நினைவேந்தல்: ஸ்வாமி சாந்தானந்த கிரி

05 ஜனவரி, 2023

60 ஆண்டுகளுக்கும் மேலாக பரமஹம்ஸ யோகானந்தரின் சன்னியாசச் சீடரான நமது மதிப்பிற்குரிய ஸ்வாமி சாந்தானந்த கிரி, லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகத்தில் 2023 ஜனவரி 4 புதன்கிழமையன்று (பசிபிக் ஸ்டேண்டர்ட் நேரம்) அமைதியாக காலமானார்.

நினைவேந்தல் நிகழ்ச்சி

எண்ணற்ற உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் உத்வேகம் அளித்து, தன்னலமின்றி நம் குருதேவரின் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்ட இந்த அன்புக்குரிய சீடரை போற்றும் வகையில், ஜனவரி 26, வியாழக்கிழமை ஸ்வாமி சாந்தானந்த கிரி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, ராஞ்சி ஆசிரமத்தில் இருந்து உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சேவை ஸ்வாமி சுத்தானந்த கிரி ஆல் வழிநடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்ற YSS ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீமதி ரத்னா சதுர்வேதி மற்றும் டாக்டர் கே.வி.ராமாராவ் ஆகியோரின் புகழஞ்சலிகளும் அடங்கும்.

“ஆனந்தத்தின் ஓர் காவியம்”

மற்ற புகழஞ்சலிகளைத் தொடர்ந்து, YSS / SRF தலைவரும் ஆன்மீகத் முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, ஸ்வாமி சாந்தானந்தாவைப் பற்றி நெகிழ்ச்சியான வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது அஞ்சலியிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு:

“அவர், -நான் உட்பட-நம்மில் பலருக்கும், மிகவும் அன்பு நண்பராக இருந்த நமது அன்புக்குரிய ஸ்வாமி சாந்தானந்தா அவர்களின் உத்வேகம் மற்றும் தெய்வீக குணங்களை நினைத்து என் இதயம் நிறைந்துள்ளது.

“அவரது வாழ்க்கையையும், பக்தர்கள் பகிர்ந்து கொண்ட பல கதைகளையும், சம்பவங்களையும், நினைவுகளையும் எண்ணிப் பார்க்கையில், நமது தெய்வீக குருதேவர் தனது பணியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைப் பற்றி நினைவு கூர்ந்தபோது, ‘இது ஆனந்தத்தின் ஓர் காவியமாக இருந்தது’ என்று கூறிய ஒன்றில் என் மனம் மீண்டும் மீண்டும் லயித்தது. நம் அன்புக்குரிய ஸ்வாமிஜி ஏற்படுத்திய அற்புதமான தாக்கத்திற்கான அஞ்சலிகளைக் கேட்கும்போது அதை உணராமல் இருக்க முடியாது. 1952-ல் பரமஹம்ஸர் தனது சரீரத்தை விட்டு வெளியேறியபோதும் அந்த ‘ஆனந்த காவியம்’ நிற்கவில்லை. அந்தக் காவியம் இப்போதும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது; நமது அன்புக்குரிய ஸ்வாமிஜியைப் பற்றிய மறக்க முடியாத மற்றும் ஊக்கமளிக்கும் அத்தியாயம் நிச்சயம் அந்த காவியத்தில் இருக்கும்.

“ஒரு சீடராக, கிரியாபனாக, யோகியாக, இறைவனை நேசிப்பவராக, குருதேவரின் பக்தனாக – அவர் எடுத்துக்காட்டிய உத்வேகம் பற்றி நாம் சிந்திக்கும்போது, தன் சுயத்தைப் பற்றிய நினவற்று – இறைவனும் குருவும் அவர்களின் தெய்வீக அன்பு, ஞானம், மகிழ்ச்சி மற்றும் உத்வேகத்துடன் பாய்வதற்கு ஏதுவாக தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும். நம் அன்புக்குரிய ஸ்வாமிஜியை பிரதிபலிக்கும் அந்த குணம் இருந்தால், ஒவ்வொரு பக்தரும் எவ்வளவு அற்புதமான மற்றும் அழகான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை உணர முடிகிறது: தன் சுயத்தை பற்றி நினைவு கொள்ளாமல் இருப்பதன் மூலம் வரும் இறை சக்தி என்பது ஸ்வாமிஜீஸ் அல்லது சன்னியாசிகள் மட்டுமே உணரக்கூடிய ஒன்றல்ல. இந்த வழியைப் பின்பற்றும் ஒவ்வொரு பக்தருக்கும் இது பொருந்தும். இறைவனிடமும் குருவிடமும் நாம் ‘என் சித்தம் அல்ல, உன் சித்தமே நிறைவேறும்; உமது சித்தத்தின்படி என்னைப் பயன்படுத்துங்கள்,’ என்று எவ்வளவு அதிகமாகச் சொல்வோமோ அவ்வளவு அதிகமாக அதை உணர்வோம் ஸ்வாமிஜியின் முழு வாழ்க்கையும் இந்த இறை உணர்வின் ஆன்மீக சக்தியை தொடர்ந்து உறுதிப்படுத்துவதாகவும், வலியுறுத்துவதாகவும் இருந்தது.”

YSS/ SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி YSS ராஞ்சி ஆசிரமத்தில் நடைபெற்ற ஸ்வாமி சாந்தானந்த கிரியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசுகிறார்.

ஸ்வாமி சாந்தானந்த கிரி இறைவன் மீதான அவரது முனைப்புடனான பக்திக்காகவும், பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகளின் தெளிவான மற்றும் விவேகமான விளக்கங்களுக்காகவும் YSS/SRF பக்தர்களாலும் சன்னியாசிகளாலும் மிகவும் போற்றப்பட்டார் மற்றும் அவர்கள் இதயங்களை ஈர்த்தார்.

இந்தியாவில் பரமஹம்ஸ யோகானந்தரின் பணிகளான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) க்கு அவர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றியதற்காக அவர் குறிப்பாக நினைவுகூரப்படுவார். அங்கு அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து பணியாற்றினார், YSS இன் நிர்வாகத்தை மேற்பார்வையிட்டார் மற்றும் அதன் வெளியீடுகள், கல்வி, சட்டம் மையத்துறை, மற்றும் நிதித் துறைகள் ஆகியவை அவருடைய பங்களிப்புகளில் சில.

ஆரம்பகால வாழ்க்கை

ஜூலை 28, 1932 அன்று கலிபோர்னியாவின் அந்தியோகியாவில் பால் ஸ்டீல் ஃப்ளீட் வுட் என்ற இயர் பெயருடன் பிறந்த ஸ்வாமி சாந்தானந்தா மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்தார், 1950 இல் கலிபோர்னியாவின் கான்கார்டில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1954 ஆம் ஆண்டில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெமிகல் எஞ்சினியரிங் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், மேலும் கொலராடோவின் கிரீலியில் உள்ள கொலராடோ ஸ்டேட் காலேஜ் இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அற்புதமான கல்விப்படிப்புகளை மேற்கொண்ட போதிலும், ஸ்வாமி சாந்தானந்தாவின் முதன்மையான விருப்பம் இறைவனை உணர்ந்த குருவின் கீழ் ஒரு ஆசிரமத்தில் சேர வேண்டும் என்பதாகும், இது 1960 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள SRF சன்னியாசி சமூகத்தில் நுழைய வழிவகுத்தது. துறவறம் மேற்கொள்வதற்கான அவரது விண்ணப்பம் குறித்து அவர் எழுதினார்: “என் குறைவான திறமைகளுடன் இயன்ற அளவு சிறந்த திறன்களில் நான் இறைவனைத் தேட வேண்டும்.”

இந்தியாவில் கழித்த ஆண்டுகள்

1963 ஆம் ஆண்டில் SRF மதர் சென்டரில் பிரம்மச்சரிய சபதத்தைப் ஏற்றுக் கொண்ட பிறகு, சாந்தானந்தா ஸ்ரீ தயா மாதாஜியால் YSS ராஞ்சி மற்றும் தக்ஷிணேஸ்வர் ஆசிரமங்களில் இருப்பதற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் ஓய்வின்றியும் மகிழ்ச்சியாகவும் பணியாற்றினார் (2011 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள SRF சன்னியாச ஆசிரம மையங்களுக்குத் திரும்பும் வரை அங்கேயே இருந்தார்). ஜூலை 4, 1971 அன்று சன்னியாச இறுதி சபதம் எடுத்துக் கொண்டார்.

ஸ்வாமி சாந்தானந்தா இந்தியாவில் இருந்த பல ஆண்டுகளில், ஸ்ரீ தயா மாதாவிடமிருந்து அடிக்கடி வழிகாட்டுதலையும் வழிநடத்தலையும் பெற்றார். இந்தியாவுக்கான அவரது பல பயணங்களின் போது அவர் மற்றும் பிற உதவியாளர்களுடன் பயணம் செய்தார், மேலும் தயாமாதா அவரது கவனத்துடன் கூடிய உதவியை பெரிதும் சார்ந்திருந்தார். மேலும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை லாஸ் ஏஞ்ஜலீஸ் சென்று தயா மாதாவைச் சந்தித்து, இந்தியாவில் பரமஹம்ஸரின் பணிகளின் வளர்ச்சி தொடர்பான முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதித்தார். இவ்வாறாக, YSS ஐ இன்றுள்ள வலுவான ஆன்மீக அமைப்பாக மாற்றுவதில் ஸ்வாமி சாந்தானந்தா ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளார், இதில் இப்போது செழித்து வளர்ந்து வரும் YSS சன்னியாச பரம்பரையை ஒரு உறுதியான அடித்தளத்தில் அமைக்க உதவியதும் அடங்கும். தயா மாதாஜியின் வழிகாட்டுதலின் கீழ், அவர் 1972 முதல் YSS இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினார், மேலும் 2011 வரை இணை பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளராகவும் பணியாற்றினார். 2020 வரை YSS இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.

ஸ்வாமி சாந்தானந்தா (இடதுபுறம்) 1972 இல் ஸ்வாமி ஷரணானந்தா, ஸ்ரீ தயா மாதா, ஸ்ரீ ஆனந்த மாதா மற்றும் ஸ்வாமி அச்சலானந்தா ஆகியோருடன் (இடமிருந்து வலமாக) இமயமலை சிகரங்களை பார்க்கும் காட்சி.
1991 ஆம் ஆண்டில் ஸ்வாமி சாந்தானந்தாவுடன் ஸ்ரீ தயா மாதா மற்றும் YSS பொதுச் செயலாளர் ஸ்ரீ சோவன் சி. இந்த YSS பிரதிநிதிகள் ஆறு வாரங்கள் SRF சர்வதேச தலைமையகத்தில் தங்கியிருந்து, ஸ்ரீ தயா மாதா மற்றும் SRF/YSS இயக்குநர்கள் குழுவின் பிற உறுப்பினர்களுடன் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் இந்தியாவில் பரப்புவது குறித்து சந்தித்துப் பேசினர்.

இந்தியாவில் பரமஹம்ஸரின் பணியின் வளர்ச்சியை நினைவு கூர்ந்த ஸ்வாமி சாந்தானந்தா, “தயா மாதாஜியின் ஐந்து வருகைகளின் முக்கிய நோக்கம் ஒரு உறுதியான அடித்தளத்தில் YSS ஐ நிறுவுவதாகும். இருப்பினும், தயா மாதா முதன்முதலில் [1959 இல்] இந்தியாவில் தரையிறங்கியபோது இந்த உன்னத முயற்சியின் வெற்றி உறுதி செய்யப்படவில்லை. பல நிர்வாக சிக்கல்கள் தீர்க்க வேண்டியிருந்தது என்பதை சில வாரங்களிலேயே அவர் உணர்ந்தார். சரியான நபர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது.”

தயா மாதாஜியின் தொடர்ச்சியான உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் YSS க்கு புத்துயிர் அளித்த ஹன்சா ஸ்வாமி ஷியாமானந்த கிரி (1911 – 1971) என்று பின்னர் அழைக்கப்பட்ட ஸ்ரீ பினய் நாராயண் துபே “சரியான நபராக” இருப்பார் எனத் தான் கண்டறிந்ததை ஸ்வாமி சாந்தானந்தா விளக்கினார். அந்த நேரத்தில், ஸ்வாமி ஷியாமானந்தரின் மறைவுக்குப் பிறகு YSS இன் மாற்றத்தில் தான் ஆற்றப் போகும் விலைமதிப்பற்ற பங்கை ஸ்வாமி சாந்தானந்தா உணரவில்லை: “எங்களில் சில இளைஞர்கள் யோகாச்சார்யாரின் (ஸ்வாமி ஷியாமானந்தா) உதவியாளர்களாக இருந்தனர். அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் பணிக்கான அர்ப்பணிப்பிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். 1971-ல் அவர் மறைந்த பிறகும், YSS இன் வெற்றிக்காக, அவரால் மிகவும் தெளிவாகத் தொடங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழியை செயல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.”

ஸ்வாமி ஷியாமானந்தாவின் மறைவுக்குப் பிறகு, YSS இன் அன்றாட செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திற்கான முதன்மை பொறுப்பு ஸ்வாமி பவானந்த கிரி (2010 இல் மறைந்தார்) மற்றும் ஸ்வாமி சாந்தானந்தா கிரி ஆகிய இரண்டு இளம் சன்னியாசிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனது பல பொறுப்புகளில், YSS பொதுச் செயலாளர் என்ற முறையில், ஸ்வாமி சாந்தானந்தா இந்திய அரசு மற்றும் பிற அமைப்புகளுடன் எண்ணற்ற அதிகாரப்பூர்வ தொடர்புகளில் YSS பிரதிநிதியாக பணியாற்றினார்.

1993-ல் கல்கத்தாவைச் சேர்ந்த அன்னை தெரசா வறுமையில் வாடும் வன்முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஸ்வாமி சாந்தானந்த கிரியின் வழிகாட்டுதலின் கீழ், கலவரத்தில் சேதமடைந்த பல வீடுகளை YSS சீரமைத்தது. YSS நிவாரணப் பணிகளைத் தொடங்கி வைத்த அன்னை தெரசா, “இறைவா, என்னை உனது அமைதிக்கான கருவியாக ஆக்குவாய்” என்ற புனித பிரான்சிஸின் அழகான பிரார்த்தனையைப் வாசிக்குமாறு ஸ்வாமி சாந்தானந்தாவைக் கேட்டுக்கொண்டார் (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்).

YSS கிட்டத்தட்ட நூறு வீடுகளுக்கு புதிய கூரைகளைக் கட்டியதைத் தொடர்ந்து அன்னை தெரசா பின்வரும் பாராட்டுக் குறிப்பை அனுப்பினார்: “அன்பிற்குரிய ஸ்வாமி சாந்தானந்த கிரி, தங்ராவில் உள்ள ஏழைகளுக்கு அவர்களின் வீடுகளை சீரமைப்பதன் மூலம் நீங்கள் காட்டிய அன்பிற்காக இறைவன் உங்களை நேசிக்கிறான். உங்களுக்கும் உங்களுக்கு உதவிய அனைவருக்குமான எனது பிரார்த்தனையே அதற்கான எனது நன்றி. இறைவன்ஆசீர்வதிக்கட்டும். எம்.தெரசா, எம்.சி.”

“அனைவரிடமும் அன்பு செலுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்”

2010 ஆம் ஆண்டில் தனது 50 வது ஆசிரம ஆண்டு நிறைவு தினத்தில் ஸ்ரீ தயா மாதா கூறினார்: “நீங்கள் இறைவனையும் குருதேவரையும் உறுதியான உற்சாகத்துடனும் விசுவாசத்துடனும் நேசித்து சேவை செய்துள்ளீர்கள், இத்தனை ஆண்டுகளாக ஒரு சன்னியாசியின் வாழ்க்கையை முழு மனதுடன் வாழ்ந்ததற்காக அவர்கள் உங்களை இடைவிடாமல் ஆசீர்வதிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.”

SRF துணைத் தலைவரும் YSS/SRF இயக்குநர்கள் குழுவின் உறுப்பினருமான ஸ்வாமி விஸ்வானந்த கிரி நினைவு கூர்ந்தார், “YSS இவ்வளவு அபரிதமான வளர்ச்சியை உணர்வதன் சில முக்கிய காரணங்களை அடையாளம் காண முயன்றபோது, ஸ்வாமி சாந்தானந்தா உட்பட பல மூத்த YSS சன்னியாசிகளிடம் அவர்களின் எண்ணங்களைக் கேட்டேன். YSS பணியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியையும் நிர்வகிப்பதில் அவரது பரந்த அனுபவத்துடன், அவர் எனக்கு ஒரு நீண்ட மற்றும் விரிவான பகுப்பாய்வை வழங்குவார் என்று நான் எதிர்பார்த்தேன். மாறாக, அவர் அளித்த பதில் இதுதான்:

“‘நமது குருதேவரின் வழிகாட்டுதலின்படி, அனைவருக்கும் அன்பைக் கொடுப்பதற்கும், இறை அன்பை உணருவதற்கும், ஒவ்வொருவரிடமும் இறைவனின் இருப்பைக் காண்பதற்கும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இத்தனை வருடங்களாக தெய்வீக அன்னை மற்றும் குருதேவரின் முழுமையான பங்களிப்பு காரணமாக இது அனைத்தும் சிறப்பாக நடந்துள்ளது.’

“அது அற்புதமாக இல்லையா? ‘அன்பு மட்டும் தான் என் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்’ என்ற குருதேவரின் கூற்றில் உள்ளார்ந்துள்ள அறிவுறுத்தலை அவர் மனதில் கொண்டார்.”

சாசுவத பேரின்பமும் அமைதியும் நிறைந்த இறைவனிடத்து தனது குருவுடன் மீண்டும் இணைந்திருக்கும் நம் அன்புக்குரிய ஸ்வாமி சாந்தானந்தாவுக்கு நம் ஆழ்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

இதைப் பகிர