பிரார்த்தனைகள் மற்றும் சங்கல்பங்கள்

சங்கல்பக் கோட்பாடு மற்றும் அறிவுறுத்தல்கள் ஓ எங்கும் நிறைந்த இரட்சிப்பாளரே….வாழ்விலும் மரணத்திலும், நோயிலும் பஞ்சத்திலும், மகாமாரியிலும் அல்லது ஏழ்மையிலும் நான் என்றென்றும் உன்னையே பற்றியிருப்பேனாக. குழந்தைப் பருவம், இளமை, முதுமை ஆகிய மாறுதல்கள் மற்றும் உலகத்தின் பெரும் மாற்றங்கள் ஆகியவற்றால் தீண்டப்பட முடியாத அழிவற்ற மெய்ப்பொருள் நான் என்பதை நான் அறிய எனக்கு உதவி புரிவாய்.
ஓ இறைவா, உம்முடைய எல்லையற்ற எல்லாக் குணப்படுத்தும் சக்தியும் என்னுள் உள்ளது. என் அறியாமை எனும் இருளினூடே உமது ஒளியை வெளிப்படுத்துவாயாக. இந்தக் குணப்படுத்தும் ஒளி எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பூரணத்துவம் இருக்கிறது. எனவே, பூரணத்துவம் என்னுள் உள்ளது.
அனைத்து ஞானமும் சக்தியும் ஏற்கனவே என் ஆன்மாவில் இருப்பதை உள்ளுணர்வாக உணர்ந்தறிந்தவாறு, என் தெய்வீக பிறப்புரிமையை நான் கோருகிறேன்.
அன்பிற்குரிய இறைவா, கண்களுக்குப் புலப்படாத, அனைத்தையும் பாதுகாக்கும் உன் கவசம், எப்போதும், ஆனந்தத்திலும் துக்கத்திலும், வாழ்விலும் மரணத்திலும் என்னைச் சூழ்ந்து இருப்பதை நான் அறிவேன்.
இறைவன் என்னைப் பாதுகாத்தவாறு, என்னுள்ளும் என்னைச் சுற்றிலும் இருக்கிறான்; அதனால் அவனுடைய வழிகாட்டும் ஒளியை தடுக்கும் அச்சத்தை நான் ஒழித்திடுவேன்.
இறைவனின் சக்தி எல்லையற்றது என்பதை நான் அறிவேன்; மேலும் நான் அவனது பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டிருப்பதால், எனக்கும் கூட, எல்லாத் தடைகளையும் வெல்வதற்கான வலிமை உள்ளது.
பரமாத்மாவின் படைப்பாற்றல் என்னிடம் உள்ளது. எல்லையற்ற அறிவுத்திறன் எனக்கு வழிகாட்டும் மற்றும் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்கும்.
இறைவனின் முழுநிறைவான அன்பு, அமைதி, ஞானம் ஆகியவை என் வாயிலாக வெளிப்பட ஏதுவாக, நான் தளர்வாகி எல்லா மனச்சுமைகளையும் தூக்கி எறிகிறேன்.

இதைப் பகிர