2019 ஜன்மாஷ்டமிக்கான சுவாமி சிதானந்த கிரியின் செய்தி

29 ஜூலை, 2019

Bhagavan Krishna with mukut

அன்பரே,

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினமான ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள பக்தர்களுடன் இணையும் இந்த நேரத்தில், தெய்வீக அன்பின் இந்த ராஜ அவதாரத்துடன் நம் மனதையும் இதயத்தையும் இசைவித்திருக்க ஒரு அற்புதமான வாய்ப்பு அமைந்துள்ளது. இந்தப் புனிதப் பருவத்தில் அவருக்கான நமது மரியாதை, நாம் மீண்டும் பெற வேண்டும் என இறைவன் விரும்பும், அமைதி மற்றும் ஆனந்தத்தின் அக சாம்ராஜ்யத்திற்கான நமது ஏக்கத்தைப் புதுப்பிக்கட்டும். கிருஷ்ணரின் மூலம் வெளிப்படும் எல்லையற்ற பரமாத்மன், அவரது சீடன் அர்ஜுனனை ஆன்மீக மற்றும் உலகாயத வெற்றிக்கு வழிநடத்தியது போல், நாமும் கூட நம் ஆன்மாவின் ஆழத்தில் மறைந்துள்ள தெய்வீக குணங்கள் மற்றும் ஆற்றல்களின் இறை-உணர்வை வெளிப்படுத்தும் வரை, நமது சொந்த தினசரி குருக்ஷேத்திரப் போரில் நம்மை வழிநடத்துவான் என்று பகவத் கீதை நமக்கு உறுதியளிக்கிறது.

தர்மநெறியை மீட்டெடுக்கும் பங்களிப்பில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரை வழி நடத்தினார்; ஆனால் மாயையின் தடைகளை முறியடிப்பதில் ஒரு துணிச்சல் மிக்க தெய்வீகப் போர்வீரனாக அர்ஜுனன் தன் பங்கை நிறைவேற்றும்படியும் அவர் வலியுறுத்தினார். இறைவன் நம்மிடம் அதையே கேட்கிறார் – நமது உள்ளார்ந்த தெய்வத்தன்மை மற்றும் பேரின்பத்தை மறைக்கும் கட்டுப்படுத்தும் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் நடத்தைகளை நம் உணர்வு நிலையிலிருந்து வெளியேற்ற நமது விருப்பாற்றல், முனைப்பு மற்றும் ஆன்மா தூண்டப்பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்துமாறு கேட்கிறான். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒப்பற்ற மற்றும் நடைமுறை விவேகம் அது எப்படி என்பதை நமக்குக் காட்டுகிறது; ஒவ்வொரு வெற்றியுடனும், நாம் வலுவாக முன்னேறி அதிக ஆன்ம சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் பெறுகிறோம்.

மாயை விடாப்பிடியான ஒரு எதிரி, ஏனென்றால் பல பிறவிகளாக நாம் அழியக்கூடிய உடலுடனும் மனதுடனும் நம்மை அடையாளப்படுத்தியுள்ளோம். அன்றாட வாழ்க்கை நாடகத்தின் இடைவிடாத எதிர் வினைகளுடன் நாம் மூழ்கி இருக்கும் வரை, நமது ஆற்றலும் கவனமும், அழுத்தம் தரும் எதிர்பார்ப்புகள், நிரந்தர புலனுணர்வு தூண்டுதல் மற்றும் இந்த நவீன உலகில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் தகவல் சுமை போன்ற வெளிப்புறச் சூழ்நிலைகளுக்கு பிணையாக வைக்கப்படுகின்றன. பகவான் கிருஷ்ணரின் வெற்றிக்கான வழி நமக்குத் தேவை: ஆழ்ந்த யோக தியான விஞ்ஞானத்தின் வழக்கமான பயிற்சி, இறை இருப்பு நமக்காக சாசுவதமாக காத்திருக்கும் நம் அகத்துள்  நமது உணர்வு நிலையை திருப்புதல். நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார்: “புலன்களின் தொடர்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் அமைதியற்ற எண்ணங்களின் சலசலப்புகளிலிருந்து விடுபட்டு, யோகி தனது முழு இயல்பையும் படிப்படியாகப் புனிதப்படுத்தும் பேரானந்த நிச்சலன அகத்தின் அற்புதமான ஆழ்ந்த அமைதியில் மூழ்குகிறார். “அந்த இறை-அமைதியின் ஒரு ஸ்பரிசம் கூட நம்மை ஆன்மீகமயமாக்கி, நாம் எதிர்கொள்ளும் எந்தச் சூழ்நிலையின் சாத்தியக்கூறுகளைப் பற்றிய நமது விழிப்புணர்வையும் விரிவுபடுத்தும். நாம் அன்றாட சூழ்நிலைகளை இன்னும் சம மனநிலையில் மதிப்பீடு செய்ய முடியும், மேலும் அகந்தை மற்றும் உணர்ச்சிகளின் தூண்டுதல்களைக் காட்டிலும் அமைதியாக பகுத்தாய்தல் மற்றும் ஆன்ம உள்ளுணர்வு மூலம் வழிநடத்தப்படலாம். தார்மீகத் தேவைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், ஒருவர் தன் நெருங்கியவர்களுக்காக உணரும் அந்த ஆழமான பரிவின் அடிப்படையிலும் நாம் மற்றவர்களுக்கு அதிக புரிதலையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த முடியும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் நமது குருதேவரின் அருளாசிகளாலும் – தியானத்தின் மாற்றும் சக்தியாலும், சரியான செயல்பாடுகளாலும், இறைவனிடம் எப்போதும் அதிகரித்து வரும் பக்தியாலும் – நீங்களும் கூட இறை உணர்வுநிலையால் வரும் வலிமை மற்றும் உயிராற்றல், அனைவரிடமும் காட்டும் நன்னயம், மற்றும் உள்ளார்ந்த ஆனந்தம் போன்ற குணங்களின் பிரகாசத்தை வளர்த்துக் கொள்வீர்களாக.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர