இந்தியாவில் உள்ள குருதேவரது அன்பர்களுக்கு ஸ்வாமி சிதானந்தகிரியிடமிருந்து ஊக்கமளிக்கும் மற்றும் பிரார்த்தனைகளின் உறுதியளிக்கும் செய்தி

24 ஏப்ரல், 2021

அன்பர்களே,

நமது அன்புக்குரிய இந்தியாவில் உள்ள உங்களில் பலர் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் பொழுது, இறைவனின் மாபெரும் ஒளியும், அருளாசிகளும் உங்களைச் சூழ்ந்து காப்பதாகவும், நமது உலகளாவிய குடும்பத்தைத் துன்புறுத்தும் இந்தப் பேரழிவு விரைவில் முடிவுறச் செய்கின்றதாகவும் நான் என் மனக் கண்ணில் காட்சிப்படுத்தியபடி உங்களுக்காக ஆழ்ந்த பிரார்த்தனை செய்கிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பெருந்தொற்று நோய் உங்கள் வாழ்க்கைகளிலும், சமுதாயங்களிலும் பல கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து என் இதயம் உங்களுக்காக வேதனைப்படுகிறது. உலகில் இத்தகைய சோதனைகள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. ஆனால், மனித இனத்தினால் தனக்குத் தானே உருவாக்கப்பட்ட, கண்ணுக்குப் புலனாகாத, ஒன்று திரட்டப்பட்ட, ஒட்டுமொத்த கர்ம வினைகளின் தாக்கம் இது. இருப்பினும், நாம் எத்தகைய இன்னல்களை எதிர்கொண்டாலும், இறைவனின் குழந்தைகளாகிய நாம், அவனுடன் இசைந்து இருந்தால், கண்களுக்குப் புலனாகாத அவனுடைய கரங்களும், அன்பான இருப்பும் என்றும் நம்முடன் இருப்பதைக் காண்போம். இந்த உண்மையை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான காலங்களில் அக அமைதியும் இறைவனின் அன்பும், ஆற்றலும் நம்மைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையையும் பேண வேண்டும். ஏனென்றால் அவன் தான் நமது மாபெரும் பாதுகாப்பான புகலிடம் – இடரிலிருந்து இறுதி பாதுகாப்புக்கும் குணப்படுத்தலுக்கும் இட்டுச் செல்லும் நித்திய வழிகாட்டி..

உங்கள் புற உறுதித்தன்மை அல்லது நல்வாழ்வை அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சூழலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், நம் அனைவரின் தந்தையாகவும் தாயாகவும் உள்ள எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இவ்விடத்தில், இத்தருணத்தில் இருக்கிறார் என உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் இந்த வார்ததைகளை ஆற்றலுடன் மீண்டும், மீண்டும் உறுதியாக உரைத்தபடி எந்த ஒரு அச்சத்தையோ அல்லது பாதுகாப்பின்மையையோ எதிர்கொள்ள வேண்டும். “நான் இறைவனின் இருப்பினால் பாதுகாக்ப்படுகிறேன். உடல் மனம், பொருளாதாரம், ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னை எவ்விதத் தீங்கும் அணுக முடியாது. ஏனெனில், நான் இறைவனின் இருப்பாகிய கோட்டையில் பாதுகாக்கப்படுகிறேன்.’

தியானம்தான் நமக்கு மாபெரும் பாதுகாப்பு, மேலும் இத்தகைய நெருக்கடி நிலையினையும் நாம் நமது ஆன்மாவிற்கு தோல்வியும் தீங்கும் இல்லாது கடந்துவிடலாம் என்பதற்கான மாபெரும் உறுதியும் ஆகும். நம் இதயங்களை நம்மால் இயன்றவரை இறைவனுக்காக சிறிது நேரமாவது, அடிக்கடி திறக்கும் பொழுது – அவனுடைய குணமளிக்கும் அன்பும் மற்றும் நிலைப்படுத்தும் ஞானமும் நம் வேதனையைத் தணிவித்து நம்மைப் பேணும், நமது அக ஆற்றலை புதுப்பிக்கும், நமது உணர்வு நிலையை உயர்த்தி எல்லா சந்தேகங்களையும், உறுதியின்மையையும் கடந்து செல்லச் செய்யும். இவ்வகையில், நாம் துணிவுடனும், எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஏற்ப செயலாற்ற வழிநடத்தும் உள்ளுணர்வின் தூண்டுதலாலும் நிறைந்து இருப்பதைக் காண்போம்.

எந்த ஒரு இன்னலையும் எதிர்கொள்ள சரியான அணுகுமுறையை குருதேவர் நமக்குத் தந்துள்ளார்:

எதிர்மறையான சூழ்நிலைகள் நடுவே அதற்கு மாறாக நேர்மறையாகவும், ஆக்கபூர்வமாகவும் எண்ணி செயல்படுங்கள். “திதிக்‌ஷா” பயிற்சி செய்யுங்கள்., அது என்னவெனில் மகிழ்ச்சியற்ற அனுபவங்களால் துவண்டு மனம் வருத்தப்படாமல் அவைகளை எதிர்கொள்வது. நோய் வரும் பொழுது, மனம் கலங்க அனுமதிக்காமல் சுகாதார விதிகளைக் கடைபிடியுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கலக்கமற்று இருங்கள்

அன்பிற்குரியவர்களே, நமது குருதேவரின் எல்லா ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகள் அனைவரும் என்னுடன் இணைந்து ஆழ்ந்து பிரார்த்தித்து, குணமளிக்கும் ஒளியையும், ஊக்குவிக்கும் அன்பான எண்ணங்களையும் இந்தியாவிலும் மற்றும் உலகெங்கும் உள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்புகிறார்கள் என்பதில் உறுதி கொள்ளுங்கள். இறைவனின் அருளும், ஆசிகளும் தேவைப்படுபவர்களுக்கு குணமளிக்கும் அதிர்வலைகளை அனுப்பும் எங்களுடைய பிரார்த்தனைகளுடன் தயவுசெய்து உங்கள் பிரார்த்தனைகளையும் தொடர்ந்து இணையுங்கள் நாம் ஒருவருக்கொருவர் உதவியும், நம்முடைய அமைதியான எடுத்துக்காட்டால் நம்மைச் சூழ்ந்து உள்ளவர்களை மேம்படுத்தியும். எல்லையற்ற மூலத்தின் ஆற்றல் மற்றும் துணிவிலிருந்து நமக்கு நாமே புத்துணர்ச்சியூட்டியும், இக்கடினமான காலத்தை வெற்றிகரமாகக் கடப்பதற்கு நாம் வழி காண்போம்.

இறைவன் மற்றும் குருமார்கள் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு, வழிகாட்டி உங்களையும் உங்கள் குடும்பங்களையும் பாதுகாப்பார்களாக,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர