யோகத்தின் உலகளாவிய தன்மை — மனிதகுலம் முழுவதற்குமான ஒரு ஆன்மீக அருளாசி.

YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான சுவாமி சிதானந்த கிரி, 2017 இல் இந்தியாவில் உரையாற்றும்போது கூறினார்: “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா அனைத்து மனிதகுலத்திற்கும் மிக உயர்ந்த ஆன்மீக சத்தியத்தின் பாதுகாவலனாக இருந்து வருகிறது. இந்தியாவின் சிறந்ததை முதலில் மேற்கத்திய நாடுகளுக்கும்,, பின்னர் உலகிற்கும், மற்றும் தனது பிரியமான இந்தியாவுக்கும் திரும்பக் கொண்டுவருவது பரமஹம்ஸரின் சிறப்புப் பணியாக இருந்தது. இந்தியாவின் மேன்மை மிகு நாகரிகத்தின் உயர்ந்த பொற்கால யுகத்தை அடைந்து, இந்தியாவின் உலகளாவிய ஆன்மீகத்தின் சாராம்சத்தை அதன் தூய வடிவத்தில் கொண்டு வந்தார். அதுதான் யோகம். இது ஒரு விஞ்ஞானமே தவிர, ஒரு மதம் அல்லது மதத்தின் ஒரு பிரிவு அல்ல; இதன் காரணமாக, இந்த ஆன்மீக ஒழுங்குமுறை — யோகத்தின் ஒளி — மனிதகுலம் முழுவதற்குமான ஒரு ஆன்மீக அருளாசியாக உண்மையிலேயே உலகளாவியதாக இருக்க முடியும்.”

பரமஹம்ஸ யோகானந்தர் யோகப் பயிற்சி செய்வதற்கும் அதன் உன்னத பலன்களைப் அடைவதற்கும் எந்தவொரு குறிப்பிட்ட தேசியம், இனம் அல்லது சமயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அடிக்கடி சுட்டிக்காட்டினார். ஒரு விஞ்ஞானமாக அதன் உண்மையான உலகளாவிய தன்மை அதன் விளைவுகளை எந்தவொரு நாட்டிலிருந்தும், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் எவரும் பெற முடியும் என்பதில் உள்ளது.

யோக தியானத்தின் தொடர்ச்சியான பயிற்சி மூலம், நாம் அனைவரும் ஆனந்தம், அன்பு, கருணை, அமைதியை ஆழமாக உணர முடியும். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழும்போது, அவற்றின் தாக்கம் வெளிப்புறமாக, கண்ணுக்குத் தெரியாத ஒரு விதிமுறை மூலம், முதலில் நமது உடனடி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பின்னர் உலகத்திற்கும் பரவுகிறது. பரமஹம்ஸர் கூறியது போல், “உங்களை சீர்திருத்திக் கொண்டால், பல்லாயிரம் பேரை நீங்கள் சீர்திருத்துவீர்கள்”.

யோகத்தின் ஒரு பெரிய நன்மை என்னவென்றால், தியானம் செய்பவருக்கு அனைத்து மனிதகுலத்துடனும் ஒருமை உணர்வு உருவாகிறது. ஒருவரின் ஆன்மீக நம்பிக்கைகள் அல்லது நம்பிக்கையற்ற தன்மை எதுவாக இருந்தாலும், யோக விஞ்ஞானத்தைப் பயிற்சி செய்யும் எவரும் இறுதியில் தெய்வீகம் எல்லாவற்றிலும் மற்றும் அனைத்திலும் இருப்பதை உணருவார்.

இத்தகைய உலகளாவிய தன்மை கொண்ட இதயங்களும், மனங்களும், தற்பொழுது, உலகம் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அதிவேகமாக சுருங்கி, நம் அனைவரையும் மிகவும் நெருக்கமாக வைத்திருக்கும் இந்த கால கட்டத்தின் மிகப்பெரிய தேவையாகும். 1951 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது, பரமஹம்ஸர் உலகத்திற்கு தனது செய்தியை சுருக்கமாகக் கூறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். மனிதகுலம் அதன் இன்றியமையாத ஒற்றுமையை உணர்ந்து கொள்வதற்கான அடிப்படைத் தேவையைப் பற்றி அவர் பேசினார்— தீர்க்கதரிசன வார்த்தைகள் சொல்லப் போனால் அவர் அவற்றை முதன்முதலில் கூறியபோது இருந்ததை விட தற்போது இன்றியமையாதவையாக இருக்கிறது:

எனது உலக சகோதர சகோதரிகளே, நினைவில் கொள்ளுங்கள், இறைவன் நம் தந்தை, மேலும் அவர் ஒருவரே. நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள், ஆகவே, ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், உலகின் சிறந்த குடிமக்களாக மாறுவதற்கு, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆயிரம் பேர் கொண்ட ஒரு சமூகத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் இழப்பில் தங்களை வளப்படுத்த ஊழல், சண்டை, மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றின் மூலம் முயற்சித்தால், ஒவ்வொரு நபருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது எதிரிகள் இருப்பார்கள்; அதேசமயம், ஒவ்வொரு நபரும் மற்றவர்களுடன் ஒத்துழைத்தால் — உடல் ரீதியாக, மன ரீதியாக, நிதி ரீதியாக, மற்றும் ஆன்மீக ரீதியாக — ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது நண்பர்கள் இருப்பார்கள். எல்லா தேசங்களும் அன்பினால் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால், முழு பூமியும் அமைதியுடன் வாழும், அனைவருக்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கும்….

“வானொலி மற்றும் தொலைக்காட்சி மற்றும் விமானப்பயணம் போன்ற ஊடகங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நம்மை ஒன்றிணைத்துள்ளன. இனி ஆசியர்களுக்கு ஆசியாவாகவும், ஐரோப்பியர்களுக்கு ஐரோப்பாவாகவும், அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவாகவும் இன்ன பிறவாகவும் இருக்க முடியாது, ஆனால் இறைவனின் கீழ் உலகின் ஓர் ஐக்கிய நாடாக, ஒவ்வொரு மனிதனும் அதில் உடல், மனம் மற்றும் ஆன்ம நிறைவு பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் கொண்டு உலகின் சிறந்த குடிமகனாக இருக்க முடியும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

“அதுவே உலகத்திற்கு எனது செய்தி, எனது வேண்டுகோள்.”

உடல், மனம் மற்றும் ஆன்ம ரீதியாக சிறந்த உலகக் குடிமக்களாக ஒருவருக்கொருவர் மேம்பட உதவுவதற்கான மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் “ஆக்கபூர்வமான வழிமுறைகளை” உலகளாவிய யோக விஞ்ஞானத்தில் காணலாம்.

இதைப் பகிர