யோகானந்தரும் பகவத் கீதையும்

யோகானந்தரும் பகவத் கீதையும்

– அருளியவர் ஸ்ரீ தயா மாதா

பரமஹம்ஸ யோகானந்தரின்
காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா (இறைவன் அர்ஜுனனுடன் உரையாடுகிறார்: பகவத் கீதை) -க்கு எழுதிய முகவுரையில் இருந்து

“ஏதேனும் ஒரு உண்மையை மனித குலத்திற்கு அளிக்காமல் எந்த ஒரு சித்தரும் இவ்வுலகை விட்டுச் செல்வதில்லை. ஒவ்வொரு விடுதலைபெற்ற ஆன்மாவும், தமது ஆத்ம-அனுபூதி எனும் ஞான ஒளியை மற்றவர் மீது கட்டாயமாக பாய்ச்ச வேண்டும்.” எத்தனை தாராள மனப்பான்மையுடன் பரமஹம்ஸ யோகானந்தர் இந்தக் கடமையை நிறைவேற்றி உள்ளார்! — தமது உலகளாவிய சேவையின் ஆரம்ப காலங்களில், சாத்திரங்களில் இருந்து அவர் எடுத்துரைத்த வார்த்தைகள். தமது சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களைத் தவிர அவர் தம் சந்ததிகளுக்கு வேறு எதையும் விட்டுச் செல்லாது இருந்தாலும், தெய்வீக ஒளியை வாரி வழங்கிய வள்ளலாகவே மதிப்பிடப்பட்டு இருக்கிறார். இறை ஐக்கிய நிலையிலிருந்து ஆற்றொழுக்காக பெருகி வந்த அவரது இலக்கியப் படைப்புகளில், பகவத் கீதையின் மொழி பெயர்ப்பும் விளக்கவுரையும் குருநாதரின் மிகச்சிறப்பான, விரிந்து பரந்த பரிபூரணமான காணிக்கை எனக் கருதப்படலாம் — நூலின் பருமனால் மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கிய அதன் சிந்தனைகளாலும்…..

பரமஹம்ஸர், கிருஷ்ண பகவான் கீதையில் குறிப்பிட்டுள்ள தியான யோக அறிவியலில், தான் முழுமையாக தேர்ச்சி பெற்றிருப்பதை வெளிப்படுத்தினார். அவர் எங்ஙனம் சிரமமேயின்றி, இயல் கடந்த சமாதி நிலைக்குச் செல்கிறார் என்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்; அப்போது அங்கிருந்த நாங்கள் ஒவ்வொருவரும், இறை ஐக்கியத்தால் வெளிப்படும் சொல்லொணா அமைதி மற்றும் பரவசத்தில் குளித்து இருக்கிறோம். அவர் தமது ஒரு தொடுகையால், ஒரு சொல்லால் அல்லது ஒரு பார்வையாலே கூட, இறை இருப்பு பற்றிய அதிக விழிப்புணர்விற்கு மற்றவர்களைத் தட்டி, எழுப்பிவிட முடியும். அல்லது அவரோடு சுருதி சேர்ந்த சீடர்களுக்கு, உயர்-உணர்வுநிலைப் பரவச அனுபவத்தை அளிக்க முடியும்.

உபநிடதத்தில் ஒரு பத்தி உரைக்கின்றது: அமிழ்தத்தை, — அது பிரம்மனே தவிர வேறொன்றும் இல்லை — இடைவிடாத தியானத்தால் விளையும் அமிழ்தத்தை, பருகுவதிலேயே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட மகான், மிக உயர்ந்த துறவியாக, பரமஹம்ஸர் ஆக, மற்றும் அவதூதர் எனும் உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்ட தத்துவ ஞானியாக ஆகிறான். அவனை தரிசிப்பதால் உலகம் முழுவதும் உய்யப் பெறுகின்றது. அறியாமை நிறைந்த ஒரு மனிதனும் கூட, அவரது சேவையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டால், வீடுபேறு அடைந்து விடுகிறான்.”

பரமஹம்ஸ யோகானந்தர், ஒரு உண்மையான குரு என்றும், ஆத்ம அனுபூதி பெற்ற மகான் என்றும் அழைக்கத் தகுதியானவராக இருந்தார்; அவர் அறிவியலிலும், செயலிலும், இறைவன் மீது கொண்ட அன்பிலும் ஒரு வாழும் சாத்திரமாகவே விளங்கினார். அவரது துறவு மனப்பான்மையும், தொண்டுள்ளமும் உலகியல் விஷயங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடம் இருந்து வந்து குவிந்த பாராட்டுக்களிலிருந்தும் முழுமையாக விலகியே இருந்தது. அவரது இனிமையான, இயல்பான பணிவில் வெல்ல முடியாத அக வலிமை மற்றும் ஆன்மபலம் காணப்பட்டது. அங்கு சுயநலமான அகந்தைக்கு இடமே இல்லை. தன்னைப் பற்றியோ தனது பணிகள் பற்றியோ குறிப்பிடும்போது கூட, அது தனது சாதனை என்ற உணர்வு இல்லை. இறைவன் மட்டுமே ஒருவரது இருப்பின் உண்மையான ஆத்ம சாரம் என்ற இறுதி எல்லையான ஆத்ம அனுபூதியை அடைந்து விட்டபின், அவனைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் அவர் உணரவில்லை.

கீதையில், கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தியவற்றின் சிகரமான வான் முகடு, 11ஆவது அத்தியாயத்தில் இடம் பெறுகின்றது. – ” அகக் காட்சிகளுக்கெல்லாம் பெரிய அகக்காட்சி”. இறைவன் தனது பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்துகின்றான்: பிரபஞ்சங்களின் மீது பிரபஞ்சங்கள், கற்பனை செய்ய முடியாத அளவு பரந்து விரிந்தவை, எல்லையற்ற, எல்லாம் அறிந்த பரம்பொருளால் படைத்தும் காத்தும் வரப்படுபவை; அப்பரம்பொருள் மிகச்சிறிய அணுத் துகள்களையும், பால் வெளியில் நிகழும் பிரம்மாண்ட நகர்வுகளையும் ஒருசேர அறிய வல்லது — அது மண்ணுலக மற்றும் விண்ணுலகத் தளங்களில் உள்ள ஒவ்வொரு உயிரின், ஒவ்வொரு எண்ணம், உணர்வு மற்றும் செயலை அறிந்திருக்கிறது.

பரமஹம்ஸ யோகானந்தர் இதே போன்ற பிரபஞ்ச அகக்காட்சி காணும் பெறும் பேறு பெற்றபோது, குருதேவரது விழிப்புணர்வின் எங்கும் நிறைந்த இயல்பினையும், அதனால் அவரது ஆன்மீக ஆற்றல் விரிந்து பரவுவதையும் நாங்கள் கண்டோம். 1948 ஜூன் மாதத்தில் மாலைப்பொழுதின் பிற்பகுதியிலிருந்து, இரவு முழுவதும், மறுநாள் காலை 10 மணி வரையிலும், பிரபஞ்சம் மெல்ல மெல்லத் திறந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை பரவசத்தோடு அவர் வர்ணித்துக் கொண்டிருந்தார். எங்களில் ஒரு சில சீடர்களுக்கு, இந்த தனித்துவமிக்க அனுபவத்தைக் கணநேரம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

இந்தப் பய-பக்தி மிகுந்த நிகழ்வு முன்னுரைத்தது என்னவென்றால், இந்த மண்ணுலகில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வரப் போகின்றது. இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, பரமஹம்ஸர் மேன்மேலும் அதிகமாக தனிமையில் இருக்கத் தொடங்கினார். மொஜாவே பாலைவனத்தில் உள்ள ஒரு சிறிய ஆசிரமத்தில், தனிமையில் இருக்கத் தொடங்கினார். அங்கு, தமது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை, தம்முடைய எழுத்துக்களை முடிப்பதற்கு எவ்வளவு அதிக நேரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்கினார். அவர் இவ்வுலகிற்கு விட்டுச் செல்ல விரும்பிய எழுத்து வடிவச் செய்திகளில் கவனத்தை ஒருமுகப்படுத்தி இருந்த அந்தத் தருணங்கள் அவருடன் இருந்த எங்களில் சிலருக்கு கிடைத்த பெரும் பேறு. அகத்தே காணும் உண்மைகளில் அப்படியே ஒன்றாகி, அவற்றைப் புறத்தே வெளிப்படுத்துவதிலேயே அவர் முழுமையாக அமிழ்ந்திருந்தார். “அவர் சில நிமிடங்கள் மட்டும் முற்றத்திற்கு வருவார்”. பரமஹம்ஸரின் ஏகாந்தவாசக் கூடத்தைச் சுற்றி அமைந்த மைதானத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு சன்னியாசி நினைவு கூர்ந்தார். அவரது விழிகளில் அளவிட முடியாத ஒரு சேய்மை காணப்பட்டது, அப்போது அவர் என்னிடம் சொன்னார்: “மூன்று உலகங்களும் என்னுள் குமிழிகள் போல மிதந்து கொண்டிருக்கின்றன”. அவரிடமிருந்து பரவி வந்த முழுமையான சக்தி வீச்சு என்னை அவரிடமிருந்து பல அடிகள் பின்னோக்கி நகரச் செய்தது.”

மற்றொரு சன்னியாசி, குருஜி வேலை செய்து கொண்டு இருந்த அறைக்குள் தாம் நுழைந்ததை நினைவு கூறுகிறார்: ” அந்த அறையில் இருந்த அதிர்வு நம்ப முடியாதது; அது இறைவனுக்குள் நடந்து செல்வதைப் போல இருந்தது.”

“நான் நாள்முழுவதும், கண்களை இவ்வுலகிற்கு மூடிக்கொண்டு, ஆனால் வானுலகில் எப்போதும் திறந்த படி, சாத்திரங்களின் விளக்கங்களையும் கடிதங்களையும் எழுத உரைத்துக்கொண்டே இருக்கிறேன்,” பரமஹம்ஸர் அந்த நாட்களில் ஒரு மாணவருக்கு எழுதினார்.”

பரமஹம்ஸரின் கீதை விளக்கவுரைக்கான பணி, பல ஆண்டுகளுக்கு முன்பே (முன்னோட்டமாக 1932ல் எஸ்.ஆர்.எஃப் இதழில் ஒரு தொடராக வெளிவரத் தொடங்கியிருந்தது) தொடங்கி, இந்தப் பாலைவனத்தில் இருந்த காலகட்டத்தில் நிறைவுற்றது; அது பல வருடங்களாக எழுதப்பட்டவை பற்றிய சீராய்வு, பல்வேறு விஷயங்களைப் பற்றிய விளக்கம் மற்றும் விரிவாக்கம், தொடராக இருந்ததால் புதிய வாசகரின் தேவை கருதி கூறியது கூறலாக அமைந்த சில பகுதிகளைச் சுருக்குதல், புதிய உத்வேகங்களை இணைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது — கீதையின் பிரபஞ்சவியல் மற்றும் மனித உடல், மன, ஆன்ம அமைப்பு பற்றிய பார்வை ஆகியவற்றை மேலைநாட்டு மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் வெளிவந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாத, முந்தைய ஆண்டுகளின் பொதுவான வாசகர்களுக்கு கூற முயற்சிக்காத யோகம் பற்றிய சில தத்துவார்த்தக் கருத்துக்கள் உள்ளிட்ட புதிய எழுச்சியூட்டும் செய்திகளின் இணைப்பையும் உள்ளடக்கியவாறு — இவை யாவும் முழுக்க முழுக்க நூல் வடிவில் வெளிவரத் தக்க வகையில் அமைக்கப்பட்டது.

அவரது பதிப்பிக்கும் பணிக்கு உதவிட குருதேவர் தாரா மாதாவை (லாவ்ரி வீ.ப்ராட்) நம்பியிருந்தார். அவர் பெரிதும் முன்னேற்றம் அடைந்த ஒரு சிஷ்யை; அவர் இவரை 1924ல் முதன்முதலாகச் சந்தித்தார் மற்றும் அன்று முதல் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக, குருவின் நூல்கள் மற்றும் பிற எழுத்துக்களில், வெவ்வேறு சமயங்களில் அவருடன் இணைந்து பணியாற்றினார். இந்த உண்மையுள்ள சிஷ்யையின் பங்களிப்பிற்கு போதுமான அங்கீகாரம் மற்றும் பாராட்டு அளிக்காமல் இந்த நூல் வெளியாக பரமஹம்ஸர் அனுமதித்திருக்க மாட்டார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. “அவர் ஒரு மகா யோகியாக இருந்தார்” குருதேவர் என்னிடம் சொன்னார், “அவர் உலகத்தின் கண்களுக்குத் தென்படாமல், பல பிறவிகள் இந்தியாவில் வாழ்ந்து இருக்கிறார். இந்தப் பணியில் வேலை செய்வதற்கென்றே இந்த பிறவி எடுத்துள்ளார்.” பல பொது நிகழ்ச்சிகளில் குருதேவர், தாரா மாதாவின் இலக்கிய நுண்மை, தத்துவ ஞானம் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து மதிப்பீடு செய்துள்ளார். “இவர் இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த பதிப்பாசிரியர், உலகம் முழுவதிலும் என்று கூட சொல்லலாம். எனது உன்னதமான குரு, ஶ்ரீ யுத்தேஸ்வர் நீங்கலாக, லாவ்ரியைத் தவிர வேறு எவருடனும் இந்திய தத்துவங்களை விவாதிப்பதில் நான் அதிக மகிழ்ச்சி அடைந்தது இல்லை.”

தமது வாழ்க்கையின் பின்னாட்களில் பரமஹம்ஸர் தமது எழுத்துக்களைச் செம்மை செய்ய மற்றொரு ஆசிரம சீடரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்தார்: அவர்தான் மிருணாளினி மாதா. தமது போதனைகளின் ஒவ்வொரு பரிமாணத்தைப் பற்றியும், தமது எழுத்துக்கள் மற்றும் சொற்பொழிவுகளைத் தயாரித்தல், எடுத்துரைத்தல் ஆகியவைகளைப் பற்றியும் பிரத்யேகப் பயிற்சி அளித்து, மிருணாளினி மாதாவைத் தாம் எதற்குத் தயார் செய்கிறார் என்பதை குருநாதர் எங்கள் எல்லோருக்கும் தெளிவாக விளக்கினார்.

இந்தப் பூவுலகில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னால், ஒரு நாள் அவர் மனம் திறந்து கூறினார்: “லாவ்ரியைக் குறித்து எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எனது எழுத்துக்கள் தொடர்பான வேலைகளை முடிக்க அவரது உடல்நிலை இடம் கொடுக்காது.”

குருதேவர் எவ்வளவு அதிகமாக தாரா மாதாவை நம்பி இருந்தார் என்பதை அறிந்திருந்த மிருணாளினி மாதா, தமது கவலையைத் தெரிவித்தார்: “குருவே, அந்த பணிகளை வேறு யாரால் செய்ய முடியும்?”

குருநாதர், திட்டவட்டமான முடிவாக கூறினார், “நீ செய்வாய்.”

1952ல் பரமஹம்ஸரின் மகா சமாதிக்குப் பிந்தைய வருடங்களில், பகவத் கீதையின் ஒவ்வொரு சுலோகத்திற்குமான விளக்கவுரையைத் தாரா மாதாவால் எழுத முடிந்தது (இயக்குனர் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் மேலதிகாரி, எஸ்.ஆர்.எஃப் வெளியீடுகளின் தலைமைப் பதிப்பாசிரியர் ஆகிய அதிக நேரம் செலவழிக்க வேண்டிய பணிகளையும் தாண்டி). இருப்பினும், பரமஹம்ஸரின் கணிப்பின்படியே, தாரா மாதா, கீதையின் கையெழுத்துப் படிகளைத் தயாரிக்கும் பணியினை, குருதேவர் திட்டமிட்டிருந்தபடி முடிக்க முடியாமலே காலமானார். அதன்பின் அந்த பொறுப்பு மிருணாளினி மாதாவின் தோள் மீது விழுந்தது. குருதேவர் உணர்ந்தபடி, தாரா மாதா காலமான பின்னர், அவர் ஒருவரால் மட்டுமே அப்பணியை முறையாகச் செய்திருக்க முடியும், ஏனெனில் பல ஆண்டுகள் குருநாதரிடம் அவர் பெற்ற பயிற்சி மற்றும் குழுவின் எண்ணங்களோடு அவர் கொண்ட ஒத்திசைவு….

பரமஹம்ஸருக்கு இரட்டைக் கடமைகள் இருந்தன. அவரது பெயரும், செயல்பாடுகளும் அவர் தோற்றுவித்த இரு உலகு தழுவிய நிறுவனங்களான எஸ்.ஆர்.எஃப், ஒய்.எஸ்.எஸ். ஆகியவற்றோடு தனித்தன்மையுடன் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தன; எஸ்.ஆர்.எஃப், ஒய்.எஸ்.எஸ். மூலம் கிரியா யோக போதனைகளைத் தழுவிக்கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு, அவர்களின் பிரத்தியேக குரு அவர். அதேசமயம் சமஸ்கிருதத்தில் ஜகத்குரு என்று குறிப்பிடப்படும் உலகளாவிய போதகர் ஆகவும் அவர் திகழ்கிறார். பல்வேறு பாதைகள் மற்றும் மதங்களைப் பின்பற்றுவோர்க்கு, யோகானந்தர் அவரது வாழ்க்கையும் உலகளாவிய செய்திகளும் அவர்களின் ஊக்கத்திற்கும், உயர்வுக்குமான ஆதாரமாக விளங்குகின்றன — இம்மகானின் ஆன்மீகப் பாரம்பரியம் அகிலம் முழுவதற்கும் அருள் புரிவது.

1952, மார்ச் 7, இந்த மண்ணில் அவரது கடைசி நாளை நான் நினைவு கூருகிறேன். உணர்வுநிலை வழக்கத்தை விட மிக அதிகமான அளவிற்கு அகமுகமாகத் திரும்பி இருந்தபடி, குருதேவர் மிக அமைதியாக இருந்தார். அன்றைய தினம் அவரது விழிகள் வரையறைக்கு உட்பட்ட உலகில் குவிந்து இருக்கவில்லை, ஆனால் அப்பாலுக்கு அப்பால், இறைவன் குடி கொண்டிருக்கும் பிரதேசத்தைப் பார்த்த வண்ணம் இருந்தன என்பதைச் சீடர்கள் ஆகிய நாங்கள் கவனித்தோம். எப்போதாவது அவர் பேசினாலும், அது மிகுந்த நேசத்தை, பாராட்டை, கனிவைக் காட்டுவதாக இருந்தது. ஆனால் எனக்குத் தெளிவாக நினைவில் நிற்பது என்னவென்றால், அவருடைய அறையில் நுழைந்த ஒவ்வொருவரும் கவனித்த, அவரிடமிருந்து ஊற்றெடுத்த, ஆழ்ந்த அமைதி மற்றும் தீவிர தெய்வீக அன்பின் அதிர்வுகள். தெய்வீக அன்னையே — மென்மையான பரிவு, கருணை ஆகியவையாக உருவெடுத்த எல்லையற்ற பரமாத்மாவின் அந்த அம்சம், உலகையே உய்விக்க வல்ல நிபந்தனையற்ற அன்பு ஆகியவை — அவரை முழுவதுமாக ஆட்கொண்டு இருந்தது போலத் தோன்றியது, மற்றும் தெய்வீக அன்னை அவளது படைப்புகள் அனைத்தையும் தழுவிக் கொள்வதற்காக, அன்பின் அலைகளை அவர் மூலமாக அனுப்புவதாக தோன்றியது.

அன்று மாலை, இந்தியத் தூதரை கௌரவிப்பதற்காக அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில், பரமஹம்ஸர் தலைமைச் சொற்பொழிவாளராக இருந்தார். அங்குதான் அவர் தனது சரீரத்தை விட்டு நீங்கி, எங்கும் நிறைந்த இறையில் கலந்தார்.

மனித குலத்தை உய்விக்க பூமிக்கு வரும் அரிதான சில ஆன்மாக்களைப் போல, பரமஹம்ஸரின் செல்வாக்கு அவர் மறைந்த பின்னும் வாழ்கிறது. அவரைப் பின்பற்றுவோர், அவரை, பிரேமாவதாரம், தெய்வீக அன்பின் திருவுருவம் என்று போற்றுகின்றனர். படைத்தவனை மறந்து, உறங்கிக்கொண்டிருக்கும் இதயங்களைத் துயிலெழுப்பவும், ஏற்கனவே உண்மையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மெய்யறிவு புகட்டவும் இறைவனின் அன்பைத் தாங்கி அவர் அவதரித்தார். கீதையின் கையெழுத்துப் படிகளைப் பரிசீலிக்கும் போது, பரமஹம்ஸரின் விளக்கவுரைகளில் மனிதனின் மிக உயரிய குறிக்கோளான இறைவனைத் தேடுவதற்கு நம்மை அழைத்து, வழிநெடுகிலும் நம்முடனேயே இருந்து பாதுகாப்பளிக்கும் தெய்வீக அன்பின் காந்த விசையை உணர்ந்தேன்.

எனது ஆன்மாவில், பரமஹம்ஸரின் நிறைவான, உலகளாவிய பிரார்த்தனை மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதை நான் கேட்கிறேன் — அவரது உலகு தழுவிய பணியின் பின்னால் உள்ள ஆற்றல் மற்றும் மெய்யறிவின் வெளிப்பாடான இப்புனித பகவத்கீதையை நமக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது உத்வேகம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் அந்த பிரார்த்தனை:

தெய்வத்தந்தையை, தாயே, நண்பனே, அன்பே வடிவான இறைவனே, எனது பக்தியின் கருவறையில் உனது அன்பின் ஒளி என்றென்றும் ஒளிரட்டும். அது எல்லா இதயங்களிலும் உன் அன்பை விழிப்படையச் செய்ய என்னை வல்லமை பெறச் செய்வாய்.

“ஒரு புதிய சாத்திரம் பிறந்துள்ளது”

பரமஹம்ஸ யோகானந்தரின், காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா (இறைவன் அர்ஜுனனுடன் உரையாடுகிறான்: பகவத்கீதை) என்ற நூலுக்கு தயா மாதா எழுதிய பின் உரையிலிருந்து.

பகவத்கீதைக்கான பணிகளை, பல மாதங்களாக பாலைவன ஆசிரமத்திலிருந்து செய்து முடித்த பிறகு, பரமஹம்ஸ யோகானந்தர் கலிபோர்னியாவின் கடற்கரையிலுள்ள என்ஸினிடாஸ் எஸ்.ஆர்.எஃப் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார். ஒரு நாள் அதிகாலை மூன்று மணி இருக்கும். அன்றிரவு பல மணி நேரங்கள், பகவத் கீதை மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க உரைகளில் பெரிதும் மூழ்கி இருந்தார். இறுதியில் அமைதியாக அருகே அமர்ந்திருந்த சீடரின் பக்கம் திரும்பி, “நான் நிறைவேற்ற வந்த என் பிறவிப் பணி முடிவடைவதைக் காணும் பெரும்பேறு இந்த இரவில், உனக்கு கிட்டியுள்ளது. நான் கீதையை முடித்துவிட்டேன். அந்தப் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது, இந்தக் கீதையை நான் எழுதுவேன் என நான் வாக்குறுதி அளித்திருந்தேன் — அது நிறைவேறி விட்டது. அனைத்து உயர்ந்த மகான்களும் (அதாவது எஸ்.ஆர்.எஃப் குருமார்கள்) இன்று இந்த அறையில் இருந்தார்கள். நான் அவர்களோடு பரம்பொருள் நிலையில் இருந்து உரையாடினேன். இனி என் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டு விட்டது, நிமிடங்களாக, மணி நேரங்களாக, நாட்களாக — ஒருவேளை வருடங்களாக — எனக்குத் தெரியாது. அது அந்த தெய்வீக அன்னையின் கைகளில் உள்ளது. நான் அவளது அருளாசியால் தான் வாழ்கிறேன்.”

அதன்பின் பரமஹம்ஸர், அந்த இரவில், அந்தப் பணியின் போது அவரைச் சூழ்ந்திருந்த சிறப்புமிக்க அருளாசிகளை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதற்காக, பிற மூத்த சீடர்களை அழைத்தார்.

இதைத்தொடர்ந்து, தமது படுக்கை அறையில் அவர் தனித்து இருந்தபோது, பரமஹம்ஸரின் தெய்வீக அனுபவம் அற்புதமாகத் தொடர்ந்தது. அவர் எங்களிடம் கூறினார்: “எனது அறையின் மூலையில் ஒரு வெளிச்சம் காணப்பட்டது. அது திரைச்சீலையில் உள்ள ஒரு சிறு துவாரத்தின் வழியாக வரும் காலை கதிர் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஒளி மேலும் பிரகாசமாகி விரிவடைந்தது.” பணிவாக, கேட்க முடியாத அளவு மென்மையாக அவர் தொடர்ந்தார்: “அந்த ஒளி வெள்ளத்தில் இருந்து, ஏற்றுக்கொண்ட பார்வையோடு ஶ்ரீயுக்தேஸ்வர் தோன்றினார்.”

பல வருடங்களுக்கு முன்னால் ஶ்ரீயுக்தேஸ்வர் அவரிடம் கூறியிருந்தார்: வியாசருக்கு காண்பிக்கப்பட்டது போலவே கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை நீ கேட்டிருப்பதால், பகவத்கீதையின் அனைத்து உண்மைகளையும் நீ உன் மனத்தில் உணர்கிறாய். அவ்வாறு வெளிப்பட்ட உண்மையை உனது விளக்கங்களுடன் போய் வழங்கு: புதியதோர் சாத்திரம் பிறக்கும்.

பல மாதங்களாகவும் பல ஆண்டுகளாகவும் இந்தக் கையெழுத்துப் பிரதியில் பணியாற்றிய பிறகு, தமது குருநாதரின் கணிப்பு நிறைவேறிவிட்டதை பரமஹம்ஸர் இப்போது உணர்ந்தார். பகவத் கீதை பற்றிய தமது விளக்க உரை நிறைவுற்றது எனத் தமது சீடர்களிடம் அறிவித்த குருநாதர், ஒரு ஆனந்தமான புன்னகையுடன் ஶ்ரீயுக்தேஸ்வர்ஜி தம்மிடம் கூறியதை எதிரொலித்தார். “ஒரு புதிய சாத்திரம் பிறந்துவிட்டது.”

அவர் சொன்னார், “நான் சமாதி நிலையில் எனது உயர்ந்த குருமார்கள் மற்றும் பகவத்கீதையின் மூலகர்த்தாக்கள் ஆகியோருடன் ஐக்கியமாகி இருந்த போது எனக்கு வந்தவாறு நான் இந்தக் கீதையை எழுதியுள்ளேன்.” என் மூலம் வெளிவந்த கீதை அவர்களுக்கே சொந்தமானது. ஆனால் என் குரு கூறியதை நான் உணர்கிறேன்.” ஒரு புதிய கீதை, இதுகாறும் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு விளக்கங்களாகிய ஒளிகளில், ஓரளவு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருந்த கீதை, இப்போது தனது முழு ஜோதிப் பிரவாகத்துடன், உலகத்தின் உண்மைப் பக்தர்கள் அனைவரையும் நீராட்டுவதற்காக வெளிவருகின்றது.”

பரமஹம்ஸ யோகானந்தரின்
காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா,(இறைவன் அர்ஜுனனுடன் உரையாடுகிறார்: பகவத் கீதை)

இப்போதே வரவழைப்பீர்

இதைப் பகிர