யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சொல்லகராதி

சாதி. சாதி என்பது அதன்‌ மூலக்கருத்தின்படி பரம்பரை அந்தஸ்து அல்ல; அது மனிதனுடைய இயல்பான ஆற்றல்களை அடிப்‌படையாகக்‌ கொண்ட ஒரு வகைப்படுத்தலாகும்‌. மனிதன்‌ தனது பரிணாமத்தில்‌, புராதன இந்து ரிஷிகளால்‌ ஏற்படுத்தப்பட்ட சூத்திரன்‌, வைசியன்‌, க்ஷத்திரியன்‌ மற்றும்‌ பிராமணன்‌ ஆகிய நிலைகள்‌ ஊடாகச்‌ செல்கின்றான்‌. சூத்திரன்‌, தனது உடலுக்குத்‌ தேவையானவற்றையும்‌, ஆசைகளையும்‌ பூர்த்தி செய்வதில்‌ பிரதானமாக ஆர்வம்‌ காட்டுகிறான்‌; அவனுடைய நிலையை விருத்தி செய்வதற்கான மிகச்‌ சிறந்த பொருத்தமான தொழில்‌ தேக உழைப்பாகும்‌. வைசியன்‌ பொருளீட்டுவதற்கும்‌, தனது புலன்களைத்‌ திருப்திப்படுத்துவதற்கும்‌ பேரவா கொண்டவனாக உள்ளான்‌. இவன்‌ சூத்திரனைவிட அதிக ஆக்கசக்தி உள்ளவனாக இருப்பதுடன்‌, ஒரு விவசாயியாகவோ, ஒரு வணிகனாகவோ, ஒரு கலைஞனாகவோ அல்லது அவனுடைய மனோசக்தி நிறைவைக்‌ காண்கின்ற எதிலாயினும்‌ ஒரு தொழிலை நாடுகின்றான்‌. க்ஷத்திரியன்‌, பல பிறவிகள்‌ ஊடாக‌ தனது சூத்திர மற்றும்‌ வைசிய நிலைகளின்‌ ஆசைகளை நிறைவேற்றி விட்டிருப்பதால்‌, வாழ்க்கையின்‌ அர்த்தத்தை நாட ஆரம்பிக்கின்றான்‌; தனது தீய பழக்கங்களை வெல்லவும்‌, புலன்களைக்‌ கட்டுப்படுத்தவும்‌, சரியானதைச்‌ செய்யவும்‌ முயல்கின்றான்‌. க்ஷத்திரியர்கள்‌ தொழிலைப்‌ பொறுத்து சிறப்பான ஆட்சி புரிபவர்களாகவும்‌, அரசியல்‌ நிபுணர்களாகவும்‌, வீரர்களாகவும்‌ உள்ளனர்‌. பிராமணன்‌, தனது கீழான இயல்புகளை வென்று, ஆன்மீக நாட்டங்களுக்கான ஓர்‌ இயல்பான ஈர்ப்பைக்‌ கொண்டுள்ளான்‌. மேலும்‌ அவன்‌ கடவுளை அறிந்துள்ளவன்‌. அதனால்‌ அவனால்‌ மற்றவர்களுக்கு போதிக்கவும்‌, விடுதலை, பெறுவதற்கு உதவவும்‌ இயலும்‌.

காரண சரீரம்‌. அடிப்படையில்‌; மனிதன்‌ ஓர்‌ ஆன்மாவாக காரண-சரீரம்‌ கொண்டவன்‌. அவனுடைய காரண சரீரம்‌, சூட்சும மற்றும்‌ ஸ்தூல சரீரங்களுக்கு ஓர்‌ எண்ண-வார்ப்பாகும்‌. காரண சரீரமானது, 35 எண்ண மூலப்பொருட்களாலானது. இது சூட்சும சரீரத்தின்‌ 19 மூலப்பொருட்களையும்‌, அத்துடன்‌ சேர்த்து ஸ்தூல சரீரத்தின்‌ 16 அடிப்படையான ஸ்தூல மூலப்பொருட்களையும்‌ ஒத்திருக்கின்றன.

காரண உலகம்‌.  சடப்பொருளாலான (அணுக்கள்‌, புரோட்டான்கள்‌, எலக்ட்ரான்கள்‌) ஸ்தூல உலகத்திற்கும்‌, மற்றும்‌ ஒளிமயமான உயிர்ச் சக்தி (உயிர்மின்மங்கள்) யினாலான நுட்பமான சூட்சும உலகத்திற்கும்‌ பின்னால்‌ காரண அல்லது கருத்தாலான, எண்ண (எண்ணமின்மங்கள்‌) உலகம்‌ உள்ளது. மனிதன்‌, ஸ்தூல மற்றும்‌ சூட்சும பிரபஞ்சங்களின்‌ அறிவெல்லையைக்‌ கடந்து செல்வதற்குப்‌ போதுமான அளவு, பரிணாமத்தை அடைந்ததும்‌, அவன்‌ காரண பிரபஞ்சத்தில்‌ வசிக்கிறான்‌. காரணவாசிகளின்‌ உணர்வு நிலையில்‌, அவர்களுடைய எண்ண‌ சாரத்திற்கேற்ப ஸ்தூல மற்றும்‌ சூட்சும பிரபஞ்சங்கள்‌ தீர்மானிக்கப்படுகின்றன. ஸ்தூல மனிதன்‌ கற்பனையில்‌ என்னவெல்லாம்‌ செய்ய முடியுமோ, அதைக்‌ காரண மனிதன்‌ நிஜமாகவே செய்ய முடியும்‌—ஒரே ஒரு கட்டுப்பாடாக இருப்பது எண்ணம்‌ மட்டுமே. இறுதியாக அனைத்து அதிர்வலைப்‌ பிரதேசங்களுக்கும்‌ அப்பாலுள்ள எங்கும்‌ நிறைந்திருக்கும்‌ பரம்பொருளுடன்‌ ஒன்றிணைவதற்காக மனிதன்‌, ஆன்மாவின் இறுதியான உறையாகிய தனது காரண சரீரத்தை உகுக்கிறான்.

சக்கரங்கள்‌. யோகத்தில்‌, மனிதனின்‌ ஸ்தூல மற்றும்‌ சூட்சும உடல்களுக்கு உயிரூட்டும்‌ முதுகுத்தண்டு‌ மற்றும்‌ மூளையிலுள்ள உயிர்‌ மற்றும்‌ உணர்வு நிலையின்‌ ஏழு ரகசிய மையங்கள்‌. இந்த மையங்கள்‌ சக்கரங்கள்‌ எனக்‌ குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில்‌ இந்த ஒவ்வொன்றிலும்‌ குவிக்கப்பட்டுள்ள சக்தியானது, ஒரு சக்கரத்தின்‌ மையம்‌ போன்று, அதிலிருந்து உயிர்‌-கொடுக்கும்‌ ஒளி மற்றும்‌ சக்தியின்‌ கதிர்கள்‌ விரிந்து செல்வது போன்று அமைந்துள்ளது, கீழிருந்து மேலே ஏறுமுகமாக இந்த சக்கரங்களாவன: ‌மூலாதாரம்‌ (முதுகுத்தண்டின்‌ அடிப்பகுதி); ஸ்வாதிஷ்டானம்‌ (மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம்‌ மேலே) மணிப்பூரகம்‌ (தொப்புளுக்கு எதிரே) ; அனாகதம்‌ (இருதயத்திற்கு எதிரே); விசுத்தம்‌ (கழுத்தின்‌ அடிப்பகுதி); ஆக்ஞா (சம்பிரதாயமாக புருவங்களுக்கு இடையில்‌; உண்மையில்‌ காந்த ஈர்ப்பினால்‌ முகுளத்துடன்‌ நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது;  முகுளம்‌ மற்றும் ஆன்மீகக்‌ கண் );மற்றும்‌ சஹஸ்ராரம்‌(பெரு மூளையின்‌ மேல் முகடுப் பகுதியில்).

இந்த ஏழு மையங்களும்‌ தெய்வீகமாகத்‌ திட்டமிடப்பட்ட வெளிச் செல்லும்‌ வழி அல்லது “கண்ணி-கதவுகள்‌” ஆகும்‌. இவற்றின்‌ மூலமாக ஆன்மா, தேகத்திற்குள்‌ கீழிறங்கி வந்துள்ளது. மேலும்‌ இவற்றின்‌ மூலமாகவே அது ஒரு தியான முறையில்‌ மேலேறிச்‌ செல்ல வேண்டும்‌. ஒன்றன்பின்‌ ஒன்றான ஏழு படிகள்‌ மூலமாக ஆன்மா, பிரபஞ்ச உணர்வு நிலைக்குள்‌ தப்பித்துச்‌ செல்கின்றது. ஏழு திறந்துள்ள அல்லது “விழிப்பூட்டப்பட்ட” மூளை-முதுகுத்தண்டு மையங்கள்‌ வழியாக அதனுடைய உணர்வுபூர்வமான மேல்நோக்கிய பாதையில்‌, ஆன்மா எல்லையற்ற பரம்பொருளை நோக்கிய நெடுஞ்சாலையில்‌ பயணிக்கிறது. இதுதான்‌ ஆன்மா, இறைவனுடன்‌ ஒன்றிணைவதற்கான தன்னுடைய வழியில்‌ திரும்பிச்‌ செல்ல வேண்டிய உண்மையான பாதை.

யோக ஆராய்ச்சிகள்‌ பொதுவாக ஆறு கீழ்‌ மையங்களை மட்டுமே சக்கரங்கள்‌ எனக்‌ கருதுகின்றன. சஹஸ்ராரம்‌, ஏழாவது மையமாக தனியாகக்‌ குறிப்பிடப்படுகிறது. எப்படியாயினும்‌; ஆன்மீக விழிப்புநிலையில்‌, உயிரும்‌ உணர்வுநிலையும்‌ முதுகுத்தண்டில்‌ மேல்‌ நோக்கிச்‌ செல்லும்போது, அனைத்து ஏழு மையங்களும்‌ திறந்து கொள்ளுகின்ற அல்லது மேல்‌நோக்கித்‌ திரும்புகின்ற இதழ்கள்‌ கொண்ட தாமரைகள்‌ எனக்‌ குறிப்பிடப்படுகின்றன.

சித்தம். உள்ளுணர்வான உணர்வு; ஒட்டுமொத்த உணர்வுநிலை‌. இதனுள்‌ உள்ளார்ந்துள்ளவை அகங்காரம்‌ (ஆணவம்‌), புத்தி (அறிவாற்றல்‌) மற்றும்‌ மனம்‌ (புலன்‌ உணர்வுநிலை).

கிறிஸ்து. இயேசுவின் மரியாதைக்குரிய பட்டம்: இயேசு கிறிஸ்து. இந்தச் சொல் சிருஷ்டியில் உள்ளார்ந்துள்ள இறைவனுடைய பிரபஞ்ச அறிவுத்திறத்தை குறிக்கிறது (சில நேரங்களில் பிரபஞ்சக் கிறிஸ்து அல்லது எல்லையற்ற கிறிஸ்து என்று குறிப்பிடப்படுகிறது), அல்லது இறையுணர்வுடன் ஒன்றிய தன்மையை எய்திய உயர்ந்த மகான்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “ஞானஸ்நானம் செய்யப்பட்டவர்”, ஹீப்ரு வார்த்தையான மெஸையா-வைப் போல.) பார்க்க கிறிஸ்து உணர்வுநிலை மற்றும்  கூடஸ்த மையம்.

கூடஸ்த (கிறிஸ்து) மையம்.‌ புருவங்களுக்கு இடையே உள்ள கூடஸ்த அல்லது ஆக்ஞா சக்கர மையம்‌, இது முகுளத்துடன்‌ காந்த ஈர்ப்பினால்‌ நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது; இச்சா சக்தி, மன ஒருமுகப்படுதல்‌ மற்றும்‌ கூடஸ்த சைதன்யம் ‌(கிறிஸ்து உணர்வுநிலை) ஆகியவற்றின்‌ மையம்‌; ஆன்மீகக்‌ கண்ணின்‌ இருப்பிடம்.‌

கூடஸ்த (கிறிஸ்து) உணர்வுநிலை. “கிறிஸ்து” அல்லது “கிறிஸ்து உணர்வுநிலை” என்பது படைப்பு முழுவதும்‌ பரவி, நிலைபெற்று நிலவும்‌ இறைவனின்‌ வெளிப்படுத்தப்பட்ட உணர்வுநிலையாகும்‌. கிறிஸ்துவ சாத்திரத்தில்‌ அது. “ஒரே பேறான குமாரன்‌,” என்று அழைக்கப்படுகிறது; பிதாவான இறைவனின்‌ படைப்பில்‌ ஒரே ஒரு தூய பிரதிபலிப்பு ஆகும்‌. இந்து சாத்திரங்களில்‌ அது, கூடஸ்த சைதன்யம்‌ அல்லது தத்‌; படைப்பில்‌ பரம்பொருளின்‌ சர்வ வியாபக பிரபஞ்ச அறிவுத்திறம்‌. (“கிறிஸ்து உணர்வுநிலை” மற்றும் “கிறிஸ்து அறிவுத்திறம்” ஆகிய சொற்கள் “பிரபஞ்ச கிறிஸ்து” மற்றும் “எல்லையற்ற கிறிஸ்து” ஆகியவற்றுக்கு ஒத்ததாக இருக்கின்றன.) அது கிருஷ்ணன்‌, இயேசு ‌ மற்றும் பிற அவதாரங்களால்‌ வெளிப்படுத்தப்பட்ட பிரபஞ்ச உணர்வுநிலை, இறைவனுடன்‌ ஒன்றாகிய தன்மை. உயர்ந்த மகான்களும்‌, யோகியரும்‌ அதை படைப்பின்‌ ஒவ்வொரு துகளிலும்‌ உள்ள அறிவுத்‌திறத்துடன்‌ தங்களுடைய உணர்வுநிலை ஒன்றிவிட்ட சமாதி நிலை தியானம்‌ என்று அறிவர்‌; முழு பிரபஞ்சத்தையும்‌ அவர்களுடைய சொந்த உடலாகவே அவர்கள்‌ உணர்வர்.‌ பார்க்க‌ மும்மை.

ஒருமுகப்படுத்தும்‌ உத்தி. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் ‌ பாடங்களில்‌ கற்பிக்கப்படும்‌. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் ஒருமுகப்படுத்தும்‌ உத்தி (ஹாங்‌-ஸா உத்தி). இந்த உத்தி, கவனத்தைத்‌ திசை திருப்பும்‌ அனைத்து பொருட்களிலிருந்தும் விஞ்ஞான ரீதியாக அதை விலக்கி, ஒரு சமயத்தில்‌ ஒரு விஷயத்தின்‌ மீது அதை இருத்துவதற்கு உதவுகின்றது. இவ்விதமாக தியானத்திற்கும்‌, இறைவன்‌ மீது ஒருமுகப்படுவதற்கும்‌ விலைமதிக்க முடியாததாக உள்ளது. ஹாங்‌-ஸா உத்தியானது கிரியா யோக விஞ்ஞானத்தின்‌ ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும்‌.

உணர்வுநிலை, படிநிலைகள்‌. ‌அழிவுறும்‌ தன்மையுடைய உணர்வுநிலையில் மனிதன்‌ மூன்று நிலைகளை அனுபவிக்கின்றான்‌: விழிப்பு உணர்வுநிலை, உறக்க உணர்வுநிலை மற்றும்‌ கனவு காணும்‌ உணர்வுநிலை. ஆனால்‌ அவன்‌, உயர்‌ உணர்வுநிலை எனும் தனது ஆன்மாவை அனுபவிக்காததுடன்‌ அவன்‌ இறைவனையும்‌ அனுபவிப்பதில்லை. கிறிஸ்து உணர்வுநிலையிலுள்ள மனிதன்‌ அதை அனுபவிக்கிறான்‌. அழியும்‌ மனிதன்‌ தன்னுடைய தேகம்‌ முழுவதையும்‌ உணர்ந்துள்ளது போல, கிறிஸ்து உணர்வுநிலை-மனிதன்‌, தனது சரீரமாக அவன் உணரும் ‌பிரபஞ்சம்‌ முழுவதையும் உணர்ந்துள்ளான். கூடஸ்த சைதன்ய நிலைக்கு (கிறிஸ்து உணர்வுநிலைக்கு) அப்பால்‌ பிரபஞ்ச உணர்வுநிலை உள்ளது. அது அதிர்வலை சிருஷ்டிக்கு அப்பாலுள்ள இறைவனது முழுமுதல்‌ உணர்வு நிலையுடனும்‌, அத்துடன்‌ புலன்களால்‌ உணரத்தக்க உலகங்களில்‌‌ வெளிப்பட்டிருக்கும்‌ இறைவனின்‌ சர்வ வியாபகத்துடனும்‌ இறைவனோடு ஒன்றியுள்ள தன்மையின்‌ அனுபவமாகும்.‌

பிரபஞ்ச உணர்வுநிலை. தனி முதல்‌; படைப்பிற்கு அப்பாலுள்ள பரம்பொருள்‌. பிதாவாகிய இறைவன். அதிர்வலை சிருஷ்டிக்கு‌ அப்பாலும், உள்ளேயும்‌ ஆகிய ‌ இரண்டிலும்‌ உள்ள இறைவனுடன்‌ ஒன்றியதன்மையான சமாதி-தியான நிலையும்‌ கூட.

பிரபஞ்ச மாயை பார்க்க மாயை.

பிரபஞ்ச சக்தி. பார்க்க பிராணன்‌.

பிரபஞ்ச அறிவார்ந்த அலையதிர்வு. பார்க்க ஓம்‌.

பிரபஞ்ச நாதம்‌. பார்க்க ஓம்.

தரிசனம். “ஒருவரது குருவினது போன்ற “புனிதக் காட்சி” அதாவது, இறை-அனுபூதி எய்திய ஒரு மகானின் காட்சியினால் வழங்கப்படும் அருளாசி.

தர்மம். சகல படைப்பையும்‌ தாங்கி நிற்கும்‌ நிலைபேறான அறநெறித்‌தத்துவங்கள்‌;  இத்தத்துவங்களுடன்‌ இணக்கமாக வாழவேண்டியது மனிதனின்‌ இயல்பான கடமை. ‌ ‌மேலும் பார்க்க சனாதன தர்மம்.

தீட்சை. ஆன்மீக தீட்சை, சமஸ்கிருதத்திலிருந்து வினைச்‌ சொல்‌-மூலம்‌ தீக்ஷ்‌, ஒருவர்‌ தன்னையே அர்ப்பணித்தல்‌. பார்க்க சீடன்‌ மற்றும்‌  கிரியா யோகம்.

சீடன். ‌ இறைவனை அறிந்து கொள்வதை நாடி, ஒரு குருவிடம்‌ வருகின்ற ஆன்மீகக்‌ குறிக்கோள்‌ உடையவன்‌. மேலும்‌ இந்த நோக்கத்திற்காக குருவுடன்‌ ஒரு நிரந்தர ஆன்மீக உறவை ஏற்படுத்திக்‌ கொள்கிறான்‌. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா/ ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌-ல்‌ குரு-சிஷ்ய உறவு, கிரியா யோக தீட்சை மூலம்‌ ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பார்க்க குரு மற்றும் கிரியா யோகம்.

தெய்வீக அன்னை. படைப்பில்‌ செயல்திறமுடைய இறைவனின்‌ அம்சம்‌; அதாவது பராசக்தி, அல்லது அறிவெல்லைக்கு அப்பாலுள்ள படைப்பவனின் சக்தி. தெய்வீகத்தின்‌ இந்த அம்சத்திற்கான மற்ற பதங்கள்‌ இயற்கை அல்லது பிரக்ருதி, ஓம்‌, பரிசுத்த ஆவி, பிரபஞ்ச அறிவாற்றல்‌ வாய்ந்த அதிர்வலை. இத்துடன்‌ இறைவனின்‌ அன்பு மற்றும்‌ கருணைப்‌ பண்புகளின்‌ உருவமாக, அன்னையாக உள்ள இறைவனின்‌ தனிப்பட்ட அம்சம்.‌

இறைவன்‌ இயற்கைக்கு உள்ளும் அப்பாலும்‌ உள்ள, உருவமாகவும்‌ அருவமாகவும் உள்ள இரண்டுமாவான்‌ என இந்து சாத்திரங்கள்‌ போதிக்கின்றன. அவனை முழுமுதற்‌பொருளாகவும்‌, அவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள நிரந்தர குணங்களான அன்பு, அறிவு, ஆனந்தம்,‌ ஒளி ஆகியவற்றில்‌ ஒன்றாகவும்‌; இஷ்ட தெய்வ வடிவமாகவும்‌, அல்லது தெய்வத்‌ தந்தை, தெய்வ அன்னை, தெய்வ நண்பன்‌ ஆகிய கருத்தின்படியோ நாடலாம்.‌

தியானம் பார்க்க தியானம்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook
X
WhatsApp
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.
This site is registered on Toolset.com as a development site.