ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் “இன்ட்ராஸ்பெக்ஷன்—மிரகல் டூல் ஃபார் ஸ்பிரிசுவல் க்ரோத்”

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் “த பகவத் கீதா: மாஸ்டர்ஃபுல் கைட் ஃபார் எவ்ரிடே ஸ்பிரிசுவல் லிவிங்” என்ற உரை யிலிருந்து சில பகுதிகளை கீழே காணலாம்.

இந்தியாவின் உன்னத யோக சாத்திரமான பகவத் கீதையின் முதல் ஸ்லோகத்திலேயே, உள்முகநோக்கு-இன் மகத்தான முக்கியத்துவத்தை நாம் காண்கிறோம்.

“குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஒருங்கே கூடியிருந்த”, — கௌரவர்களின் தீய சக்திகளும் (அகந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும்) பாண்டவர்களின் நல்ல சக்திகளும் (ஆன்மாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) ஒருவரையொருவர் எதிர்கொண்டு — “அவர்கள் இன்று என்ன செய்தார்கள்?” என்று அது தொடங்குகிறது. இன்றைய போரில் வென்றது யார்? காட் டாக்ஸ் வித் அர்ஜுனா என்ற தலைப்பில் கீதையின் தனது அற்புதமான விளக்கவுரைகளில், பரமஹம்ஸ யோகானந்தர் அந்த உள்முகநோக்கு விஞ்ஞானத்தின் மிக விரிவான விளக்கத்தை அருமையாக வழங்குகிறார்.

உள்முகநோக்கு என்பது நம்மை மாற்றிக் கொள்வதற்கான அற்புதக் கருவியாகும். நாள் முடிவில் அமைதியாக அமர்ந்து, நாம் எப்படி நடந்துகொண்டோம், எப்படி பதிலளித்தோம், நாம் எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்க முடியும், நம்முடைய வெவ்வேறு எதிர்வினைகள் மற்றும் நாம் கடந்து வந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டது ஆகிய அன்றைய நிகழ்வுகளை மதிப்பாய்வு செய்வது – இது வளர்ச்சிக்கான ஒரு அற்புத கருவியாகும்.

ஆனால் ஏன் சிலருக்கு அது வேலை செய்கிறது மற்றவர்களுக்கு அது கடினமாக உள்ளது? நீங்கள் எப்போதாவது அதை பற்றி யோசித்திருக்கிறீர்களா? வாழ்க்கையின் போராட்டத்தில் பரமஹம்ஸர் சொல்வதுபோல், “வெற்றிகரமான உளவியல் யுத்தத்தின்” ஒரு கருவியாக இதை உங்களால் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?

காரணம் மிகவும் எளிமையானது என்று நான் நினைக்கிறேன், அது நாம் எவ்வித மனப்பான்மையுடன் உள்நோக்கி ஆராய்கிறோம் என்பதில் உள்ளது.

ஒருபுறம், நம்மில் சிலர் தம்மைப் பிரித்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக அதைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சிறிய குறைபாட்டையும் கண்டறிந்து, “ஓ, நான் எவ்வளவு மோசமானவன்! நான் எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்?” மற்றும் பல. இது உள்முகநோக்கின் கருத்தை முற்றிலுமாகத் தவறவிடுவதாகும். நாம் இத்தகைய மனப்பான்மையுடன் கூட உள்முகமாக நோக்கும்போது, நாம் அதை தவிர்த்துவிட விரும்புவதும், பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும் ஆச்சரியமல்ல.

ஆனால் மறுபுறம், அனைவரிலும் உள்ளார்ந்திருக்கும் தெய்வீக ஆற்றலின் கண்ணோட்டத்திலிருந்து, தங்கள் செயல்கள், அணுகுமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் போக்கை பார்த்து “இந்த ஆற்றலை வெளிப்படுத்த நான் என்ன செய்யலாம்? அந்த பேரானந்தத்துடனும் அந்த பேரன்பிலும், அந்த உயர் ஞானத்திலும், அந்த மகத்தான பாதுகாப்பு உணர்விலும், அமைதியுடனும் வாழ்வதற்கு, தடைகளை நீக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அந்த அணுகுமுறை நம் உள்முகநோக்கு செயல்முறையை முற்றிலுமாக மாற்றுகிறது.

எனவே இந்த உள்முகநோக்கு கலையைப் பயன்படுத்துவதற்கு நான் ஒரு ஆலோசனை பரிந்துரைக்கிறேன்: இது சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அதை உங்களுக்கு மிகவும் எளிமையானதாகவும் தனிப்பட்ட ஒன்றாக மாற்றலாம்.

உங்கள் வாழ்க்கையில், ஆன்மீக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவுமே கூட, நீங்கள் சாதிக்க முயற்சிக்கும் விஷயங்கள்— உங்கள் இலக்குகள், நீங்கள் வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் குணங்கள், உங்கள் அன்றாட வாழ்க்கை கட்டமைப்பு முயற்சிகள்: தியானம் மற்றும் சேவை மனப்பான்மை, அல்லது கருணை, அல்லது மற்றவர்களிடம் சரியான அணுகுமுறை போன்ற பிற நோக்கங்கள் ஆகியவற்றை ஒரு குறிப்பு எடுங்கள்.

நம் ஒவ்வொருவருக்கும் இது மாறுபட்டு இருக்கும், ஆனால் நாம் ஒரு பட்டியலை உருவாக்கி ஒரு நாளைக்கு ஒரு முறை திரும்ப படிக்கலாம் – அவ்வளவுதான். இது மறைபொருள் அல்ல; இது சிக்கலானது அல்ல.

நீங்கள் செய்யக்கூடிய வேறு விஷயங்களும் உள்ளன. உங்கள் பட்டியலில் உள்ள குறிப்புகளைப் பற்றி பரமஹம்ஸ யோகானந்தர் என்ன கூறியிருக்கிறார் என்பதை படிக்கலாம்; மேலும் முன்னேற்றம் அடைய, நீங்கள் ஒரு திட சங்கல்பத்துடன் வேலை செய்யலாம், ஒருவேளை, நீங்கள் எழுதியதை நினைவில் கொள்ள ஒரு நாளைக்கு ஒரு முறை பட்டியலைப் பார்ப்பதைத் தவிர, வேறு எதையும் நீங்கள் செய்யவில்லை என்றாலும் கூட, நீங்கள் மாயையை எதிர்த்துப் போராடுகிறீர்கள் – நீங்கள் உங்களை மேம்படுத்துகிறீர்கள் மற்றும் மாற்றுகிறீர்கள்.

நீங்கள் அறிவீர்களா, ஒருமுறை ஒருவர் கூறினார்: “மகான்கள் செய்யும் காரியங்கள் அசாதாரணமானவை அல்ல; அவர்கள் அதை எப்போதுமே செய்வது தான் அசாதாரணமானது.” நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ விரும்புகிறோம் என்ற உணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. இதை நினைவில் கொள்வது முக்கியம்.

எனவே தினசரி சுய ஆராய்வு எனும் இந்த அற்புத கருவியான உள்முகநோக்கை உங்கள் நல்ல பழக்கங்களில் ஒன்றாக்குங்கள்: மாலையில் தியானத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் உங்கள் பட்டியலை பார்வையிடுங்கள். நீங்கள் சரியான மனப்பான்மையோடு இதைச் செய்தால், உங்கள் இலக்குகளை அடைவதற்கான உங்கள் திறனில் ஏற்படும் மாற்றங்களையும், உங்கள் ஆனந்த உணர்வையும் கண்டு வியப்படைவீர்கள்.

உங்கள் இலக்குகளை அடையவும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியையும் – ஆன்மீகம் மற்றும் பொருள் சார்ந்த -வெற்றியையும் கொணர உள்முகநோக்கு எனும் கருவியைப் பயன்படுத்துதல் குறித்த முக்கியமான விஷயத்தில் ஆழ்ந்து செல்ல கூடுதல் ஆதாரங்களை நாங்கள் பரிந்துரைக்க விரும்புகிறோம்:

  • 2021 SRF உலக பேரவை-இல் ஸ்வாமி இஷ்டானந்த கிரி அவர்களின் உரை “இன்ட்ராஸ்பெக்ஷன்—எக்ஸ்ப்ளோரிங் த வொர்கிங் ஆஃப் யுவர் இன்னர் ஸெல்ஃப்” — வீடியோ
  • SRF இன் வாராந்திர ஆன்லைன் இன்ஸ்பிரேஷனல் சர்வீஸஸ் இலிருந்து ஸ்வாமி கோவிந்தானந்த கிரி அவர்களின் 2021 வருடத்திய உரை “இன்ட்ராஸ்பெக்ஷன் – கீ டு ஸெல்ஃப் டிஸ்கவரி” — வீடியோ
  • யோகதா சத்சங்க பாடங்கள், —பரமஹம்ஸ யோகானந்தரின் தியானம் மற்றும் ஆன்மீக வாழ்க்கை குறித்த வீட்டு கல்வி திட்டம்—மாணவர்களுக்கான துணை பாடம் 69, “த ஆர்ட் ஆஃப் இன்ட்ராஸ்பெக்ஷன் அண்ட் ஸைகலாஜிகல் ஸெல்ஃப் -அனாலிஸிஸ்”

இதைப் பகிர