சுய ஆய்வு: உங்களுடைய உன்னதத் திறனை செயல்வடிவமாக்குவது எப்படி

Butterfly, roses and eyes of introspectionயோகதா சத்சங்கப் பருவ இதழின் அக்டோபர்-டிசம்பர் 2009 வெளியீட்டில் உள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

இந்திய ரிஷிகள் தொன்று தொட்டு மனிதகுல இருப்பு முழுவதையும் கவனமாக ஆய்வு செய்து மக்களுக்கு வாழ்வின் உன்னதத் திறன்களை எப்படிச் செயல் வடிவமாக்குவது என்று அறிவுரை கூறினார்கள். உளவியல் நீங்கள் யார் என்பதைக் கற்பிக்கிறது; நெறிமுறைகள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. முனிவர்கள் இரண்டையும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆன்மீக மலர்ச்சிக்கான உண்மையான ஆன்மீகப் பயிற்சியின் ஒரு பகுதியாக வலியுறுத்திக் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்கள் முகத்தையும் உடலையும் கவனிக்க கண்ணாடியில் பார்க்கிறீர்கள், ஏனெனில் மற்றவர்களின் முன் நீங்கள் சிறப்பாகத் தோன்ற வேண்டுமென விரும்புகிறீர்கள். வெளிப்புறத் தோற்றத்தின் பின் உள்ள விஷயத்தின் முறையான தோற்றத்தை உறுதிப்படுத்த சுய-ஆய்வு எனும் அகமுகநோக்குக் கண்ணாடியில் தினசரி பார்த்துக் கொள்வது இன்னும் அதிக முக்கியத்துவம்வாய்ந்தது, இல்லையா? புறக்கவர்ச்சி அனைத்தும் உள்ளுறையும் ஆன்மாவின் தெய்வீகத்திலிருந்து வருகிறது. மேலும் முகத்தில் இருக்கும் ஒரு சிறிய பருவோ அல்லது வடுவோ அதன் அழகைக் கெடுப்பதைப் போல, சினம், அச்சம், வெறுப்பு, பொறாமை, கவலை ஆகிய உளவியல் உருச்சிதைவுகள் தார்மீக இருப்பின் ஐயப்பாடுகளிலிருந்து வருபவை ஆகும்; அவை ஆன்மாவின் பிரதிபலிப்பைச் சிதைக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை இந்த உருச்சிதைக்கும் விஷயங்களிலிருந்து உங்களை விடுவிக்க கடுமுயற்சி செய்தால், உங்கள் அக இருப்பின் அழகு மிளிரும்.

ஆய்வின் மூலம் மனித இன்னல்கள் மூவடுக்கு கொண்டது என்று நாம் காண்கிறோம்: மனித உடலைத் துன்புறுத்துபவை, மனத்தைத் தாக்குபவை மற்றும் ஆன்மாவைத் தடைசெய்பவை. நோய், முதுமை, மரணம் ஆகியவை உடலின் துன்பங்கள். உளவியல் பிரச்சனைகள் வருத்தம், அச்சம், சினம், நிறைவேறாத ஆசைகள், மனநிறைவின்மை, வெறுப்பு, நரம்புக் கிளர்ச்சியால் ஏற்படும் ஏதேனும் காய்ச்சல், அல்லது உணர்ச்சிவேக வெறியீர்ப்பினால் ஏற்படும் மனப் புற்றுநோய் ஆகியவற்றின் ஊடாகப் படையெடுக்கின்றன. மற்றும் எல்லாவற்றிலும் மிகவும் அதிகத் தீங்கு விளைவிக்கும் அறியாமை எனும் ஆன்ம நோய் மற்ற எல்லா இன்னல்களையும் சாத்தியமாக்கும் அடிப்படையான நிலைமை ஆகும்.

ஒரே உண்மையான விடுதலை ஆன்மாவின் உணர்வுநிலையில் இருக்கிறது. உங்களை ஆய்வு செய்து உங்களுடைய உணர்வுநிலை எந்த அளவிற்கு அறியாமை எனும் வேர்களால் தளைப்பட்டிருக்கின்றன என்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மெய்யான விடுதலை அந்த வேர்கள் துண்டிக்கப்படும் போது மட்டுமே சாத்தியம்.

சிந்தித்து உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுங்கள், மற்றும் நீங்கள் எப்படி மாறுவீர்கள் என்பதைப் பாருங்கள். உங்களை மேம்படுத்த இடைவிடாது முயற்சி செய்யுங்கள். நல்ல தோழமையை, இறைவனைப் பற்றியும் வாழ்வில் விழுமிய விஷயங்களைப் பற்றியும் உங்களுக்கு நினைவுபடுத்தும் தோழமையை நாடுங்கள். உங்களுடைய தீய பழக்கங்களை எப்படி மாற்றப் போகிறீர்கள்; உங்களுடைய நாளை எப்படித் திட்டமிடப் போகிறீர்கள்; உங்களுடைய அமைதியை எப்படித் தக்கவைத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது பற்றி ஒவ்வொரு நாளும் விழிப்புடன் இருங்கள். மேலும் அகத்தே ஒவ்வொரு முறையும் வேண்டுங்கள், “இறைவா, நான் என் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறேனா? ஒவ்வொரு நாளும் உன்னுடன் மட்டுமே இருக்க ஒரு சிறிது ஓய்வு நேரத்தை நான் பெறுவது எப்படி?” நான் அதை எல்லா நேரங்களிலும் கூறுகிறேன். மற்றும் அவன் மறுமொழியளிக்கிறான், “நீ என்னுடன் இருக்கிறாய், ஏனெனில் நீ என்னைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்.”

காலை வேளையை தியானத்திலும் இறைவனிடம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்தவாறும் துவக்குங்கள்; மற்றும் நீங்கள் தியானம் செய்துவிட்ட பிறகு, உங்களுடைய வாழ்விற்கும் உங்களுடைய எல்லா விழுமிய முயற்சிகளுக்கும் வழிகாட்டும்படி இறைவனை வேண்டுங்கள்: “இறைவா, நான் பகுத்தறிவேன், நான் மனத்திட்பம் கொள்வேன், நான் செயலாற்றுவேன்; ஆனால் ஒவ்வொன்றிலும் நான் செய்ய வேண்டிய சரியான விஷயத்திற்கு என் பகுத்தறிவை, மனத்திட்பத்தை, மற்றும் செயற்பாட்டை நீ வழிகாட்டுவாய்.” அந்த நாளில் ஒவ்வொரு வழியிலும் சிறந்தவனாக இருக்கத் தீர்மானம் செய்யுங்கள். நீங்கள் காலையில் தொடங்கி எல்லா நேரங்களிலும் இறைவனைப் பற்றி எண்ணியவாறு, உங்கள் அமைதியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வதில் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஏதேனும் நல்ல பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், பின் இரவு வரும் போது நீங்கள் அந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்தினீர்கள் என்று அறிந்தவாறு உங்களால் உறங்கச் செல்ல முடியும். நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அறிவீர்கள்.

இதைப் பகிர