இந்திய ஜனாதிபதி ராஞ்சி ஆசிரமத்திற்கு வருகை புரிகிறார்

11 டிசம்பர், 2017

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா இந்தியில் வெளியிடப்பட்டது

இந்திய குடியரசுத் தலைவர் (ராம்நாத் கோவிந்த்) YSS ராஞ்சி ஆசிரமத்திற்கு வருகை தந்தார்
இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் (வலது புறத்தில்) ஜார்கண்ட் முதலமைச்சர் ஸ்ரீ ரகுபார் தாஸ், (அதற்கும் வலதுபுறத்தில்) ஜார்கண்ட் ஆளுநர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு, இவர்கள் அனைவரும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் மூத்த சன்னியாசிகளால் ராஞ்சி ஆசிரமத்தில் வரவேற்று உபசரிக்கப்படுகின்றனர்.

நவம்பர் 15, 2017 ல், இந்திய ஜனாதிபதி மாண்புமிகு ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய காட் டாக்ஸ் வித் அர்ஜுனா, பகவத் கீதையின் அதிகார்வபூர்வ இந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டை கௌரவிக்கும் பொருட்டு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ராஞ்சி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.
ஸ்ரீமதி திரௌபதி மர்முவும், ஜார்கண்ட் முதலமைச்சர் ஸ்ரீ ரகுபார் தாஸும் (புகைப்படம் வலதில் பார்க்கவும்) மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் வந்தனர்.யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைவர் சுவாமி சிதானந்தகிரி அவர்கள் மதிப்பிற்குரிய விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் குழுவின் தலைவராக செயல்பட்டார். இவர்களுடன், கூடுதலாக சுமார் 3000 ஒய் எஸ் எஸ் உறுப்பினர்களும் நண்பர்களும், 2017ல் சொஸைடியின் நூற்றாண்டு (1917-2017)நிறைவைக் கௌரவிக்கும் ஒய் எஸ் எஸ் சரத்சங்கத்தின் போது, கூடியிருந்தனர்.

விழா கொண்டாட்டங்கள் தேசியகீத இசையுடன் தொடங்கியது, அதன் பின்னர் சுவாமி சிதானந்த கிரியும், ஒய் எஸ் எஸ் இயக்குநர்கள் குழும உறுப்பினர்களும் மதிப்பிற்குரிய விருந்தினர்களை பூங்கொத்துகளாலும், பொன்னாடைகளாலும்
வரவேற்றனர். காட் டாக்ஸ் வித் அர்ஜுனாவின் இந்தி பதிப்பு அதிகார்வ பூர்வமாக ஜார்கண்ட் ஆளுநரால் வெளியிடப்பட்ட போது அவையினர் கைதட்டி வரவேற்றனர். ஆளுநர் பிறகு முதல் பிரதியை ஜனாதிபதியிடம் அளித்தார். பிறகு ஒய் எஸ் எஸ் ஸின் பொதுச் செயலாளர் சுவாமி ஸ்மரணானந்தா பரமஹம்ஸ யோகானந்தரது பகவத்கீதை விளக்க உரையின் முக்கியத் துவத்துவத்தைப் பற்றி உரையாற்றுகையில், இந்தப் புனித யோக மறைநூலைப் பற்றிய புரிதலுக்காக குருதேவர் ஆற்றியுள்ள அரிய சேவையை வலியுறுத்தினார். சுவாமிஜி விளக்கினார், “பல நூற்றாண்டுகளாக பல்வேறு மதங்களின் அநேக மகான்களுக்கு பகவத்கீதை பெருவிருப்பத்திற்குரிய ஒரு மறைநூலாக இருந்து வந்துள்ளது. எண்ணற்ற கீதை விளக்கவுரைகள் உள்ளன. மற்றொரு விளக்கவுரை தேவையா? ஆம், ஏனெனில் காட் டாக்ஸ் வித் அர்ஜுனா மற்றுமொரு விளக்கவுரை அல்ல. அது கீதையின் புதிய வெளிப்பாடு என்ற முறையில், குறிப்பாக யோக விஞ்ஞானம் குறித்த விளக்கத்தில், ஒப்பற்ற ஒன்று.”

ராம்நாத் கோவிந்த் தீபத்தை ஏற்றுகிறார்
இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், (வலது புறத்தில்) ஜார்கண்ட் முதலமைச்சர் ஸ்ரீ ரகுபார் தாஸ், (அதற்கும் வலதுபுறத்தில்) ஜார்கண்ட் ஆளுநர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு, ஆகியோர் ராஞ்சி ஆசிரமத்தில் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் இன் மூத்த சன்னியாசிகளால் உபசரிக்கப்படுகின்றனர்.
ஸ்வாமி சித்தானந்தா பகவான் கிருஷ்ணரின் படத்தை இந்திய ஜனாதிபதிக்கு வழங்கினார்.
சுவாமி சிதானந்த ஜி இந்திய ஜனாதிபதிக்கு பகவான் கிருஷ்ணரின் படத்தை அன்பளிப்பாக வழங்கினார்
காட் டாக்ஸ் வித் அர்ஜுனா  (பகவத் கீதை), இந்தி மொழிபெயர்ப்பு ராம்நாத் கோவிந்தால் வெளியிடப்பட்டது
ஆளுநர் காட் டாக்ஸ் வித் அர்ஜுனாவின், இந்தி மொழிபெயர்ப்பை வெளியிட்டு, முதல் பிரதியை ஜனாதிபதியிடம் அளிக்கிறார்.

Swami Chidananda speaking of Paramahansaji’s mission of bringing India’s spirituality to the world.

சுவாமி சிதானந்தகிரி கூறிய கருத்துக்கள்

சுவாமி சிதானந்தகிரி பிறகு கூட்டத்தில் உரையாற்றினார், அவர் காட் டாக்ஸ் வித் அர்ஜுனா என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு,இந்திய ஆன்மீகத்தின் சாராம்சத்தை முதலில் மேலைநாடுகளுக்கும், பின்பு உலகம் முழுவதற்கும் இறுதியில் மீண்டும் இந்தியாவிற்கே கொணர்ந்த பரமஹம்ஸரது வாழ்நாள் பணி பற்றி பேசினார். அவர்தம் உரையை பின்வரும் வார்த்தைகளுடன் முடித்தார்.

“மாண்புமிகு ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர் அவர்களே, இன்று நீங்கள் வெறுமனே உலகம் போற்றும் பரமஹம்ஸரின் கீதை விளக்க உரையின் இந்த அழகிய புதிய பதிப்பினை மட்டும் வெளியிடவில்லை; நீங்கள் அத்துடன், மிகவும் குறிப்பாக, உலகிற்கு இந்தியாவால் அளிக்கப்பட்ட ஒப்பற்ற, சக்திவாய்ந்த இந்த பரிசின் அருமையை வலியுறுத்தி ஆமோதிக்கவும் செய்துள்ளீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் நாம் இந்நாளைக் கொண்டாடுவோம். உண்மையிலேயே, நாகரீகமடைந்த சமுதாயம் இந்தியா பாதுகாத்துப் போற்றி தற்போது மிகவும் தாரளமாக உலகக் குடும்ப நாடுகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உலகளாவிய விஞ்ஞான ரீதியான ஆன்மீகமின்றி நிலைத்திருக்கவே முடியாது.மனித இனத்தை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஆன்மீக உணர்வுநிலை தான், ஒவ்வொரு ஆன்மாவிலும், ஒவ்வொரு மனித ஆன்மாவிலும் உள்ள எல்லையற்ற சக்திகளை விழிப்பூட்டி ஒரே இறைவனின், ஒரே தந்தையின் கீழ், ஆன்மீகமாகக் கூறினால், அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை தெரியப்படுத்தும் ஆன்மீக உணர்வு நிலைதான், உலக சரித்திரத்தின் இந்த இக்கட்டான நிலைமையில், உண்மையான மேல்நோக்கிய முன்னேற்றத்திற்கு, நிச்சயமாக மனித இனத்தின் அழிவின்மைக்கே, முதன்மையானத் தேவை என்பது மிகவும் முக்கியமான உண்மை.

“ஆகையால் நிறைவாக, இந்த உன்னத மறை நூலின் ஒளி, ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் தெய்வீகமாக உலகிற்கு தெரியப்படுத்தப்பட்ட
பகவத் கீதையின் ஒளி, நம் அனைவரின் பாதையையும், இந்தியாவின் பாதையையும், மற்றும் முழு உலகத்தின் பாதையையும் ஒளியூட்டட்டும்.
உங்கள் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பானாக! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!”

President Kovind speaks on Paramahansa Yogananda’s spiritual impact on today’s world.

இந்திய ஜனாதிபதியின் உரை:

பிறகு ஜனாதிபதி கோவிந்த் அவர்கள் அவையில் இந்தியில் உரையாற்றினார். ஆசிரம வளாகத்தினுள் நடந்து செல்லும் போது இயற்கை அழகும் ஆன்மீகமும்
கலந்த ஓர் ஒப்பற்ற கலவையை அவ்வளாகம் கொண்டிருந்ததை தான் உணர்ந்து மிகவும் பரவசமடைந்ததாகக் கூறி தன் உரையை அவர் தொடங்கினார். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வந்துள்ள பக்தர்களின் இருப்பினை உணர்ந்து கொண்டு அவர்களது தியானப் பாதையை மனமாரப் பாராட்டி அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

திரு கோவிந்த் மேலும் கூறினார், “ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான இடைவிடாத சேவையில் நூறுவருடங்களை கழித்ததற்காக நான் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவை பாராட்டி, பரமஹம்ஸ யோகானந்தரது எண்ணங்கள் மற்றும் இலட்சியங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு தனிநபருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” அவர் தொடர்ந்தார், “பரமஹம்ஸ யோகானந்தரது செய்தி, ஆன்மீகத்தின் ஒரு செய்தி.
சமய எல்லைகளுக்கப்பாற்பட்ட அவரது செய்தி அனைத்து சமயங்களையும் மதிக்கும் ஒன்றாகும். அவரது கண்ணோட்டம் உலக சகோதரத்துவம்.”

பரமஹம்ஸரது கீதை விளக்கஉரையை இந்தியில் வெளியிட்டதற்கு ஒய் எஸ் எஸ்-ஐப் பாராட்டிய ஜனாதிபதி, “இந்த இந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டின் மூலம், அன்றாட வாழ்விற்கு மிகவும் உறுதுணையாய் உள்ள ஞானம் புகட்டும் போதனைகள் புதைந்து கிடக்கும் இப்புத்தகம், பெருமளவிலான வாசகர்களுக்கு கிடைக்கப் பெறுவதாகிறது என்று கூறினார். கீதையின் போதனைகளை தன் நடத்தையில் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அமைதியாகவும், சாந்தமாகவும், இன்னல்களின் மத்தியில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள். தற்பொழுது இந்தியில் கிடைக்கப் பெறும் பரமஹம்ஸ யோகானந்தரின் கீதை விளக்கவுரை வாயிலாக இலட்சக்கணக்கான மக்கள் தம்மை நன்றாக அறிந்து கொள்ளவும், தம் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளும் வழியை புரிந்து கொள்ளவும் செய்வர்.

இன்றைய உலகின் மீதான பரமஹம்ஸ யோகானந்தரது ஆன்மீகத் தாக்கத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, லௌகீகம் மற்றும் போட்டிகளால் சூழப்பட்டுள்ள இளம் தலைமுறையையும் மிகவும் ஆழமாக பரமஹம்ஸ யோகானந்தர் கவர்ந்துள்ளார் என்று கூறினார். சர்வதேச அளவில் கடும் போட்டிக்கிடையே செல்வத்தையும் வெற்றியையும் ஈட்டியுள்ள அநேக இளைஞர்கள் தமது சாதனைகளுக்கு பரமஹம்ஸரது ஒரு யோகியின் சுய சரிதத்தை காரணம் காட்டியுள்ளனர். இது மிகவும் பிரபலமான ஒரு நூல். உங்களில் பெரும்பாலானோர் இதைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எனக்கும் இதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. வாழ்க்கையில் சரியான பாதையைப் பின்பற்ற இப்புத்தகம் வழிகாட்டுகிறது.”

புறப்படுவதற்கு முன் ஒரு ஆழ்ந்த சிந்தனை

நிகழ்ச்சிக்குப் பின் ஜனாதிபதி கோவிந்த், இப்பொழுது ஓர் ஆலயமாக பராமரிக்கப்படும் பரமஹம்ஸர் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியை பார்வையிட விருப்பம் தெரிவித்தார். சுவாமி சிதானந்தர் அவரையும் அவருடன் வந்த முக்கிய அதிகாரிகளையும் அந்தப் புனித இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் சில நிமிடங்கள் மௌனம் காத்தனர்.
இந்த அனுபத்தால் மிகவும் நெகிழ்ந்து காணப்பட்ட ஜனாதிபதி கோவிந்த், தன் ஆசிரம விஜயம் மிகவும் அரிய அனுபவமாக இருந்தது என்று தெரிவித்த ஜனாதிபதி கோவிந்த் அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்றார்.

மறு நாள் இந்தியத் தொலைக்காட்சியில், ஜனாதிபதியின் உரையின் சில பகுதிகள் ஒளிபரப்பப்பட்டன, மேலும் செய்தித்தாள்களில் நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள் வெளியாயின. ஜனாதிபதி உரையின் (இந்தியில்) காணொலி வடிவம் அவரது அதிகார்வ பூர்வமான யுடியூப் சேனலில் (கீழே காண்க) ஒளிபரப்பப்பட்டது.

ஒரு காலத்தில் பரமஹம்ச யோகானந்தரின் அறையாக இருந்த கோவிலில் இருந்து வெளியே வரும் ஜனாதிபதி கோவிந்த்.
பரமஹம்ஸரின் ஆலயத்திற்கு விஜயம் செய்த பிறகு இந்திய ஜனாதிபதி ஜார்கண்ட் ஆளுநருடனும், முதலமைச்சருடனும் காணப்படுகிறார்.

இதைப் பகிர