“எ பெட்டர் லைஃப் த்ரூ த போர்டல்ஸ் ஆஃப் த நியூ இயர்” — பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு வழிகாட்டப்பட்ட தியானம்

10 ஜனவரி, 2023

இது “உங்கள் ஊழ்வினையைக் கட்டுப்படுத்துதல்” என்ற சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதி. முழு உரையையும் பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுதி 2- தெய்வீக் காதல் இல் வாசிக்கலாம்.

புது வருடத்தின் ஆரம்பத்துடன், நாம் தீர்மானமான முடிவுடனும் ஆன்மீக உறுதியுடனும் நாம் வாழ்க்கையின் புதிய சகாப்தத்தின் யுகத்தினுள் நுழைவோம்

என்னுடன் பிரார்த்தனை செய்யுங்கள்: “ஓ தந்தையே, புது வருடம் எனும் நுழைவாயிலின் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பான வாழ்க்கைக்குள் நுழைகின்றோம். அனைத்து பரிசுகளையும் வழங்கும் பெரும் கொடையாளியாகிய உன்னுடன் மிகச் சிறந்த தொடர்பு கொள்ளும் வருடமாக இந்த வருடம் விளங்கட்டும். எங்களது அனைத்து ஆசைகள் என்னும் அரியணை மீது அமர்ந்து கொண்டு எங்கள் வாழ்க்கையை எங்கள் அறிவுத்திறன் மூலம் வழிநடத்திக் கொண்டிருக்கும் ஒரே அரசனாக விளங்குவாய்.

“கடந்த வருடத்தில் எங்கள் ஆசைகள் பெரும்பாலும் எங்களை வழி தவறி இட்டுச் சென்றன. எங்களுடைய அனைத்து பேரார்வங்களும் இச்சமயம் முதல் உனது சித்தத்தோடு இசைவுடன் பொருந்தி இணக்கமாக இருக்குமாறு அருள் புரிவாயாக. ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாக, உளரீதியாக, அறநெறி ரீதியாக, ஆன்மீக ரீதியாக, உந்தன் உணர்வில் ஒரு புதிய விழித்தெழுதலாக இருக்க ஆசீர்வதிப்பாய்.

“ஓ தந்தையே! உனக்கும், எங்களை ஆசீர்வதித்துக் கொண்டும், எங்களை உன்னுடைய ராஜ்ஜியத்திற்கு இட்டுச் செல்ல அன்புடன் பேசி தூண்டிக் கொண்டிருக்கும் மகான்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகின்றோம் ஓம். ஓம். ஆமென்.

இது உங்களுக்கான எனது புது வருட வாழ்த்து: அமைதியும் நிரந்தர ஆனந்தமும் கொண்ட உங்கள் கனவுகளுக்கும் எட்டாத பிரதேசத்தை நீங்கள் அடைவீர்களாக. ஆகாயத்தில் நீங்கள் விடுவித்த திடமான நல்ல விருப்பம் எதுவாயினும் நிறைவேறுவதை உணர்வீர்களாக.

நாம் தியானம் செய்வோம்:  கடந்த வருடத்தில் நடந்த அழகான நிகழ்வுகளை நினைவு கூருங்கள். இருண்ட அனுபவங்களை மறந்து விடுங்கள். கடந்த வருடத்தில் நீங்கள் செய்த நல்லவற்றை புதுவருடம் என்னும் புதிய மண்ணில் விதையுங்கள். அதனால் அந்த உயிராற்றல் வாய்ந்த விதைகள் மேலும் நல்ல விதமாக விளையலாம்.

கடந்த கால துயரங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. கடந்த கால குறைபாடுகள் அனைத்தும் மறக்கப்பட்டு விட்டன. இறந்துவிட்ட அன்புக்குரியவர்கள் இறைவனில் அமரர்களாக வாழ்கிறார்கள். நாம் இப்பொழுது சாசுவதமான பெரும் வாழ்க்கையை வாழ்கிறோம். இதனை நாம் உணர்ந்து விட்டால் நாம் ஒருபொழுதும் மரணத்தை அறிய மாட்டோம். சமுத்திரத்தில் அலைகள் எழும், மறையும்; அவை மறைந்து விடும்பொழுது, அவை இன்னமும் சமுத்திரத்துடன் ஒன்றாக இருக்கின்றன. அதைப் போன்றே அனைத்தும் இறை இருப்பென்னும் சமுத்திரத்தில் இருக்கின்றன.

அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. மனத்தின் ஒவ்வொரு நிலையையும் இறைவனுடன் இணைத்து விடுங்கள். அலை தன்னைத் தானே சமுத்திரத்திலிருந்து பிரித்துக்கொண்ட பொழுது மட்டுமே அது தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும், தொலைந்து விட்டதாகவும், உணர்கின்றது. இடைவிடாது, நிலைபேறுடைய பெரும் வாழ்க்கையுடனான உங்களது தொடர்பை எண்ணி பாருங்கள். ஒப்புயர்வற்ற நிரந்தரமானவனுடன் உங்களது ஒன்றானதன்மையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

வாழ்வும் சாவும் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்கள். நீங்கள் நிரந்தர பெருவாழ்வின் ஒரு பகுதி. விழித்தெழுந்து உங்கள் உணர்வை இறைவனில் விரிவடையச் செய்யுங்கள். அதனால் நீங்கள் இந்த சிறிய உடலின் வரம்புக்கு உட்பட்டவர் என்ற உங்கள் கருத்து முடிவுக்கு வரும். இதன் மீது தியானம் செய்யுங்கள். அதை உணருங்கள்.

உங்கள் உணர்விற்கு சுற்றெல்லை இல்லை. லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நோக்குங்கள்: முடிவே இல்லை. இடப்பக்கம், மேலே, கீழே நோக்குங்கள்: முடிவே இல்லை, உங்கள் மனம் சர்வ வியாபகமானது, உங்கள் உணர்வு நிலை அளவற்றது.

என்னுடன் பிரார்த்தனை செய்யுங்கள்: “தெய்வத் தந்தையே! நான் இனிமேலும் கடந்த வருட உணர்வுநிலையினால் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. நான் உடலின் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் இருந்து விடுபட்டு விட்டேன். நான் நிரந்தரமானவன். நான் நிரந்தரத்தின் பாதாளத்தில் எனக்கு மேலே, கீழே, இடப்புறம், வலப்புறம், முன்புறம், பின்புறம் அனைத்தைச் சுற்றியும் நான் சர்வ வியாபகமாக இருக்கிறேன். நீயும் நானும் ஒன்றே.

“ஓ இறைவா, நாங்கள் உன்னையும் குருமார்களையும், அனைத்து மத மகான்களையும் வணங்குகின்றோம், மற்றும் ஒவ்வொரு தேசத்திலும் உள்ள அனைத்து ஆன்மாக்களுக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம், ஏனென்றால் அவர்கள் உனது பிரதிபிம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த புது வருடத்தில் இப்பூலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அமைதியை விரும்புகின்றோம். உமது பித்ருத்துவம் கீழ் அவர்களுடைய பொதுவான சகோதரத்துவத்தை அவர்கள் உணர்வார்களாக.

“அவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் அறிவை அளித்து அருளுங்கள், அதனால் அவர்கள் போர் புரிவதை கைவிட்டு, இந்த பூமியை தேவலோகம் ஆக்குவதற்கு ஒருவரோடு ஒருவர் அமைதியாக வாழ்வர். ஆன்மீக ரீதியாக எங்கள் வாழ்க்கையைப் புது மாதிரியாக அமைப்பதன் மூலம் உனது சொர்க்கத்தை இங்கே உருவாக்குவதற்கு நாங்கள் உதவி புரியவும், மற்றவர்களை இதே போன்று செய்வதற்கு உதாரணத்தின் மூலம் தூண்டுவதற்கும் எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாய்.

“எங்கள் தந்தையே நாங்கள் உன்னை நேசிக்கின்றோம், நாங்கள் அனைத்து இனத்தவர்களையும் எங்கள் சகோதரர்களாக நேசிக்கின்றோம். நாங்கள் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கின்றோம், ஏனென்றால் அவை உன்னுடைய வாழ்வை பிரதிபலிக்கின்றன அனைத்திலும் குடி கொண்டிருக்கும் உனக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்

“தெய்வ தந்தையே, இந்த புதிய வருடத்தில் எங்களை வலிமை உடையவர்களாக ஆக்குங்கள். உடலில், மனத்தில், ஆன்மாவில் உள்ள உனது நிலையான இருப்பினால் என்றென்றும் வழிநடத்தப்பட்டு உனது வாழ்க்கை, ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி ஆகியவற்றை நாங்கள் பிரதிபலிப்போமாக. நீ எவ்வாறு முழுமையாக இருக்கின்றாயோ அவ்வாறே உனது குழந்தைகளான நாங்களும் முழுமை பெற்றவர்களாக விளங்குவோமாக. ஓம், சாந்தி, ஓம்.

இதைப் பகிர