இறை-உணர்தல்: தனிநபர்கள் மற்றும் நாடுகளின் பரலோக பொக்கிஷம்

பரமஹம்ஸ யோகானந்தர் எழுதியது

(கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலிருந்து  ஒரு பகுதி உங்களுக்குள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், லூக்கா 12:22-31 இல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் பற்றிய விளக்கம்)

மேலும் அவர் தம் சீடர்களை நோக்கி, “இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும் உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.
“காக்கைகளைக் கவனியுங்கள்: அவை விதைப்பதுமில்லை, அறுவடை செய்வதுமில்லை; அவைகளுக்குப் பண்டகசாலையுமில்லை, களஞ்சியமும் இல்லை; இல்லாவிட்டாலும் தேவன் அவைகளுக்கு பிழைப்பூட்டுகிறார்: நீங்கள் பறவைகளை விட எவ்வளவு சிறந்தவர்கள்? கவலைப்படுவதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உங்களால் அற்பமான காரியத்தைச் செய்ய முடியாதிருக்க, மீதியைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?

“காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளர்கின்றன என்பதைக் கவனியுங்கள்: அவைகள் உழைக்கின்றதுமில்லை, நூற்கிறதுமில்லை; ஆயினும், சாலொமோன் தம்முடைய எல்லா மகிமையிலும் இவற்றில் ஒன்றைப் போலாகிலும் அணிந்திருக்கவில்லை என்று உங்களுக்குச் சொல்கிறேன். இன்று காட்டில் இருந்து, நாளை அடுப்பில் போடப்படும் புல்லுக்கும் தேவன் இப்படி உடுத்துவார் என்றால், அற்ப விசுவாசிகளே, உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும், சந்தேகப்படாமலும் இருங்கள். உலகத்தார் இவைகளையெல்லாம் நாடுகின்றனர்: இவைகள் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பிதா அறிந்திருக்கிறார். மாறாக நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்; இவைகளெல்லாம் உங்களுக்குச் சேர்க்கப்படும்” (லூக்கா 12:22-31).

இறைவனை வாழ்க்கையின் முதன்மையான குறிக்கோளாக ஆக்குவதற்காக இயேசுவின் அறிவுரைக்கு நாடுகளும் தனிநபர்களும் செவிசாய்த்தால் உலகம் உண்மையான சொர்க்கமாக இருக்கும். மற்றவர்களது ஆதாய இழப்பில் நாட்டினுடைய, தனிப்பட்டவருடைய அதிகாரம் மற்றும் ஆடம்பரக் குவிப்பிற்காக மக்கள் அரசியல் மற்றும் வணிக சுயநலத்தின் மீது கவனம் செலுத்தும் போது, குடும்பத்திலும், நாட்டிலும், உலகத்திலும் குழப்பத்தையும் தேவையையும் உருவாக்கியவாறு, மகிழ்ச்சி மற்றும் செழுமைக்கான தெய்வீகவிதி உடைக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஆக்கிரமிப்பு மற்றும் தேசப்பற்றார்ந்த சுயநலத்தைப் போற்றுவதற்குப் பதிலாக, அக அமைதி, இறைவன் மற்றும் அண்டை நாடுகளுடன் அன்பு, தியானத்தின் பேரின்பம் ஆகியவற்றைப் பெறுவதற்கு தங்கள் குடிமக்களின் மனதைத் திருப்பினால், பொருள் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் சர்வதேச நல்லிணக்கம் ஆகியவை தாமாகவே ஏற்படும். தேசங்களின் ஆன்மீகப் பொக்கிஷங்களோடு இணைக்கப்படும்.

தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, தேசிய மற்றும் சர்வதேச நல்வாழ்வுக்கும் மிகச் சிறந்த செய்முறையாக “முதலில் இறைவன்” என்ற உயர்ந்த ஞானத்தை இயேசு சுட்டிக்காட்டினார்: “பூமியின் தேசங்கள் பொருள் செழிப்பு மற்றும் அதிகாரத்தை மிதமிஞ்சிய அளவிலும் சுயநலமாகவும் தேடுகின்றன, இது தீங்கு விளைவிக்கும் சமத்துவமின்மை, போர்கள் மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு தவிர்க்க முடியாமல் வழிவகுக்கிறது. மாறாக அவர்கள் இறைவனைத் தேடட்டும், அவருடைய கொள்கை ரீதியான நன்நெறி தங்கள் முயற்சிகளில் இணைந்து சர்வதேச ஆன்மீக சகோதரத்துவம் எனும் விதானத்தின் கீழ் இணக்கமாக வாழட்டும். ஒருவருக்கொருவர் சமாதானத்துடனும் இறை-உணர்வு நாட்டத்துடனும் வாழுகிற நாடுகளுக்கு விண்ணுலகத் தந்தை, உலகக் குடும்பத்திற்கு உதவுவதன் மூலமாக நன்கு ஈட்டப்பட்ட நீடித்த வளமை, நல்லெண்ணம் மற்றும் சர்வதேச வணிக ஒத்துழைப்பு ஆகியவற்றை வழங்குகிறார். பிரபஞ்சத்தைப் பரிபாலிக்கின்ற இறைவன், தனிமனிதர்களின், நாடுகளின் தேவைகளை அறிவார்; அவர் காகத்திற்கு உணவளித்து, அல்லிக்கு உடுத்துவார் என்றால், தனது இலட்சியங்களுக்கு இசைவாக இருக்கும் தனிமனிதனுக்கும் தேசத்திற்கும் எவ்வளவு அதிகமாக அனைத்தையும் வழங்குவார்! ”

பண வெறி கொண்ட நவீன நாகரீகத்தின் நிலை, சுயநலம் தனிமனித மற்றும் தேசிய மகிழ்ச்சியைக் குலைக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் மற்றவர்களின் உடைமைகளைப் பறிக்க முயல்வதால் வணிக வாழ்க்கையின் அளவுக்கதிகமான போட்டித் தன்மை பேரழிவை விளைவிக்கும். இவ்வாறு 1,000 பேர் கொண்ட சமூகத்தில் ஒவ்வொரு தொழிலதிபரும் 999 எதிரிகள் மற்றும் போட்டியாளர்களைக் கொண்டுள்ளனர். மக்கள் தங்கள் உடைமைகளை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும்படி இயேசு வலியுறுத்தினார்; அந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கும்போது, 1,000 பேர் கொண்ட சமூகத்தில் ஒவ்வொருவரும் 999 உதவியாளர்களைப் பெற்றிருப்பர்.

“தேசபக்தி சார்ந்த மற்றும் தொழில்துறை சார்ந்த சுயநலத்தால் தேசிய பாதுகாப்பு மற்றும் செழிப்பு வளமையை ஒருபோதும் உறுதிப்படுத்த முடியாது. தேசிய செழிப்பு நிலைத்திருப்பது என்பது இயற்கை வளங்கள் மற்றும் தேசத்தினுடைய குடிமக்களின் முன்முயற்சியை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக மக்களின் தார்மீக நடத்தை, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆகியவற்றை மூலநிலையாகச் சார்ந்திருக்கிறது

—பரமஹம்ஸ யோகானந்தர்

இன்றைய கடுமையான போட்டி நிறைந்த வணிக சூழலில் தாக்குப்பிடிப்பது மிகவும் கடினமானதாக விளங்குகிறது. இதனால் தொழிலதிபர் நிதானமின்றி சினங் கொள்பவராகிறார். மேலும் அவரது வாழ்க்கையை உண்மையாகவும் ஆன்மீக ரீதியாகவும் மகிழ்ச்சியாக மாற்றுவதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வணிகம் மனிதனின் மகிழ்ச்சிக்காக செய்யப்படுகிறது; மனிதன் வியாபாரத்திற்காக படைக்கப்படவில்லை. மனிதனின் ஆன்மீக வளர்ச்சியில் குறுக்கிடாத அளவுக்கு மட்டுமே தொழில் தேவை. அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது பாராட்டப்பட வேண்டியது; ஆனால் நடைமுறைப் பயன்பாட்டில், உலகநாடுகள் தங்கள் குடிமக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும். குடிமக்கள் எளிமையான வாழ்க்கை மற்றும் உயர் சிந்தனையை உடைய உணர்வுநிலையை ஆதரித்துப் பின்பற்றினால்- ஆன்மீக வளர்ச்சி, உத்வேகம் தரும் இலக்கியம், தத்துவம், படைப்பின் அதிசயங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய அறிவு ஆகியவற்றின் மீது மனங்களை அதிக அளவில் ஒருமுகப்படுத்தி, பண வெறியை ஊக்குவிக்கும் வெறித்தனமான தொழில்நுட்பங்களின் மீது மிகக் குறைவாக கவனம் செலுத்த வேண்டும். பணக்கார நாடுகளில் அதிக உற்பத்தி மற்றும் அதிகப்படியான நுகர்வுக்கும் பலவீனமான நாடுகளின் வளங்களைச் சுரண்டுதல், கஞ்சத்தனம் ஆகியவற்றிற்கு  வழிவகுக்கும் தொழில்துறை சுயநலத்தால் உலக நாடுகள் நாகரிகத்தை சிக்கலாக்கவில்லை என்றால், அனைத்து மக்களும் நிறைவாக உண்டு,வளமாக வாழ்ந்திருப்பர்.

ஆனால் அண்டை நாடுகளின் தேவைகளைப் பொருட்படுத்தாமல், தேசபக்தி சார்ந்த சுயநலம் மற்றும் பொருள் மேன்மை ஆகியவையே கிட்டத்தட்ட அனைத்து வளர்ந்த நாடுகளின் நோக்கங்களாக இருப்பதால், பஞ்சம், வறுமை, தவிர்க்கப்படக்கூடிய போர்த்துயரங்கள் ஆகியவற்றை விளைவிக்கின்ற குழப்பங்கள், தனிக்கொள்கைகள் எனும் தொடர் நிகழ்வுகளில் உலகம் துன்புறுகிறது. பொருளாதார பேரழிவுகள், இரண்டு உலகப் போர்கள், வேலையின்மை, அச்சம், பாதுகாப்பின்மை, பட்டினி மற்றும் பூகம்பங்கள், புயல்கள், பஞ்சங்கள். [தனிமனிதர்களின், தேசத்தின் ஒன்று திரண்ட தீய செயல்களின் மறைமுக விளைவுகள் எனும் ஒட்டு மொத்த கர்மவினையால் எழுந்தவை] ஆகியவற்றைக் கொண்டுவந்திருக்கிற தேசபக்தி சார்ந்த, தொழில்துறை சார்ந்த சுயநலத்தால் தேசிய பாதுகாப்பையும் செழுமையையும் ஒருபோதும் உறுதிப்படுத்த முடியாது என்பதை இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்டிருக்கிற நிகழ்வுகள் வெளிப்படையாகக் காட்டுகின்றன.

உலகெங்கிலும் உள்ள நவீன குழப்பமான நிலைமைகள் தெய்வபக்தியற்ற வாழ்க்கையின் விளைவாகும். சகோதரத்துவம், தொழில்துறை ஒத்துழைப்பு அத்துடன் பூமிக்குரிய பொருட்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்களின் சர்வதேச பரிமாற்றம் போன்ற பரலோக இலட்சியங்களின்படி வாழ்ந்தால் தனிநபர்களும் நாடுகளும் சுயமாக உருவாக்கப்படும் முழுமையான அழிவிலிருந்து பாதுகாக்கப்படலாம். இலாபம் ஈட்டுதல் மற்றும் சுரண்டிப் பிழைத்தல் எனும் தற்போதைய பொருளாதார அமைப்பு தோல்வியடைந்துள்ளது; நாடுகளின் சகோதரத்துவம் மற்றும் அத்திவாசிய தொழில்கள் மற்றும் தொழிலதிபர்களின் சகோதரத்துவம் மட்டுமே உலகிற்கு நீடித்த செழிப்பைக் கொண்டுவர முடியும்.

தங்களது வலிமைவாய்ந்த அதிர்ஷ்டங்களைப் பாதுகாக்க தங்களது நிதிநிலை குறித்த அறிவுக்கூர்மையில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த பல லட்சாதிபதிகளை 1930-களின் மாபெரும் மந்தநிலை தாழ்த்தியது. புத்திசாலியான தொழிலதிபர்கள் கூட விதி மற்றும் மனச்சோர்வின் கைகளில் தித்குத் தெரியாத குழந்தைகளாக மாறினர், எந்த வழிக்குத் திருப்புவது என்று தெரியவில்லை. “சுயநலமின்மை” மற்றும் “மற்றவர்களது வாழ்வு வளத்தை ஒருவரது சொந்த வாழ்வு வளத்தில் இணைத்துக்கொள்ளுதல் போன்ற” ஆன்மீக சட்டங்கள் உடைக்கப்பட்டன; எனவே, தொழில்துறை சார்ந்த பொருளாதார அமைப்பு உலகளாவிய அளவில் சரிந்தது. தொழில்துறை சார்ந்த சுயநலம் தங்கத்தின் மீதான மனித கொடிய பேராசையால் தூண்டப்பட்டது, இது போட்டியாளரை நியாயமற்ற தன்னைத்தானே அழிக்கின்ற போட்டி மற்றும் ஆக்கவிலைக்கும் கீழாக விலைகள், தடாலென விழவும் வழிவகுத்தது. பொருளாசை கொண்ட தொழிலதிபரின் மூளை பேராசையால் குழப்பமடையும் போது, அவனது புத்திசாலித்தனம் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடையும் திட்டங்களை நிறுவுகிறது. இறைவனை மறந்த பொருள்முதல்வாத தன்முனைப்பாளர்கள் எப்போதாவது சந்திக்க வேண்டிய விலை இதுதான்.

தொழில்துறை உற்பத்திக்கு செயற்கையான பண மதிப்பைக் கொடுப்பதன் மூலம், மனிதன் விடாத் தொடர்பழக்கமாக மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையே முரண்பாடுககளை உருவாக்குகிறான். மீண்டும் மீண்டும் பணவீக்கங்களையும், மந்தநிலைகளையும் ஏற்படுத்தியவாறு, உடல் உறுப்புகளையும் போன்ற மூலதனமும் உழைப்பும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, அதன் மூலம் தங்கள் பரஸ்பர அழிவை உறுதி செய்வதை விட, தேசத்தின் உடல் மற்றும் ஆன்மாவின் ஒட்டுமொத்த நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும். உடலைப் பராமரிக்கவும், வயிற்றில் உணவைப் பகிர்ந்தளிக்கவும் மூளை மற்றும் கைகள் இரண்டும் ஒத்துழைக்கின்றன; அவ்வாறே மூலதனமும் (சமூகத்தின் மூளையும்) உழைப்பும் (அதன் கைகளும் கால்களும்) வாழ்க்கையை வளமாக்குவதற்கும், அவை உற்பத்தி செய்யும் வளத்தைப் பகிர்வதற்கும் ஒத்துழைக்க வேண்டும். ஏகாதிபத்திய மற்றும் பொதுவுடைமை அரசாங்க வடிவங்களின் ஆபத்துக்களைத் தவிர்த்து, மூலதனமோ அல்லது உழைப்போ சிறப்பு முன்னுரிமையைப் பெறக்கூடாது. மூலதனமும் மற்றும் உழைப்பும் தத்தம் உறுதியான இடத்தைக் கொண்டுள்ளன. மேலும் சமத்துவத்தில் இரண்டும் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். தேசியச் செல்வத்தைப் பகிர்வதன் மூலம், அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் ஆகியவை வழங்கப்பட வேண்டும்; அல்லது இயற்கையின் சீர்குலைவுகளால் தவிர்க்கமுடியாமல் வறுமை வந்தால் அதை அனைவரும் சமமாக சுமக்க வேண்டும். படிப்படியாக முன்னேறுகிற பொருள்ரீதியான, மனரீதியான மற்றும் ஆன்மீகரீதியான ஓர் இருப்பிற்கு அடிப்படைத் தேவைகளின் சமத்துவமற்ற விநியோகம் இருக்கக்கூடாது; பொருள் இருப்பவர்களுக்கு எதிரான இல்லாதவர்களே குற்றம், பேராசை, சுயநலம் மற்றும் பிற சொல்லப்படாத சமூக தீமைகளுக்கு மூல காரணம்.

தனிநபர்களும் நாடுகளும் சர்வதேச அமைப்புக்கு உணவளிப்பதற்கும் உடுத்துவதற்கும் சுயநலத்தை கைவிடுவது இப்போது கட்டாயமாகும். தேசிய குடிமக்கள் சுயநலத்தின் மீதான ஆர்வத்தை அடக்கி, ஞானத்தைப் பெறக் கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் தியானம் செய்து, எல்லையற்றவனுடன் ஒத்திசைவில் இருக்க வேண்டும், இதனால் அவர்கள் கூட்டாக தேசிய ஆன்மாவிற்கு அனைத்து வகையான மகிழ்ச்சியையும் அளிக்கிறார்கள். இறைவன் மற்றும் அவரது சகோதரத்துவக் கோட்பாடு மற்றும் அமைதியுடன் இணக்கமாக வாழும் நாடுகள் போர்களோ அல்லது பஞ்சமோ இல்லாமல், நிரந்தர செழிப்பு மற்றும் ஆன்மீக மகிழ்ச்சியுடன் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும். செழிப்பு நிறைந்த ஆனால் விவேகம் மற்றும் இறையின்பம் இல்லாத நாடுகள் உள்நாட்டுப் போர், மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான சண்டைகள் மற்றும் அவர்களது வளமையைக் கண்டு பொறாமை கொள்ளும் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் ஆகியவை வாயிலாக தங்கள் மேலான பொருளை இழக்கக்கூடும். பட்டினிச் சாவுகளைக் கொண்ட மற்றொரு நாட்டை தனதருகே கொண்ட ஒரு வளமைமிக்க நாடு பூமியில் அமைதியை உருவாக்கும் கொள்கை முயற்சியில் ஒருபோதும் இருக்க முடியாது.

நாடுகள் ஒன்றையொன்று பேணிப் பாதுகாக்க வேண்டும் அல்லது அவை அழிந்துவிடும். அதனால்தான் இயேசு உலக நாடுகளிடம் கூறுகிறார்: தேசங்களே, சுயநலமாக இருக்காதீர்கள், உணவு, தொழில், உடைகள் ஆகியவற்றை மட்டும் சிந்தித்தவாறு, சகோதரத்துவத்தையும், எல்லாவற்றையும் தருகிற இறைவனையும் மறந்துவிடாதீர்கள், இல்லையெனில் நீங்கள் கொண்டு வருவீர்கள். உங்கள் அறியாமை மற்றும் அதனுடன் வருகின்ற போர்கள், கொள்ளைநோய் மற்றும் பிற துன்பங்கள் மூலம் நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்ட பேரழிவைக் கொண்டுவருவீர்கள்.”

செழிப்பு பெரும்பாலும் சமூக மனசாட்சியை மழுங்கடிக்கச் செய்கிறது: “மற்ற தேசங்களுக்காக நாம் என்ன அக்கறை கொள்கிறோம்: எங்கள் செழிப்பை உருவாக்க நாங்கள் உழைத்தோம், அதனால் நாங்கள் செல்வத்தில் புரள முடிகிறது! அவர்கள் ஏன் அதையே செய்யக்கூடாது?” உள்ளத்தின் உணர்ச்சியற்ற ஆணவம் குறுகிய பார்வை கொண்டது. நீடித்த தேசிய செழிப்பு இயற்கை வளங்கள் மற்றும் தேசத்தினுடைய குடிமக்களின் முன்முயற்சியை மட்டும் சார்ந்ததல்ல, ஆனால், முதன்மையாக மக்களின் தார்மீக நடத்தை, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தது. ஒரு தேசம் எவ்வளவு வெற்றியடைந்திருந்தாலும், அது துஷ்பிரயோகம், சுயநலம் மற்றும் இணக்கமற்றதாக மாறினால், அதனுடைய தன்னிறைவையும், நல் அதிர்ஷ்டத்தையும் சீர்குலைப்பதற்கு உள்நாட்டுப் போர்களையும், துரோகத்தையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பையும் அது பெற்றுவிடும்.

எனவே, எந்த ஒரு தனிநபரும் அல்லது தேசமும் சுயநலமாக இருக்கக்கூடாது, உணவையோ, உடையையோ, உலகியல் வளத்தையோ அடைவதிலேயே முழு சிந்தனையையும் செலுத்தக்கூடாது, ஆனால் தாழ்மையுடன் இருக்க வேண்டும், ஏழை சகோதரர்களுடன் செழிப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இறைவனை மட்டுமே பூமியின் அனைத்து கொடைகளின் உரிமையாளராகவும் அவற்றை வழங்குபவராகவும் நன்றியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை.

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.