சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்

பரமஹன்சா யோகானந்தாவின்  தெய்வீக குரு ஸ்ரீ யுக்தேஸ்வர்

சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மே 10, 1855 அன்று இந்தியாவில் வங்காளத்தில் உள்ள செராம்பூரில் பிறந்தார். ஸ்ரீ யுக்தேஸ்வர் லாஹிரி மகாசாயரின் சீடராக இருந்தார், மேலும் ஞான அவதாரம் அல்லது ஞானத்தின் அவதாரம் என்ற ஆன்மீக நிலையை அடைந்தார்.

கீழை நாடுகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தை மேலை நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைப்பது, நவீன உலகின் லௌகீக, உளவியல் சார்ந்த மற்றும் ஆன்மீகரீதியான துன்பங்களை குறைக்க செய்யும் என்பதை ஸ்ரீ யுக்தேஸ்வர் உணர்ந்தார். 1894-ல் லாஹிரி மகாசாயரின் குருவான மகாவதார பாபாஜியுடனான பிரசித்தி பெற்ற அவருடைய சந்திப்பின் மூலம் இந்தக் கருத்துக்கள் தெளிவான செயல் திட்டமாகியது.

“சுவாமிஜி, என் வேண்டுகோளின்படி, “பாபாஜி அவரிடம் கூறினார், கிறிஸ்தவ மற்றும் இந்து மத நூல்களுக்கு இடையே உள்ள அடிப்படையான இணக்கம் பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதக்கூடாதா? இப்பொழுது அவற்றின் அடிப்படை ஒற்றுமை மனிதர்களுடைய பிரிவுகளின் பேதங்களினால் மங்கிவிட்டது. இறைவனின் அருள் பெற்ற புதல்வர்கள் யாவரும் ஒரே விதமான உண்மைகளை எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதை இணையான குறிப்புகளின் மூலம் எடுத்துக் காட்டுங்கள்.”

ஸ்ரீ யுக்தேஸ்வர் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்: ” அமைதியான இரவுநேரத்தில், பைபிளிலும் சனாதன தர்ம சாத்திரங்களிலும் உள்ள ஒப்புமையைப் பற்றிய பணியில் ஈடுபட்டேன். அருள்பெற்ற மகானாகிய இயேசுவின் சொற்களை மேற்கோள் காட்டி அவருடைய போதனைகள் வேதங்களின் உண்மைகளுடன் அடிப்படையில் ஒன்றாகவே இருப்பதைக் காண்பித்தேன். என் பரம குருவின் ஆசியினால் எனது புத்தகம்  ‘கைவல்ய தரிசனம்’ , மிக குறுகிய காலத்திலேயே நிறைவு பெற்றது.”

சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பரமஹம்ஸ யோகானந்தர் இளைஞராக இருக்கும் போதே சீடராக வந்தார். இந்த உயர்ந்த குரு தனது இளம் சீடரிடம் இவ்வாறு கூறினார்: 1894ல் அவர்களது சந்திப்பின்போது, மகாவதார பாபாஜி அவரிடம் தெரிவித்திருந்ததாவது: “ஸ்வாமிஜி, கீழை மற்றும் மேலை நாடுகளுக்கிடையே வரப்போகும் இணக்கமான பரிமாற்றத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது. சில வருடங்களுக்குப் பிறகு நான் உங்களிடம் அனுப்பும் ஒரு சீடனுக்கு நீங்கள் மேலை நாடுகளில் யோகத்தைப் பரப்புவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அங்கிருந்து ஆன்மீகத்தை நாடும் அனேக ஆத்மாக்களின் அதிர்வலைகள் வெள்ளம்போல் பெருகி என்னிடம் வருகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுச்சி பெறக் காத்திருக்கும் உள்ளார்ந்த சக்தி வாய்ந்த மகான்களை நான் காண்கிறேன்.”

இந்த உரையின் பின்னர், ஸ்ரீ யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கூறினார், “என் மகனே, எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பாபாஜி எனக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்த சீடன் நீதான்.”

ஸ்ரீ யுக்தேஸ்வரின் ஆன்மீகப் பயிற்சி மற்றும் ஒழுக்கத்தின் கீழ், ஸ்ரீ யோகானந்தர் தனது உலகளாவிய பணியை மேலை நாடுகளில் தொடங்கத் தயாராக இருந்தார். ஸ்ரீ யுக்தேஸ்வர், ஆன்மீக பொறுப்புகள் மற்றும் ஆசிரம சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக பரமஹம்ஸ யோகானந்தரின் பெயரை அறிவித்தார்.
.
சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் 1936 மார்ச் 9 அன்று, அமெரிக்காவில் பதினைந்து ஆண்டுகள் கழித்த பின்னர் பரமஹம்ஸரின் இந்திய விஜயத்தின் போது, மகாசமாதி அடைந்தார்.

இதைப் பகிர