியிட்டார்

6 நவம்பர், 2019

இந்திய அரசு பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவரது நினைவாக ஒரு சிறப்பு ₹125 நாணயத்தை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது (இது இந்தியாவில் 2018 இல் தொடங்கி இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது). அக்டோபர் 29, 2019 அன்று புது தில்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமை வகித்தார். அவருடன் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு அனுராக் தாக்கூர் மற்றும் கலாச்சாரச் செயலர் திரு அருண் கோயல் மற்றும் பல அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சர் ஸ்ரீமதி. நிர்மலா சீதாராமன் (நடுவில்), நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாக்கூர் (வலமிருந்து இரண்டாவது), கலாச்சார செயலர் ஸ்ரீ அருண் கோயல் (வலது), சுவாமி விஸ்வானந்தா (இடமிருந்து இரண்டாவது), மற்றும் சுவாமி ஸ்மரணானந்தா (இடது) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் புது தில்லியில், அக்டோபர் 29, 2019 அன்று, பரமஹம்ஸ யோகானந்தரைக் கௌரவிக்கும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.

நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது கருத்துக்களில், பரமஹம்ஸ யோகானந்தரை உலக நல்லிணக்கத்தின் உலகளாவிய செய்தியைக் கொண்டு வந்த ஒரு “மிகச் சிறந்த யோகி” என்று ஒப்புக்கொண்டார்.” நம் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் நல்லிணக்கத்தைக் கொண்டு வந்த இந்த பிரபஞ்சத்தின் சிறந்த மகானைப் பற்றி இந்தியா மிகவும் வலுவாக உணர்கிறது,” என்று அவர் கூறினார்.

இப்புதிய நாணயத்தை நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களிடமிருந்து யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பின் தலைமைக் குழு உறுப்பினர் சுவாமி விஸ்வானந்தா மற்றும் இந்தியாவின் யோகதா சத்சங்க சொஸைடியின் துணைத் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா அவர்களும் பெற்றுக்கொண்டனர். இந்தியாவின் சிறந்த ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தரின் பங்கை இந்திய அரசாங்கம் அங்கீகரித்ததற்கு அவர்கள் இருவரும் தமது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் சுவாமி சிதானந்த கிரியின் கடிதத்தையும் சுவாமி விஸ்வானந்தா படித்தார். (இந்தச் செய்தியின் முழு உரையை கீழே காண்க.) வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க பல ஒய் எஸ் எஸ் பக்தர்கள் மற்றும் பொது மக்களும் வந்திருந்தனர்.

இந்த நினைவு நாணயம் பரமஹம்ஸ யோகானந்தருக்கு இந்திய அரசு முறையாக அஞ்சலி செலுத்திய மூன்றாவது முறையாகும். இந்தியாவிற்கும் உலகிற்கும் அவர் ஆற்றிய ஆன்மிகப் பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசு 1977 ஆம் ஆண்டு, ஸ்ரீ யோகானந்தர் மறைந்த இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், மற்றும் 2017 ஆம் ஆண்டில், யோகதா சத்சங்க சொஸைடியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் இருமுறை நினைவு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது .

பரமஹம்ஸ-யோகானந்தர்-நினைவு நாணயம்_SRN9105-1

பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு 125 ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட புதிய நாணயத்தின் முன்னும் பின்னும் காட்சி. இந்தியாவில் பரமஹம்ஸாஜியின் செய்தி மற்றும் போதனைகளின் பெரும் பயன்களை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களுக்கு நிதியுதவி அளித்த ஒரு பெரிய மானியத்துடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு தொடங்கி இந்திய அரசாங்கத்தால் இந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நினைவு நாணயத்திற்கான திட்டங்கள் முதன்முதலில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு அக்டோபர் 29, 2019 அன்று நாணயத்தின் வெளியீட்டில் பலனளித்தது.

நினைவு நாணயம் வாங்குவதற்கு கிடைக்கும்

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நினைவு நாணயங்கள் விரைவில் வாங்குவதற்கு கிடைக்கும். அவற்றை எவ்வாறு வாங்குவது என்பது குறித்த தகவலை அது கிடைத்தவுடன் பகிர்வோம். 

சுவாமி சிதானந்த கிரியின் செய்தியின் முழு உரை, அக்டோபர் 29, 2019

ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் கிரியாபன் சேவக் லீக் துவக்கத்தின் போது சுவாமி சித்தானந்த கிரி

“நாம் ஒரே இறைவனின் பிள்ளைகள், நம் பரஸ்பர நல்வாழ்வுக்காக நட்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற நித்திய உண்மையின் அடிப்படையில் அனைத்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வைப் பரப்ப பரமஹம்ஸர் முயன்றார்.” – சுவாமி சிதானந்த கிரி

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படும். இந்நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எமது அன்புகனிந்த வாழ்த்துக்கள். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் பக்தர்கள் சார்பாகவும், “வசுதைவ குடும்பகம்” (“உலகம் ஒரே குடும்பம்”) என்ற இலட்சியத்தைப் பகிரும் அனைவரின் சார்பாகவும், மாண்புமிகு நிதியமைச்சருக்கு நன்றி கூறுவதை பாக்கியமாகக் கருதுகிறேன். திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் – மற்றும் இந்திய அரசு – பண்டைய இந்தியாவின் ஆன்மீக பொக்கிஷங்களை உலகிற்கு கொண்டு வருவதற்காக இறை ஆகினையால் நியமிக்கப்பட்ட சிறந்த சன்னியாசிகளில் ஒருவருக்கு இந்த அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேற்கில் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பரமஹம்ஸர் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் நிறுவனர் மற்றும் குருதேவர், ஜகத்குருமார்களின் பரம்பரையைச் சேர்ந்தவர் – உலக ஆசிரியர்களின் செய்தி உலகளாவியது, தேசிய மற்றும் மத எல்லைகளைத் தாண்டி, ஆன்ம அனுபூதியையும், இந்தியாவின் இதயத்தையும் உள்ளடக்கியது.

பரமஹம்ஸர், நாம் ஒரே இறைவனின் குழந்தைகள் என்ற நிரந்தர உண்மையின் அடிப்படையில் அனைத்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வையும் , மேலும் நம் பரஸ்பர நல்வாழ்வுக்காக நட்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதைப் பரப்ப முயன்றார். ஒவ்வொரு ஆன்மாவிலும் ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத்தைக் காண்பதன் முக்கியத்துவத்தையும் மேலும் இறைவனின் படைப்புகள் அனைத்தையும் மரியாதையுடன் நடத்துதலையும் அவர் வலியுறுத்தினார். அந்த இலட்சியத்திற்கு இணங்க, அவர் தனது சீடர்களை, மனிதகுலத்தை தம்மில் ஒரு பெரும் பகுதியாக நினைத்து சேவை செய்வதன் மூலம் தமது அன்பை விரிவுபடுத்துவதுடன் தமது உணர்வுநிலைகளையும் விரிவுபடுத்த முடியும் என ஊக்குவித்தார். மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என ய் எஸ் எஸ் பக்தர்கள் நடத்தும் பல்வேறு தொண்டுகள் , மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் போன்றவை அந்த இலட்சியத்தின் வெளிப்பாடுகளாகும்.

நமது குருதேவருக்கு இடப்பட்ட தெய்வக்கட்டளை மனிதத்திற்கான மிகப்பெரும் சேவையான இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் மிகப் புனிதமான கிரியா யோக விஞ்ஞானத்தை உலகம் முழுவதும் பரப்புதலும், அதன் விசுவாசமான பயிற்சியின் மூலம், உலகெங்கிலும் உள்ள இறைப் பசியுள்ள ஆன்மாக்கள் இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அனுபவத்தைப் பெறச் செய்வதுமாகும். அவருடைய போதனைகள் மதம், சாதி, இனம் மற்றும் தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மனமார இறைவனை தேடுபவர்களுக்குக் கிடைக்கின்றன, ஏனென்றால் நாம் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அனைத்து உயர்ந்த மதங்களின் நோக்கமும் கடவுளை உணர்தல் என்ற பொதுவான இலக்கை நோக்கி அனைவரையும் வழிநடத்துவதாக பரமஹம்ஸர் உறுதியாக நம்பினார். ஆழ்மனத் தியானத்தில் இறைவனுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் உணர்வுப்பூர்வமாக ஒன்றுதலின் மூலமும், அவரது குழந்தைகளும் ஒருவருக்கொருவர் தங்கள் பிணைப்பை ஆழமாக உணர்வதோடு உலகம் முழுவதும் பெரும் இணக்கத்தை ஏற்படுத்துவர் என்பதை பரமஹம்ஸர் தீர்க்க தரிசனமாக அறிந்திருந்தார்.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் இந்த நினைவு நாணயம் வெளியிடப்பட்டது, அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் தெய்வீகத்தை உணரும் உயர்ந்த இலக்கை நோக்கிய மனிதகுலத்தின் பயணத்தில் ஒரு மைல்கல்லை சரியான நேரத்தில் அங்கீகரிக்கிறது.

அவரது உலகளாவிய குடும்பத்தில் அவரது இணக்கமான செல்வாக்கை பரப்பும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக,

சுவாமி சிதானந்த கிரி

தலைவர், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்

இதைப் பகிர