உயிர்த்தெழுதலின் மீது ஒரு தியானம்

A Meditation on Resurrection(தியானம் செய்பவர்கள் அனைவரும் ஏசுவின் உயிர்த்தெழு விழாவின் போது தம் உணர்வுநிலையை எல்லையற்ற கிறிஸ்து உணர்வுநிலையுடன் இசைவிப்பதன் மூலம் விரிவாக்க பரமஹம்ஸ யோகானந்தர் ஊக்குவித்தார். கிறிஸ்து உணர்வுநிலை: படைப்பு முழுவதிலும் உள்ளார்ந்திருக்கும் இறைவனின் வெளிநோக்கிச் செலுத்தப்பட்ட உணர்வுநிலை; இயேசு, கிருஷ்ணன் ஆகியோராலும், மற்ற அவதாரங்களாலும் வெளிப்படுத்தப்பட்ட இறைவனுடன் ஒன்றாகிய நிலை எனும் பிரபஞ்ச உணர்வுநிலை. பின்வருவது அவர் அளித்த தியானங்களில் ஒன்று:)

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அவர் இயற்பொருள் உடல், சூட்சும உடல், காரண உடல் ஆகியவற்றின் வரையறைகளிலிருந்து சர்வவியாபகத்தினுள் மேலெழுந்தார். எங்கும்-நிறைந்த கிறிஸ்து உணர்வுநிலையுடன் ஒன்றாகி இருக்கும் இயேசு ஒவ்வொரு மலரின், சூரிய ஒளியினுடைய ஒவ்வொரு கதிரின், ஒவ்வொரு மேன்மையான சிந்தனையின் இதயத்திலும் உயிர்த்தெழுந்தார். அவர் அணுயுகத்தில் உயிர்த்தெழுந்தார், மேலும் ஞானம் மற்றும் பிரபஞ்ச அன்பு எனும் தொட்டிலிலிருந்து எழுந்தவாறு அவருடைய புதிய வாழ்வின், புதிய மனித குல ஆன்மாவின் பிறப்பை அணுயுகத்தின் எல்லா அழிவுகளாலும் மறைக்க முடியாது.

அவர் நம் மனங்களில், நம் இதயங்களில், நன் ஆன்மாக்களில் உயிர்த்தெழுந்தார்—அவருக்கும் நமக்கும் இடையே பிரிவேதும் இல்லை. அவர் நம் அன்பு எனும் தோட்டத்தில், நம் புனித பக்தி எனும் தோட்டத்தில், நம் தியானம் மற்றும் கிரியா யோகம் எனும் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.

அவர் ஒவ்வோர் அணுவிலும் உயிரணுவிலும் உயிர்த்தெழுந்தார், அவர் மேகங்களில் எழுந்தார், அவர் எல்லாக் கோள்களிலும் எழுந்தார். அவர் பிரபஞ்சங்களில் மற்றும் பிரபஞ்சங்களைச் சுற்றியுள்ள அலையும் கதிரியக்கங்களில், மற்றும் அதற்கப்பாலுள்ள குளிர்ந்த ஒளியில் உயிர்த்தெழுந்தார். அவர் பிரபஞ்சங்களிலிருந்து பேரண்ட உணர்வு நிலைகளின் அமைதிக்குள் உயிர்த்தெழுந்தார். மேலும் அவர் உங்களில் உங்களுடைய பக்தியின் மற்றும் கிரியா யோகத்தின் வாயிலாக மீண்டும் எழுவார். உங்களுடைய ஞானம் விழித்தெழும் போது, நீங்கள் உங்களுள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைத் தரிசிப்பீர்கள். மேலும் உங்களுடைய தியானம், தெய்வீகக் கூட்டுறவு ஆகியவற்றின் வாயிலாக உடல்சார் மற்றும் அழியும் உணர்வுநிலையின் கல்லறையிலிருந்து பரம்பொருளின் என்றும்-பேரின்பமய முடிவிலியினுள், அவருடன் உயிர்த்தெழுவீர்கள்.

“கிறிஸ்துவே, நீங்கள் பரம்பொருளில் உயிர்த்தெழுந்துள்ளீர்கள். நாங்கள் உமது உயிர்த்தெழுதலில், மற்றும் உமது வாக்குறுதியை—இறைவனின் குழந்தைகளாக, உடலெனும் கல்லறைக்குள் கீழிறங்கிய நாங்களும் நமது தெய்வத்தந்தையின் இராஜ்ஜியத்தினுள் விண்ணேறுவோம்—மீண்டும் உறுதிப்படுத்திய அந்த நிகழ்வில் மகிழ்ந்து கொண்டாடுகிறோம். இந்த உயிர்த்தெழு விழாவில் எம்மிடமுள்ள எமது எல்லா பக்தியையும், எமது இதயங்களின் எல்லாக் கூக்குரல்களும், நன்மை எனும் எல்லா நறுமணத்தையும், நாங்கள் உமது சர்வவியாபகத் திருவடிகளில் அர்ப்பணிக்கிறோம். நாங்கள் உமதே, ஏற்றுக் கொள்வீர்! கிறிஸ்து உணர்வு நிலையின் வாயிலாக, எம்மை சாசுவதப் பரம்பொருளில் உம்முடன் உயிர்த்தெழச் செய்வீர். எம்மை அந்த மகா பேரின்ப இராஜ்ஜியத்தில் என்றும், என்றென்றும் வைத்திருப்பீராக.

உயிர்த்தெழு தினத்தின் காலைவேளைக்கான பிரார்த்தனையும் சங்கல்பமும்

“விண்ணுலகக் கிறிஸ்துவே, எமது உணர்வுநிலையை உமது உணர்வுநிலையால் செறிவூட்டுங்கள். உம்மில் எமக்கு ஒரு புதிய பிறவியைத் தாருங்கள்.”

சங்கல்பம் செய்து உணருங்கள்:

“தெய்வத்தந்தையே, என்னைக் கிறிஸ்து உணர்வுநிலையில் விழித்தெழச் செய்வீர்.
கிறிஸ்துவும் நானும் ஒன்றே.
ஆனந்தமும் நானும் ஒன்றே.
அமைதியும் நானும் ஒன்றே.
ஞானமும் நானும் ஒன்றே.
அன்பும் நானும் ஒன்றே.
பேரின்பமும் நானும் ஒன்றே.
கிறிஸ்துவும் நானும் ஒன்றே. கிறிஸ்துவும் நானும் ஒன்றே. கிறிஸ்துவும் நானும் ஒன்றே.”

“உயிர்த்தெழுதலின் மீது ஒரு தியானம்“  – பரமஹம்ஸ யோகானந்தரின் தி செகன்ட் கமிங் ஆஃப் கிறைஸ்ட்: தி ரிசரெக்ஷன் ஆஃப் தி கிறைஸ்ட் விதின் யு—எ ரெவெலேடரி கமென்டரி ஆன் தி ஒரிஜினல் டீச்சிங்ஸ் ஆஃப் ஜீசஸ்  என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி.

இதைப் பகிர