10 மார்ச், 2023

உலகளாவிய தொற்றுநோயின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ல் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து YSS/SRF குடும்பத்திற்கும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களின் புதிய கதிர்களைக் கொண்டு வந்தது. ஆம், 2023 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப்பின் ஆன்மீக முதல்வரும் தலைவருமான ஸ்வாமி சிதானந்தகிரியின் இந்திய வருகையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். ஸ்வாமிஜி தனது எல்லையற்ற அன்பு, இரக்கம் மற்றும் ஞானவார்த்தைகளால் பக்தர்களின் இதயங்களைத் கவர்ந்தார், இது அவர்களின் ஆன்மீக வாழ்க்கையை உயர்த்தியது மற்றும் அவரது பாதையைக் கடந்த ஒவ்வொருவரிடமும் தெய்வீக ஆசைகளைத் தூண்டியது. ஒரு மாத கால சுற்றுப்பயணத்தின் போது, ஸ்வாமி சிதானந்தர் நொய்டா, ராஞ்சி மற்றும் தக்ஷிணேஸ்வரில் உள்ள YSS ஆசிரமங்களுக்குச் சென்றார், அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை சத்சங்கங்களை நடத்தினார் மற்றும் பல சிறப்பு நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார். இருப்பினும், ஸ்வாமிஜியின் சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சம் ஹைதராபாத் அருகே நடைபெற்ற ஐந்து நாள் YSS சங்கம் ஆகும். இந்தியா முழுவதிலும் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும் 3,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்ஹா சாந்தி வனம் வளாகத்தில், மரகதப் பசுமையான புல்வெளிகள், துடிப்பான மலர்கள், அமைதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் நிழல் தரும் மரங்களின் வரிசைகள் ஆகியவற்றுடன் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சங்க பங்கேற்பாளர்கள் தினசரி காலை மற்றும் மாலை குழு தியானங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், கீர்த்தனை மற்றும் YSS தியான உத்தி மறுஆய்வு வகுப்புகளில் கலந்து கொண்டனர். ஸ்வாமி சிதானந்தஜியுடன் மூன்று மணி நேர சிறப்பு தியானம் சங்கத்தின் சிறப்பம்சமாகும்.

தொடக்க அமர்வின்போது, ஸ்வாமி சிதானந்தஜி வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் நமது மிக உயர்ந்த திறனை அடைவது குறித்து ஊக்கமளிக்கும் சொற் பொழிவாற்றினார். “நமது தெய்வீக மற்றும் மரியாதைக்குரிய சத்குரு பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசீர்வாதத்துடன் பயிற்சி செய்யப்பட்ட கிரியா யோகா தியானம் வழங்கிய தெய்வீக உணர்வில் பக்தர்கள் அடைக்கலம் மற்றும் நித்திய தஞ்சம் அடைய வேண்டும்” என்று ஸ்வாமிஜி வலியுறுத்தினார். ஸ்வாமிஜி தனது நிறைவு சத்சங்கத்தில், பங்கேற்பாளர்களை தினசரி தியானப் பயிற்சியின் மூலமும், தெய்வீகத்துடன் நெருக்கமான உறவை வளர்ப்பதன் மூலமும் சங்கத்தின் ஆசீர்வாதங்களை மீண்டும் எடுத்துச் செல்லுமாறு ஊக்குவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் பண்டைய நாகரிகமும் தெய்வீக ஞானமும் ஆற்றி வரும் பங்கை அவர் பாராட்டினார். ஸ்வாமி சிதானந்தர், “இந்தியாவின் ஆன்மீகத்தின் பொற்காலத்திற்கும் வளர்ந்து வரும் உலகளாவிய நாகரிகத்திற்கும் இடையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு வாழும் இணைப்பாக மாற முடியும்” என்று விளக்கினார். ஒவ்வொரு ஆத்மாவையும் மிகுந்த பாசத்துடன் அரவணைக்க இறைவன் ஆவலுடன் காத்திருக்கும் கருவறைக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் அடிப்படையில் பல மூத்த YSS மற்றும் SRF சன்னியாசிகளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஊக்கமளிக்கும் சொற்பொழிவுகளை வழங்கினர். இந்த வகுப்புகளில் உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் “மன்னிப்பின் குணமளிக்கும் சக்தி,” “அக மற்றும் புற வாழ்க்கையில் அமைதியின் இளவரசராக இருத்தல்,” “இறைவன் உங்கள் சிந்தனை அனுமதிக்கும் அளவுக்கு உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்,” மற்றும் “தியானத்தின் மூலம் வலிமை மற்றும் ஞானத்தின் உள் வாயிலைத் தட்டுதல்.”

நான்கு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட புனிதமான கிரியா யோகா தீட்சை விழா சங்கத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த இடங்கள் அனைத்திலும் குருமார்களின் அருளால் மலர் தூவி ஆசிர்வதித்தார் ஸ்வாமி சிதானந்தர்.

சங்கத்தின் போது ஸ்வாமிஜி பல YSS பிரசுரங்களை வெளியிட்டார். ஸ்வாமி சிதானந்தர் மற்றும் பிற சன்னியாசிகளின் உத்வேகமூட்டும் சொற்பொழிவுகள் மற்றும் தினசரி தியானங்கள் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் இன்னும் YSS யூடியூப்சேனலில் பார்க்கக் கிடைக்கின்றன.

குருசேவையின் பண்டைய இந்திய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில், நூற்றுக்கணக்கான YSS தன்னார்வலர்கள் இந்த மகத்தான நிகழ்வை ஏற்பாடு செய்ய சன்னியாசிகளுடன் பல மாதங்களாக அயராது உழைத்தனர். சங்கம் நடைபெற்ற காலத்தில், பக்தர்களுக்கு; உள்ளக உணவு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கும் வசதி; விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் அருகிலுள்ள ஓட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு சென்று வர போக்குவரத்து; உதவி மையம் மற்றும் மருத்துவ வசதிகள்; மூத்த சன்னியாசிகளின் தனிப்பட்ட ஆன்மீக ஆலோசனைகள், தன்னார்வ சீடர்கள் சங்கம் (வி.எல்.டி) மற்றும் கிரியா யோகா தீட்சை பதிவு சாவடிகள்; பரந்த அளவிலான YSS வெளியீடுகளைக் காட்சிப்படுத்தும் புத்தக ஸ்டால்கள்; மற்றும் பக்தர்களுக்கு ஓய்வெடுக்கும் பந்தல்கள் என பல வசதிகள் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தில் நடைபெற்ற YSS சங்கம், பக்தர்களை ஆன்மீக ஆர்வத்துடன் புத்துணர்ச்சியடையச் செய்து, அவர்களின் இதயங்களில் தெய்வீக அன்பின் சுடர்களை மீண்டும் உயிர்ப்பித்த ஒரு செழுமையான அனுபவமாக இருந்தது.

இதைப் பகிர