நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உலகம் முழுவதுடன் இணைதல்

3 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் நீங்கள் எடுக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், பிரார்த்தனை செய்கிறோம். நாம் அனைவரும் அறியாத பிரதேசத்தின் வழியாக நடக்க வேண்டியிருக்கும் இந்த நேரத்தில், YSS / SRF பக்தர்கள் இந்த சந்தர்ப்பத்திற்கு கைகொடுத்து, நம்பிக்கை, தைரியம், ஆன்மீக வலிமை மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவு போன்ற உள்ளார்ந்த ஆன்ம குணங்களை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரார்த்தனையின் சக்தியை வலியுறுத்தி பரமஹம்ஸ யோகானந்தர் கூறியதாவது: “பெரும்பாலான மனிதர்கள் நிகழ்வுகளின் போக்கை இயற்கையானதாகவும் தடுக்கப்பட முடியாததாகவும் கருதுகின்றனர். பிரார்த்தனையின் மூலமாக எத்தகைய அடிப்படை மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை அவர்கள் அரிதாகவே அறிந்திருக்கிறார்கள்.” YSS மற்றும் SRF சன்னியாசிகள் தினமும் பிரார்த்தனை கோரியவர்களுக்காகவும், அனைத்து பக்தர்களின் நல்வாழ்வுக்காகவும், உலக நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதை நீங்கள் அறிவீர்கள். மேலும் பல ஆண்டுகளாக, YSS/SRF உலகளாவிய பிரார்த்தனை குழு உறுப்பினர்கள், உலகெங்கிலும் உள்ள நம் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்தப்படும் பிரார்த்தனை சேவை மூலமாக இந்த முயற்சிக்கு சக்தி வாய்ந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

நாம் அனைவரும் ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் மூலம் நமது பிரார்த்தனைகளின் சக்தியை இன்னும் பயனுறுதியுள்ளதாக்கலாம். யோகதா சத்சங்க சொஸைடி ஆசிரமங்களில், அனைத்து சன்னியாசிகளும் மற்றவர்களின் குணமடைதலுக்காகவும், உலக நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காகவும், கீழே பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரங்களில் தினமும் பிரார்த்தனை செய்கிறார்கள்; மேலும் அவ்வாறு செய்ய விரும்புவோரை அந்த நேரங்களில் இதில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். (குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நேரங்களும் IST இல்):

காலை 07:50 – 08:00 மணி.
மதியம் 12:50 – 01:00 மணி.
மாலை 06:50 – 07:00 மணி.

உங்களுக்கு வசதிப்பட்டால், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஆசிரமங்களில் நடத்தப்படும் குணமளிக்கும் பிரார்த்தனை சேவைகளின் போது இணைந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் SRF வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

மேற்கூறிய நேரங்கள் உங்கள் பணிக்குப் பொருந்தவில்லை என்றால், உங்கள் அன்றாட வழக்கத்திற்கு ஏற்ற வேறு எந்த நேரத்திலும் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனை முடிந்ததும், பரமஹம்ஸர் போதித்த குணமளிக்கும் உத்தியை செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உலகளாவிய பிரார்த்தனைக் குழுவை நிறுவியபோது, பரமஹம்ஸர் கூறினார்: “ஆயிரக்கணக்கானவர்களின் பிரார்த்தனைகள் ஒன்றிணைந்தால், அமைதி மற்றும் தெய்வீக குணமடைதல் ஆகியவற்றின் சக்திவாய்ந்த அதிர்வுகள் விரும்பிய முடிவுகளை வெளிப்படுத்த உதவுவதில் அளவிட முடியாத மதிப்பு வாய்ந்தவையாக இருக்கும்.” 

இந்த ஊக்கமளிக்கும் எண்ணம் உங்களுக்கு வலிமை அளிப்பதோடு, நமது கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்தையும் உலகம் பெறுவதைக் மனகாட்சியாக காண உங்களுக்கு உதவட்டும். தெய்வீகப் பாதுகாப்புக் கோட்டையில் நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பீர்களாக.

வீடியோ: ஸ்வாமி சிதானந்த கிரி, பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி நடைமுறையை வழி நடத்துகிறார். மார்ச் 14 முதல் செய்யப்பட்ட வழிநடத்தப்பட்ட தியானம் மற்றும் ஆன்மீக உறுதிமொழியின் முடிவில் நிறைவுப் பிரார்த்தனையை வழங்குகிறார். தங்களின் சொந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்வாமி சிதானந்தாஜியுடன் குணமளிக்கும் உத்தியை மற்றவர்களுக்காகவும் உலகத்துக்காகவும் பிரார்த்தனை செய்ய விரும்புவோருக்காக இந்த பகுதியை நாங்கள் வழங்குகிறோம்.

இதைப் பகிர