மனித மற்றும் தெய்வீக அன்பு

Merging of sky and ocean depicting Human and Divine love.உங்களால் அனுபவிக்க முடிகின்ற மிகப்பெரிய அன்பு தியானத்தில் இறைவனுடனான கூட்டுறவில் இருக்கிறது. ஆன்மாவிற்கும் பரம்பொருளுக்கும் இடையேயுள்ள அன்பே முழுநிறைவான அன்பு, நீங்கள் அனைவரும் தேடிக்கொண்டிருக்கும் அன்பு. நீங்கள் தியானம் செய்யும் போது, அன்பு பெருகுகிறது. இலட்சக்கணக்கான சிலிர்ப்புகள் உங்கள் இதயத்தின் ஊடாகக் கடந்துசெல்கின்றன….நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், எந்த மனித மொழியாலும் விவரிக்க முடியாத ஓர் அன்பு உங்கள் மீது படரும்; நீங்கள் அவனுடைய தெய்வீக அன்பை அறிவீர்கள், மற்றும் அந்தத் தூய அன்பை உங்களால் மற்றவர்களுக்கு வழங்க இயலும்.

உங்களால் தெய்வீக அன்பின் ஒரு துகளையேனும் உணர முடிந்தால், உங்களால் அடக்க முடியாத அளவிற்கு உங்கள் ஆனந்தம் அத்துணை பெரியதாக—அத்துணை மிதமிஞ்சிய ஆற்றலுடையதாக—இருக்கும்.

உலகம் முழுவதுமே அன்பு என்ற சொல்லின் மெய்யான பொருளை மறந்துவிட்டனர். உண்மையான அன்பு என்றால் என்னவென்று வெகுசிலரே அறியும் அளவிற்கு அன்பு மனிதரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வதைக்கப்பட்டிருக்கிறது. ஆலிவ் மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணெய் இருப்பதைப் போலவே, படைப்பின் ஒவ்வொரு பகுதியிலும் அன்பு ஊடுறுவுகிறது. ஆனால் ஓர் ஆரஞ்சுப் பழத்தின் நறுமணச்சுவையை சொற்களால் விளக்க முடியாது, அதே காரணத்திற்காக அன்பிற்கு சொல்விளக்கம் கூறுவதும் மிகவும் கடினம். அதன்` நறுமணச்சுவையை அறிய நீங்கள் பழத்தைச் சுவைக்க வேண்டும். அன்பும் அதுபோலத்தான்.

அனைவருக்கும் பொதுவான பொருளில், அன்பு என்பது படைப்பில் உள்ள இசைவிக்கும், ஒன்றுசேர்க்கும், ஒருசேரத் தளைப்படுத்தும் தெய்வீக ஈர்ப்புச்சக்தி ஆகும்…. அன்பெனும் ஈர்ப்பு ஆற்றலுடன் சுருதிசேர்ந்து வாழ்வோர் இயற்கையுடனும் அவற்றின் சக உயிர்களுடனும் நல்லிணக்கத்தை ஈட்டுகின்றனர் மற்றும் இறைவனுடனான பேரின்பமய மீள்-ஐக்கியத்திற்கு ஈர்க்கப்படுகின்றனர்.

“சாதாரண அன்பு சுயநலமானது, ஆசைகளிலும் மனநிறைவுகளிலும் அச்சுறுத்தும் வகையில் வேரூன்றியிருகிறது,” [ஸ்ரீ யுக்தேஸ்வர் கூறினார்]. “தெய்வீக அன்பு நிபந்தனையற்றது, எல்லையற்றது, மாற்றமற்றது. மனித இதயத்தின் பாய்ச்சல் தூய அன்பின் ஊன்றிநிற்கும் தீண்டலுக்கு என்றென்றைக்குமாக ஆட்பட்டுவிட்டது.

பல மனிதர்கள் ஒருநாள் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறுகின்றனர் மற்றும் அடுத்தநாள் உங்களை நிராகரிக்கின்றனர். அது அன்பல்ல. இறைவனின் அன்பால் நிறைக்கப்பட்டிருக்கும் இதயம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்த முடியாது. நீங்கள் தனிப்பற்றீடின்றி இறைவனை நேசிக்கும் போது, அவன் உங்கள் இதயத்தை எல்லோருக்குமான தன் நிபந்தனையற்ற அன்பால் நிரப்புகிறான். அந்த அன்பை எந்த மனித மொழியாலும் விளக்க முடியாது….இந்த முறையில் மற்றவர்களை நேசிக்க சாதாரண மனிதரால் இயலாது. “நான், என்னை, மற்றும் எனது,” என்ற உணர்வுநிலையில் சுயநல-மையம் கொண்டு, அவரிலும் மற்ற எல்லா உயிர்களிலும் உறையும் எங்கும்-நிறைந்த இறைவனை இன்னும் அவர் கண்டுபிடித்திருக்கவில்லை. என்னைப் பொருத்தவரை, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே வேறுபாடு ஏதும் இல்லை; நான் எல்லோரையும் ஒரே இறைவனின் ஆன்ம-பிரதிபலிப்புகளாக தரிசிக்கிறேன். என்னால் ஒருவரையும் ஓர் அன்னியராக நினைக்க முடிவதில்லை, ஏனெனில் நாம் அனைவரும் ஒரே பரம்பொருளின் பகுதி என்று எனக்குத் தெரியும். நீங்கள் இறைவனை அறிவது என்ற சமயத்தின் உண்மையான பொருளை அனுபவிக்கும் போது, அவனே உங்களது பெரும் சுயம் என்றும் அவன் சமமாகவும் பாரபட்சமில்லாமலும் எல்லா உயிர்களிலும் இருக்கிறான் என்றும் உணர்ந்தறிவீர்கள். அதன்பின் மற்றவர்களை உங்களுடைய சொந்தப் பெரும் சுயமாக உங்களால் நேசிக்க முடியும்.

இறைவனின் தெய்வீக அன்பில் மூழ்கியிருக்கும் ஒருவருடைய உணர்வுநிலையில், சூது இல்லை, ஜாதி அல்லது இனம் என்ற குறுகிய எண்ணம் இல்லை, எந்த வகையான எல்லைகளும் இல்லை. நீங்கள் அந்தத் தெய்வீக அன்பை அனுபவிக்கும் போது, நீங்கள் மலருக்கும் விலங்கிற்கும் இடையே, ஒரு மனிதருக்கும் மற்றொருவருக்கும் இடையே வேறுபாட்டைக் காண மாட்டீர்கள். நீங்கள் இயற்கை முழுவதுடனும் தோழமை கொள்வீர்கள், மற்றும் மனிதகுலம் முழுவதையும் சமமாக நேசிப்பீர்கள்.

தெய்வீக அனுபூதிக்காக எல்லா உயிர்களிடத்தும் கருணை தேவை, ஏனெனில் இறைவனே இந்தப் பண்பால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறான். மென்மையான இதயம் கொண்டவர்களால் தம்மை மற்றவர்களிடத்தில் வைக்க, அவர்களுடைய துன்பத்தை உணர, மற்றும் அதைப் போக்க முயற்சி செய்ய முடியும்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே, நண்பனுக்கும் நண்பனுக்கும் இடையே, தனக்கும் மற்றவர்களுக்கும் இடையே தூய மற்றும் நிபந்தனையற்ற அன்பை வளர்ப்பதே இந்த பூமிக்கு நாம் வந்து கற்கும் படிப்பினை ஆகும்.

அன்பிற்குரிய ஒருவர் முழுநிறைவு பெறுவதற்காக வாழ்த்துவதும் அந்த ஆன்மாவைப் பற்றிச் சிந்திக்கும் போது தூய ஆனந்தத்தை உணர்வதும் தெய்வீக அன்பாகும்; மேலும் அதுவே உண்மையான நட்பின் அன்பாகும்.

இறைவனின் அன்பு, பரம்பொருளின் அன்பு, எல்லாம்-உள்ளடக்கும் பேரன்பாகும். ஒருமுறை நீங்கள் அதை அனுபவித்துவிட்டால், அது உங்களை தொடர்ந்து நிலைபேறான உலகங்களுக்கு வழிநடத்திச் செல்லும். அந்த அன்பு உங்களுடைய இதயத்திலிருந்து ஒருபோதும் எடுத்துச் செல்லப்பட மாட்டாது. அது அங்கேயே எரியும், மற்றும் அதன் நெருப்பில் நீங்கள் மற்றவர்களை உங்கள் பக்கம் இழுக்கும், மற்றும் உண்மையாக உங்களுக்குத் தேவைப்படும் அல்லது நீங்கள் ஆசைப்படும் எதையும் ஈர்க்கும் பரம்பொருளின் பெரிய காந்தசக்தியைக் காண்பீர்கள்.

என் கேள்விகள் அனைத்தும், மனிதனின் வாயிலாக அல்ல, ஆனால் இறைவனின் வாயிலாக, பதிலளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் உண்மையாக உங்களுக்குக் கூறுகிறேன். அவன் இருக்கிறான். அவன் இருக்கிறான். என் வாயிலாக உங்களிடம் பேசுவது அவனுடைய ஆவியே. நான் பேசுவது அவனுடைய அன்பைப் பற்றித்தான். சிலிர்ப்பிற்கு மேல் சிலிர்ப்பு! தென்றல் காற்றைப் போல அவனுடைய அன்பு ஆன்மாவின் மேல் படர்கிறது. இரவும் பகலும், வாராவாரம், ஆண்டுக்கு ஆண்டு, அது அதிகரித்துக் கொண்டே செல்கிறது—முடிவு எங்கே என்று உங்களுக்குத் தெரியாது. அதைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் நாடிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மனித அன்பையும் செல்வவளத்தையும் வேண்டுவதாக நினைக்கிறீர்கள், ஆனால் இவற்றுக்குப் பின் உங்களை அழைப்பது உங்கள் தெய்வத்தந்தையே ஆகும். அவன் அவனுடைய எல்லாப் பரிசுகளையும்விட பெரியவன் என்று நீங்கள் உணர்ந்தறியும் போது, நீங்கள் அவனைக் காண்பீர்கள்.

நமது அன்பிற்குரியவர்கள் நம்மை என்றென்றைக்குமாக நேசிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர்; இருப்பினும் அவர்கள் தமது உலக நினைவுகள் கைவிடப்பட்டவாறு மகா உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் போது, அவர்களுடைய வாக்குறுதிகளின் மதிப்பு என்ன? யார், நமக்கு வார்த்தைகளில் கூறாமல், நித்தியமாக நம்மை நேசிக்கிறார்கள்? மற்ற அனைவரும் நம்மை மறக்கும் போது யார் நம்மை நினைவுகூர்கிறார்கள்? நாம் இவ்வுலக நண்பர்களை விட்டுச் செல்லும் போது யார் இன்னும் நம்முடன் இருப்பார்கள்? இறைவன் மட்டுமே!

இறைவன் என்றும் மௌனமாக உங்களிடம் மென்குரலில் பேசுகிறான்:…

“ஒரு வார்த்தையும் பேசாமல், நான் எப்போதும் உங்களை நேசித்திருக்கிறேன். நான் மட்டுமே உண்மையாக, “நான் உன்னை நேசிக்கிறேன்,” என்று கூற முடியும்; ஏனெனில் நீங்கள் பிறக்கும் முன்பே நான் உங்களை நேசித்தேன்; என் அன்பு இக்கணத்தில்கூட உங்களுக்கு உயிரளிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது; மற்றும் மரண வாயில்கள் உங்களைச் சிறைப்படுத்திய பிறகு, உங்களுடைய மிகச்சிறந்த மனிதக் காதலரால் கூட உங்களை அடைய முடியாத அந்த இடத்தில் என்னால் மட்டுமே உங்களை நேசிக்க முடியும்.

உங்களால் பெற முடிகின்ற மிகப்பெரிய காதல் இறைவனுடனான காதல் ஆகும். மனித அன்பு ஒரு சிறிய காலத்திற்குப் பின் சென்று விடுகிறது, ஆனால் இறைவனுடனான உங்கள் காதல் நிலைபேறானது. அவனைப் பார்க்காமல் ஒரு நாள்கூட கடந்துசெல்லக் கூடாது. அதனால்தான் நான் எழுதினேன், “முடிவற்ற பிறவிகளின் வாயிலாக நான் உன் நாமத்தை, என் எல்லா வெள்ளிக் கனவுச்சிற்றோடைகளின் மூலம் தேடியவாறு, அழைத்தேன்.”* என்னை வெளியே அனுப்பியதற்கு அவனே பொறுப்பேற்க வேண்டும் என நான் அவனிடம் எப்போதும் கூறுகிறேன்; ஆனால் இறுதியாக வாழ்வின் எல்லா மாயைகளும் நான் அவனை மேலும் போற்றுவதற்காக, அவனை நாட என்னைத் தூண்டுவதற்காக என்று நான் உணர்ந்தறிகிறேன். அவனே பல பிறவிகளின் ஊடாக நான் எப்போதும் தேடிய எல்லாத் தந்தைகளுக்கும் பின்னேயுள்ள தெய்வத்தந்தை, எல்லா அன்னையருக்கும் பின்னேயுள்ள தெய்வ அன்னை, எல்லா அன்பர்களுக்கும் பின்னேயுள்ள பேரன்பன். அவனே பேரன்பன் மற்றும் நமது ஆன்மாக்களே நேசிக்கப்படுபவர்கள், மற்றும் ஆன்மா பிரபஞ்சத்தின் மாபெரும் பேரன்பனைச் சந்திக்கும் போது, பின் சாசுவதக் காதல் ஆரம்பமாகிறது. பல பிறவிகளாக எல்லா மனித அன்புகளின் வாயிலாக நீங்கள் நாடிக்கொண்டிருக்கும் அன்பு இறுதியாக.

உங்களுடையது. நீங்கள் வேறு எதையும் ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள்.
*சாங்ஸ் ஆஃப் தி சோல்-ல் ”டிவைன் லவ் சாரோஸ்”

மேலும் வாசியுங்கள்:

இதைப் பகிர