கடினமான நேரங்களில் பரமஹம்ஸ யோகானந்தரின் வழிகாட்டுதல்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, உலகெங்கிலும் உள்ள மக்கள் தமக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பதில் புரிதலையும் வழிகாட்டுதலையும் நாடுகின்றனர்.

அரை நூற்றாண்டுக்கு முன்னர், பரமஹம்ஸ யோகானந்தர், உலகம் அதன் உயர்ந்த, மிகுந்த ஆன்மீகயுகத்திற்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக கடக்கப்போகும் மாற்றங்களை விவரித்தார். அவர் ஒரு சரியான கால அட்டவணையைக் கொடுக்கவில்லை என்றாலும், இந்த சவாலான நேரங்களைக் கையாள்வதற்கு அவர் நிறைய ஆன்மீக ஆலோசனை மற்றும் நடைமுறை அறிவுரைகளை வழங்கவே செய்தார்.

பரமஹம்ஸரின் குரு, ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், தனது ஹோலி ஸையன்ஸ் என்ற புத்தகத்தில், அணு யுகம் (துவாபர யுகம்) நமது கிரகத்தின் வாழ்வில் ஒரு புதிய ஏறுமுகம் கொண்ட நிலை என்பதை வெளிப்படுத்தினார். இருப்பினும், பரமஹம்ஸர் சுட்டிக்காட்டியபடி, வெகு சமீபத்தில் கடந்துசென்ற இருண்டயுகத்தின் (கலியுகத்தின்) செல்வாக்கு, சமகால நாகரிகத்தின் மீது இன்னும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் லோகாயத ஆர்வங்களின் போது உருவாக்கப்பட்ட எண்ண-வடிவங்கள், மனிதனை மனிதனிலிருந்தும் தேசத்தை தேசத்திலிருந்தும் பிரிக்கும் பலதரப்பட்ட பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மூடநம்பிக்கைகளில் பிரதிபலிக்கின்றன. மனிதகுலம் இந்தப் பழமையான மாயைகள் மற்றும் முரண்பாடுகளை தூக்கி எறியும்போது, பரமஹம்ஸர் சமூகங்கள் மற்றும் நாடுகளின் நற்பேறுகளில் பெரும் ஏற்றத் தாழ்வுகளை முன்னறிவித்தார் — அதன் பிறகு உலகம் முழுவதற்கும் இணையற்ற முன்னேற்றத்தின் காலமாகும்.

இந்தத் தலைப்புப் பொருளைப் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் அறிவுரையை சுருக்கமாக, குருதேவரின் ஆரம்பகால மற்றும் நெருங்கிய சீடர்களில் ஒருவரான நமது மதிப்பிற்குரிய மூன்றாவது தலைவியான ஸ்ரீ தயா மாதா கூறினார்:

“ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் உலக நிலைமைகள் அல்லது நாகரிகங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகும் போதெல்லாம், ஓர் அடிப்படை நுட்பமான காரணம் எப்போதும் உள்ளது — அதாவது, தனிநபர்களின் வாழ்விலும் ஒட்டுமொத்த அளவில் சர்வதேச அளவிலான நடவடிக்கைகளிலும் மறைந்து செயல்படும் கர்மவினை விதிமுறை. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் எழும் சவால்களுக்கான சரியான அணுகுமுறையான ‘இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?’ என்பதைப் போலவே நமது பரிணாம வளர்ச்சியின் இந்தக் கட்டத்தில், தெய்வீகம் நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும் எனக் கருதும் பாடங்களை உலகம் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.

“மனிதகுலம் சரிசமநிலையான ஆன்மீக வாழ்க்கைக் கலையை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அது ஓர் உலகளாவிய குடும்பமாக ஒத்துப்போகக் கற்றுக்கொள்ள வேண்டும். திடீரென்று அதிகரிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்கொண்ட இந்த சகாப்தத்தில் நாம் உணரும் மனஅழுத்தங்களும் நம்மைப் பீடிக்கும் கவலைகளும் விரைவிலோ அல்லது பின்னரோ இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள நம்மைக் கட்டாயப்படுத்தும்.

“பரமஹம்ஸர் பல வருடங்களுக்கு முன்னரே இதை முன்னறிந்து, பல முறை எங்களிடம் கூறினார்: ‘உலகம் எளிமையான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய நாள் வருகிறது. இறைவனுக்காக நேரம் ஒதுக்குவதற்காக நம் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும். நாம் அதிக சகோதரத்துவ உணர்வுடன் வாழ வேண்டும், ஏனென்றால் நாகரிகம் உயர்ந்த யுகத்திற்கு பரிணமிக்கும்போது, உலகம் இன்னும் சிறியதாகிவிடுவதை நாம் காணப்போகிறோம். தப்பெண்ணமும், சகிப்புத்தன்மையற்ற நிலையும் நீங்க வேண்டும். ’

“இயேசு கறினார்,’தனக்கே எதிராக பிரிக்கப்பட்ட ஒரு வீடு நிலைக்க முடியாது.’ விஞ்ஞானம் தேசங்களை ஒன்றுக்கொன்று நெருக்கமாக கொண்டு வந்துவிட்டது, அதனால் ஒரு காலத்தில் பரந்திருந்த உலகம், இப்போது ஒரு குடும்பத்தைப் போல, ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்களுடன் இணைந்தும், அவர்களைச் சார்ந்தும் இருப்பது போலாகிவிட்டது. நம் காலத்தின் ஒற்றுமையற்ற போக்குகளுக்கு மத்தியில் ஒரு சிறிய குடும்பத்திற்குக் கூட ஒன்றாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை கருத்தில் கொண்டு, உலகில் முழுஅளவில் ஒற்றுமைக்கு நம்பிக்கை இருக்கிறதா? நம்பிக்கை உள்ளது — தனிப்பட்ட குடும்பங்களுக்கும், அத்துடன் ஓர் உலகக் குடும்பமாகிய தேசங்களுக்கிடையேயான உறவுகளுக்கும் — நாம் உண்மையான அமைதி மற்றும் ஆன்மீகப் புரிதலுக்குகந்த அந்த இலக்குகளையும் மதிப்புகளையும் வளர்ப்பதற்கு நேரம் ஒதுக்கினால்.”

இதைப் பகிர