ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து கிறிஸ்துமஸ் செய்திமடல்

“உங்கள் இதயத்தை கிறிஸ்து-அன்பின் பீடமாக ஆக்குங்கள்….இதனால் அனைத்து மக்களையும், அவர்களின் உடல்-கோவில்களில் எங்கும் நிறைந்திருக்கும் கிறிஸ்துவின் இருப்பிடத்தைக் கண்டு, நீங்கள் நேசிக்கலாம்.”

—பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து ஆனந்தமயமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் விடுமுறைக்கால நற்சிந்தனை! உலகெங்கிலும் உள்ள நிறைய மக்கள், பிரியமான எம்பிரான் இயேசுவின் அவதரிப்பைக் கொண்டாடும் இந்த மங்களகரமான தருணத்தில் உங்கள் இதயம், ஏற்புத்திறனுடைய ஆன்மாக்களால் உணரப்படும் விண்ணுலக ஆனந்தத்தாலும் அமைதியாலும் நிரப்பப்படட்டும்.

இயேசுவின் அவதாரத்தில் இறைவனுடைய பிரபஞ்சத்தைப் பேணிக்காக்கும் உணர்வுநிலையின் எல்லையற்ற தன்மை மற்றும் மகத்துவம் — கூடஸ்த சைதன்யம் — முழுமையாக வெளிப்பட்டது; இருப்பினும், ஒவ்வொரு ஆத்மாவுக்காகவும் பணிவுடனும் அளவற்ற கருணையுடனும் அவரது காலத்திய மக்கள் மத்தியில் அவர் வாழ்ந்த மற்றும் இயங்கிய விதம் தான் நம் இதயத்தைத் தனிப்பட்ட முறையில் தொடுகிறது. நம் மனித அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த மற்றும் நம் போராட்டங்களை அறிந்த ஒருவரின் பச்சாதாபத்துடனும் புரிதலுடனும், அவர் அனைத்து மனிதர்களையும் இறைவனின் குழந்தைகளாகப் பார்த்தார். இறைவன் முக்தி அடைந்த ஆன்மாக்களை பூமிக்கு அனுப்புவதன் மூலம், நாமும் கூட எல்லாம்-நேசிக்கும், எல்லாம்-அளிக்கும் தெய்வீக உணர்வை நமது ஆன்மாக்களில் உணர்ந்தறிந்து கிறிஸ்து-போன்ற செயல்களில் வெளிப்படுத்த, இதய-விழிப்பூட்டும் உலகளாவிய போதனைகளைக் கடைபிடித்து வாழ்ந்த அவர்களின் உதாரணத்தைப் பின்பற்றுமாறு கேட்கிறான்.

ஆன்மீகம்சார்ந்த மங்களகரமான சந்தர்ப்பங்கள் நமது ஆன்மாவின் விழிப்புணர்வுக்கான அழைப்பாகும் என்று நமது குருதேவர் பரமஹம்ஸர் வலியுறுத்தினார் –- இறைவனின் உலகளாவிய அன்பின் மறைந்திருக்கும் சக்தியின் ஒரு புதிய பிறப்புக்கான ஒரு சாதகமான வாய்ப்பு. அது நம் சொந்த வாழ்க்கைகளைப் பெருமளவு மாற்றுகிறது மற்றும் அதன் மூலம் நாம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது.

“சிறுமைகளின் கனவுகளிலிருந்து உங்களுக்குள் இருக்கும் பரந்த தன்மையின் அனுபூதிக்கு விழித்தெழுங்கள்,” குருதேவர் நம்மைத் தூண்டினார்.  அந்த இலக்கை அடைவதற்காக, இறைவன் மீதும் ஒவ்வொரு இருப்பின் அணுவிலும் வியாபித்து இருக்கும் அவனது உலகளாவிய கூடஸ்த சைதன்யத்தின் மீதும் செய்யப்படும் ஆன்மாவை-விரிவாக்கும் பக்திப்பூர்வ தியானத்திற்காக ஒரு நாளை ஒதுக்கி உண்மையான கிறிஸ்துமஸைக் கொண்டாடுமாறு அவர் நம் அனைவரையும் அழைத்தார்.

நம்முடைய உணர்வுநிலையானது, நாம் மற்றவர்களுக்கு பொருள் ரீதியாகவோ அல்லது நம் நேரம், கவனம் மற்றும் அக்கறை ஆகிய பரிசுகளை வழங்கியோ பரிவுடன் ஆதரவு அளிக்க முற்படும்போது தன் சுயநல எல்லைகளை விகிதாச்சார அடிப்படையில் குறைக்கிறது. நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்திய நபர்களுக்காகக் கூட, நாம் இதயத்தில் கருணையுடன் இருக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், புரிந்துகொள்ளும் பொறுமை மற்றும் மன்னிப்பின் இனிமையுடன் ஒத்திசைந்து குணப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும், இந்த புனித காலத்தில், இயேசுவில் மகிமைப் படுத்தும் அந்த எல்லாம்-அரவணைக்கும் உணர்வுநிலையை நாம் ஈர்த்துக் கொள்கிறோம். சமூக, தேசிய மற்றும் சமய எல்லைகளின் தடைகளற்ற அனைத்து மனிதகுலத்தின் தெய்வீக உறவை, அவரைப் போலவே ஆன்மாக்களாக அங்கீகரிப்பது, நமது காலத்தின் பெரும்பாலான சவால்களுக்கு முடிவான பதிலாக இருக்கும்.

தியானத்தில் இறைவனின் சர்வ வியாபகத் தன்மையுடனான கூட்டுறவில், இயேசு அறிந்த தெய்வத் தந்தையை நாம் ஆழமான முறையில் அனுபவிக்கிறோம். இதயத்தின் உணர்வு அதன் எல்லைகளை உடைத்து அனைவரையும் தன் சொந்தமாகவே கருதி பரிவு கொள்கிறது; அந்த அன்பிலிருந்து யாரையும் விலக்குவதை உங்களால் தாங்க முடியாது. அந்த விரிவடைந்த உணர்வுநிலை இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, நீங்கள் புத்தாண்டிற்குள் எடுத்துச் செல்ல நீங்கள் பெறும் தெய்வீகப் பரிசாக இருக்கட்டும். குருதேவர் எங்களிடம் கூறினார், “ஒவ்வொருவரும் இயேசுவின் வாழ்க்கையில் எடுத்துக்காட்டப்பட்ட இலட்சியங்களை தியானத்தின் வாயிலாக தங்களின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டவாறு, அவற்றின்படி வாழ்ந்தால், அமைதியும் சகோதரத்துவமும் தளைத்து பூமியில் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும்.”

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆனந்தம், அமைதி மற்றும் அருளாசிகள் கிடைக்கப்பெற வாழ்த்துகிறேன்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

சங்கமாதா மற்றும் தலைவி, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா/செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்

பதிப்புரிமை © 2011 செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை

இதைப் பகிர