சுவாமி சியாமானந்த கிரி: இறைவன் மற்றும் குருவிற்கான ஆன்மீகப் படைவீரர்

ஆகஸ்ட் 31, 1971 ல் லாஸ்ஏஞ்சலீஸ், கலிஃபோர்னியா, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேசத் தலைமையகத்தில் நடைபெற்ற சுவாமி சியாமானந்தரின் நினைவஞ்சலி கூட்டு வழிபாட்டில் ஸ்ரீ தயா மாதா ஆற்றிய சொற்பொழிவு.

கடந்த 12 வருடங்களாக இந்தியாவில் (மற்றும் உலகெங்கும்) பரமஹம்ஸ யோகானந்தரது பணியின் விசுவாசமான பக்தர் மற்றும் ஆன்மீகப் படைவீரர் – பாதுகாப்பாளராக இருந்த சுவாமி சியாமானந்த கிரி[1] அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த இந்த காலையில் நாம் கூடியுள்ளோம்.

ராஞ்சியில் தயா மாதா தியானம் செய்தல், ஜனவரி,1959

சுவாமி சிமானந்தர், பரமஹம்ஸ யோகானந்தர் பிறந்த மாகாணமான இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். குழந்தைப்பருவ ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் கோவில்கள் மற்றும் இந்தியாவிலுள்ள சாதுக்களின் (புனித மனிதர்கள்) தோழமை நிறைந்த ஆன்மீகச் சூழலையே நாடினார். சியாமானந்தருக்கு பதினோரு வயது ஆகும் போது, மிகவும் வணங்கத்தக்க ஒரு சாது அவர் இல்லத்திற்கு வந்து ஆழ்ந்த ஆன்மீக நாட்டம் மிக்க இந்தக் குழந்தையிடம் தீவிர ஆர்வம் மற்றும் அன்பை வெளிப்படுத்தினார். சியாமானந்தர் அந்தக் காலகட்டத்தில் உலக வாழ்விற்குரிய இலக்குகளைக் கைவிட்டு அந்த சாதுவின் பின்செல்ல தீவிர ஏக்கம் கொண்டிருந்தார். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை.

அவருக்கு ஒன்பது வயது மட்டுமே ஆகியிருந்த போது இறந்து போன தந்தையின் மறைவிற்குப்பின் (தாயார், அவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே மறைந்து விட்டார்) அவர், தந்தையின் மிக நெருங்கிய நண்பரான, கல்கத்தாவிற்கு அருகே மஹிசாதல் நகரிலுள்ள ராஜாபகதூர் சதி புரோசாத் சர்க்கா வின் குடும்பத்தோடு வாழ்ந்தார். இது இந்தியாவின் ஆட்சி செய்யும் குடும்பங்களில் ஒன்றாயிருந்தது. மேலும் கிட்டத்தட்ட ஐநூறு கிராமங்களை உடைமையாகப் பெற்றிருந்து, அங்கு வசிப்பவர்களைத் தர்ம சிந்தனையுடன் ஆட்சி புரிந்தது. சியாமானந்தர் கார்கா குடும்பத்தின் மூத்த மகனாக வளர்க்கப்பட்டு அன்பு காட்டப்பட்டார்.

அவர் மஹிசதாவில் தன் கல்வியைத் தொடர்ந்தார்; வளர்ந்த பிறகு சட்டக் கல்விக்குச் சென்றார். அவர், கார்க்காவின் புதல்வியான தன் குழந்தை காலத்து அன்பிற்குரிய தோழியை மணந்தார். ஆனால் எப்பொழுதும் அவர் மனதில் பின்புலத்தில் இறைவனுக்கான ஆழ்ந்த ஏக்கம் இருந்து கொண்டிருந்தது. அவர் அடிக்கடி தன்னையேக் கேட்டுக் கொண்டார், “நான் ஏன் இந்தக் குறிப்பிட்ட சூழலில் உள்ளேன்? இம்மாதிரியான வாழ்வை நடத்துவது எனக்கு விதிக்கப்பட்டதல்ல.”

அவரது மணவாழ்க்கை இரண்டு புதல்விகளால் ஆசீர்வதிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே, அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தாள். அவருக்கு அப்போது இருபது வயது தான். தனது மனைவிக்கான அவரது ஆழ்ந்த பக்தி மற்றும் மரியாதை கலந்த உணர்வு, நான் அவரைப்பற்றி நினைவில் கொண்டுள்ள அவரது மிகவும் தலைசிறந்த பண்புகளில் ஒன்றாகும். எனது அனைத்துப் பயணங்களிலும் என் அனைத்து அனுபவங்களிலும் இப்பண்பிற்கு இணையான ஒன்றை நான் எந்தப் பிற மனிதரிடத்திலும் ஒருபோதும் கண்டதில்லை. நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் நமக்கு அடிக்கடி கூறியிருந்த இந்தியாவின் ஒப்பற்ற சிறப்பான கணவன்-மனைவி உறவு முறையின் ஒரு பூரண வெளிப்பாடாக இருந்தது அவரது உணர்வு.

எதிர்காலத்தில் சட்ட நிபுணராக திகழ வேண்டியவரது மனைவியின் மரணத்துடன், அவரது வாழ்வில் மணவாழ்க்கை அத்தியாயம் முடிவுற்றது. அவர் அதிக சிரத்தையுடன் இறைவனின் தேடலை நோக்கித் திரும்பினார். மிகவும் விந்தையாக, இந்தச் சமயத்தில் தான் (1935 – 36) குருதேவர் இந்தியாவில் இருந்தார், மற்றும் சியாமானந்தர் பூரியில் இருந்தார்; குருதேவர் அப்பொழுது தனது குரு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் மரணத்திற்காக துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் சந்திக்க வேண்டிய தருணம் அதுவல்ல என்பது வெளிப்படை.

உலகத்தை துறந்து, அடுத்த இருபத்திமூன்று வருடங்களை சியாமானந்தர் ஒரு அலைந்து திரியும் நாடோடித் துறவியைப் போன்று மகான்களை நாடிக் கொண்டும், இந்தியாவின் ஆசிரமங்கள் மற்றும் புனித யாத்திரை தலங்களுக்கு விஜயம் செய்து கொண்டும் கழித்தார். அவர் ஒரு புனிதமான சன்னியாசிக்கு ஆசிரமம் அமைத்து கொடுத்து பத்து வருடங்களுக்கு மேலான காலத்தை அங்கு கழித்தார், ஆனால் தீட்சையோ (குரு – சிஷ்ய உபதேசம்) அல்லது சன்னியாசமோ (ஒரு துறவியின் சங்கல்பங்கள்) அந்த ஆசிரியரிடமிருந்து பெறவில்லை.

இந்தியாவிற்கு 1958இல் நான் விஜயம் செய்த காலத்தில், சியாமானந்தர் என்னை முதல் தடவையாக பார்க்க வந்தபோது, அவர் ஒரு யோகியின் சுயசரிதை சமீபத்தில்தான் படித்து முடித்திருந்தார். அவர், நமது உயர் குரு பரமஹம்ஸ யோகானந்தரின் அற்புத வாழ்க்கையினால் மிகவும் தாக்கமுற்று ஆன்மீகமாக எழுச்சி அடைந்திருந்தார். அதுவரையில் அவர், தனது ஆன்மீக லட்சிய புருஷராகத் தேர்ந்தெடுத்திருந்த உலகப் புகழ்பெற்ற  ஞான யோகி சுவாமி விவேகானந்தரின் உதாரணத்தைப் பின்பற்றி விவேகம் மற்றும் பகுத்தறிவுப் பாதையில் ஞான யோகத்தை பின்பற்றி வந்திருந்தார். சியாமானந்தர் என்னிடம் கூறினார், “நான் இந்த பாதையைப் பலப் பல வருடங்கள் பின்பற்றி வருகிறேன்; இருந்தாலும், என் சாதனாவில்“(சாதனா என்பது ஒருவர் இறைவனை நாடும் மார்க்கத்தில் அவர் வைத்திருக்கும் ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பின்பற்றும் ஒழுங்கு முறைகளைக் குறிக்கும்) ஏதோ ஒரு குறை உள்ளது.” சியாமானந்தர் என்னிடம் அவரது தேடலைப் பற்றி சிறிது கூறியபோதே அதில் என்ன குறை என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அது, பெரும்பாலான மனித இனத்தில் குறைவாக இருக்கும் பண்பு: இறைவனுக்கான அன்பு. இந்த அதி முக்கியமான காரணி உலகத்தின் எந்தப் பெரிய மதங்களிலும் போதிய அளவு வலியுறுத்தப் படுவதில்லை. மாறாக மனிதன் சடங்குகளிலும் கோட்பாட்டு விவாதங்களிலும் தன்னை இழந்து விடுகிறான். மேலை நாடுகளில் மக்கள் இறைவனை, நாம் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது நம்மைத் தரவாரியாகப் பிரித்து சொர்க்கம் அல்லது நரகத்தின் எந்தப் பகுதிக்கு நாம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பெரிய நீதிபதியாக எண்ணிக்கொண்டு, இறைவனிடம் அச்சத்தால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். தெய்வத்தைப் பற்றிய குருதேவரின் கருத்து இதுவல்ல. அவர் கருத்தில் இறைவன் பேரன்பின் ஒரு தலைவன், இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் உள்ள கடவுள். நாம் அவனை நாடுவது, அவனிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் அல்ல, மாறாக நாம் அவனை நேசிப்பதாலும் அத்துடன் அவன் நமக்கே சொந்தமானவன் என்பதற்காக மட்டுமே.

இந்தக் கருத்துக்களின் கோணத்தில் நாம் சியாமானந்தரிடம் பேசினேன். அவர் சில காலம் கழித்து ஆசிரம பக்தர்களிடம் கூறினார், “நான் அவருடைய (தயா மாதாவின்) முன்னிலையை விட்டு அகன்றவுடன், நான் தேடிக்கொண்டிருந்த ஆனால் தவறவிட்டிருந்தப் பொருளை அவர் எனக்கு வழங்கி விட்டிருந்தார் என்று அறிந்து கொண்டேன். நான் இறைவனுக்கான மிகப்பெரிய ஏக்கத்தை, அவனுக்கான மிகப்பெரிய அன்பை உணர்ந்தேன்.”

அந்த காலக்கட்டத்தில், இந்தியாவிலிருந்த நமது பிரச்சனைகள் என்ன என்பதை சுருக்கமாக குறிப்பிட முனைகிறேன். குருதேவர் தன் உடலை நீப்பதற்கு முன் என்னிடம் கூறியிருந்தார், “நான் இந்தியாவிற்கு மீண்டும் போக முடியாது. ஆனால், நம் பணி மீது நான் கொண்டுள்ள அக்கறையை நீ கொள்வாய் என்றும் இந்தியாவில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவிற்கு நான் செய்ய வேண்டிய அனைத்தையும் நீ செய்வாய் என்றும் எனக்கு வாக்குறுதி அளி.” நான் என் வாக்குறுதியை அளித்தேன். 1958ல் இறுதியாக என் ஆன்மீகத் தாயகத்திற்கு எனது முதல் விஜயத்தை நான் செய்ய முடிந்தது.

அந்த விஜயத்தின் முதல் பகுதியில் எனது கனவுகள் தகர்ந்து போயின, ஏனெனில் குருதேவரின் பணி அத்தனை மோசமாகச் சீரழிந்து விட்டிருந்தது. கிறிஸ்துமஸ்ஸிற்கு முந்தைய நாள் நான் சில பக்தர்களோடு ஆசிரமத்தில் இருந்தேன், எனது இதயம் கனத்து இருந்தது. ஏனெனில் அவர்களிடையே நான் எதிர்பார்த்திருந்த ஆர்வம் இல்லை. நான் அமைதியாக கொண்டாட்டங்களில் இருந்து பின்வாங்கி மாடியில் உள்ள என் சிறிய அறைக்குச் சென்றேன். நான் நீண்ட நேரம் ஆழ்ந்து தியானம் செய்தேன், சோகம் மிக்க கண்ணீர் சிந்தினேன், ஏனெனில் குருதேவரின் நிறுவனத்திற்குப் பயன்படும்படியான எதையும், இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட தீவிர விசுவாசமுள்ள திறமை மிகுந்த ஒருவரின் உதவியின்றி சாதிப்பது சாத்தியமன்று என்பதை நான் அறிந்தேன். எனது பிரார்த்தனைக்கு பதில் ஜனவரி 5 ஆம் நாள் இரவு நமது தக்ஷிணேஸ்வர ஆசிரமத்தில் குருதேவரின் அவதார நாளைக் கொண்டாடும் போது கிடைத்தது. நான் அவையில் சியாமானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்டேன். நான் அதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் சிறிது நேரத்திற்கு மட்டுமே அவரைச் சந்தித்துப் பேசியிருந்தேன். ஆனால் இந்த முறை, நான் அவரை அவையினரின் வலது பக்கத்தில் அத்துணை அமைதியாக, அத்துணை முழுமையாக, அசைவற்று தியானத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டேன். அவர் ஒப்பற்று விளங்கினார்; நான் நினைத்தேன், “இறைவனை ஆழ்ந்து தேடும் நபர் ஒருவர் இதோ உள்ளார்.”

1964ம் ஆண்டு, தக்ஷிணேஸ்வரத்திலுள்ள ஒய்.எஸ்.எஸ். ஆசிரமத்துப் பூஜையறையில் தயா மாதா கிரியா யோகச் சடங்கை நடத்துகிறார், சுவாமி சியாமானந்தர் வலது பக்கத்தில் தென்படுகிறார்.

வழிபாடு முடிவுற்றதும் சியாமானந்தர் முன்னால் வந்து தன்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு கூறுகிறார், “நீங்கள் போகும்போது உங்கள் குழுவைப் பின்தொடர்ந்து ராஞ்சிக்கு வர நான் பெரிதும் விரும்புகிறேன்.” குருதேவர் சிறுவர்களுக்கான பள்ளியை நிறுவிய ராஞ்சிக்கு அதுவே என் முதல் விஜயமாயிருந்தது. அவர் எங்களுடன் வர நான் சம்மதித்தேன்.

இச்சம்பவத்தை அடுத்த நாட்களின் போதெல்லாம் என் மனத்தின் பின்புலத்தில் அவரைப் பற்றிய எண்ணம் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அவர் ராஞ்சிக்கு தன் சொந்த காரில் சென்றார், நாங்கள் அவருக்குப் பிறகு சில மணி நேரங்களில் அங்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை வைகறைப் பொழுதில் எழுந்து நான் ஆசிரமத்து வளாகத்தில் நடந்து கொண்டிருந்தேன். நான், குருதேவர் அந்தப் பள்ளியை நிறுவி, அங்குள்ளவர்களுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்திக்கொண்டு வாழ்ந்த நாட்களையெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஆயிரம் மாணவர்கள் திறந்த வெளியில் அமர்ந்து கொண்டுப் பாடங்களை படித்துக் கொண்டிருந்தனர். அந்நிலைமையோடு, நான் ராஞ்சிக்கு வந்தடைந்தபோது உள்ள நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்— விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள், மற்றும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்ட ஆசிரமம். என் இதயம் கனத்தது. அப்பொழுது, என் மனதை மிகவும் கவர்ந்த அதே சீமான் எதிர் திசையிலிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நாங்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்திக் கொண்டு ஒன்றாக அந்த நிலப்பரப்புகளைச் சுற்றி நடந்து கொண்டிருந்தோம், மற்றும் நாங்கள் பேசினோம். நான் அவரிடம் இந்தியாவில் தனது பணி பற்றிய பரமஹம்ஸருடைய கனவுகளையும், சில இதய வலிகளையும் பற்றி கூற ஆரம்பித்தேன். நான் அவ்வாறு கூறும் போதே, ஒரு வெளிப்படையான அந்நியருடன் நான் ஏன் அந்த முறையில் பேசிக்கொண்டிருந்தேன் என்று வியந்தேன், இருப்பினும் அவர் அந்நியர் அல்ல என்று நான் உணர்ந்தேன். குருதேவரைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் பருகி அதற்கேற்ப நடந்து கொள்ள விழைவது போல் தோன்றினார். நான் சுமந்து கொண்டிருந்த பெரிய சுமையைப் பற்றியும் கூட அவர் சிறிதளவு புரிந்த கொண்டவராயும் காணப்பட்டார்.

பின்னாளில், அவர் ஒருநாள் ஆசிரமத்திற்கு வந்து, நான் வழிபாட்டுப் பீடத்தின் முன் தியானத்தில் அமர்ந்து கொண்டு, என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய, நான் இறைவனிடம் வழிகாட்டுதலுக்காக மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்ததை கண்டதாகவும் கேள்வியுற்றேன். ஏனெனில் நான் இந்தியாவிற்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியிருந்தும் ஒன்றும் செய்து முடிக்கப்படவில்லை. என்னை அந்நிலையில் பார்த்த அக்கணமே அவர் எல்லாவற்றையும் கைவிட்டு இப்பாதையைப் பின்பற்றப் போவதாக சபதம் எடுத்தேன் என்று கூறியிருந்தார்.

கடந்த பன்னிரண்டு வருடங்கள் முழுவதுமாக, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அந்தச் சபதத்தை அவர் நிறைவேற்றி உள்ளார். அவர் இந்தப் பாதையைப் பின்பற்றி வந்தது மட்டுமின்றி அதற்கு விசுவாசமாகவும் பணியாற்றியுள்ளார். 1920ல் பரமஹம்ஸர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்ட பிறகு இந்தியாவில் மெல்ல மெல்ல சுக்குநூறாக சிதைந்து கொண்டிருந்த நம் நிறுவனத்தை, இந்தியா முழுவதும் யோகதா கிளை மையங்கள், இளைஞர்களின் கல்விக்காக ஆரம்பப் பள்ளிப் படிப்பிலிருந்து, கல்லூரி படிப்பு வரை வாய்ப்பளிக்கும் பல கல்வி நிலையங்கள் முதலியவற்றைக் கொண்ட ஒரு மாபெரும் மரியாதைக்குரிய நிறுவனமாக கட்டமைத்தார். கல்வி பெற எந்த வாய்ப்பும் இல்லாத தொலைதூர குக்கிராமங்களில் கூட நாம் பள்ளிகளைத் துவங்கியுள்ளோம்.

இந்தியா முழுவதுமாக நம் பணிக்கு சுவாமி சியாமானந்தர் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளார். அவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நாம் பணிக்கு சேவை செய்வதற்கு பயணித்த போதெல்லாம் மக்களின் மரியாதையை மட்டுமின்றி அவர்களது ஆழ்ந்த அன்பையும் ஈர்த்தார். அவருக்கு பிறரை நேசிப்பதற்கான பேராற்றல் இருந்தது; அதற்கேற்ற பரஸ்பர எதிர்ப் பலன் கிடைத்தது இயல்புதானே.

சியாமானந்தர், நமது புனித இரண்டாவது தலைவர் ராஜரிஷியின் வாழ்க்கையினால் மிகவும் மனவெழுச்சி பெற்றார். ராஜரிஷி அவரது இலட்சிய புருசனாக திகழ்ந்தார். சியாமானந்தர், அவரது சொந்த வழியில், ராஜரிஷியின் இந்திய மறுவடிவம் என்று நான் கூற முற்படுவேன்.

சுவாமி சியாமானந்தர் இறைவன் மற்றும் குருதேவரின் பணிக்காக மட்டுமே வாழ்ந்தார். சேவை செய்வதற்கான அத்தனை வல்லமையையும் உற்சாகத்தையும் நான் அரிதாகவே பார்த்துள்ளேன். அவரது வாழ்வின் இறுதி நாட்கள் வரை இந்தியாவில் செய்யப்பட வேண்டிய நமது பணியைத் தவிர வேறெதையும் அவர் பேசவில்லை. இந்தப் பணிக்காக அவர் வெவ்வேறு இலக்குகளை நிர்ணயித்திருந்தார். ஒரு மாலை, அவர் நோய்வாய்ப்பட்ட காலத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அவர் எங்களிடம் கூறினார், “இப்பொழுது நான் இந்த உடலை விட வேண்டுமென்றால், நான் குருதேவரது பணிக்கான என் சேவையைத் தொடர்வதற்காக மீண்டும் விரைவாக பூமிக்கு வர வேண்டும் என்ற ஆசையுடன் விட தயாராக உள்ளேன். இதுதான் என் இதயத்தின் கொழுந்து விட்டெரியும் ஆசை.”

சுவாமி சிமானந்தரின் இறுதிப் புகைப்படங்களில் ஒன்று, மதர் சென்டர், 1970.

ஒரு சமயத்தில், அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நான் அவருடைய அறையினுள் நுழைந்து அவர் கன்னங்களின் வழியே கண்ணீர் ஆறாக வழிந்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் எளிதில் கண்ணீர் விடும் ஆசாமி அல்ல. நான் அவரது படுக்கையருகே சென்று “என்ன விஷயம்” என்று கேட்டேன். நான் அருகில் சென்றவுடன் அவர் முகத்தில் பரவசநிலை வெளிப்பாடு இருந்ததைக் கண்டேன். அக்கண்ணீர் துக்கத்தினால் வந்த கண்ணீர் அல்ல, மாறாக ஆனந்த கண்ணீர் என்று அறிந்தேன். அவரது மனம் மிகவும் உள்முகப்பட்டிருந்ததால், மிகவும் மெதுவாகவே நான் இருப்பதைப் பற்றி அறிய வந்தார். பிறகு அவர் கூறினார், “ஓ மா, நான் இப்போதுதான் அதிஅற்புதமான அனுபவத்திற்கு ஆட்பட்டேன். நான் இந்தப் படுக்கையில், என் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன என்பதை முற்றிலும் அறிந்தவாறு, நான் இந்த நோயிலிருந்து மீளுதல் இறைவனது திருவுள்ளமாக இருக்காது என்று நினைத்த வண்ணம் கிடந்தேன். ஆனால் என் இதயத்தில் ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இருந்தது: “இறைவா, நான் உன்னை நேசிக்க விரும்புகிறேன். அந்த ஆசையை நிறைவேற்று! உன்னை நேசிக்க மட்டுமே நான் விரும்புகிறேன்.” நான் இவ்வாறு பிரார்த்தனை செய்யும் போது திடீரென அத்துனை அன்பு, அத்தனை ஆனந்தம் என்னைச் சூழ்ந்தது. . . . ஓ, மா அத்துணை ஆனந்தம்! பிறகு பாபாஜி வந்தார். அவர் அன்பே வடிவாய், ஓ அத்துணை அன்பு மிக்கவராய் உள்ளார்! நான் முற்றிலுமாக அந்த அன்பால் நிரப்பப்பட்டுள்ளேன். எத்தகைய ஆனந்தம், ஓ, எத்தகைய ஆனந்தம் என்னுடையது! இதுதான் வாழ்க்கையின் ஒரே இலக்கு என்பதை அறிகிறேன்.”

நிச்சயமாக, வாழ்க்கையின் இறுதியான இலக்கு இறைவனுக்குச் சேவை செய்து நமது அனைத்துச் செயல்களையும் அவனுக்கு அர்ப்பணிப்பது — நாம் உலகத்திலோ அல்லது ஆசிரமங்களிலோ எங்கு இருந்தாலும் — மட்டுமின்றி அத்துடன் நம் ஒவ்வோர் எண்ணத்திலும் அவன் நமது தினசரித் தோழனாக மாறும் அளவிற்கு இறைவனுக்கான அத்தகைய ஓர் அன்பை வளர்க்க வேண்டும். இந்த இலட்சியம் சுவாமி சியாமானந்த கிரியிடம் முழுமையாக மலர்ந்தது. இந்த உலகில் மிகச் சிலரே செய்ய முடிவதை போல், அவர் அந்த அன்பிலே வாழ்ந்தார். அவரது அனைத்துச் செயல்பாடுகளும் இந்த ஒரு சிந்தனையையே மையமாகக் கொண்டிருந்தது: “நான் உனக்கு எவ்வாறு சேவை செய்யவேண்டும், என் இறைவா?”

சுவாமி சியாமானந்த கிரி, அவரை அறிந்த நம் அனைவரிடத்திலும் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். இங்கும் மற்றும் இந்தியாவிலுமுள்ள நம் பணிகளிலும் கூட ஒரு பெரிய வெற்றிடத்தை அவர் விட்டுச் செல்கிறார். பரமஹம்ஸ யோகானந்தரின் சர்வதேச தலைமையகமான ஸெல்ஃப்- ரியலைசேஷனின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும்

இந்தியாவில் உள்ள நமது நிறுவனமான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர்/ பொருளாளராகவும் அவர் இருந்தார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஒருநாள் இறைவனின் அழைப்பிற்கு இணங்கியே ஆகவேண்டுமென்று நாம் அறிவோம். இது துக்கத்திற்கான நேரம் அல்ல. இங்கு ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனினும் நாம் ஓர் உயர் அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறோம்; ஏனெனில் அவர் மிகவும் அன்புடன் வழிபட்ட, அவளுக்காக தன் குழந்தைப் பருவத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த, அந்த இனிமையான தெய்வத்திருவன்னையின் கரங்களில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இப்பொழுது நாம் அவரது இறுதிச் சடங்குப் பணியைத் துவங்குவோம், இது இந்தியாவில் ஆன்மா உடலை விட்டு நீங்கிய பிறகு செய்யப்படுகிறது மற்றும் இது தகன நேரத்தில் செய்யப்படும் புராதன வேத சடங்குகளின் ஒரு பகுதி ஆகும். இந்தியாவின் மறை நூல்கள், அக்கினி ஓர் உயர்ந்த தூய்மையாளர் என்று போதிக்கின்றன. உங்கள் முன் எரிகின்ற அக்கினி, அழிவற்ற ஆத்மா இறைவனிடத்திலுள்ள தன் இல்லமான விண்ணுலகை நோக்கி விரைவாகச் செல்லும்படியாக உடலின் பிணைப்பிலிருந்து விடுவித்தவாறு நடக்கும், அழியும் உடலின் தகனத்தை குறிக்கிறது.

[ஸ்ரீ தயா மாதா அடையாள வடிவமான தீயைப் பற்றவைத்து, புனித வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையையும் இந்த சமயத்தில் உள்ளடக்கியவாறு, இறுதிச் சடங்கினை நடத்துகிறார். வழிபாடு தியானத்துடன் தொடங்குகிறது; பிறகு பரமஹம்ஸரது கவிதையில் இருந்து ஒரு வாசிப்பு, “நீயும் நானும் ஒன்றே” என்ற இறைவனைத் தெய்வீக அன்னையாகப் பாவித்து ஒரு பக்தி கீதம், அத்துடன் ஒரு நிறைவு பிரார்த்தனை]

தெய்வத்தந்தையே, அன்னையே, நண்பனே, அன்பான இறைவா, பகவான் கிருஷ்ணரே, இயேசு கிறிஸ்துவே, மகாவாதார பாபாஜியே, லாஹிரி மகாசாயரே, சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியே, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரே அனைத்து சமய மகான்களே உங்கள் அனைவருக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

தெய்வீக அன்னையே நீதான் எங்கள் வாழ்வு, நீதான் எங்கள் அன்பு, நீதான் அனைத்து மனித இனத்தாலும் நாடப்படும் தலையாய இலக்கு. உன் அன்பு எங்கள் பக்தி எனும் திருக்கோவிலுள் என்றும் ஒளிரட்டும் மேலும் நாங்கள் உந்தன் அன்பினை எல்லா இதயங்களிலும் எழுச்சி அடையச்செய்ய வல்லமை பெறுவோமாக.

சுவாமி சியாமானந்த கிரியின் ஆன்மாவை ஆசீர்வதிப்பாய். உன் பரந்த அன்புடன் அவரை இணைத்துவிடு. அவரது ஆன்மா விண்ணுலகை நோக்கி உயரப் பறக்கும்போது அவரைப் பாதுகாத்து வழிகாட்டு. அவர் கருணை, மென்மை மற்றும் புரிதலுள்ள உம் திருக்கரங்களில் ஒய்வெடுக்கட்டும். அவர் உன் குழந்தை; அவருடன் எப்பொழுதும் இரு. நாங்கள் அவரை எமது அன்பு, எமது நல்லெண்ணம் மற்றும் சிறிய உடற் கூட்டிலிருந்து அவர் பெற்ற விடுதலையில் எமது பெருமகிழ்ச்சி ஆகிய சிறகுகளின் மேல் அவரை அனுப்புகிறோம். அவரது உணர்வு நிலையை அது என்றென்றும் நிலைத்திருக்கும் வண்ணம் மேம்படுத்துவாய், ஏனெனில் எங்கள் ஆன்மாக்களின் ஒப்புயர்வற்ற அன்பு நீ தான்.

இந்த மானிடக் கரைகளில் தங்கவிடப்பட்டுள்ள எங்களை, அவர் செய்தது போலவே இந்த உலகில் எங்கள் கடமைகளைக் கடமைகள் என்று பாராமல், மாறாக எங்கள் சக மக்களுக்கான சேவை மூலம் உனக்கு சேவை செய்ய எங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சிறப்புரிமையாக கருதி நிறைவேற்ற ஆசீர்வதிப்பாய்.

ஓ தெய்வீகெ அன்னையே, எங்கள் வாழ்க்கையை உனது தெய்வீகப் படிவத்தின் படி வடிவமைப்பாய். எங்கள் அன்பு மற்றும் எங்கள் பக்தியின் மலர்களை சர்வ வியாபகம் எனும் உன் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். உனக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

ஓம், சாந்தி, சாந்தி, சாந்தி

[1] தயா மாதா அவர்கள் கூட்டு வழிபாடு முழுதுமாக அவரை சுவாமி சியாமானந்தர் என்ற சந்நியாசப் பெயரால் குறிப்பிட்டாலும், சுவாமி சியாமானந்தர் அனேக ஒய்.எஸ்.எஸ்./ எஸ்.ஆர்.எஃப். உறுப்பினர்களுக்கு அவரது குடும்ப பெயரான பினயேந்திர நாராயணன் துபே என்றவாறும், தயா மாதா அவருக்கு யோகாச்சார்யா (யோகா ஆசிரியர்) என்ற பட்டம் அளித்த பிறகு யோகாச்சார்யா பினயேந்திர நாராயன் என்றவாறே அறியப்பட்டார். 1970ம் ஆண்டு அக்டோபரில் அவர் சம்பிரதாய முறையில் ஸ்ரீ தயா மாதாவிடம் இருந்து சந்நியாச தீட்சை (ஒரு துறவியின் சங்கல்பங்கள்) பெற்றவுடன் ஸ்ரீ தயா மாதா அவருக்கு சுவாமி சியாமானந்த கிரி என்று பெயர் சூட்டினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.