புதிய உறுதிமொழிகளை எடுங்கள்: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதுவாக மாறுங்கள்

-பரமஹம்ஸ யோகானந்தர் 1934- ம் ஆண்டு, புதுவருடம் பிறப்பதற்கு முந்தைய நாள் மாலை பரமஹம்ஸ யோகானந்தர், தாம் தோற்றுவித்த நிறுவனமான ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் (யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா) பின் சர்வதேச தலைமையகத்தில், ஆற்றிய உரைகள் முழுவதும் கீழே தரப்படுகின்றன. பரமஹம்ஸ யோகானந்தரின்  ஆத்ம தரிசனத்திற்கான பயணம், பகுதி -3 பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு (யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் வெளியீடு) என்ற நூலில் இந்த உரை முழுமையாக வெளிவந்துள்ளது. இந்த புதிய வருடத்தில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று புதிய தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே ஒரு திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்; அதை செயல்படுத்துங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்வீர்கள். திட்டமிட்டபடி நீங்கள் செய்யவில்லையென்றால் நீங்கள் உங்களது இச்சாசக்தியை முடக்கிவிட்டீர்கள் என்று பொருள்படும். உங்களுக்கு உங்களை விட சிறந்த நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. நீங்கள் உங்களை நண்பனாக்கிக் கொண்டால் வெற்றியடைவீர்கள். நீங்களே அனுமதித்தாலன்றி எந்த தெய்வீக சட்டமும், நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அப்படி இருப்பதற்கோ, நீங்கள் சாதிக்க விரும்புபவற்றை சாதிப்பதற்கோ தடையாக இருப்பதில்லை. நீங்களே அனுமதித்தாலேயன்றி, எந்த தீங்கு நிகழ்ந்தாலும் அது உங்களை பாதிக்க முடியாது.

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை உங்களால் அடைய முடியும் என்ற உறுதிப்பாடு எதனாலும் பலவீனமடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தவிர, வேறு யாரும் அதை தடுக்கவில்லை. இதை எனது குருநாதர் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஜி மீண்டும் மீண்டும் என்னிடம் கூறியபோது அதை நம்புவது முதலில் கடினமாக இருந்தது. ஆனாலும், இறைவன் அளித்த சிறந்த பரிசான மன உறுதியை நான் என் வாழ்க்கையில் பயன்படுத்தினேன். அதுவே என்னை காப்பாற்றியது என்று உணர்ந்தேன். நமது இச்சாசக்தியை பயன்படுத்த -வில்லையென்றால், ஒரு பாறாங்கல்லை போல செயலற்ற, உயிரற்ற, – பயனற்ற மனித பிறவியாகி விடுவோம்.

ஆக்கப் பூர்வமான சிந்தனை, மறைவாக இருக்கும் ஒரு தேடல் விளக்கைப் போன்று வெற்றுப் பாதையை உங்களுக்கு காட்டிக்கொடுக்கும். நீங்கள் தேவையான அளவு ஆழமாக சிந்தித்தால் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு பாதை எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. சிறிது காலத்திற்குப் பிறகு முயற்சியை கைவிட்டுவிடுபவர்கள் தமது சிந்திக்கும் ஆற்றலை மங்கச் செய்துவிடுகிறார்கள். இறுதி வெற்றியை அடைவதற்காக , உங்களது, சிந்தனையை முழுபலத்தோடு பயன்படுத்த வேண்டும், அது உங்கள் லட்சியத்திற்கு இட்டுச் செல்லும் பாதையை வெளிப்படுத்தும் அளவிற்கு ஒளிமிக்கதாக ஆகும் வரை.

அனைத்து எதிர்மறை எண்ணங்களையும், அச்சங்களையும் தூக்கியெறியுங்கள். நீங்கள் இறைவனின் குழந்தை என்பதால் மனிதருள் மாணிக்கமாக விளங்குபவர்களின் உள்ளார்ந்த ஆற்றல் வளங்கள் உங்களுக்கும் உள்ளது. ஆன்மாவாக பார்க்கும்பொழுது, எந்த ஒன்றும் பிறவற்றைவிட உயர்வானது அல்ல. மகான்களின் ஞானத்தில் வெளிப்படுவதைப் போல இறைவனின் ஞானத்தால் வழிநடத்தப் பெறுமாறு இறைவனால் உங்களின் இச்சாசக்தியை இசைவித்துக் கொள்ளுங்கள். உங்களது இச்சா சக்தி ஞானத்தோடு ஜோடி சேரும்போது, உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

தீய பழக்கங்களே உங்களது மிகப்பெரிய எதிரி. அந்த பழக்கங்கள்தான் உங்களுக்கு தண்டனை விதிக்கின்றன. நீங்கள் செய்ய விரும்பாதவற்றை செய்ய வைத்து அதன் விளைவுகளின் வேதனையை உங்களுக்குத் தந்துவிடுகின்றன. நீங்கள் முன்னேறிச் செல்லும்போது தீயப்பழக்கங்களை கைவிடுங்கள். ஒவ்வொரு நாளும் பழைய பழக்கத்திலிருந்து சிறந்த பழக்கத்திற்கு செல்லும் மாற்றம் நிகழ வேண்டும். வரும் வருடத்தில் உங்களது மிக உயர்ந்த நன்மை தரும் பழக்கங்களை மட்டும் வைத்துக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குப் பிடிக்காத போக்குகளை கைவிடுவதற்கான மிகச்சிறந்த வழி அவற்றைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது மட்டுமே. அவற்றிற்கு அங்கீகாரம் அளிக்காதீர்கள். ஒரு குறிப்பிட்ட பழக்கம் உங்களை பற்றிக் கொண்டிருப்பதாக ஒருபோதும் ஒத்துக் கொள்ளாதீர்கள். . . . . “மாட்டேன்” பழக்கங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை தூண்டிவிடும் விஷயங்களிலிருந்து விலகியிருங்கள்.

சுயநலம் எனும் குறுகிய எல்லையோடு உங்களை அடைத்துக் கொள்ளாதிர்கள். உங்களது சாதனைகளிலும் சந்தோஷங்களிலும் மற்றவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறீர்கள். நீங்கள் அமைதியை தேடுகின்றீர்கள் என்றால் அமைதி தேவைப்படுகின்ற மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க உங்களால் இயன்றவரை முயல்வீர்களாயின், நீங்கள் இறைவனை மகிழ்விக்கிறீர்கள்.

ஒத்திசைவோடு வாழ்தல் உங்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்துள்ள இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆழமான மன உறுதியோடு வாழ்தல் ஆகியவற்றில் மட்டுமே நீங்கள் ஆர்வம் கொள்ள வேண்டும். ஒருபோதும் துணிவை இழக்காதீர்கள். எப்போதும் சிரித்துக்கொண்டே இருங்கள். இதயத்தின் சிரிப்பும், முகத்தின் சிரிப்பும் எப்போதும் ஒத்திசைந்து இருக்கட்டும். உங்களது உடல், மனம் மற்றும் ஆன்மாவில் இறைவனது அக விழிப்புணர்வை பதிவு செய்தால் செல்லுமிடமெல்லாம் புன்னகைகளை உங்களால் தூவி செல்ல முடியும்.

எப்போதும் உங்களை உற்சாகப்படுத்துபவர்களோடு இருங்கள்; உங்களை மேல் நோக்கி உயர்த்துபவர்கள் உங்களை சூழ்ந்திருக்கட்டும். தீய நட்புகள் உங்களது உறுதிமொழிகளையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் நஞ்சூட்டி சிதைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களை உற்சாகப்படுத்தும் நல்ல நட்பு உங்களுக்கு கிடைக்காது போனாலும், அதனை தியானத்தில் பெற முடியும். தியானத்தில் கிட்டும் ஆனந்தமே உங்களது மிகச் சிறந்த நட்பாகும்.

உங்களது வாழ்க்கைக் கோப்பை உள்ளும் புறமும் இறை இருப்பால் நிறைந்துள்ளது. போதுமான கவனமின்மையால், இறைவனின் உள்ளார்ந்த இருப்பை உங்களால் அறிய முடியவில்லை. வானொலி அலை வரிசையை ஒழுங்கு படுத்துவது போல, தெய்வீக ஒத்திசைவில் இருப்பின், உங்களால் பரம்பொருளை உள்வாங்க முடியும். அது நீங்கள் ஒரு நீர் நிரம்பிய குப்பியை ஒரு அடைப்பானை கொண்டு அடைத்து கடலில் போட்டால், குப்பி நீரில் மிதந்தாலும், அதன் உள்ளே உள்ள நீர், சூழ்ந்துள்ள கடல் நீரில் கலக்காது. ஆனால் குப்பியை திறந்துவிட்டால், உள்ளே உள்ள நீர் கடல் நீருடன் கலந்துவிடும். நாம் அறியாமை என்ற அடைப்பானை பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாக நீக்கிவிட வேண்டும்.

எல்லையற்ற பரம் பொருளே நம் இல்லம்.  உடல் என்ற சாலையோர சத்திரத்தில் தங்கி சற்றே ஓய்வெடுக்கிறோம், அவ்வளவே. மாயையில் போதை ஏறியவர்கள் இறைவனிடம் இட்டுச் செல்லும் பாதையில் முன்னேறிச் செல்ல மறந்துவிடுகின்றனர். ஆயின் தியானம் செய்கையில் தெய்வம் வழிதவறி சென்ற குழந்தையின் கரத்தை பற்றிக் கொள்கிறது. அப்போது வீணான விளையாட்டுக்களில் ஈடுபடுவது தவிர்க்கப் படுகின்றது.

புத்தாண்டின் தலைவாயிலில் புதிய நம்பிக்கையோடு அடியெடுத்து வையுங்கள். நீங்கள் இறைவனின் குழந்தை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு ஆகப்போகிறீர்கள் என்பது உங்களிடம்தான் உள்ளது. நீங்கள் இறைவனின் குழந்தை என்பதில் பெருமை கொள்ளுங்கள். நீங்கள் எதற்காக அச்சம் கொள்ள வேண்டும்? என்ன நடந்தாலும், இறைவன்தான் அதை உங்களுக்கு அனுப்புகிறான் என்பதை நம்புங்கள். அன்றாட சவால்களை எதிர்கொள்வதில் நீங்கள் வெற்றி காண வேண்டும். அதில்தான் உங்கள் வெற்றி அடங்கியுள்ளது. அவனது விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள். அப்போது உங்களை எதுவும் துன்புறுத்தாது. அவன் உங்கள் மீது நிரந்திரமாக அன்பு செலுத்துகிறான். அவ்வாறே எண்ணுங்கள். அதையே நம்புங்கள். ஒருநாள் திடீரென நீங்கள் உணருவீர்கள் – இறைவனில் நீங்கள் அழிவின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று.

என்ன நடந்தாலும், அதிகமாக தியானம் செய்யுங்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறான். எப்போதும் இருக்கிறான் என்று அழுத்தமாக எண்ணி அதையே நம்புங்கள். அப்போது மாயையின் திரை நீக்கப்பட்டு, அவனுடன், அந்த இறைவனுடன் ஒன்றாவீர்கள். அவ்வாறுதான் நான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சியை கண்டறிந்தேன். நான் இப்பொழுது எதையும் தேடுவதில்லை, ஏனெனில், இறைவனில் எனக்கு எல்லாமே உள்ளது. அனைத்து உடைமைகளிலும் மிக உயர்வான அந்த இறைவனிடமிருந்து நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்.

உங்களுக்கான எனது புத்தாண்டு செய்தி இதுவே.

இதைப் பகிர