குரு பூர்ணிமா – 2016

17 ஜூன், 2016

இந்த ஆண்டு ஜூலை 19 அன்று வரும் குரு பூர்ணிமாவிற்காக நமது மரியாதைக்குரிய சங்கமாதா அவர்களின் சிறப்பு செய்தி

அன்பர்களே,

இந்த புனித குரு பூர்ணிமா நாளில், குருவை சிறப்பிக்கும் அழகிய மரபில் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பல ஆன்மாக்களுடன் நாம் இணைகிறோம். அவர் மூலம் தான் இறைவன், அவனை அறியவேண்டும் என்ற நம் ஆன்மாவின் ஏக்கத்திற்கு பதிலளிக்கிறான். நமது அன்புக்குரிய குருதேவரையும் அவருடைய போதனைகளையும் கண்டறிந்த போது நாம் உணர்ந்த ஆனந்தத்தை மீண்டும் புதுப்பிக்கவும், அந்த அருளாசிகளின் மகிமையை புதிதாக உணரவும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும். அவருடைய அன்பும் தெய்வீக ஞானமும் உங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ள பல வழிகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், அவர் காட்டிய பாதையில் விடாமுயற்சியுடன் இருக்க அதிக உறுதியை நீங்கள் உணர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

குருதேவர் தனது ஆன்மீக அருட்கொடைகளில் பலவற்றை நமக்கு அளித்துள்ளார்: முக்தியளிக்கும் கிரியா யோக விஞ்ஞானம், இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் சரியான வாழ்வியல் கோட்பாடுகள் மற்றும் அவரது சொந்த வெற்றிகரமான வாழ்க்கை தரும் உத்வேகம். ஆனால் குருவுடனான நமது உறவில் ஒரு முக்கிய தனிப்பட்ட அம்சமும் உள்ளது, அது அவர் தன்னுடைய குருதேவருடன் முதல் சந்திப்பின் போது வெளிப்பட்டது, ஸ்ரீ யுக்தேஸ்வர் அவரிடம் கூறினார்: “நான் உனக்கு எனது நிபந்தனையற்ற அன்பை அளிக்கிறேன். அதே போன்ற நிபந்தனையற்ற உன் அன்பை எனக்குத் தருவாயா?” குருதேவர் பதிலளித்தார்: “நான் என்றென்றும் உங்களை நேசிப்பேன், குருதேவா.” அவர்களின் பரஸ்பர பரிமாற்றத்தில் குரு-சிஷ்ய உறவின் சாராம்சம் அடங்கியுள்ளது. உங்கள் குருவுடன் அதே ஆன்மீக உடன்படிக்கையை செய்துள்ளீர்கள்; பரஸ்பர நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அந்தப் பிணைப்பு, தினமும் உங்கள் இதயத்திலும் மனதிலும் புதுப்பிக்கப்பட்டு, உங்களை எப்போதும் அவருக்கு நெருக்கமாக வைத்திருக்கும். வாழ்க்கை கடினமாகத் தோன்றும்போது அல்லது ஆன்மீக முன்னேற்றம் மெதுவாகத் தோன்றினால் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்.

“நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்,” அவரது உதவியுடன் நீங்கள் உள் மற்றும் வெளிப்புறத்  தடைகளை கடக்க முடியும் என்ற ஆற்றலையும் நம்பிக்கையையும் பெறுவீர்கள். அவர் உங்களைக் கவனித்து வருகிறார், மேலும் நீங்கள் மாயையின் எல்லாக் கறைகளிலிருந்தும் விடுபடும் வரை எல்லையற்ற பொறுமையுடன் உங்களை வழிநடத்திச் செல்வார். அவருடைய அளவற்ற அன்பின் நிதர்சனத்தை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது எதுவும் உங்களைத் தடுக்க முடியாது.

நாம் பெறும் போது மட்டுமல்லாமல், நிபந்தனையற்ற அன்பை அவருக்கு அளிக்கும்போதும் குருதேவருடனான நமது உறவு இன்னும் உள்ளார்ந்து வளர்கிறது. ஒவ்வொரு நாளும் நமது பக்தியையும் நன்றியையும் செயலில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது – அவருக்காக நம்மால் இயன்ற சிறந்ததைச் செய்வதில் ஆனந்தத்தைக் காண.  விளைவுகளுக்காக பொறுமையின்றி இருப்பதை விட்டு, அவர் கற்பித்ததை உண்மையாக கடைப்பிடிப்பதே, நமது குருவை நாம் மகிமைப்படுத்துவற்கான மிகச்சிறந்த வழி. உங்கள் தியானங்களில், உத்திகள் பயிற்சி செய்வதை பக்தியின் பரிசாக ஆக்குங்கள். அன்றாட வாழ்வில், மேம்பாட்டிற்கான உங்கள் சீரான முயற்சிகளை அவருக்கு சமர்ப்பியுங்கள். குருதேவரின் மீதான உங்களின் நிபந்தனையற்ற அன்பு சூழ்நிலைகளால் சோதிக்கப்படும் அந்தச் சமயங்களில், அல்லது சில சிரமங்களைப் போக்க நீங்கள் பிரார்த்தித்த போது அவர் மௌனமாய் இருப்பதாகத் தோன்றும் போதும் கூட அவர் உங்களுடன் இருக்கிறார், உங்களை இணக்கம், அக ஆற்றல் மற்றும் புரிதலின் புதிய நிலைகளுக்கு உயர்த்த முயல்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவருடைய உயர்ந்த ஞானத்தை நீங்கள் நம்பி சரணடையும் போது, அவருடைய சித்தம் உங்கள் சித்தமாகவும், அவருடைய ஞானம் உங்கள் புரிதலாகவும், அவரின் அன்பு உங்கள் அன்பாகவும் மாறுவதால் உங்கள் உணர்வுநிலை மாறுவதை நீங்கள் அறிவீர்கள். தன்மை மாற்றும் அவரது தொடர்பிற்கு  உங்கள் இதயம் திறக்கும், மேலும் குருதேவர் ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜியுடன் அனுபவித்த குரு மூலம் அடையும் பாக்கியமான இறை ஐக்கியத்தை இறுதியாக நீங்கள் அறியும் வரை, மாயையின் பிணைப்புகள் விலகிக் கொண்டு வருவதை நீங்கள் காண்பீர்கள். அப்போது உங்கள் ஆன்மா அவருடைய வார்த்தைகளை எதிரொலிக்கும்: “நமது கட்டுண்ட தன்மையை நிரந்தரமாக கரைத்து, எல்லையற்ற வாழ்வில் ஒன்றிணைவோம்.” உங்களின் தொடர் முயற்சியாலும், அவருடைய அருளாலும் அந்த பெரும் பாக்கியம் உங்களுடையதாக அமையட்டும்.

குருதேவரின் அன்பிலும் தொடர்ச்சியான அருளாசிகளிலும் ,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2016 ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர